1907 ஆம் ஆண்டு ரஷ்யாவில் ஜார் ஆட்சி நடந்துவந்த காலத்தில் தான் ரஷ்யாவின் புகழ்பெற்ற எழுத்தாளர் மாக்சிம் கார்க்கியின் “தாய்” நாவல் வெளிவந்தது . ஜார் ஆட்சியில் தொழிலாளர்களும் விவசாயிகளும் ஒட்ட சுரண்டப்பட்டார்கள்.இப்படியான சூழலில் ரஷியாவின் ஒரு தொழிற்சாலையில் புரட்சி நடவடிக்கைகளில் ஈடுபட்ட தொழிலாளி பாவெலின் தாய் புரட்சிகரப் பணிக்கு வந்த கதையே இந்நாவல்.
நாள் முழுக்க தொழிற்சாலையில் வேலை செய்து கடுகடுத்து வீடு திரும்பும் குடிகார தொழிலாளியின் மனைவி “பெலகேயா நீலவ்னா” தான் அத்தாய். அதிகம் உலகம் அறியாதவள், படிக்காதவள். தன் கணவனை இழந்த நிலையில் தன் மகன் “பாவெல்” தனது கணவனை போலவே ஒருநாள் முதன்முறையாக குடித்துவிட்டு வீடு திரும்புவதை கண்டு அதிர்ச்சியுறுகிறாள். அவனை அன்போடு அறவணைத்து அறிவுரை கூறினாள்.
அதன் பிறகு தனது மகன் நடவடிக்கைகளில் மாற்றம் தென்படுவதை கவனிக்கிறாள் தாய். அவன் புத்தகம் படிக்கிறான், தாமதமாக வீடு திரும்புகிறான், சாராயக்கடைக்கு செல்வதில்லை. தனது மகனின் இந்த மாற்றத்தைக் கண்டு ஒருபுறம் மகிழ்ச்சியும் மறுபுறம் சந்தேகமும் கொண்டாள்.
புரட்சிகர நடவடிக்கைகள்

ஒருநாள் அவன் தன் நண்பர்கள் நம் வீட்டுக்கு வரப்போவதாக தாயிடம் சொன்னான். அன்றிலிருந்து பல நண்பர்கள் அவர்கள் வீட்டிற்கு வர தொடங்கினர். அவர்கள் அனைவரும் தினமும் புத்தகம் படிப்பார்கள் விவாதிப்பார்கள். அவர்கள் அனைவரும் புரட்சி இயக்க தோழர்கள். அவர்கள் தடை செய்யப்பட்ட புத்தகங்களை படிக்கிறார்கள், தொழிலாளர்களின் நலன் குறித்தும் புரட்சி இயக்கப் பணிகள் குறித்தும் விவாதிக்கிறார்கள்.
அதில் , ஹஹோல் என்பவன் யாருமற்றவன் என்பதால் அவனை தன் மகனாக ஏற்று தன் வீட்டில் தங்க வைத்துக்கொண்டாள் தாய். தன் வீட்டிற்கு வரும் அனைத்து தோழர்களையும் தன் பிள்ளைகள் போல எண்ணினாள். பாவெலின் மாற்றத்தை எண்ணி தாய் பூரிப்படைந்தாள். எழுதப் படிக்க தெரியவில்லை என்றாலும் அவர்களின் விவாதங்களை கேட்டே தானும் புரட்சிப் பாதைக்கு மெல்ல மாறத் தொடங்கினாள் தாய்.
ஒருநாள் தொழிற்சாலையில் துண்டு பிரசுரம் விநியோகித்ததாக கூறி பாவெலின் வீட்டில் சோதனை போட்ட போலிஸார் பாவெலை கைது செய்தனர். தன் மகன் சிறைபட்டு கிடக்கும்போது அவன் செய்த வேலையை தான் கையிலெடுத்து உணவு வியாபாரியாக தொழிற்சாலைக்குள் சென்று பிரசுரங்களை விநியோகித்தாள் தாய். போதிய ஆதாரங்கள் இல்லாததால் பாவெல் விடுவிக்கப் படுகிறான் .
அதே தொழிற்சாலையில் மே தினத்தன்று நடைப்பெற்ற இயக்கத்திற்க்கு பாவெல் தலைமை தாங்கினான் என்பதற்காக இரண்டாம் முறை கைது செய்யப்படுகிறான். அவனுடன் பல தோழர்களும் கைது செய்யப்படுகிறார்கள்.
மகன் கைது செய்யப்பட்ட பிறகு நிகலாய் என்னும் தோழனின் வீட்டில் தங்கி அங்கிருந்த தோழர்களுடன் இணைந்து புரட்சிப் பணியில் ஈடுபடுகிறாள். தொலைவில் உள்ள விவசாய தோழர்களுக்கு பிரசுரம் மற்றும் புத்தகங்கள் கொண்டுபோய் கொடுப்பது போன்ற இயக்க வேலைகளில் ஈடுபட்டுவந்தாள்.
சத்தியத்தை மூழ்கடிக்க முடியாது

தன் மகனின் கோர்ட்டு விசாரணை நாளுக்காக அவள் வெகு நாட்களாக காத்து கிடந்தாள். அந்த நாளும் வந்தது. அந்த விசாரணையின் போது தன்மகனின் வீர உரையை கேட்டு பூரிப்படைந்தாள். கோர்ட்டில் அனைவரையும் நாடுகடத்துவதாக தீர்ப்பு வந்தது. விசாரணை முடிந்து வீடு திரும்பியதும் நிகலாய் தன்னை உளவாளிகள் பின் தொடர்வதாகவும் விரைவில் அவர்கள் தன்னை கைதுசெய்யப் போவதாக கூறி தாயிடம் பாவெலின் கோர்ட்டு உரையின் எழுத்துப் பிரதியை கொடுத்து இதனை அச்சுப் பிரதியெடுத்து விவசாய தோழர்களுக்கு விநியோகம் செய்யுமாறும் கூறி அனுப்பிவைத்தான்.
தன்மகனின் கோர்ட்டு உரையை அச்சு பிரதி எடுத்துக் கொண்டு புறப்பட்டு இரயில் நிலையம் வந்தடைந்தாள் தாய். அவளை பின் தொடர்ந்து வந்தான் ஒரு உளவாளி. திடீரென நாலா புறமும் போலிஸ் வருவதை பார்த்த தாய் தன்னிடம் உள்ள பிரசுரத்தை அங்கே உள்ள பொதுமக்களிடம் கொடுக்க தொடங்கினாள். போலிஸ் அவளை சூழ்ந்து தாக்க தொடங்கியது. தாய் முழங்குகிறாள் ”இரத்த சமுத்திரமே திரண்டு வந்தாலும் சத்தியத்தை மூழ்கடிக்க முடியாது” என்று. இறுதியில் தாயும் கைது செய்ய படுகிறார்.
எல்லா காலத்திலும் பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகள் புரட்சி பாதையில் செல்வதை விரும்புவதில்லை. பிள்ளைகள் செய்யும் உன்னதமான பணிகள் பிடிக்காமல் அவர்கள் அப்படி செயவதில்லை. தங்கள் பிள்ளைகள் மீதான பாசமே அவ்வாறு அவர்களை செய்யத் தூண்டுகிறது. ஆளும் அரசுகள் போராடுபவர்கள் மீது தொடுக்கும் தாக்குதல்களால் விளையும் ஆபத்து அவர்களை அச்சுறுத்துகிறது. ஆனாலும் வேறு பலரை போல் சமூக சீர்கேடுகளில் சீரழிந்து போகாமல் தன் பிள்ளை நல்ல காரியத்திற்காகவே போராடுகிறான் என்கிற புரிதல் அவர்களை காலப்போக்கில் ஆசுவாசபடுத்துகிறது.
அத்தனை தடைகளையும் தாண்டி இந்த ஏற்றத்தாழ்வு மிகுந்த சமூக அமைப்பை மாற்றி ஒரு புதிய சமத்துவமான சோசலிச சமூகத்தை படைக்க, தொழிலாளி வர்க்க புரட்சியை நிகழ்த்திட புரட்சிப் பாதையை தேர்ந்தெடுத்தவனின் கனவுத் தாய் “பெலகேயா நீலவ்னா”. தன் மகன் தேர்ந்தெடுத்த புரட்சிப் பாதையில் தானும் சேர்ந்து கொண்டாள் ”தாய்”. இந்தக் கனவுத் தாய்களின் புரட்சிகர பங்கேற்பே 1917 ல் ரஷ்யப் புரட்சியை வெற்றிகரமாக்கிது.
புத்தகத்தின் பெயர் – தாய்
எழுத்தாளர் – மாக்சிம் கார்க்கி
பதிப்பகம் – பாரதி புத்தகாலயம்
ஏ. சங்கரய்யா
இந்திய மாணவர் சங்கம்
கர்ஜிக்கும் சிங்கம் கம்யூனிஸ்டுத் தோழர் சங்கரய்யாவின் சிம்மக் குரல் கேட்டு சிலிர்த்ததுண்டு. அவரது தாய் நாவலின் விமர்சனம் ஒரு சாதாரண மனிதனைப் போராளியாக்கும் புல்லட் போன்றது. ரத்த சமுத்திரம் திரண்டு வந்தாலும் சத்தியத்தை மூழ்கடிக்க முடியாது என்று தாய் பலகேவ் நீலவ்னா சொல்வதுபோல சங்கரய்யாவின் சத்திய வார்த்தைகளும் தமிழகத்தில் ஒரு நாள் பலிக்கப் போகிறது.