கடந்த 15 ஆம் தேதி 100 வயதை எட்டிய சுதந்திர போராட்ட வீரரும், மார்க்சிஸ்ட் கட்சித் தலைவருமான என்.சங்கரய்யாவுக்கு தகைசால் தமிழர் விருதினை தமிழக அரசு இன்று அறிவித்துள்ளது.
தமிழ்நாட்டுக்கும், தமிழ் இன வளர்ச்சிக்கும் பெரும் பங்காற்றியவர்களுக்கு தகைசால் தமிழர் விருது வழங்கப்படுகிறது. தமிழ்நாடு அரசால் புதிதாக ஏற்படுத்தப்பட்ட தகைசால் தமிழர் விருதில் ரூ.10 லட்சம் ரொக்கம், பாராட்டு சான்றிதழ் வழங்கப்படும் என தமிழக அரசு சார்பில் அறிவிப்பில் குறிப்பிடபட்டு இருந்தது.
சங்கரய்யா இளம் வயதிலேயே பொதுவாழ்க்கையில் ஈடுபட்டு மாணவர் தலைவராகவும் சுதந்திர போராளியாகவும் திகழ்ந்தவர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் தேர்தலில் போட்டியிட்டு 3 முறை சட்டமன்ற உறுப்பினராக அரும்பணியாற்றியவர் என்.சங்கரய்யா என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ்நாடு அரசு புதிதாக உருவாக்கிய தகைசால் தமிழர் விருது முதலாவதாக சங்கரய்யாவுக்கு வழங்கப்படுகிறது. வரும் சுதந்திர தின விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தகைசால் தமிழர் விருதினை என். சங்கரய்யாவுக்கு வழங்குகிறார்.
இதனை தொடர்ந்து என். சங்கரய்யா விடுத்துள்ள பத்திரிகைச் செய்தியில், தமிழக அரசு புதிதாக அறிவித்துள்ள ‘தகைசால் தமிழர்’ விருதினை இந்தாண்டுக்கு எனக்கு வழங்குவதாக மாண்புமிகு. தமிழக முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் M. K. Stalin அவர்கள் அறிவித்துள்ளார்கள்.
எனது சேவையை பாராட்டும் வகையில் அறிவிக்கப்பட்டுள்ள இவ்விருதினை ஏற்றுக் கொள்வதோடு, எனக்கு இந்த விருதினை அளித்திருக்கிற மாண்புமிகு. தமிழக முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்களுக்கு நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்த விருதிற்காக அளிக்கப்படும் ரூ. 10 லட்சம் தொகையினை கோவிட் 19 பாதிக்கப்பட்ட மக்களுக்காக தமிழக அரசு திரட்டி வரும் முதலமைச்சரின் கோவிட் 19 பேரிடர் நிவாரண நிதிக்கு மகிழ்ச்சியோடு வழங்குகிறேன் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
மாணவனாக இருந்த காலந்தொட்டு இன்று வரை தமிழ்நாட்டு மக்களின் நலனுக்கும், இந்தியநாட்டில் விடுதலைக்கும், உழைப்பாளி மக்கள் நலன் காத்திடவும் என்னால் முடிந்தளவு பணியாற்றியுள்ளேன்.
சுரண்டலற்ற பொதுவுடமை சமுதாயத்தை உருவாக்க நான் ஏற்றுக் கொண்ட மார்க்சிய கொள்கையின் அடிப்படையில் பயணம் செய்துள்ளேன்.
எனது இறுதி மூச்சு வரை இப்பணியை தொடர்ந்து நிறைவேற்றுவேன் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
ஒப்பம்
(என். சங்கரய்யா)
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.