தாலியில் பூச்சூடியவர்கள் | Thaaliyil Poochudiyavargal | Story | Book Review

தாலியில் பூச்சூடியவர்கள் (Thaaliyil Poochudiyavargal)

தமிழின் முக்கியமான எழுத்தாளர்களில் ஒருவரான பா.செயபிரகாசம் அவர்கள் எழுதிய தாலியில் பூச்சூடியவர்கள் கதையை, தாமரை இதழில் நான் படித்தேன். நான் எட்டாம் வகுப்பு படித்துக்கொண்டு இருந்த போது, தாமரை இதழுக்கு அம்மா சந்தா கட்டி இருந்ததில், தனிச்சுற்று பிரதி வீட்டுக்கு வரும். சிறிய அச்சில், கிரே கலர் பேப்பரில், மிக ஆழமான கதைகளும், கட்டுரைகளும், கவிதைகளும் அதில் இடம்பெறும். அதுவரை நான் படித்துக்கொண்டு இருந்த கதைகளில் இருந்து மாறுபட்ட வடிவத்துடன் இந்தக் கதைகள் இருந்தன. நிறைய கதைகளைப் புரிந்து கொள்வதில் எனக்கு சிரமம் இருந்தது உண்மை.

ஆனால் அந்த வயதிலேயே தாலியில் பூச்சூடியவர்கள் கதையின் உக்கிரம் என்னை ஏதோ ஒரு வகையில் பாதிக்கவே செய்தது.

ஒரு கரிசல் கிராமத்தில் நில உடமை கொண்ட உயர் சாதி முதலாளிகளுக்கும் அவர்களைச் சார்ந்து வாழும் கீழ்சாதி எனப்படும் சாதிகளைச் சார்ந்த உழைப்பாளர்களுக்கும் இடையேயான ஆதிக்கமும் அடக்குமுறையும் உழைப்புச்சுரண்டலும், பாலியல் அத்துமீறல்களும் அடிப்படை கதைக்களம்.

கீழ்சாதிக்குடியிருப்பில் நடக்கும் கருப்பசாமிகோயில் திருவிழாவின் விவரிப்புகளோடு கதை தொடங்கும். உக்கிரமாக தீச்சட்டி ஏந்தியபடி ஆடிச்செல்வாள் புதிதாக திருமணமாகி அந்த ஊருக்கு வந்த தைலி. தோளில் விழுந்து சிதறும் நீண்ட கூந்தலை உடைய கருத்த உருவமாக அவள் நம் மனக்கண்களில்
தோன்றும் படி அந்தச்சூழலின் வர்ணனை இருக்கும். சுழன்று ஆடும் அவளின் கரங்களில் அக்கினி மலரென ஒளிவிடும் தீச்சட்டியையும், அதன் வெக்கையையும் நம்மால் உணர முடியும். தலையில் பூச்சூடுவது மறுக்கப்பட்ட பெண்கள் தாலியில் பூச்சூடி இருந்தனர்.

தைலியின் தெய்வ உக்கிரத்தை அவளுடைய குடியைசேர்ந்தவர்கள் தரிசிக்கும் அதே நேரம் அவள் உடலை மேயும் மேல்சாதி இளவட்டங்களின் பார்வையின் முரண் நம் சமூக அமைப்பின் கொடூர வெளிப்பாடு. “ரெட்டி வீட்டுப் பெண்கள், ஒரு கணம் பள்ள வீட்டுச் சாமியை கையெடுத்துக் கும்பிட்டார்கள். கும்பிட்டபின்
ஒரு பள்ள வீட்டுச் சாமியாடியைக் கும்பிட்டதை உணர்ந்து கைகளைக் கீழே போட்டார்கள்” என்ற வரிகளில், சாமிக்கும் சாதி உண்டு என்பதன் அசிங்கமான உண்மை நம் முகத்தில் அறையும். கீழ்சாதி சாமியை கும்பிட்டால் தீட்டு, கீழ்சாதிப்பெண் ஊர்க்கிணற்றில் தண்ணீர் எடுக்கக்கூடாது, ஊரைச்சுற்றி செல்லும்போதும் காலில் செருப்புபோடக்கூடாது, ஊரின் தெருக்களுக்குள் வரவே கூடாது என்ற வரைமுறைகள் தைலிக்கு எரிச்சலூட்டுகிறது.

அவள் மேல் ஊர் இளவட்டங்களின் கண்கள் காமத்தோடும், ஊர்ப்பெண்களின் கண்கள் பொறாமையோடும் படரும். அந்த ஊரில் தவறிழைக்கும் கீழ்சாதியினருக்கு பஞ்சாயத்து கூட்டி ஊர் மாடுகளை மேய்த்து வருவதை தணடனையாகத் தருவது வழக்கம். சமீபமாக யாரும் அப்படி தண்டணை
அடையாததும் மேல்சாதியினருக்கு ஆற்றாமை அளிப்பதாக இருக்கிறது.

தினமும் பொசுக்கும் வெயிலில் செருப்பு இல்லாமல் ஊரைச்சுற்றி போய் தண்ணீர் எடுத்து வருவது தைலிக்கு களைப்பை ஏற்படுத்துகிறது.
கடும் கோடையினால் வயல்வேலைகள் அற்றுப்போய் முதலாளிமார்களின் வீடுகளில் கம்மம்புல் யாசிக்கவும், சின்னச்சின்ன வேலைகள் செய்யவும் செல்கிறாள் தைலி. தன் கணவனுடனான வாழ்வு வறுமையினாலும் பொறாமையினாலும் தைலிக்கு வேதனையூட்டுவதாக மாறுகிறது.

இதனிடையே தைலியுடன் பழகும் ஒரு முதலாளி வடரெட்டி அவன் வீட்டில் கம்மம்புல் குத்தும் வேலையை அவளுக்குத் தருகிறான். அதற்காக அவன் மனைவி
திம்மக்காவுடன் பெரிய சண்டையும் நடந்தாலும், திம்மக்கா கடைசியில் விட்டுக்கொடுக்கிறாள். அவனுடன் தைலி ஏற்படுத்திக் கொள்ளும் பிணைப்பின் தைரியத்தில், அவன் வீட்டுக்கு தண்ணீர் கொண்டுவர ஊர்த்தெருவில் செருப்புக்காலோடு நடக்க முதலாளியிடம் அனுமதி கேட்கிறாள். ஏதோ ஒரு மயக்கத்தில் முதலாளி வடரெட்டியும் ஒப்புக்கொள்கிறான். ஒரு காலையில் கால்களில் செருப்போடு தைலி ஊர்வழி நடக்கிறாள். வெகுண்டு போகும் அனைவரும் ஊரையே
தீட்டுப்படுத்திவிட்ட அவளை ஊர் பஞ்சாயத்தில் நிறுத்தும்போது, அவளுடைய முதலாளியும் அவளுக்கு வழங்கப்பட்ட தண்டனையை வேடிக்கை மட்டுமே பார்ப்பதை தைலி இயலாமையோடு பார்க்கிறாள்.

தீச்சட்டி ஏந்திய உக்கிரமான அவளுடைய கைகளில் ஊர்க்காலிமாடுகளைப் பிடித்தபடி ஒரு விடியலில் அவள் போவதான
பிம்பத்தோடு இந்த சிறுகதை முடியும். கதையின் ஊடாக வரும் பல்வேறு நிகழ்வுகள் சாதியக் கொடுந்தீயின் வன்மத்தையும் முரண்களையும் முகத்தில் அறைவதுபோல வெளிப்படுத்துகிறது. தன் நிலத்தில் வேலை பார்க்கும் மக்களை தனக்கு அடிமைகளாகவும், தன் உடமைகளாகவும் பார்க்கும் மனோபாவத்தை
தோலுறிக்கிறது இக்கதை. ஊரைச் சுற்றிய பாதையில் நடக்கும்போது கீழ்சாதிப்பெண் தன் மேல் பட்டுவிட்டால் தீட்டு. ஆனால் அவளை தன் இச்சைக்கு உட்படுத்திக்கொள்வதில் எந்த தீட்டும் இல்லை. இந்த முரண் ஒரு குரூர நகைச்சுவை. நில உடமையும், அதன் விளைவான வருமானமும் மேல்சாதிக்கும் முதலாளிக்கும். உடல் உழைப்பும் அதனால் ஏற்படும் அடிமைத்தனமும் கீழ்சாதிக்கும் தொழிலாளிக்கும்.

இந்த மனோபாவத்தை முதலாளி வடரெட்டியின் மனைவி செயின்காரி என்னும் திம்மக்கா பிரதிபலிப்பாள். கதையில் இரண்டு தெருக்களுக்கு இடையேயான வேறுபாடும் துல்லியமாக வெளிப்படும். சமூக கோட்பாடுகளாக மட்டும் அல்ல, தங்கள் சுய லாபத்துக்காகவும் தான் தீட்டு என்றும்,தண்டனை என்றும் பஞ்சாயத்து என்றும் உருவாக்கினார்கள் என்பதை இந்த வரிகள் தெளிவாகச் சொல்லும். “இப்போதெல்லாம் எவனுமே தண்டனையடைவதில்லை. தாழ்ந்த ஜாதிக்காரன்
ஒருவனைக் கூப்பிட்டுத் தண்டித்து மாடு மேய்க்கச் சொல்லவேண்டும்போல் தோன்றியது. மாடுகளுக்குத் தீவனமும் கிடைத்தது; பால் கறவையும் அதிகம் வந்தது. பதினைந்து நாளோ, ஒரு மாதமோ, சுகமாய் மாட்டுத் தொல்லையில்லாமல் கழிந்தது”.

உழைப்புச்சுரண்டலை இதை விட எளிதாகச் சொல்ல முடியுமா? கூலியாகத் தருவதே ஒரு படி கம்மம்புல்லும் கொஞ்சம் தவசமும்தான். தண்டனையாக ஊர்க்காலி மாடுகளை மேய்க்கக் கூலி தேவையில்லை.

அத்தோடு இந்த தண்டனைகளால் அந்த சமூகமே பயந்து மறுபடியும் தலைதூக்கத் தயங்கும் என்ற கணக்கும் தான் இந்த விதிகளுக்கே காரணம் இல்லையா? ஒரு கிராமத்தின் பல்வேறு படி நிலை சாதிகளில், ஒரு சாதியினர் முதலாளிகளாகவும் மற்ற அனைவரும் உறவுநிலையில் அழைக்கத்தக்க அளவிலும் இருபதாக சமூக அமைப்பும் கதையினூக சொல்லப்படுகிறது. ஆனால் அனைவருக்கும் கீழான அடுக்கில் இருப்பவர் மீது எல்லாரும் தங்கள் வலிமையை பிரயோகிப்பதை,
அவர்களின் கையறு நிலையை பரிகசிப்பதை ராஜாமணியின் மூலம் நாம் அறிகிறோம்.

அத்தோடு இன்னும் ஒரு வினோதம், தைலியோடோ மற்ற கீழ்சாதிப்பெண்களோடோ உறவு கொள்ளும் மேல்சாதி ஆண்களின் நடத்தை எங்குமே கேள்விக்குள்ளாக்கப் படுவதில்லை. திம்மக்காவின் ஆற்றாமையைத் தவிர அதில் சொல்லிக்கொள்ள ஏதுமில்லை, யாருடனும் உறவு கொள்ளுதல் ஆண்களின் பிறப்புரிமை என்பது போல.”நில உடமை உள்ள கைகள் பரபரத்தன. எல்லாவற்றையும் கைவசப்படுத்தும் நீண்ட அகலமான கைகள். அவைகளுக்குத் தப்பி
எந்தப் பொருட்களின் இயக்கமும் நடைபெற முடியாது” இந்த வரிகளில் ஆதிக்கத்தின் நீண்ட கரங்களின் வலிமை வெளிப்படுகிறது. அந்த கரங்களுக்கு தனி மனித சுதந்திரம் பற்றியோ, தன்மானம் பற்றியோ கவலை இல்லை. எல்லாவற்றையும் கைப்பற்ற வேண்டும்! எல்லாவற்றையும்.

திம்மக்காவுக்குத்தான் சொத்து முழுமையும். அதில் இருந்து வரும் பலனில் உழைப்புக்கூலி மட்டுமே கணவன் வடரெட்டிக்கு. ஆனால் அவனின் நடத்தையை அவள் கேள்வி கேட்க இயலாது. ஆதிக்க சாதியானாலும் அவள் பெண். திம்மக்காவின் சுலபமான இலக்கு தைலிதான். கணவனை மயக்கி கைக்குள் போட்டுக்கொண்டவள் தைலி என்பதே திம்மக்காவின் பார்வை.

எல்லா இடங்களிலும் பாதிக்கப்படுவது தாழ்ந்தவர்களே. சாதி என்றால் கீழ்சாதி, பாலினம் என்றால் பெண். பலப்பல அடுக்குகளில் நம் சிந்தனையைத் தூண்டிவிடக்கூடிய அற்புதமான கதை இது. எத்தனை முறை படித்திருப்பேன் என்று தெரியாத அளவுக்கு எனக்கு பிடித்த கதை இது. கிராமங்களின்
விளையாட்டுகளும், அதில் பொதிந்திருக்கும் சாதிய வேறுபாடுகளும் கதையில் சொல்லப்பட்டு இருக்கும். பத்து பக்கங்களில் பல நூற்றாண்டுகளின் சொல்லப்படாத வேதனைகளை வெளிப்படுத்தும் இந்தக் கதை முடியும் வேளையில் ஊர்க்காலிமாடுகளை பத்திக்கொண்டு ஊர் பஞ்சாய்த்தால் தண்டனை பெற்று நடந்தாலும் “அடுத்த நாள் விடியலில் ஒரு உருவம் ஊர்க்காலி மாடுகளைப் பிடித்தபடி போனதை எல்லாரும் பார்த்தார்கள்.

தோள்களில் விழுந்து சிதறும் நீண்ட கூந்தலை உடைய உருவம் அது” என்று பா.செயப்பிரகாசம் அவர்கள் எழுதியிருப்பது, தைலி விடியலை நோக்கித்தான் போகிறாள் என்ற சூசகத்தை வெளியிடுவதாக எனக்குத் தோன்றுகிறது. கல்வியும் அதிகாரப் பரவலும் அடக்குமுறைகளை நிச்சயம் தகர்க்கும். எழுத்தும்
இலக்கியமும் கலைகளும் நம்மை சமத்துவத்தை நோக்கி அழைத்துச்செல்லும் வழிப்பாதைகள். அந்த வகையில் இந்தக் கதை முக்கியமான ஒன்று.

 

நூலின் தகவல்கள் : 

நூல் : தாலியில் பூச்சூடியவர்கள்

ஆசிரியர்பா .செயபிரகாசம்

விலை ரூ. 285

வெளியீடு : நற்றிணை பதிப்பகம்

 

நூலறிமுகம் எழுதியவர்:

ஆதினி

 



இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல்பொருளாதாரம்இலக்கியம்), கவிதைகள்சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

 



 

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *