அ.குமரேசன் எழுதிய ராதிகாவின் "தாய் கிழவி" தமிழ் திரைப்பட விமர்சனம் | Tamil Cinema Reviews | Thaai Kizhavi Kollywood Movies Review in Tamil - www.bookday.in

ராதிகாவின் “தாய் கிழவி” திரைப்பட விமர்சனம் – அ.குமரேசன்

“தாய் கிழவி” திரைப்பட விமர்சனம்

தாய்க்கிழவியின் கம்பீரத்தில் ஒரு “சின்ன” ரகசியம்!

வயது முதிர்ந்த ஒருவர் உயிர் உதிர்ந்து விழும் நிலையில் கிடக்கிறார். அதுவரையில் வெறுத்து வந்தவர்களுக்கு அவர் எப்படிப்பட்டவர் என்று தெரிய வருகிறது… மேலோட்டமாகப் பார்த்தால் இந்த வகையறாக் கதைகளில் ஒன்றுதான் இது. ஆனால், இந்தக் கதையை வசதியான ஒரு வழியாக வைத்துக்கொண்டு, அதிலே பயணித்து ஒரு பெண் தனது ஆளுமையை நிறுவிக் காட்டிய வாழ்க்கையைப் பதிவு செய்திருப்பதில் இந்தப் படம் தனித்துவமாக நிற்கிறது.

சார்லி சாப்ளின் எப்படி நகைச்சுவையை அரசியல்–சமூக விமர்சனத்திற்கான கருவியாகக் கையாண்டாரோ, அப்படியே சிவக்குமார் முருகேசன் தனது முதல் படத்தில் அதைக் கையாண்டு, கிழவியைச் சுற்றியிருக்கும் ஊராரையும் அற்பத்தனமான உறவுக்காரர்களையும் நையாண்டிக்கு உட்படுத்தியிருக்கிறார். அது உரக்கச் சிரிப்பதற்காக வாயையும், ஆழ்ந்து சிந்திப்பதற்காக மனசையும் திறக்க வைக்கிறது.

அ.குமரேசன் எழுதிய ராதிகாவின் "தாய் கிழவி" தமிழ் திரைப்பட விமர்சனம் | Tamil Cinema Reviews | Thaai Kizhavi Kollywood Movies Review in Tamil - www.bookday.in

மகளுக்கு மறுமணம் செய்துவைக்க முடிவு செய்கிற பவுனுத்தாயி, “தலையை நிமிந்து வாங்குடி தாலிய,” என்று மணச்சடங்கில் கம்பீரமாகச் சொல்வதில் எவ்வளவு ஆழ்ந்த பொருள்! “ஆத்தாவுக்கு சின்ன வயசுலயிருந்தே அரிவாள் சுத்தியல் நட்சத்திரம்தான் பிடிக்கும்,” என்ற வாக்கியம் அந்தக் கம்பீரத்தின் ரகசியத்தை வெளிப்படுத்துகிறது.

விறுவிறு ஓட்டத்திற்குப் பின்னணி இசையோடு, கமல்ஹாசன் படப்பாடல்களும் சேர்ந்து உணர்வு சேர்ப்பது ஒரு இனிய அனுபவம். கமல் ரசிகனான ஒரு மகன் “சவுண்ட் சர்வீஸ்” நடத்துகிறவனாதலால் அந்த ரகளை இயல்பாகவும் அமைகிறது.

மருமகள்கள் கிழவியைக் கொண்டாடத் தொடங்குவது, தவறை உணர்ந்து திருந்துவதால் மட்டுமல்ல, 300 பவுன் நகை வரவினாலும்தான். ஒரு வசனத்தால் முற்றிலுமாக மாறிவிட மாட்டார்கள் என்ற நடப்பும் காட்சிப்படுகிறது.

மகளாக ரேச்சல் ரெபேக்கா, மருமகனாக வேட்டை முத்துக்குமார், மகன்களாக சிங்கம் புலி, அருள்தாஸ், பாலசரவணன், மருமகள்களாக முத்துலட்சுமி, நிரோஷா, அபிநயா, உதவிக்கரமாக முனிஷ்காந்த், சைகை வல்லுநராக மரியம் ஜார்ஜ், “நகைக்கடைக்காரர்” இளவரசு, பேரனாகவும் அவனுடைய அத்தை மகளாகவும் வரும் சிறார் என அத்தனை பேரையும் குறிப்பிட வைக்கிறது அவர்களின் பங்களிப்பு.

அ.குமரேசன் எழுதிய ராதிகாவின் "தாய் கிழவி" தமிழ் திரைப்பட விமர்சனம் | Tamil Cinema Reviews | Thaai Kizhavi Kollywood Movies Review in Tamil - www.bookday.in

வண்டிக்குள் கிடத்தட்டப்பட்டிருப்பவர் உயிரோடு எழுந்துவிட மாட்டாரா என்று வேண்டுமென்றே சாலையோரம் நிறுத்திக் காத்திருக்கும் ஓட்டுநர், தமிழ் பேசும் சீன மருத்துவர் உள்ளிட்ட துணைக் கதாபாத்திரங்களும் கவனிக்க வைக்கின்றன.

ஒரு கரு தன்னைக் கதையாகவோ கவிதையாகவோ வார்க்கிற ஒரு படைப்பாளியைத் தேடியடையும் என்று இலக்கிய முகாம்களில் சொல்வதுண்டு. கிழவியின் கதாபாத்திரம் தன்னை உயிர்ப்பிக்கிற

ஒரு கலைஞராக சரியாகக் கண்டடைந்தவர் ராதிகா. முகம், உடல், நடை, வட்டார மொழிப் பேச்சு என திரை முழுக்க நிறைகிறார். சில இடங்களில் சாம்பல் கருப்பு வண்ண ஒப்பனை துருத்தித் தெரிகிறது என்றாலும் அவருடைய வெளிப்பாட்டில் அது உதிர்கிறது. அரசியலில் சேராத இடந்தனில் சேர்ந்திருக்கிறாரே என்ற ஆதங்கக் கசப்பு இருக்கத்தான் செய்கிறது. ஆயினும் அதைக் கடந்து பவுனுத் தாயியாக மட்டும் பார்க்க வைத்திருக்கிறது அவரது நடிப்பாற்றல்.

தெருக்களில் சுற்றி, மலைக் குன்றுகளில் ஏறி இறங்கி ஊரை நெருக்கமாக்கியிருக்கிறது விவேக் விஜயகுமார் ஒளிப்பதிவு. பதற்றம், சோகம், சிரிப்பு என எந்த உணர்வுக்கு எந்தக் கருவி என்று தேர்ந்தெடுத்து இசையமைத்திருக்கிறார் நிவாஸ் கே. பிரசன்னா. தொடர்ச்சிகளை உள்வாங்கித் தொகுத்திருக்கிறார் சான் லோகேஷ்.

அ.குமரேசன் எழுதிய ராதிகாவின் "தாய் கிழவி" தமிழ் திரைப்பட விமர்சனம் | Tamil Cinema Reviews | Thaai Kizhavi Kollywood Movies Review in Tamil - www.bookday.in

இந்தக் கதையையும் இயக்குநரையும் தேர்வு செய்ததோடு, சிறப்புத் தோற்றமென்று உள்ளே வராமலிருந்தும் படத்திற்குச் சிறப்புச் செய்திருக்கிற சிவ கார்த்திகேயன் தயாரிப்பு நேர்மையும் குறிப்பிடத்தக்கது. மாறுபட்ட ஆக்கங்களை எதிர்பார்க்கும் இன்றைய ரசிகர்களின் மாறுபட்ட ஆக்கங்களுக்கான எதிர்பார்ப்புக்கு நியாயம் செய்திருக்கிறார் சிவக்குமார் முருகேசன்.

“தாய்க்கிழவி” என்று நடுவில் ‘க்” வர வேண்டும். எண் கணித சோதிட அறிவுரையோ என்னவோ அந்த எழுத்து இல்லை. ஆனாலும், பவுனுத்தாயி என்ற கிழவி எல்லோருக்கும் தாய் என்ற பொருள் அமைவது ஒரு தற்செயல் சுவை.

📚 எழுதியவர்:

அ.குமரேசன்

******************************************************************************

நூல் அறிமுகம் செய்வோம் ரூ.10000 பரிசு வெல்வோம்! போட்டி

2025ல் வெளியான புத்தகத்தை வாசிக்க அவகாசம் கேட்ட வாசகர்களின் வேண்டுகொளுக்கு இணங்க இப்போட்டியானது மார்ச் 31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. வரும் உலகப் புத்தக தினத்தன்று (ஏப்ரல் 23, 2026) சென்னையில் நடைபெறும் விழாவில் பரிசு மற்றும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்படும். தாங்கள் எழுதும் நூல் அறிமுக கட்டுரையை bookday24@gmail.com மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். இதில் பங்கேற்க விரும்பும் தோழர்கள் அனைவரும் தங்கள் விருப்பத்தை https://forms.gle/XJodwyZc42PRv93Y8 இந்த கூகுள் பார்ம்-ல் நிரப்பி தெரிவித்தால் நன்றாக இருக்கும்.

கூகுள் பார்ம்: https://forms.gle/XJodwyZc42PRv93Y8

தோழமையுடன்
புக் டே இணையதளம்
பாரதி புத்தகாலயம்
9444567935

******************************************************************************

Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1

Click to Join WhatsApp Channel Link : https://whatsapp.com/channel/0029VanQNeO4NVioUBbXer3q

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களதுநூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள்சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *