பேர்ல் எஸ்.பக் அமெரிக்காவின் மேற்கு வர்ஜினியாவில் பிறந்தவர் பெற்றோரின் பணிகள் பொருட்டு சீனாவில் வளர்ந்தவர் ஆங்கிலத்தையும் சீன மொழியையும் அதன் வாயிலாக கன்பூசியஸின் தத்துவத்தையும் பயின்றிருக்கிறார் இந்த நாவலுக்காக நோபல் பரிசு பெற்ற முதல் அமெரிக்க பெண்மணி இவர் அமெரிக்க பொதுமக்களிடையே சீனா குறித்து நிலவிய மேலோட்டமான புரிதல்களை களைந்து சீனாவின் அசலான முகங்களையும் புறச் சூழலையும் எழுத்தில் காட்சிப்படுத்தியவர்.
தாய் மண் நாவலின் முக்கியமான அடிப்படைப் பண்பாக கருதப்படுவது மண்ணின் மீது மனிதன் கொண்ட நேசம். பிறப்பு முதல் இறப்பு வரை மனிதனின் வளர்ச்சியில் ஒவ்வொரு காலகட்டத்திலும் அவன் வாழும் மண் அவனுக்கு எப்படி உதவி செய்கிறது என்பதையும் நிலத்தை நல்லாளாக வழிபடும் விவசாயி நிலத்தின் மீதான தனது பிரியத்தையும் பாசத்தையும் எப்படி வெளிப்படுத்துகிறான் என்பதையும் அந்த நிலம் அவனுக்கு எப்படியெல்லாம் கடவுளாக மாறி அவன் வாழ்வை முன்னேற்றுவதற்கும் வளப்படுத்துவதற்கும் அவனுக்கு வழிகாட்டுகிறது என்பதையும் இந்த நாவல் மிக அருமையாக படம் பிடித்து காட்டுகிறது.
ஒவ்வொரு மனித மனங்களுக்குள்ளும் ஆழ்ந்து கிடக்கும் உணர்வுகளைத் தட்டி எழுப்பும் உணர்ச்சி பூர்வமான விஷயங்கள் அவர்களின் வாழ்வில் மறக்க முடியாத நினைவுகளை விட்டுச் செல்லும். அதே போல மண்ணின் மீது கொண்ட அன்பை, நேசத்தை மனிதன் எவ்வளவு உயரத்தில் இருந்தாலும் இந்த உலகையே விலைக்கு வாங்கும் நிலைக்குத் தள்ளப்பட்டாலும் மண்ணின் மீது கொண்ட பற்று மாறப்போவதில்லை என்பதை இந்த நாவல் கோடிட்டுக் காட்டுகிறது.
அடிமை நிலையில் இருந்து அரசன் நிலைக்கு உயரும் ஒரு ஏழை விவசாயி இறுதிவரை தன்னை வளப்படுத்தி செழுமைப்படுத்தி வாழ்வை சிறப்பாக கட்டமைத்துக் கொடுத்த மண் மீது கொண்ட நெருக்கத்தை நாவலின் ஒவ்வொரு அத்தியாயங்களும் தெளிவாக உணர்த்துகின்றன. பரந்து விரிந்திருக்கும் பூமியில் தனக்கான மண்ணைக் கண்டுணர்ந்து பிணைப்பு உண்டாக்கிவிட்ட பின் அந்த மனதில் வேறு எந்த நிகழ்வும் பெரியதாக தோன்றப்போவதில்லை அதே போல் அந்த மனம் வேறு எந்தப் பொருளின் மீதும் இளைப்பாறுதல் சாத்தியம் இல்லை. அப்படியானதொரு பிணைப்பை இந்நாவலில் ஆசிரியர் சிறப்பாக எடுத்துக் காட்டி இருக்கிறார்.
வயதான தந்தையை வைத்துக்கொண்டு அடிமை நிலையில் இருந்த வாங் லூங் திருமணத்திற்கு பெண் பார்க்கச் செல்கிறான் அரண்மனையில் வேலைக்காரியாக இருக்கும் ஓலானை பிடித்துப் போகிறது. திருமணம் செய்கிறான் அவளுடன் குடும்ப பந்தத்தில் இணைந்தாலும் தனக்குக் கிடைத்த கையளவு நிலத்தை உழுது பயிரிட்டு கண்ணும் கருத்துமாக வளப்படுத்தி அதன் மூலம் திருப்தியாகிறான் அவனுக்கு வலது கையாகவும் இடது கையாகவும் கூடவே இருந்து உதவி செய்து நிலத்தை செழுமைப்படுத்தி அவன் வாழ்வையும் செழுமைப்படுத்தி விடுகிறாள் ஓலான். குழந்தைகள் பிறக்கின்றன. வயலின் எண்ணிக்கையும் உயர்கிறது. வாழ்வும் அடுத்த அடுத்த கட்டத்திற்கு நகருகிறது. பணக்காரனாக உருமாறிப் போன வாங் லூங்கும் தனது மண்ணின் மீது கொண்ட பற்றை மேலும் இறுகப்பற்றுகிறான்
இந்நிலையில் கொடிய பஞ்சம் ஊரையே உலுக்கி எடுக்கிறது எல்லாவற்றையும் இழந்து விட்டு ஊரை விட்டு வெளியேறுகிறது வாங் லூங்கின் குடும்பம். நகரத்தில் எந்த வேலையும் தெரியாமல் பிச்சை எடுக்கிறார்கள். அதன்மூலம் தங்களது உயிரை வளர்த்துக் கொள்கிறார்கள். ஒரு கட்டத்தில் அதுவும் சலிப்படைய அங்கே இருக்கும் புரட்சியாளர்களின் புரட்சியின் காரணமாக அரண்மனைக்குள் கிடைத்த நகைகளைக் கொண்டு மீண்டும் தனது சொந்த கிராமத்திற்கு திரும்புகிறார்கள்.
இப்போது முன்னை விட மண் அவனுக்கு மேலும் மேலும் வளங்களையும் வாழ்வையும் செழிப்படைய வைக்கிறது. அந்த அடிப்படையில் அவன் அரண்மனையையே விலைக்கு வாங்குகிறான். செல்வாக்கும் செல்வமும் கூடக்கூட அரண்மனையில் ஆசைநாயகியாக இருப்பவளை தனது ஆசைநாயகியாக வைத்துக் கொள்கிறான். அப்பொழுதும் ஓலான் கடுமையான உழைப்பின் காரணமாகவும் கணவன் மீது கொண்ட பற்றின் காரணமாகவும் எவ்வித மறுப்பும் தெரிவிக்காது ஏற்றுக்கொள்கிறாள்.
இறுதியில் வாங்கிலூங்கின் மகன்கள் வயது முதிர்ந்த அவனது நிலையை எண்ணி நிலத்தை விற்பதற்கு முயல்கிறார்கள் வாங்லூங் என்ன முடிவு எடுத்தான்? நிலம் கை மாறியதா? மண்ணின் மீது கொண்ட பற்று அவனை எந்த நிலைக்கு தள்ளியது? என்பதை ஆழமான உணர்ச்சிகளுடனும் எளிய மொழியிலும் எழுதி இருப்பதே இந்த நாவலின் சிறப்பு எனலாம்.
மண்ணும் மனிதனும் கொண்ட பாசப்பிணைப்பை மொழிபெயர்த்திருக்கும் ஜீவானந்தம் அவர்களின் பங்கு அளப்பரியது. மனதிற்குள் நெருக்கமாகி உணர்வுகளோடு பின்னிப்பிணைந்து நம்மையும் வாங் லூங் வாழ்வோடு இணைத்து அழைத்துச் சென்றிருக்கும் எழுத்தாக்கி நாவலை நமக்கு நெருக்கமாக்கிவிடுகிறார் ஜீவானந்தம்.
மனிதன் மிகப்பெரிய கோடீஸ்வரனாக உருமாறிக் கொண்டாலும் காலம் அவனை செல்வத்திலும் சகல வசதிகளிலும் மிதக்க வைத்தாலும் இறுதியில் அவனின் நடை பயணம் மண்ணின் மீது தான் என்பதை அருமையாக மனித மனங்களுக்கு உணர்த்துகிறது தாய்மண் நாவல்

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

