தாளில் தாளம் - நூல் அறிமுகம் - (கலைத் தடம் புலனக்குழுவின் கவிதைத் தொகுப்பு) - Thaalil Thaalam Tamil Book Review By - N Sekar - https://bookday.in/

தாளில் தாளம் – நூல் அறிமுகம்

நூலின் தகவல்கள்: 

நூல் : தாளில் தாளம்
(கலைத் தடம் புலனக்குழுவின் கவிதைத் தொகுப்பு)

தொகுப்பாசிரியர் : ஆலிவன்

பதிப்பகம் :   சிரீ. ரேணுகா பதிப்பகம்
கோயமுத்தூர்

தொடர்பு எண்:7708293241

பக்கங்கள் : 104

விலை : ₹125

“கலைத் தடம்” என்ற புலனக் குழுவை உருவாக்கி அக்குழுவில் இணைந்த கவிஞர்களை வைத்து வாரந்தோறும் போட்டிகளை நடத்தி அதன்மூலம் பதிவான கவிதைகளில் தேர்ந்தெடுக்கப்பட்ட 29 கவிஞர்களின் இரண்டிரண்டு கவிதைகளைக் கொண்டு வெளியிடப்பட்ட நூல் “தாளில் தாளம்”. புலனக்குழுவில் பதிவான கவிதைகளுள் மைதிலி ராமையா, சிரீ வித்ய பசுபதி, சுபாஷினி சிரீ, புவனேஸ்வரி.செ ஆகிய நடுவர்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட கவிதைகளே இந்நூலில் இடம் பெற்றுள்ளன. இந்நடுவர்கள் அனைவரும் பெண்கள் என்பது சிறப்பு. அ.கமல் என்னும் ஒருங்கிணைப்பாளர் இப்புலனக்குழுவைக் கறார்த் தன்மையுடன் விதிமுறைகளுக் குட்படச் செய்து வழி நடத்தினார். இக்குழவில் எழுதியவர்கள் பன்முகத்தன்மை கொண்டவர்கள். கொடுக்கப்பட்ட தலைப்புக்கு விதிமுறைக்குட்பட்டு அழகான கவிதைகளை வாரந்தோறும் படைத்துக் கொண்டே இருந்தனர். அவற்றுள் தேர்வான கவிதைகள் “தாளில் தாளம்” நூலாக வெளியிடப்பட்டுள்ளது சிறப்பு.

“தன் தலையில் வெயில் தாங்கி,
தனையண்டும் யாவர்க்கும்
தன் நிழலைத் தாரை வார்க்கிறது
உரிக்க உரிக்க வரும் வெங்காயமாய்ப்
படிக்கப் படிக்கப்
பாடம் நடத்திக்கொண்டே இருக்கிறது இயற்கை”

என்று இயற்கையைப் பாடம் நடத்தும் ஆசிரியராக வர்ணிக்கிறார் சாந்தி சந்திரசேகர்.

“காரணம் இல்லாமலேயே
இதுநாள் வரையில்
நம் இருவருக்கும் இடையில்
காதல் பயணித்தது
இன்று ஏனோ
மௌனங்கள் மட்டுமே மொழியாகிப் போகிறது”

அன்று காரணங்கள் இல்லாமல் ஏற்பட்ட காதலால் தான் புரிதலின்றி இன்று மௌனங்கள் மட்டுமே மொழியாகிப் போகிறது என்பதைப் பளிச்சென கவிதையாக வடிக்கிறார் பூர்ணிமா சங்கர்.

பராமரிக்கப்படாத தாயின் புலம்பலாக சௌமியா சிவராஜ் எழுதிய கவிதையில்,

“ஒத்த பார்வை பார்த்து
ஒரு சொட்டு கண்ணீருட்டு
ஒரே ஒரு ஓலம் விட்டு
ஒத்த நொடியில ஓஞ்சு போச்சே
அந்த ஒத்த உசுரு”
என உச்சுக் கொட்ட வைக்கிறார் கவிஞர்.

பால்வெளி எனும் கவிதையில் தன்னைச் சுற்றி நடக்கும் கொடுமைகளுக்கு மௌனம் காத்து இறுதியில்,

“எல்லாம் துடைத்தெறிந்த பாழ் வெளியில்
உங்கள் கோடாரிகளும் சுத்தியலும்
வெறிகொண்டு என்னைத் தேடி வந்தபோது
என்னைச் சுற்றிச் சூழ்ந்த போது
மண்டியிட்டு கால்களுக்குள் முகம் புதைத்து
வெட்டப்பட காத்திருந்தேன்.”

என்பது சுயவிமர்சனமாகக் கூறும் சுயநலவாதியின் கூற்றாக உள்ளது கவிஞர் அப்புசிவாவின் குறிப்பிடத்தக்க வரிகள்.

“எல்லாம் இந்த சாண் வயிற்றுக்காகத்தானே” என்று இன்றும் பேசுவதைப் பார்க்கிறோம். ஆனால் அந்த சாண் வயிற்றுக்கான உணவை வீணாக்குவது அதிகரித்து வருகிறதே தவிர குறைந்தபாடில்லை. இதை உணவே வருந்திக் கூறும் கவிதையில் விடுகதையாகக் கூறி வந்து கடைசியாக,

“தேவைக்கு மட்டும் பயன்படுத்துங்கள்
இன்னும் நான் யாரென்று‌
உங்களுக்குப் புரியவில்லையா
நான்
நீங்கள் உண்ணும் உணவானேன்”
என்று முடிச்சவிழ்க்கிறார் கவிஞர்.

அப்பா குறித்த கவிதையில் லாவண்யா கோபால்,

“வாலிபத்திலேயே
மனதை வயோதிகமாக்கும்
தன் தலைமுறைக்கு
காலச்சுவடாய்
வாழ்வியல் தத்துவத்தை எடுத்துரைக்கும்
அமுத சுரபி ‘அப்பா'”

எனக் குறிப்பிடுவது நெகிழ்வு.

“வீழ்நாள் வந்தாலும்
அதையும் மேலான நாளாக்கியவரே
வாழ்நாள் சாதனையாளர்” என முடிக்கும் கவிஞர் சக்திவேலின் “கலக்கம் ஏன்” எனும் தலைப்பிலான கவிதை உற்று நோக்கத்தக்கது.

“உலகில் வாழ்க்கை என்பது ஒருமுறையே
இதில் வீழ்வதில் இல்லை தலைவிதியே
புரிந்து வாழ்வினை மாற்று இந்நொடியே”

என்று முடியும் “மாற்றி யோசி” என்னும் நாகூர் பிச்சையின் தத்துவக் கவிதை நம்பிக்கை நங்கூரம் பாய்ச்சுவது நன்று.

“இன்று
என் வயோதிகத்தில்
என்னுடன் இருக்க
என்னைப் போலவே
என் மகனுக்கும் நேரமில்லை”
என்னும் விமர்சனம் சுய விமர்சனத்தை உள்ளடக்கிய கவிதையைப் படைத்த மோகனா குமார் பாராட்டுக்குரியவர்.

“பழமொழியும் புது மொழியும்” எனும் கவிதையில்,

“பொறுத்தார் பூமியாள்வார்
பழமொழி
ஒறுத்தார் தீர்வு காண்பார்
புதுமொழி”

என்பது கவிஞர் பெரணமல்லூர் சேகரனின் புதிய சிந்தனை. இவரது”உயர்நிலையில் உயர்ந்து நில்” எனும் கவிதையில்,

“குற்றத்தை ஏற்பவர்
சுயவிமர்சனம் செய்து கொள்பவர்
மாமனிதர் ஆகிறார்
விமர்சன உரிமை கொள்கிறார்
உயர்திணையில் உயர்ந்து நிற்கிறார்”

எனக் குறிப்பிட்டுள்ளது சிறப்பு.

“வீட்டிலுள்ள அனைவருமே
வேலைகளைப் பகிர்ந்து செய்தோம்
கூட்டு முயற்சி பலன் கொடுக்கும்
கூடுதலாய்ப் பயன் கிடைக்கும்”

என்ற அனுபவத்தைப் பகிர்ந்து கொள்கிறார் கவிஞர் அய்யனார் தமது “தோட்டம் வளர்த்தோம்” கவிதையில்.

“பல் போன பெண்ணொருத்தி” என்னும் கவிதையில் சாதிய வன்மங்களால் பாதிக்கப்பட்ட பெண்ணின் குமுறலாக,

“பந்தி போட்டுப் பாருங்கள்
உங்கள் சாதி சாம்ராஜ்யங்களை
வெட்டிப் போடத் துடித்துக் கொண்டிருக்கிறேன்
இப்போரில்
புளித்துப் போன ஒரு பெண்பால்
செங்கேணி மனைவியாக
கர்ஜிக்கும் பூமிக்கு அடியில்”

என்கிறார் கவிஞர் ஜனனி ஏழுமலை. சாதி மறுப்புத் திருமணங்களில் ஆணவக்கொலை தொடர்ந்து கொண்டிருப்பது சுடும் நிஜம்தானே!

இறுதியாக நடுவர்களும் தங்களது கவிதைகளைப் படைத்துள்ளனர் இந்நூலில். அவற்றுள்,

“பார்த்தால் காதலும்
தொட்டால் காமமும்
பெற்றால் பிள்ளையும்
வந்தபிறகே புரிகிறது
லட்சியம் எங்கே போனதென்று”

என்னும் சுபாஷினி.சிரீ. யின் வரிகள் கவனிக்கத்தக்கவை.

“வரமா சாபமா” என்னும் கவிதையில் விடுகதை போல் சொல்லி வரும் நடுவர் சிரீ. வித்யா பசுபதி,

“பருவம் வரும்வரை காத்திருந்த காதலை
பாராமுகம் காட்டிக் கடலுக்குள் தொலைக்கிறாய் உன் குடைக்கம்பியில்
என்னைக் கழுவிலேற்றிக் கொல்லும் பெண்ணே
மழையாகிய நான்..உனக்கு வரமா சாபமா?”

என முடிச்சவிழ்க்கிறார் கவிஞர்.

நிலவுக்கும் மங்கைக்கும் போட்டியாய்,

“மாதம் ஒருமுறைதான்
மலர்வாய்நீ பௌர்ணமியாய்
முப்பது நாளுமே
முழுநிலவு என்னவள் என்றேன்”
என்று மங்கையை உயர்த்தும் வரிகள் மகோன்னதமானவை.

அனைத்துக் கவிதைகளுமே கொடுத்த தலைப்புகளின் வழி அழகியலுடன் வலம் வருகின்றன. வித்தியாசமான இத்தொகுப்பைக் கவிஞர்கள் வாங்கிப் படிக்க வேண்டும்.

இந்நூலை அழகிய முறையில் அச்சிட்டு வெளியிட்ட சிரீ. ரேணுகா பதிப்பகம் பாராட்டுக்குரியது.

 

நூல் அறிமுகம் எழுதியவர் : 

பெரணமல்லூர் சேகரன்



இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள்சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

 



Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *