தாத்தாவின் வீடு – நூல் அறிமுகம்
தாத்தா வீடு எனும் நூல் வீ.வே. முருகேச பாகவதரின் நினைவலையைக் வெளிக்கொணறுகிறது. இந்நூலின் ஆசிரியர் முருகு சுந்தரேச புனிதவதி. இவர் சென்னைப் பச்சையப்பன் கல்லூரியில் ஓய்வுப் பெற்ற தமிழ்த்துறைப் பேராசிரியர். அம்மையார் புனிதவதி அவர்கள் முருகேச பாகவதரின் மகன் சுந்தரேசனின் மகள். அதன் அடிப்படையில் அவர் மகன் வழி பேத்தி . தாத்தாவின் நினைவலைகளைத் தாத்தாவின் வீடு என்னும் இந்நூலில் வடித்துள்ளார். இந்த நூலை ஏன் எழுத வேண்டும்? இந்நூல் சமுதாயத்தில் ஏற்படுத்தும் தாக்கம் என்ன என்ற அடிப்படைக் கேள்வி எழுகிறது.
இந்நூல் எழுந்த வரலாற்றைப் பற்றி நூல் ஆசிரியர் பின்வருமாறு முன்வைக்கிறார் ”இந்த புத்தகத்தை எழுதுவதற்கு தூண்டுகோலாக இருந்தது தாத்தாவின் நினைவலைகள். தாத்தா என்று சொன்னதும் அந்த கம்பீரமான உருவம், அவர் இருக்கும் பொழுதும் பெருமைப்படுத்தியது, அவர் இறந்த பிறகும் பல லட்சங்களை அள்ளித் தந்து, நாட்டுடைமையாக்கப்பட்ட அவருடைய படைப்புகள் மறக்க முடியாத மிகப்பெரிய பொக்கிஷமாக அவர் அன்றும் என்றும் எங்கள் மனதில் வாழ்ந்துக் கொண்டிருக்கிறார் (ப.10).
அதேபோன்று இந்த நூல் சமுதாயத்தில் ஏற்படுத்த நினைக்கும் மாற்றம் பற்றி பின்வருமாறு காணலாம். மகா மதுரகவி வீ. வே. முருகேச பாகவதர் 21 அக்டோபர் 1897 க்கும் 1947 அக்டோபர் 21 இடைப்பட்ட காலங்களில் சரியாக 77 ஆண்டுகள் வாழ்ந்துள்ளார். இந்த இடைப்பட்ட காலங்களில் அவர் பிறந்த நாளை போன்று 77 ஆண்டுகளுக்குப் பிறகு அதே நாளில் பரி நிப்பானம் அடைந்துள்ளார். இந்த வாய்ப்பு அனைவருக்கும் கிட்டுவதில்லை. ஒரு சில மனிதர்களுக்கு மட்டுமே கிடைக்கும். இதை அரிய வாய்ப்பு என்று கூறலாம். அவர் ஒரு மாபெரும் கவிஞர். அதனால் தான் அவரை மகா மதுரகவி என்று பட்டம் வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளார். கவிஞர் மட்டுமல்ல பேச்சாளர், எழுத்தாளர், பாடகர், நடிகர், பாடலாசிரியர், இசை வல்லுநர், மொழிப் பற்றாளர், என பன்முகத்திறன் பெற்றவர். அவர் மொழி மீதும், இலக்கியத்தின் மீதும் அளவு கடந்த தீரா வேட்கைக் கொண்டவர். அதனால் தான் 1931 க்கு பிறகு தமிழ் இலக்கியத்தில் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டார். அந்த வகையில்
ஆதிதிராவிடர் சமூகச் சீர்திருத்த கீதங்கள் – 1931
( இதை தலித் இலக்கியத்தின் முன்னோடி படைப்பு என்று கூற முடியும்)
மதுவிலக்கு கீர்த்தனம் – 1932
அறிவானந்த கீதம் – 1934
சமதர்மம்
சன்மார்க்கம்
ஞானரசம்
சென்னை சிங்காரம்
மாதரருமை
வெள்ளப் பாடல்
தமிழ்ச்சோலை
தோல் பதனிடுவோர் துயரம் – 1951
காந்தியடிகள் – 1951
உள்ளிட்ட பல படைப்புகளைக் கூற முடியும். அவர் படைத்த அனைத்துப் படைப்புகளும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது. சமகாலத்திற்கு மட்டுமல்ல எதிர்காலத் தேவைக்காகவும் ஒரு தொலைநோக்கு பார்வையுடன் அவருடைய படைப்புகள் திகழ்வதை காண முடியும்.
கவிஞர் முருகேச பாகவதர் அவர்கள், அவர் காலத்தில் வாழ்ந்த கவிஞர்கள், அரசியல் தலைவர்கள், சமூக செயல்பாட்டாளர்கள் என்று அனைவருடனும் இணைந்து இயங்கியதை அவர் வரலாற்றை அணுகிப் பார்த்தால் அறிந்து கொள்ளலாம். குறிப்பாக திரு. மகாத்மா காந்தியடிகளின் வேண்டுகோளின் அடிப்படையில் தான் 1932 மதுவிலக்கு கீர்த்தனம் பாடியதை அறியமுடிகிறது. அதேபோன்று பெரியார், அண்ணாதுரை, மு. கருணாநிதி, கவிஞர் பாரதிதாசன் உள்ளிட்டோரிடம் அவருக்கு இருந்த நட்பும் நெருக்கமும் முக்கியத்துவம் பெற்றுள்ளது. முருகேச பாகவதரின் கவிதை வெளியிட்டு விழாவிற்கு பேரறிஞர் அண்ணாதுரை நேரில் சென்று வாழ்த்திய வரலாறையும் அவருடைய நூலுக்கு எழுதிய வாழ்த்துரையும் குறிப்பிடத்தக்கது.
அதேபோன்று தன் வாழ்நாள் எல்லாம் நாட்டு மக்களுக்காகவும் தேச நன்மைக்காகவும் பாடுபட்ட ஒரு மக்கள் கவிஞரை தமிழ் சமூகம் அறியாமல் போனது வருந்தத்தக்க செயல். அவர் காலத்தில் வாழ்ந்த பாரதியார், பாரதிதாசன் உள்ளிட்ட படைப்பாளிகளை சேகரித்து வைத்திருந்த தமிழ் சமூகம், இதுபோன்ற சமூக செயல்பாட்டாளர்களுடனும், போராளிகளுடனும் கவிஞர்களுடனும் இருந்த தொடர்புகளைப் பற்றியும் அவர் எழுதிய நூல்களும் எந்தக் குறிப்பேட்டிலும் பதிவு செய்யவில்லை என்பதைக் காணும் பொழுது கேள்வி எழுகிறது.
பேராசிரியர் க. ஜெயபாலன் அவர்களின் தொடர் முயற்சியால், மகா மதுரகவி வீ. வே. முருகேச பாகவதர் வெளிச்சத்திற்கு வந்துள்ளார். அதன் பிறகு தான் 2021 ஆம் ஆண்டு பாகவதரின் நூல்கள் நாட்டுடைமை ஆக்கப்பட்டது. பேராசிரியர் க. ஜெயபாலன் தொடங்கி வைத்த முருகேச பாகவதரின் ஆராய்ச்சி, தமிழில் விக்கிப்பீடாவில் அவர் பற்றிய தகவல்கள் உருவாக்கப்பட்டுள்ளது. அதனுடைய நீட்சியாக அறிஞர் பெருமக்கள் பலரும் பாகவதர் பற்றிய தேடலில் ஈடுபட்டுள்ளனர். அதன் தொடர்ச்சியாக தான் அவருடைய பேத்தி முருகு சுந்தரேச புனிதவதியின் தாத்தாவின் வீடு நூலை குறிப்பிடலாம்.
1951இல் எழுதிய தோல் பதனிடுவோர் துயரம் எனும் நூலும் குறிப்பிடத்தக்கது. அறிவியல் வளர்ச்சி உந்தப்பட்டு இன்று பெரும்பாலான உற்பத்தி பொருட்களுக்கு தொழிற்சாலைகள் பெருகிவிட்டன. ஆனாலும் தோல் தொழிற்சாலைகளுக்கு கணிசமான அளவிற்கு இன்னும் முன்னேற்றம் தேவையாக உள்ளது.இப்படிப்பட்ட சூழலில் 70, 80 ஆண்டுகளுக்கு முன்னர் பெரிய அளவிற்கு அறிவியல் சாதனமும் கருவிகளோ இல்லாத பொழுது மனிதர்கள் அந்த தோல் உற்பத்தி தொழிலில் ஈடுபடும் தொழிலாளர்கள் பட்ட பாட்டை முருகேச பாகவதர் முதலில் பதிவு செய்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. இன்று இந்தியா தோல் உற்பத்தியில் 60% ஏற்றுமதி செய்யும் நாடாக விளங்குகிறது. குறிப்பாக தமிழ்நாட்டில் வாணியம்பாடி, ஆக்ரா, கொல்கத்தா போன்ற மாநிலங்கள் தோல் உற்பத்தி செய்யப்படும் இடங்கள் ஆகும்.
எழுத்தாளர் அழகிய பெரியவன் 1999 ஆம் ஆண்டு வீச்சம் எனும் சிறுகதையில் தோல் தொழிலாளியின் வலி நிறைந்த வரலாற்றை பதிவு செய்திருப்பார். அதில் காக்காசி (அப்பா), பாமாண்டி (மகன்) இருவருக்கும் நடக்கும் உரையாடல் நேரடியாக களத்திற்கு வாசகர்களை கூட்டிச் சென்று நெஞ்சை பிழியும் வலியை அந்த உரையாடலில் கடத்தி இருப்பார். அது ஒரு உண்மைச் சம்பவம், அவருடைய சொந்த வாழ்க்கை என்பதை பின்னாளில் அறிய முடிந்தது.
சமீபத்தில் எழுத்தாளர் டி. செல்வராஜ் அவர்கள் திண்டுக்கல் உள்ளிட்ட தோல் தொழிற்சாலைகளையும் அதில் பணியாற்றும் தொழிலாளர்களின் சொல் ஒன்னா துயரங்களை எல்லாம் தோல் என்னும் நாவலில் வெளிக்கொணந்தார். அதன் பின்னர் அந்த தொழிலாளிகளின் வாழ்க்கை அவர்களின் முன்னேற்றம் குறித்து சிந்திக்கும் வகையில் அல்லது கேள்விக்கு உட்படுத்தும் வகையில் மாற்றம் கண்டது. தவிர்க்க முடியாத சூழலில் தோல் நாவலுக்கு 2012 ஆம் ஆண்டு சாகித்திய அகடமி விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது. இப்படி காலந்தோறும் தோல் பதனிடுவோர் தொழிலாளர்களின் வரலாறு நீண்டு செல்கிறது. இவை எல்லாவற்றிற்கும் தோற்றுவாயாக வீ.வே.முருகச பாகவதர் எழுதிய தோல் பதனிடுவோர் துயரம் என்பது குறிப்பிடத்தக்கது.
தாத்தாவின் வீடு
தாத்தாவின் வீடு ஓர் அலாதியான பிரியத்துடன் தொடங்குகிறது. இனி அது போன்றதொரு அனுபவம் எந்த தலைமுறைக்கும் கிடைப்பது சந்தேகம்தான். இது போன்ற நூல்களை படிக்கும் பொழுது நம் முன்னோர்களின் வரலாறை அறிந்து கொள்வதில் ஏற்படும் மகிழ்ச்சியும், அதுபோன்ற ஒரு அனுபவம் இன்றைய தலைமுறைக்கு கிடைக்கவில்லை என்ற வருத்தமும் மேலிடுகிறது. இந்த அனுபவத்தின் பகிர்வோடு மகாமதுர கவி வீ.வே. முருக சபாகவதர் அவர்கள் இந்த சமூகத்தில் எவ்வளவு முக்கியமான மனிதராக இருந்திருக்கிறார், களத்தில் சென்று போராளியாக நின்றிருக்கிறார், பாதிக்கப்பட்ட மக்களின் குரலாக எதிரொலித்திருக்கிறார், சமூக சீர்கேடுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து அதற்கு முகம் கொடுத்திருக்கிறார், இந்திய விடுதலை, மொழி உணர்வு, குடும்ப உறவு இப்படி எல்லாவற்றிலும் அவருக்கு இருந்த ஈடுபாட்டை தாத்தாவின் வீடு நமக்கு சொல்லிக் கொடுக்கும் பாடமாகும்.
இது பார்ப்பதற்கும் படிப்பதற்கும் ஒரு சிறு நூல் தான். ஒரே மூச்சில் வாசித்து விட முடியும். ஆனால் அந்த உணர்வில் இருந்து கடந்து வருவது அத்துணை எளிமை அல்ல என்ற உணர்வையும் இந்நூல் வாசகர்களுக்கு தருகிறது. இந்நூலில் மொத்தம் ஏழு தலைப்புகள். அவை பின்வருமாறு காணலாம்.
தாத்தாவின் வீடு
பாசமிகு தாத்தா
அன்பான அம்மாச்சி
எங்கள் ஆசிரியர்
பிறந்த நாளும் தாத்தா
நினைவலைகள்
பெருமைமிகு தாத்தா
இப்படி ஏழு தலைப்புகளில் இடம்பெற்றுள்ள அந்த நூலில் எடுத்த எடுப்பிலேயே தாத்தாவின் வீடு என்றாலே அழகு என்று தொடங்கும், அந்த வீடு எப்பொழுதும் ஒரு பெரிய ஆலமரமாக இருந்திருக்கிறது. அந்த வீடு ஒரு சுமைதாங்கி கல்லாகவும் இருந்த வரலாற்றை விவரிக்கும் பொழுது உள்ளபடியே கூட்டுக் குடும்பத்தின் ஆனந்தத்தை அதன் மகிழ்ச்சியை வாசகர்களுக்கு ஒரு ஏக்க பெருமூச்சோடு பார்ப்பதை உணர்த்துகிறது. தாத்தா முருகேச பாகவதர் அவர்கள் படிக்கும் அறை, அவருடைய மேசை, நாற்காலி, அவர் மேசை மீது பயன்படுத்தும் அழைப்பு மணி, இப்படி அந்த வீடும் அவருடைய அறையும் வீட்டின் முற்றம் வெளித்தோற்றம் அதற்கு முன்பாக இருக்கக்கூடிய வீட்டின் கேட் அனைத்தும் அழகாக இருந்த தோற்றத்தை இந்த நூல் வெளிக்கொண்டு வந்துள்ளது. இரவு நேரத்தில் வீட்டு வாசலில் அம்மாச்சி உடன் சிறுவர்கள் குழந்தைகள் என பலரும் படுத்துக்கொண்டு வானத்தைப் பார்த்து நட்சத்திரங்களை எண்ணுவதும், அப்பொழுது ஐந்து நட்சத்திரம், மூன்று நட்சத்திரம், விடிவெள்ளி நட்சத்திரம் போன்றவற்றை கண்டுபிடிக்க அந்த குழந்தைகள் முயற்சி செய்யும் இனிய காட்சியை விவரிக்கும் அழகு நமக்கு ஒரு ஏக்கத்தை தருகிறது. தாத்தா எப்பொழுதும் அன்பு நிறைந்தவர். ஆனாலும் கண்டிப்பாகவும் இருப்பார். குறிப்பாக படிப்பதில் அவர் எடுத்துக் கொள்ளும் ஆர்வம் மிகவும் கவனம் பெறத்தக்கது. அதே சமயத்தில் அவரிடம் படிக்க வரக்கூடிய இளைஞர்கள், கவிதை எழுதுவதற்காக கற்றுக் கொள்ளும் மாணவர்கள் இப்படி அனைவரிடத்திலும் மிகுந்த அன்புடனும் பரிவுடன் நடந்து கொள்வார்.
ஆசிரியர் புனிதவதி அம்மையார் அவர்கள் ஒரு மிகச்சிறந்த ஆவணத்தை வெளிக்கொணந்துள்ளாரோ என்று தோன்றுகிறது. அந்த அளவிற்கு முருகேச பாகவதரின் வரலாறு இந்த நூலில் ஓர் இழையாக கடந்து செல்வதை காண முடியும். கவிஞர் முருகேச பாகவதர் பம்பாய் தமிழ்ச்சங்கம் சென்று வந்த வரலாறு, அங்கு இருந்த குழந்தைகளின் படிப்புக்கு அவர் எடுத்துக்கொண்ட முயற்சி, பம்பாயில் பெற்றோர்கள் இருந்தாலும் அதில் பெரியசாமி குடும்பம், சுப்பையா குடும்பம் போன்ற குடும்பங்களில் இருந்த குழந்தைகளை சென்னைக்கு கொண்டு வந்து தன்னுடைய வீட்டில் தங்கவைத்து அவர்களைப் படிக்க வைத்த வரலாறு இப்படி அவர் காலம் தோறும் ஏழை எளிய பிள்ளைகளுக்கு கல்வி தரும் ஆசனாக இருந்திருக்கிறார். அவர் எங்காவது சிறப்பு விருந்தினராக செல்லும் இடங்களில் அவருக்கு கிடைக்கும் மாலை மரியாதை போன்றவற்றை கொண்டு வந்து தன் வீட்டில் இருக்கும் பேரப்பிள்ளைகளுக்கு அதை அணிவித்து மகிழும் காட்சி எல்லாவற்றையும் இந்த நூலில் சேகரித்துக் சேகரித்து கொடுத்து இருக்கிறார்.
அதேபோன்று அம்மாச்சி மிகவும் அன்பு நிறைந்த பாட்டியாகவும் இருந்திருக்கிறார். அவருக்கு நிறம்ப ஆங்கில அறிவு இருந்திருக்கிறது. அவர் மிகுந்த கனிவு மிக்கவராகவும், அவரிடமிருந்த பழையப்பட்டுப் புடவைகளைக் குழந்தைகளுக்கு பாவாடைச் சட்டை தைத்து தருவதையும், அவர் உணவு சமைக்கும் அழகையும், பிள்ளைகளுக்கு தின்பண்டம் வாங்க காசு தருவதையும் இப்படி அம்மாச்சியின் அன்பை பாராட்டும் ஆசிரியர் ஒரு நாளும் தாத்தாவுடன் அம்மாச்சி முரண்பட்டதையும் சண்டையிட்டதையும் நாங்கள் பார்த்ததில்லை என்கிறார். அதேபோன்று அம்மாச்சி அதிகாலையில் எத்தனை மணிக்கு எழுவார் எப்பொழுது குளிப்பார் என்றும் நாங்கள் பார்த்ததில்லை. அந்த அளவிற்கு சுறுசுறுப்பாக செயல்படுபவர். அதே போன்று மலர் அக்கா அவர்களின் பங்களிப்பைக் குறித்து அவ்வளவு அழகாக படைத்திருப்பார்.
இப்படி நீண்டு செல்லும் தாத்தாவின் வீட்டில் நிறைவாக 2021 ஆம் ஆண்டு தமிழ்நாடு அரசு முருகேச பாகவதரின் நூல்களை நாட்டுடைமை ஆக்கிய வரலாற்றை சொல்லும்பொழுது கண்கள் குளமாகும் அளவிற்கு அவருடைய வரலாற்று எல்லாம் சொல்லிச்செல்லும் காட்சிகளை பார்க்கும் பொழுது வாசகர்களுக்கும் உணர்ச்சி மேலிடுவதை தவிர்க்க முடியவில்லை.
இது போன்ற நூல்கள் இன்னும் பல்கிப் பெருக வேண்டும் அப்பொழுதுதான் தாய் திருநாட்டில் எத்தனை பெரிய படைப்பாளிகள் எல்லாம் இருந்திருக்கிறார்கள் அவர்கள் சுயநலம் இல்லாமல் நாட்டு நலனில் அக்கறை கொண்டிருக்கிறார்கள் மக்கள் விடுதலையை நேசித்து இருக்கிறார்கள் மொழி உணர்வு அவர்களுக்கு எப்படி இருந்திருக்கிறது என்பதை அறிந்து கொள்வதற்கு சாட்சியாக திகழும். கவிஞர் முடியரசன் கவிஞர் தமிழ் ஒளி கவிஞர் முருகேச பாகவதர் என்கின்ற இந்த வரிசை இன்னும் ஆராய்ச்சியில் ஈடுபடுபவர்களுக்கு தொடர்ச்சியாக கிடைக்கும். இனிவரும் காலங்களில் சாதி மதம் மொழி இனம் என்று எந்த அடையாளம் இல்லாமல் ஒரு படைப்பாளியை படைப்பாளியாக மட்டுமே பார்க்க வேண்டும் என்ற வேண்டுகோளை இந்தக் கட்டுரை முன் வைக்கிறது.
எழுதியவர் :
பேரா. எ. பாவலன்
Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1Click to Join WhatsApp Channel Link : https://whatsapp.com/channel/0029VanQNeO4NVioUBbXer3q
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.
அருமை அருமை நண்பர்…
தாதாவின் வீடு நினைவலைகள் இன்றும் நினைவில் வந்து கொண்டே இருக்கிறது.