நூல் அறிமுகம்: ரோஜர் மார்டின் தூ கார்டு எழுதிய *தபால்காரன்* – பா. அசோக்குமார்நூல்: “தபால்காரன்”
ஆசிரியர்: ரோஜர் மார்டின் தூ கார்டு, தமிழில்: க.நா. சுப்பிரமணியன்
பதிப்பகம்: யாழ் வெளியீடு
பக்கங்கள்: 168
விலை: ₹. 60

1937 இல் நோபல் பரிசு பெற்ற நாவல். 1933 இல் பிரெஞ்சு மொழியில் எழுதப்பட்ட நாவல். தபால்காரன் என்ற பெயரைப் பார்த்தவுடன் தபால்காரனின் வாழ்வியல் சித்திரங்களாக இருக்குமென்றே முதலில் தோன்றியது. ” ழாய்னு” என்ற தபால்காரனின் ஒருநாளின் அதிகாலைப் பொழுதிலிருந்து தான் நாவலும் துவங்கியது…

தனிமனிதனின் வாழ்க்கை முறைகளின் வெளிப்பாடுகள் என்று அவமானித்த சிந்தனை மெல்ல மெல்ல விலகத் தொடங்கி, புதிய பரிமாணத்தில் நாவல் பயணிக்கத் தொடங்கியது. ஒரு நாளில் தொடங்கிய கதைக்களம் அந்த நாளின் இறுதியிலேயே இரவுக்குள் முடிவதாக அமைத்த விதம் சிறப்புக்குரியது.

ஒரு கிராமத்தில் தபால்காரன் பெறும் (பெற்ற) முக்கியத்துவத்தை உணர்ந்து கொள்ள இந்நாவல் நல்லதோர் அத்தாட்சியாக கருதலாம். இன்றைய நவநாகரீக சூழலில் தபால்காரர்கள் அத்தகைய முக்கியத்துவத்தை இழந்துவிட்டனர் என்பது வருந்தத்தக்கதே…

கதையின் நாயகனாக தபால்காரன் ” ழாய்னு” வின் நல்லதோர் பக்கத்தை மட்டும் காட்டாமல் அவனின் மறுபக்கத்தையும் படித்துக் காட்டிய விதத்திலேயே இந்நாவல் தனித்துவம் பெறுவதாக உணர்கிறேன். சுயநலத்திற்காக அவன் மேற்கொள்ளும் செயல்கள் ஒவ்வொன்றும் சிந்திக்க வைப்பதாகவே உள்ளன.

தபால்காரன் என்ற ஒற்றை மனிதனின் வாயிலாக ஒரு கிராமத்தின் வாழ்வியலை மனிதர்களின் வாழ்க்கை முறைகளை பண்பாட்டு நெறிகளை அழகான சித்திரங்களாக வடிவமைத்துள்ளார் எழுத்தாளர். எவ்வித சமசரமுமின்றி உள்ளது உள்ளபடியாக வடிவமைத்த விதத்திலேயே இந்நாவல் தனிச்சிறப்பு அடைவதாக கருதுகிறேன்.

கதாபாத்திரங்களின் பெயர்களும் அவர்களின் வாழ்வியல் நெறிகளும் கலாச்சார முறைகளும் நமது வாழ்வியலுக்கு அந்நியப்பட்டு நிற்பதாக நமக்குத் தோன்றினாலும் அவை பகிரும் பாடங்களோ எக்காலத்திற்கும் எந்நிலத்தவருக்கும் பொருந்தக்கூடியதே ஆகும்.அனுதினமும் தபால்காரன் சந்திக்கும் கதாபாத்திரங்களின் வாயிலாக அவர்களின் வாழ்க்கை வரலாற்றுப் பிண்ணனியுடன் (போர்/கைதி/புரட்சி) விளக்கும் விதம் சுவாரஸ்யமான அனுபவமே… வறுமையின் கோரத்தாண்டவம் ஒருபுறம், வயதானவர்களின் அநாதைத்தன்மை மற்றொரு புறம், மதப் போதகரின் இயலாமை வேறொரு புறம், கணவன் மனைவி உறவுச் சிக்கல்கள் மறுபுறமென இந்நாவல் பல்வேறு தளங்களில் பயணித்து நம்மை புதிய கோணத்தில் சிந்திக்க வைப்பதாக அமைந்துள்ளன.

தபால்காரனின் பலமும் மற்றவர்களிடம் அவன் நடந்து கொள்ளும் விதமும் அவனது சிறப்பை உயர்த்துவதாக இருந்தாலும் பிறரின் கடிதங்களின் ரகசியங்களை அறிந்து கொள்ளும் கோரமுகம் தாழ்வானதே. இருந்தபோதிலும் அதுவே அவனது வாழ்க்கையின் வெற்றிக்கு பிரதான வெற்றிக்கு உதவுகிறது என்பது சாபக்கேடுயன்றி வேறேது.

நாய்களுடன் தபால்காரன் பயணிக்கும் காட்சிகள் மிக மிக தத்ரூபமாக காட்சிபடுத்திய விதம் நம்மை நாவலுடன் ஒன்ற வைப்பதாக அமைந்துள்ளது. பாலியல் வறட்சியை காட்சிபடுத்திய எழுத்தாளர் பாலியல் வேட்கையையும் காட்சிப்படுத்த தவறவில்லை எனலாம். பெண்களின் கதாபாத்திரங்களே மேலோங்கிய நிலையில் உயர்வான தரத்தில் அமைந்துள்ள விதம் இந்நாவலின் மீது கூடுதல் கவனிப்பை உண்டாக்கவல்லதே…

இந்நாவலைப் படிக்கும்போது எழுத்தாளர் “கி.ராஜநாராயணன்” அவர்களின் ” கோபல்ல கிராமம்” மற்றும்”கோபல்ல கிராமத்து மக்கள்” ஆகிய இரு நாவல்களும் கண்முன் விரிந்தன என்பதே உண்மை. கரிசல் வட்டார மொழியில் நமக்குள் ஏற்படுத்திய தாக்கத்தை இந்த தபால்காரன் ஏற்படுத்தவில்லை என்றே கருதுகிறேன்.

பிரெஞ்சு மொழியில் எழுதப்பட்ட நாவலை தமிழில் மொழிபெயர்த்ததின் விளைவோ அல்லது அந்நியப்பட்ட ஐரோப்பிய கலாச்சாரத்தின் வேறுபாடோ என்ற ஐயமே தோன்றுகிறது. எனினும் மொழிபெயர்ப்பில் சிறிது அயர்ச்சி உண்டாவதைத் தவிர்க்க இயலவில்லை என்பதே உண்மை.

ஒரே நாளில் முடிவுறும் வண்ணம் ஒரு பிரதான கதாபாத்திரத்தின் வாயிலாக ஒரு அழகான கிராமத்தில் வாழும் மனிதர்களை எவ்வித பகட்டுமின்றி மிக இயல்பாக படம்பிடித்த எழுத்தாளரின் வெற்றியாகவே இந்நாவலை நாம் போற்றலாம்.

வாய்ப்புள்ளோர் வாசிக்க முயலுங்கள்.

பா.அசோக்குமார்
மயிலாடும்பாறை

Image

உலக புத்தக தினத்தையொட்டி பாரதி புத்தகாலயம், புதிய கோணம், இளையோர் இலக்கியம் மற்றும் புக்ஸ் ஃபார் சில்ரன் வெளியிட்டுள்ள அனைத்து நூல்களுக்கு 25% சிறப்புக் கழிவு உண்டு. (23.04.2021 – 05.05.2021 வரை மட்டும்)