தாத்தாவின் மூன்றாவது டிராயர் (Thaaththavin moondravathu dirayar) - நூல் அறிமுகம் - தமிழில் : சுகுமாரன் - புக்ஸ் ஃபார் சில்ரன் வெளியீடு - https://bookday.in/

தாத்தாவின் மூன்றாவது டிராயர் – நூல் அறிமுகம்

தாத்தாவின் மூன்றாவது டிராயர் – நூல் அறிமுகம்

இந்த நூலில் 13 மொழிபெயர்ப்புக் கதைகள் உள்ளன. இவற்றை மூத்த சிறார் எழுத்தாளர் சுகுமாரன், வாசிக்க எளிதான நடையில் ஆங்கிலத்திலிருந்து தமிழுக்கு மொழிபெயர்ப்பு செய்துள்ளார்.

நூலின் தலைப்பான ‘தாத்தாவின் மூன்றாவது டிராயர்’ என்பது முதல் கதை. ஊரி என்ற சிறுவன் தாத்தா வீட்டுக்கு வந்து தங்கியிருக்கிறான். தாத்தா மேசையின் மூன்றாவது டிராயர் மட்டும், எப்போதும் பூட்டியே இருக்கின்றது. அதைத் திறக்க அவனுக்கு அனுமதியில்லை. ஒரு நாள் வீட்டில் யாருமில்லாத போது அவனுக்குக் கிடைத்த சாவியை வைத்து அந்த டிராயரைத் திறக்கிறான். அந்தச் சமயத்தில் வீட்டுக்குத் திரும்பிய தாத்தா பேரன் மீது பயங்கரமாகக் கோபப்படுகிறார்.

கோபம் தணிந்த பிறகு, அவரது துன்பம் நிறைந்த சிறு வயது வாழ்க்கை நிகழ்வுகளைப் பேரனுக்குச் சொல்கிறார். அந்த மூன்றாவது டிராயரில் அவரும், அவர் தங்கையும் விளையாடிய பொருட்களும், தங்கைக்கு மிகவும் பிடித்த பொம்மையும் இருக்கின்றன. சிறு வயதில் ஜெர்மனியில் ஹிட்லரின் யூதருக்கெதிரான இனவெறிக் கொடுமைகளால் பாதிக்கப்பட்டுப் பெற்றோரையும், பிரியத்துக்குரிய தங்கையையும் பிரிந்த துயரம், தாத்தா மனதில் இன்னும் ஆறாத ரணமாக இருப்பதைச் சிறுவன் அறிந்து கொள்கிறான்.

‘சுனாமி நினைவுச் சின்னம்’ கதையில், ஹவாய் தீவில் தம் சிறு வயதில் பள்ளியைத் தாக்கிய சுனாமியில் தம் தம்பியையும், சக மாணவர்களையும், ஆசிரியர்களையும் கண்ணெதிரே இழந்த தாத்தா, ஒவ்வோர் ஆண்டும் பேரனுடன் நினைவுச் சின்னம் சென்று, மலர் வளையம் வைக்கும் கதை.

‘என் பெயர் சன் கோல்’ என்ற கதையில், சிறுவன் சன் கோல் ஓர் அகதி. போரில் அவன் தந்தை இறந்தவுடன், சூடானிலிருந்து அவன் குடும்பம் அமெரிக்காவுக்கு அகதியாகச் செல்கிறது. அமெரிக்கப் பள்ளியில் அவன் பெயரை, மற்ற மாணவர்கள் தவறாக உச்சரித்துச் சிரிக்கிறார்கள். அமெரிக்காவுக்குப் புலம் பெயர்ந்தாலும், தன் அடையாளமான இனப்பெயரைத் தொலைக்க விரும்பாமல், உறுதியாக இருந்து தன் பெயரைச் சரியாக உச்சரிக்க ஒரு வழியைச் சிறுவன் கண்டுபிடிக்கிறான்.

‘அம்மாவைத் தேடி’ என்பது அலெக்சாண்டிரியா லாஃபெயி என்பவர் எழுதிய புகழ் பெற்ற கதை. உள்நாட்டுப் போர் சமயம் தன் அம்மா ரோஸ்லீயைப் பிரிந்த சிறுவன், போர் முடிந்த பிறகு, எங்கெல்லாமோ அம்மாவைத் தேடியலையும் உருக்கமான கதை.

‘கடல் கடந்து’ என்ற கதையை ஆமி ஹெஸ்ட் எழுதியுள்ளார். பாட்டியுடன் வாழும் ஜெசி என்ற 13 வயது சிறுமிக்கு அமெரிக்க செல்ல வாய்ப்பு கிடைக்கிறது. அங்குப் படித்துக் கொண்டே வேலை செய்யும் ஜெசி, பணம் சேர்த்துப் பிரியத்துக்குரிய பாட்டியை அமெரிக்காவுக்கு வரவழைத்துக் கொள்கிறாள். கடல் கடந்து சென்றாலும், பாட்டி மீதான அவள் அன்பும் பாசமும் குறையவில்லை என்பதைச் சொல்லும் கதை.

போரினால் நாட்டை விட்டு ஓடி, அகதியாக அமெரிக்காவில் தஞ்சம் புகும் சிறுமி, பாட்டியான பிறகு கூட தாய்நாட்டுக்குத் திரும்ப வேண்டும் என்ற ஏக்கத்துடன் வாழ்வதை ‘நட்சத்திரங்களின் பாதை’ என்ற கதை சொல்கிறது. பாட்டி உடல்நலமின்றிப் படுத்த படுக்கையாக இருக்கும் போது, பேத்தி பிரார்த்தனை செய்து பாட்டியின் ஆசையை வெளியிடுகிறாள்:- “ஒரு நாள் நாங்கள் கம்போடியா செல்வோம்; நதிக்கரை வீட்டைக் காண்போம்; மலர் வாசம் நிறைந்த காற்றை முகர்வோம்.” தாய்நாட்டை விட்டுப் புலம் பெயர்ந்த மக்களுக்கு இயல்பாகவே இருக்கக்கூடிய பிறந்த மண்ணை மிதிக்க வேண்டும் என்ற ஏக்கத்தை, இக்கதை நெகிழ்ச்சியாக வெளிப்படுத்துகிறது.

‘ஹென்றிக்கு விடுதலை தந்த பெட்டி’ என்ற கதையில், ஹென்றி சிறு வயதில் பெற்றோரிடமிருந்து பிரிக்கப்பட்டு விற்கப்படுகிறான். பின் அவன் மனைவியும், குழந்தைகளும் அவனிடமிருந்து பிரிக்கப்பட்டு அடிமைச் சந்தையில் விற்கப்படுகிறார்கள். விற்கப்பட்ட குழந்தைகள் அவனைப் பார்த்து, “அப்பா! அப்பா!” என்று கத்துகிறார்கள். அவன் கண்ணெதிரே மனைவியையும், குழந்தைகளையும் வாங்கிய எஜமானர்கள் கொண்டு போகிறார்கள். அவனால் அழுவதைத் தவிர, வேறு ஏதும் செய்ய முடியவில்லை. அவன் இறுதியில் சில நண்பர்களின் உதவியால் மூடிய பெட்டியில் உட்கார்ந்து தப்பித்து விடுதலையடைகிறான். அதிர்ச்சியளிக்கும் கருப்பின அடிமைகளின் துயரமிகு வாழ்வைப் பேசும் கதையிது.

ரூபி-பிரிட்ஜ்-யின் கதை அமெரிக்காவில் நிலவிய நிறவெறியையும், ரூபி-பிரிட்ஜ் என்ற கருப்பினச் சிறுமியின் துணிச்சலையும் சொல்கிறது. வெள்ளையர்கள் படிக்கும் பள்ளியில் சிறுமி ரூபி-பிரிட்ஜ்க்கு இடம் கிடைக்கிறது. அவளைச் சேர்க்கக் கூடாது என்று வெள்ளை மாணவர்களின் பெற்றோர் தினமும் ஆர்ப்பாட்டம் செய்கிறார்கள். அவள் சேர்ந்ததால் வெள்ளையினக் குழந்தைகள் யாரும் பள்ளிக்கு வராமல் புறக்கணிக்கிறார்கள். இவ்வளவு பிரச்சினைகளைக் கண்டும் மனம் தளராமல், அவள் எப்படி இறுதிவரை துணிச்சலுடன் படித்து முடித்தாள் என்பதை இக்கதை சொல்கிறது.

“நான் ரோசா பார்க்ஸ்” என்பது அடுத்த கதை. ரோசா பார்க்ஸ் கருப்பின மக்களின் உரிமைக்காகப் போராடியவர். அப்போது அமெரிக்காவில் நிறவெறி தலைவிரித்தாடியது. பேருந்தில் முன்பக்க இருக்கைகளில் வெள்ளையரும், பின்பக்க இருக்கைகளில் கருப்பரும் உட்கார்ந்து பயணம் செய்தனர். கருப்பர்கள் முன்பக்கம் அமர முடியாது. முன்பக்கம் நிரம்பிவிட்டால், பின்பக்கம் அமர்ந்திருக்கும் கருப்பர்கள் எழுந்து வெள்ளையருக்கு இருக்கையைத் தரவேண்டும். ஒரு நாள் பின்பக்க இருக்கையில் அமர்ந்திருந்த ரோசா பார்க்கை நின்று கொண்டிருந்த வெள்ளையர் ஒருவருக்காக எழுந்து இடம் கொடுக்கச் சொன்னார் ஓட்டுநர். அவர் எழ மறுத்தவுடன், அவரைக் கைது செய்து அபராதம் விதித்தனர்.

நாடு முழுதும் இந்தச் செய்தி பரவியது. அவரது கைதை எதிர்த்துக் கருப்பர்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர். “பேருந்தைப் புறக்கணிப்போம்” என்ற போராட்டத்தைத் துவங்கினர். இதனால் கருப்பர்கள் யாரும் ஏறாமல் பேருந்துகள் காலியாகச் சென்றன. ரோசா பார்க்ஸ் மீது போடப்பட்ட வழக்கு நீதிமன்றம் சென்றது.
“நிறப்பாகுபாடு சட்டப்படி குற்றம். கருப்பர்கள் தம் இருக்கையை வெள்ளையர்க்கு விட்டுத் தர வேண்டியதில்லை” என்று நீதிமன்றம் தீர்ப்பு சொன்னது. ‘குடியுரிமையின் தாயார்’ என்று புகழப்பட்ட ரோசா பார்க்ஸின் வாழ்க்கையைச் சுருக்கமாக இக்கதை கூறுகிறது.

ஜிம் குரோ – அமெரிக்காவில் கருப்பின மக்களை ஒடுக்கிய சட்டங்களுக்குப் பெயர் ஜிம் குரோ. இக்கதையை எழுதிய பாவ்லா யங் ஷெல்டன் குடியுரிமைப் போராட்டத்தில் முன்னணி தலைவரான ஆண்ட்ரூ யங் என்பவரின் மகள். மார்ட்டின் லூதர் கிங்கை இவர் மாமா என்றழைத்தார். “ஜிம் குரோ சட்டங்களை ஒழிக்க வேண்டும்; கருப்பர்க்கு ஓட்டுரிமை வழங்க வேண்டும்” என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி நடந்த பேரணி பற்றியும், 06/08/1965 அன்று ஜனாதிபதி ஜான்சன் கருப்பர்க்கு ஓட்டுரிமை வழங்கிக் கையெழுத்திட்டதையும் பாவ்லா இக்கதையில் கூறியிருக்கிறார்.

‘அன்பைத் தேடி’ என்பது, 1983ஆம் ஆண்டு இலங்கையில் நடந்த இனக்கலவரம் பற்றியது. இதன் ஆசிரியர் இலங்கை எழுத்தாளர் உஷா ஜவஹர். சுரேஷ் என்ற ஏழு வயது சிறுவன் இனக் கலவரத்தில் தன் பெற்றோரை இழந்து அனாதையாகிறான். அகதி முகாமிலிருந்து பின் பெரியம்மா வீட்டில் தஞ்சமடைகிறான். போலியோவால் பாதிக்கப்பட்டு இடது காலை இழுத்து இழுத்து நடக்கிறான். பெரியம்மா மகன் கண்ணன் அவன் உடல் குறையைக் கிண்டல் செய்து வம்பிழுக்கிறான். சுரேஷுக்கு அம்மை வந்து உடல்நலம் பாதிக்கப்பட்ட நிலையில் கண்ணன் மனம் திருந்தி, அவன் மீது அன்பு செலுத்தத் துவங்குகிறான்.

இவை அனைத்தும் போர், இனவெறி, நிறவெறி, சர்வாதிகார ஆட்சி, இயற்கை சீற்றம் போன்ற காரணங்களால் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் கதைகள். போராட்டங்களும், துயரங்களும் நிறைந்த உலகப் புகழ் பெற்ற இச்சிறார் கதைகள், தமிழ்ச் சிறார் இலக்கியத்துக்குப் புது வரவு.

நூலின் தகவல்கள் :

நூல் : தாத்தாவின் மூன்றாவது டிராயர்
தமிழில் : சுகுமாரன்
வெளியீடு : புக்ஸ் ஃபார் சில்ரன், பாரதி புத்தகாலயம், சென்னை-18.
விலை ரூ 80/-

நூல் அறிமுகம் எழுதியவர் :

 

ஞா. கலையரசி

Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1
Click to Join WhatsApp Channel Link : https://whatsapp.com/channel/0029VanQNeO4NVioUBbXer3q


இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள்சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.



Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *