தருமபுரியில் ஒரு சங்கப் பலகை
மு.இராமனாதன்
தருமபுரியிலிருந்து இயங்கி வரும் “தகடூர் புத்தகப் பேரவை”, ஓர் இலக்கிய அமைப்பு. இலக்கியக் கூட்டங்கள், புத்தகக் காட்சிகள், மாணவர் பயிற்சிப் பட்டறைகள் முதலான பல நிகழ்வுகளை முன்னெடுத்து வருகிறது.
பேரவை, 2019இல் நூல் அறிமுகக் கூட்டங்களை நடத்தத் தொடங்கியது. ஒரு மாதத்திற்கு ஒரு கூட்டம். ஒவ்வொரு கூட்டத்திலும் 20 நூல்கள் அறிமுகமாயின. இதற்கு நல்ல வரவேற்பிருந்தது. இது இவ்விதமாக ஆறு மாதம் தொடர்ந்தது. கெடுவாய்ப்பாக கொரோனா இடையிட்டது. ஊரும் உலகமும் முடங்கியது. ஆனால் பேரவை முடங்கவில்லை; கொரோனாவின் நல்வினைகளில் ஒன்றான இணைய வழிக் கூட்டத்தை அது பற்றிக்கொண்டது. ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் இரவு 8 மணிக்கு நல்ல நூல் ஒன்றை அறிமுகப்படுத்தத் தொடங்கியது. நூலின் கருப்பொருளைக் குறித்த ஆர்வமும் அறிவும் மிக்க ஒருவர் நூலை நன்கு வாசித்தறிந்து, அதை அறிமுகப்படுத்துவார். தொடர்ந்து நூலாசிரியரின் உரை இருக்கும். பங்கேற்பாளர்களின் வினாக்களும் கருத்துரைகளும் இருக்கும். எல்லாக் கூட்டங்களும் சரி கணக்காக ஒரு மணி நேரத்தில் முடியும். சிறுகதை, நாவல், கவிதை முதலான புனைவுகளைப் போலவே, அரசியல், சமூகம், வரலாறு, திரைப்படம், ஆன்மீகம், அறிவியல், உணவு, பயணம், தத்துவம், சூழலியல் முதலான பல்துறை சார்ந்த அல்புனைவு நூல்களும் பேரவையின் கூட்டங்களில் பேசுபொருளாக இருந்து வருகின்றன.
புயல், மழை, பெருந்தொற்று என்று எது வந்தாலும் பேரவையின் ஞாயிற்றுக்கிழமை நூல் அறிமுகக் கூட்டம் நின்றதில்லை. தமிழகத்தின் தலை சிறந்த எழுத்தாளர்களும் அறிவாளர்களும், போலவே எளிய வாசகர்களும் இந்தக் கூட்டங்களில் பங்கேற்று வருகிறார்கள். ஒவ்வொரு கூட்டத்தின் காணொலியும் உடன் வலையேற்றப்படுகிறது. 2025ஆம் ஆண்டின் இறுதியில் அறிமுகப்படுத்தப்பட்ட நூல்களின் எண்ணிக்கை 500 ஆகியது. பேரவை அதை ஓர் அரங்கக் கூட்டமாக நடத்தியது. கூடவே “அறி(வு)முகம் 500” எனும் தலைப்பில் ஒரு நூலையும் வெளியிட்டிருக்கிறது. இந்த நூல், இதுகாறும் பேரவையால் அறிமுகப்படுத்தப்பட்ட நூல்களின் விவரக்குறிப்பு எனலாம். நூலின் பெயர், ஆசிரியரின் பெயர், அறிமுகப்படுத்திப் பேசியவரின் பெயர், நூலின் அட்டைப்படம், கூடவே ஒரு QR குறியும் இடம் பெற்றிருக்கின்றன. இந்தக் குறியை அலைபேசியில் அலகிட்டால் (scan) அது இணையத்தில் ஏற்றி வைக்கப்பட்டிருக்கிற நூல் அறிமுக நிகழ்ச்சியின் காணொலிக்கு இட்டுச் செல்லும். நூல்களின் அகரவரிசைப் பட்டியலும் இருக்கிறது. இந்த நூல்கள் கடந்த ஆறு ஆண்டுகளில் தமிழில் வெளியான நூல்களிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டவை என்பதால், சமீப காலத்தின் ஆகச் சிறந்த நூல்கள் பலவற்றை உள்ளடக்கிய பட்டியலாகவும் இது அமைகிறது.
மதுரை பொற்றாமரைக் குளத்தில் ஒரு சங்கப் பலகை இருந்ததாகவும், அது தரம் மிக்க புலவர்களை மட்டும் ஏற்றுக்கொண்டதாகவும் ஒரு கதை உண்டு. தகடூர் புத்தகப் பேரவை அப்படியான ஒரு சங்கப் பலகை. காய்தல் உவத்தலின்றி தமிழின் தலை சிறந்த நூல்களை தேர்ந்தெடுத்து அவற்றை வாரந்தோறும் அறிமுகப்படுத்தி வருகிறது. தமிழகத்தின் பெருமை மிக்க ஓர் அறிவியக்கமாக விளங்குகிறது. பேரவையின் வாரந்திர இணையக் கூட்டம் ஜூம் (Zoom) செயலி வழியாக நடக்கிறது. Zoom ID: 98052 04425 (கடவுச்சொல் தேவையில்லை).
📚 நூலின் விவரங்கள்:
| தலைப்பு | விவரம் |
| நூலின் பெயர்: | “அறி(வு)முகம் 500” |
| ஆசிரியர்: | இ. தங்கமணி, ப.லோகநாதன், நெ.த.அறிவுடைநம்பி |
| வெளியீடு: | தகடூர் புத்தகப் பேரவை |
| விலை: | ₹.200 |
| அறிமுகம் எழுதியவர்: | ✍🏻 மு.இராமனாதன் |
******************************************************************************

நூல் அறிமுகம் செய்வோம் ரூ.10000 பரிசு வெல்வோம்! போட்டி
2025 வெளியான புத்தகத்தை வாசிக்க அவகாசம் கேட்ட வாசகர்களின் வேண்டுகொளுக்கு இணங்க இப்போட்டியானது ஏப்ரல் 15 ஆம் தேதியுடன் நிறைவடைந்தது. வரும் உலகப் புத்தக தினத்தன்று (ஏப்ரல் 23, 2026) சென்னையில் நடைபெறும் விழாவில் பரிசு மற்றும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்படும். இந்நிகழ்வில் பங்கேற்க விரும்பும் தோழர்கள் அனைவரும் தங்கள் விருப்பத்தை https://forms.gle/XJodwyZc42PRv93Y8 இந்த கூகுள் பார்ம்-ல் நிரப்பி தெரிவித்தால் நன்றாக இருக்கும்.
கூகுள் பார்ம்: https://forms.gle/XJodwyZc42PRv93Y8
தோழமையுடன்
புக் டே இணையதளம்
பாரதி புத்தகாலயம்
9444567935
******************************************************************************
Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1
Click to Join Facebook: https://www.facebook.com/Book Day – Bharathi Puthakalayam
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களதுநூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

