10 ஆண்டுகள் முடிந்து விட்டன. ஆம், இதே நாளில் தான்.. 2013 ஆக.20 ஆம் தேதி மகாராஷ்டிரா மாநிலத்தில் மட்டுமின்றி தேசம் முழுவதும் மிகவும் பரவலாக அறியப்பட்ட பகுத்தறிவு செயல்பாட்டாளர் மருத்துவர் நரேந்திர தபொல்கர் படுகொலை செய்யப்பட்டார். அவரைக் கொன்றவர்கள் முதலில் அடையாளம் தெரியாத நபர்கள் என்றே சொல்லப் பட்டனர். சில ஆண்டுகள் வரையிலும் அவ்வாறே வெளி உலகில் கூறப்பட்டது. அது தொடர்பாக பேட்டி அளித்த ஒரு காவல் அதிகாரி கூறினார்.. “நாங்கள் தபோல்கரின் ஆவியுடன் பேசிக் கொண்டிருக்கிறோம்..! விரைவில் கொலையாளிகளை கண்டுபிடித்து விடுவோம்..!”
வாழ்நாள் முழுவதும் மக்களிடம் அறிவியலை பரப்பவும் பகுத்தறிவு சிந்தனைகளை வளர்க்கவும் தன்னை அர்ப்பணித்துக் கொண்ட ஒருவரின் படுகொலை குறித்து விசாரிக்கும் அதிகாரி கூறுகிற அந்த வார்த்தைகள் எந்த அளவுக்கு வன்மம் நிறைந்ததாக இருக்கிறது என்று நாம் எண்ணிப் பார்க்க வேண்டும்..
ஆனால் கைப் புண்ணுக்கு கண்ணாடி எதற்கு என்கிற அளவில் தான் உண்மை இருக்கிறது. ஆம், தபோல்கரால் பகுத்தறிவு சிந்தனைகளை பரப்புவதற்காக “மன்ஸ்” என்கிற அமைப்பு உருவாக்கப்பட்ட அதே காலகட்டத்தில் உருவான அமைப்பு தான் சனாதன் சன்ஸ்தான்.. அந்த அமைப்பை உருவாக்கிய ஜெயந்த் பாலாஜி அதாவலே’யும் ஒரு மருத்துவர் தான். “ஆன்மீக அறிவியலை” மக்களிடம் கொண்டு செல்வதற்காக உருவாக்கப்பட்ட அமைப்பு என்று வெளியில் சொல்லிக் கொண்டார்.. ஆனால் இந்து இராஜ்ஜியத்தை 2023க்குள் உருவாக்குவதை இலட்சியமாகவும் அதற்கு தடையாக உள்ள தீய சக்திகளை, அதாவது முஸ்லிம்கள், கிறித்தவர்கள், பகுத்தறிவாளர்கள் மற்றும் கம்யூனிஸ்டுகள் ஆகியோரை ஒழித்துக் கட்டுவதையும் நோக்கமாக கொண்டு இயங்கி வருகிற அமைப்பு.
இந்த கொலை மட்டுமின்றி வெடிகுண்டு வழக்குகள் நிறைய அந்த அமைப்பின் மீது நிலுவையில் உள்ளன. இந்த அமைப்பு மேலும் மேலும் வளர்ந்து விட்டால் அது இந்திய தேசத்திற்கு மிகப்பெரிய ஆபத்தாக முடியும் என்று பல ஆண்டுகளுக்கு முன்பே எச்சரித்துள்ளது கோவா காவல் துறை அறிக்கை.. அதே போல இந்த அமைப்பிற்கு எதிராக ஆயிரம் பக்க அறிக்கை ஒன்றை முந்தைய காங்கிரஸ் ஆட்சி காலத்திலேயே மத்திய அரசிடம் ஒப்படைத்துள்ளது மகாராஷ்டிரா பயங்கரவாத தடுப்பு துறை.. ஆனால் அத்தனையும் கிடப்பில் போடப்பட்டது..!
திடீரென்று அவர் மீது கோபம் வந்து கொலை செய்து விடவில்லை. தங்கள் போக்கிற்கு தடையாக வருகிற எவரையும் மிரட்டுவது, தாக்குவது, கொலை செய்வது என்று தொடர்ந்து இயங்கி வருகிற இந்த அமைப்பிற்கு தொடர்ந்து தொந்தரவாக இருந்து வந்தவர் நரேந்திர தபோல்கர். சில பத்தாண்டுகளாக இரு அமைப்புகளிடையேயும் கருத்து மோதல்கள், சச்சரவுகள் இருந்து வந்திருக்கின்றன. சனாதன் சான்ஸ்தான் அமைப்பிற்கு இன்னொரு வழக்கம் உண்டு. தங்கள் எதிராளிகள் மீது அவதூறு வழக்குகள் தொடுப்பது. அதுவும் அவர்கள் வசிப்பிடத்திற்கு வெகு தூரத்தில் வழக்கு தொடுப்பது. அந்த வழக்கிற்காக அலைந்தே எதிராளி அலுத்து, ஓய்ந்து ஓடிப் போக வேண்டும் என்பதே அவர்களது எண்ணம். தபோல்கர் மீது மட்டும் 18 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அவர் இறந்த போது ஆறேழு வழக்குகள் நிலுவையில் இருந்தன. முடிந்த வழக்குகள் அனைத்திலும் அவர் குற்றமற்றவர் என்றே தீர்ப்புகள் அளிக்கப்பட்டன.
தபோல்கர் கொலை வழக்கில் சனாதன் சன்ஸ்தான் அமைப்பின் பொறுப்பாளர்கள் கைது செய்யப்பட்டனர். அமைப்பின் தலைவர் அதாவ்லே’யிடமும் இரண்டு மூன்று முறை புலனாய்வு பிரிவு மணிக் கணக்கில், நாள் கணக்கில் விசாரணை நடத்தி உள்ளது. ஆனாலும் நியாயம் கிடைக்குமா, குற்றவாளிகளுக்கு தண்டனை கிடைக்குமா என்பதெல்லாம் கேள்விக் குறியாக தான் உள்ளது.
அவர்களுடைய சனாதன் பிரபாத் பத்திரிகையில் அதாவ்லே எழுதுகிறார் : “ஒரு சாதாரண கொசுவை அடித்துக் கொன்று விட்டாலே அந்த வெற்றி நமக்கு எவ்வளவு சந்தோசத்தை தருகிறது.. அதுவே நாம் தீய சக்திகளை கொல்லும் போது எப்படி இருக்கும் என்று எண்ணிப் பாருங்கள்..!”
இன்னொரு இடத்தில் சொல்கிறார் : கடவுளை அடைய விரும்புகிறவர்களில் 5% பேர் ஆயுதம் ஏந்த வேண்டும்.. அவர்களுக்கு துப்பாக்கி சுட தெரியவில்லை என்றாலும் கூட, கடவுளை நினைத்துக் கொண்டு சுட்டால் அது மிகச் சரியாக தீய சக்தியை கொன்று முடிக்கும்..!”
தபோல்கரை கொன்ற இதே முறையில் தான் கோவிந்த் பன்சாரே, எம்.எம்.கல்புர்க்கி மற்றும் கௌரி லங்கேஷ் கொல்லப்பட்டனர். இந்த கொலைகளில் பயன்படுத்தப் பட்ட ஆயுதங்கள் ஒன்று போல இருப்பதாக தடயவியல் ஆய்வு கூறுகிறது.. இருந்தும் சட்டம் பாயவில்லை.. பதுங்கவும் இல்லை. படுத்தபடுக்கையாக கிடக்கிறது.
இன்னொரு புறம், முன்பு கடவுளின் தூதுவராக இருந்த அதாவ்லே இப்போது கடவுளாகவே மாறிவிட்டாராம். ஆம், அவர் மகா விஷ்ணுவின் அவதாரம் ஆகிவிட்டார் என்று அறிவிக்கப்பட்டே விட்டது..! இந்த கடவுள் மீது எந்த சட்டம் பாயும்..?!
உத்தரப் பிரதேசத்தில் இப்படித்தான் “இந்து யுவ வாகினி” அமைப்பின் மூலம் பல குற்றங்களை, கலவரங்களை செய்து கொண்டிருந்த யோகி ஆதித்ய நாத்துக்கு எதிராக, அவர்களால் பாதிக்கப் பட்ட ஒருவர் மிக நீண்ட காலமாக நீதிமன்றத்தின் மூலம் சட்டப் போராட்டம் நடத்திக் கொண்டிருந்தார். கிட்டத்தட்ட 15 வருடங்கள் கடந்தும் கூட நம்பிக்கை இழக்காமல் தொடர்ந்து போராடி வந்த, அந்த 70 வயது முதியவர் மீது, அவருக்கு துளியும் சம்பந்தமே இல்லாத ஒரு பாலியல் குற்றச்சாட்டை சுமத்தி அவரை சிறையில் தள்ளி விட்டது, மத்தியிலும் மாநிலத்திலும் நடந்த ஆட்சி மாற்றம்..!
மூட நம்பிக்கை ஒழிப்பு சட்டம் கொண்டு வர தபோல்கர் பல்லாண்டு காலமாக வலியுறுத்தி வந்தார். 1990 களிலேயே அதற்கான சட்ட வரைவையும் அவர் முன்வைத்தார். ஆனாலும் கண்டு கொள்ளாத மகாராஷ்டிரா மாநில அரசு அவர் இறந்தவுடன் ஒரு அவசர சட்டத்தைக் கொண்டு வந்து, பின் சட்டமாகவும் நிறைவேற்றி உள்ளது.
தமிழகத்திலும் இன்று மூட நம்பிக்கை ஒழிப்பு சட்டம் நிறைவேற்ற வேண்டும் என்கிற கோரிக்கைகள் எழுந்து வருகின்றன. இது பெரியார் மண். பகுத்தறிவு சிந்தனைகள் பரவலாக வேரூன்றி இருக்கிற மண். என்றாலும் கூட ஆண்டுக்கு ஒரு முறை நாம் அடையாள நாள் போல வைக்கிற கோரிக்கைகள் காற்றில் கரைந்து காணாமல் போய் விடும். இன்று பெரியார் சிலையை அடித்து உடைக்க வேண்டும் என்று பொது வெளியில் பேசுகிற துணிச்சல் வந்திருக்கிறது. அவருக்கு ஆதரவாக வாதாட பெரும் வழக்கறிஞர் படை திரண்டு நிற்கிறது.. எனவே தமிழ் மண்ணிலும் கூட ஆதரவு சக்திகளை திரட்டி ஆழமாகவும் விரிவாகவும் வலுவான இயக்கங்கள் நடத்திட வேண்டும்.. இது அறிவியல், பகுத்தறிவு சிந்தனைகளை பரப்புகிற இயக்கங்களின் பொறுப்பு..
அதே போல, இந்தியாவை இந்து ராஜ்ஜியமாக உருவாக்க வேண்டும் என்கிற வகுப்புவாத சக்திகள் ஒருபுறம் இருக்கின்றன. இந்தியா தனது பன்முகத் தன்மையுடன், மதநல்லிணக்கம் பேணுகிற, ஜனநாயக, சோசலிச தன்மையுடன் தொடர்ந்து இயங்க வேண்டும். மானுட சமூகத்தின் மகத்தான திசை நோக்கி நகர அறிவியல் பார்வை அவசியம் வேண்டும் என்று வலியுறுத்துகிற சக்திகள் ஒருபுறம் இருக்கின்றன..
இந்த தேசத்திற்கு எதிரான தீய சக்திகளை அடையாளம் கண்டு நிராகரிக்கிற பொறுப்பு மக்கள் அனைவருக்கும் இருக்கிறது..
–