அருணானா ராயின் ’தகவல் அறியும் உரிமை- ஓர் எழுச்சியின் கதை’ அக்களூர் இரவியின் மொழிபெயர்ப்பில் காலச்சுவடு பதிப்பகம் இதனை வெளிட்டிருக்கிறது.
படித்த நடுத்தர வர்க்கத்தினருக்கு தேசம் பற்றிய விழிப்புணர்வு தருவிக்கும் படைப்பாக இது மலர்ந்திருக்கிறது. அருணா ராய், மஸ்தூர் கிஸான் சக்தி சங்கதனுடன் இணைந்து இதனைச் சாத்தியமாக்கியிருக்கிறார். இந்நூலைத் தமிழாக்கம் செய்த அக்களூர். இரவி மிகுந்த ஈடுபாட்டுடன் பணியாற்றி இருக்கிறார். அவருடைய அர்ப்பணிப்பும் உழைப்பும் மெச்சத்தக்கது. 559 பக்கங்களுக்கு நீளும் இப்புத்தகம் மொழிபெயர்ப்பில் ஒரு சாதனை.
இந்தியா விடுதலை அடைந்து நாற்பதாண்டுகளுக்குப் பின்னர் தகவல் அறியும் உரிமைக்கான குரல் ஒலிக்கத்தொடங்கியது. ராஜஸ்தானைச்சேர்ந்த தேவ்துங்ரி கிராமம். அதனைத்தேர்வு செய்து மூவர் தகவல் அறியும் உரிமைக்காய் உழைக்கத் தொடங்கினார்கள். ஒருவர், அருணா ராய் இந்திய ஆட்சிப்பணி பொறுப்பை ராஜினாமா செய்துவிட்டு வந்தவர். அடுத்து, சங்கர் சிங் தொலைநோக்குப்பார்வைகொண்ட உள்ளூர் பேச்சாளி, மூன்று அமெரிக்காவில் கல்லூரிப்படிப்பை இது பயனற்ற வேலை என்று பாதியிலேயே விட்டு விட்டுத் தாயகம் திரும்பிய நிகில் தேய், விமானப்படை ஏர் மார்ஷலின் மகன். இவர்கள் வாடகைக்கு எடுத்திருந்த கருங்கல்லும் சேறும் கொண்டு கட்டப்பட்ட அந்தக்குடிசை. அதனுள்ளாக அந்த கிராமத்து மக்கள் எப்படி வாழ்ந்தனரோ அதுபோலவே இவர்களும் வாழ்ந்தனர்.
அருணா ராயின் பின்புலம் பற்றி வாசகர்கள் கட்டாயம் அறிதல் வேண்டும். டில்லியில் தான் படித்து பட்டம் பெற்ற அதே இந்திர பிரஸ்தா கல்லூரியில் ஆங்கிலப் பேராசிரியானார். இந்திய ஆட்சிப்பணியில் ஏழு ஆண்டுகள் சேவை. பிறகு ராஜஸ்தானில் ஒரு கிராமப்புற தன்னார்வ அமைப்பில் ஒன்பதாண்டுகள் பணி, பின்னர் கிராமம் ஒன்றில் தங்கி அவர்களின் அடிப்படை ஜனநாயக உரிமைகளுக்காகப் போராடுவது என முடிவு செய்தவர்.
இந்நூலுக்கு ஆகப்பொறுத்தமான முகப்புரை தந்துள்ள கோபாலகிருஷ்ண காந்தி வாசகர்க்கு எதைச்சொல்ல வேண்டுமோ அதனை நறுக்கெனச்சொல்லியுள்ளார்.
‘அறிந்துகொள்வது புரிந்துகொள்வதற்கே.பரிந்துகொள்வது அமைதியாக இருப்பதற்கன்று- போராட்ட ஆயத்த நிலைக்கு.’
‘சுதந்திரத்திற்குப்பின் இயற்றப்பட்ட சட்டங்களும் திட்டங்களும் நன்கு படித்த நேர்மையான மனிதர்களால் படிப்பறிவற்ற அப்பாவிகளுக்காக உருவாக்கப்பட்டவை என்று சொல்கிறார்கள். ஆனால் அவற்றை நடைமுறைப்படுத்தும் வேலை கூர்மையான இடைத்தரகர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. விளைவு அதிர்ச்சியும் ஏமாற்றமும் விரக்தியும்.’
‘புத்துயிர் பெற்ற உணர்வுகளுடன், புழுதி படிந்த தெருக்களில் நடந்த வீரியம் மிக்க போரட்டங்களையும் அயர்வற்ற பேரணிகளையும் இந்நூல் விவரிக்கிறது.’
மொழிபெயர்ப்பாளர் அக்களூர் இரவி,தனது குறிப்பில் ஒரு விஷயத்தைப் பெருமிதத்தோடு நினைவு கூறுகிறார்.’ நூலில் அருணா அக்கா விவரிக்கும் நிகழ்வுகளும் மனிதர்களும் தொலைத்தொடர்புத் துறையில் ஐந்தாறு ஆண்டுகளுக்கும் மேலாகத் தொடர்ச்சியாக நாங்கள் சந்தித்த இடர்களையும் ஒன்றுபட்ட இயக்கம் இறுதியில் வெற்றி பெற்றதையும் நினைவூட்டின.’ மொழிபெயர்ப்பாளர் இரவி ஒரு போராளி என்பதை இவண் வாசகர்கள் அவதானிக்கலாம்.
தேவ்துங்ரியில் இந்த போராட்டக்காரர்கள் வருகையால் பிரச்சனைகள் எழுந்தன. சாதிபாகுபாடு காட்டாமல் அவர்கள் எல்லோருடனும் குறிப்பாக தாழ்த்தப்பட்டவர்களுடனும் பழகியதால் கிராமமே அவர்களை எதிரியாகக்கருதி அவர்களோடு மோதல் போக்கைக் கையாண்டது. போராட்டக்குழுவுக்கு யார் வீட்டை வாடகைக்குக் கொடுத்தாரோ அவருக்கு சாதி விலக்குத் தண்டனை அளிக்கப்பட்டது.
சங்கதன் உருவானதை அறிவித்து இக்குழுவினர் ஒரு துண்டுப் பிரசுரம் வெளியிட்டார்கள். அது பற்றி அருணா ராய் விவரிக்கிறார். கிராமப்புற மக்கள் துண்டறிக்கைகளை பொறுப்போடு வாசிப்பார்கள். நகர்ப்புறத்தில் இவ்வறிக்கைகள் சந்திக்கும் நிலைமை கிராமத்தில் இவற்றிற்கு நிகழ்வது கிடையாது. நகரத்தில் அவை உடனடியாகத் தின்பண்டங்கள் விற்பவர்களுக்குப் பயன்படுகின்றன அல்லது குவிந்திருக்கும் குப்பைகளுடன் சேர்ந்துகொள்கின்றன.
பாலி மாவட்டம் கோட் கிரானாவில் டிசம்பர் 2, 1994 அன்று முதல் பொது விசாரணை தொடங்கியது. ஆர் .டி. ஐ க்கு ஒரு சட்டம் ( Right To Information Act) வேண்டும் என்ற கோரிக்கை முதன் முதலாக, கோட் கிரானாவில்தான் விவாதம் செய்யப்படுகிறது. பொதுத்தணிக்கை மேடையாக அமைந்த இந்த’ ஜன் சுன்வாயில்தான்’ சமூகத் தணிக்கை’ நடைமுறைக்கான விதைகள் ஊன்றப்பட்டன.பொதுவாக இந்தக்குழுவினர் கிராமத்தின் பள்ளிக்கூடத்தில்தான் தூங்குவார்கள். கிராமத்தினரோ தங்கள் வீடுகளில்தான் தூங்கவேண்டும் என்று அவர்களைக் கட்டாயப்படுத்தினர். முன்னாள் துணை சபாநாயகர்( பா.ஜ.க) ஹீரா சிங் இந்தக்குழுவினரைத் தாக்குவதற்கு உள்ளூர் மாஃபியாவை ஏற்பாடு செய்தார். சாட்சிகளை ராய்ப்பூருக்குத் தூக்கிச்சென்றார். எதிர் வாக்கு மூலங்களில் கையெழுத்திட வைத்தார். இப்படி அருணா ராய் நடந்தவைகளை நேர்மையாகப்பதிவு செய்கிறார்.
மக்களை அச்சத்திலிருந்து விடுவிக்கவேண்டும் என்கிறார் அருணா ராய். சுதந்திரப் போராட்டத்தின் போது காந்திஜியும் இதைத்தான் செய்தார். அச்சத்திலிருந்து மக்களை விடுவித்தார். அகிம்சையைப் பின்பற்றிய மக்கள் வலிமை மிக்க பிரிட்டீஷ் சாம்ராஜ்யத்தை எதிர்த்து நின்றனர். ஆர். டி. ஐ க்கான இயக்கத்தின்போது சங்கதன் இதைத்தான் செய்தது என்று நிறைவோடு பதிவு செய்கிறார்.
மக்களின் பணம் அவர்களின் நலனுக்காக ஒதுக்கப்படும் தொகை, இடைத்தரகர்களால், அதிகாரிகளால் கையாடல் செய்யப்படுவது வெட்கக்கேடானது. இவை அத்தனையும் திரைமறைவில் நிகழ்கின்றன. மக்கள் மன்றத்தின் முன்னே கொள்ளையர்கள் ஒரு போதும் நிறுத்தப்படுவது இல்லை. ஒரு சிலரால் கையாடல் செய்யப்படும் இந்தப்பணம் இந்தநாட்டின் வறிய மக்களுக்குச்சொந்தமானது.
தகவல் அறியும் உரிமைக்கான தேசிய இயக்கம் தேவை கருதி உருவானது. அதற்கான முதல் அமர்வு முசோரியில் லால் பஹதூர் சாஸ்திரி தேசிய நிர்வாக அகாதெமியில் நடைபெற்றது. இங்கு என் .சி சக்சேனாவால் பரிந்துரைக்கப்பட்ட பரிந்துரை மிக முக்கியமானது. இந்த அறிவு பூர்வமான பரிந்துரை ஆர்.டி. ஐ சட்டம் 2005 பிரிவு 8ல் சேர்க்கப்பட்டது. அது இதைத்தான் சொல்கிறது. ’ நாடாளுமன்றத்துக்கோ, மாநில சட்டமன்றத்துக்கோ தேவை என்று கேட்டுப்பெறப்படும் தகவல்கள் எந்த ஒரு தனிமனிதனுக்கும் மறுக்கப்படக்கூடாது’
1996 அக்டோபரில் லால்பகதூர் சாஸ்திரி தேசிய நிர்வாக அகாதெமியில் கூடிய போராளிகள் ஆர். டி. ஐ சட்ட வரைவுகளைத் தயாரிக்கலானார்கள். மக்கள் பிரச்சார இயக்கம் தொடங்கப்பட்டது. கீழ்க்கண்ட ஷரத்து அதனில் பிரதானமாய் அங்கம் வகித்தது.
‘ஜனநாயகம் என்பது மக்களின் ஆட்சி என்று இந்த பிரச்சார இயக்கம் நம்புகிறது. மக்கள் பிரதிநிதிகள் அவர்களைத் தேர்ந்தெடுத்தவர்களின் நலனுக்காக ஆட்சி செய்கிறார்கள். அரசாங்கத்தின் பணம் மக்களுடையது. அதனால் அரசாங்கம் எடுக்கும் முடிவுகள் அனைத்தையும் அறிந்துகொள்ள நாட்டு மக்களுக்கு முழு உரிமை இருக்கிறது.’.
நான்காம் வகுப்பு படித்த பெண் இந்த சட்டத்தை ஆதரித்துப்பேசினார். ஆனால் உலகனுபவம் கொண்ட கல்வியாளர்கள் இந்த விஷயத்தைப் புரிந்துகொள்ளவில்லை. அந்தப் பெண் ஒரு எளிய விஷயத்தை எடுத்து வைத்தார். இதுவே அது.
‘என் மகனிடம் 10 ரூபாய் கொடுத்து சந்தைக்கு அனுப்பினேன். அவன் திரும்பி வந்ததும் நான் கணக்குக்கேட்கிறேன். என் பெயரில் இந்த அரசாங்கம் பல கோடி ரூபாய் செலவு செய்கிறது. எனக்கான கணக்குகளை நான் கேட்கவேண்டாமா?’
இப்புத்தகம் தரும் ஆழமான விஷயங்கள் வாசகனைச் சிந்திக்க வைக்கும். புத்தகத்தில் எழுதி வைக்கப்பட்டிருக்கும் சலுகைக்கும் உண்மையில் மக்களுக்கு வழங்கப்பட்டுள்ள சலுகைக்கும் தொடர்பே கிடையாது என்பதனை உணர முடியும். ஜானவாத் என்னும் ஊரில் நிகழ்ந்ததாய்த் தகவல் உரிமையின் கதை என்று தலைப்பிடப்பட்ட கட்டுரையை வாசிக்கும்போது அதனை கண்ணெதிரே காணமுடியும்.
‘கொள்கையும் நடைமுறையும் வேறுபடுவது என்பது இந்தியாவில் சாதாரணமான ஒன்று. பஞ்சாயத் சட்டத்தின் கீழ், தகவல் கோரப்பட்ட நான்கு நாட்களுக்குள் தகவல் அளிக்கப்படவேண்டும் என்ற நிலையில், ஓராண்டுக்குப்பிறகுதான் தகவல் கிடைத்தது.’ கிடைத்த தகவல்களும் முழுமையானதாக இல்லை. செலவினங்கள் குறித்த ஆய்விற்கு அனுமதிக்கடிதங்கள்,
தொழில் நுட்ப அனுமதி,வருகைப் பதிவேடுகள், பில்கள், அளவைப்புத்தகம், பயன்பாட்டுச்சான்றிதழ், தணிக்கை அறிக்கை ஆகியன கோரப்பட்டன. ஜானவாத் பஞ்சாயத்தில் நகல் எடுக்கப்பட்ட ஆவணங்களைப்பார்த்தால்,வருகைப்பதிவேடுகள் இருந்தால் பில்கள் இல்லை, பில்கள் இருந்தால் அளவைப்புத்தகங்கள் இல்லை. அளவைப்புத்தகங்கள் இருந்தால், பயன்பாட்டுச்சான்றிதழ் இல்லை.’ பஞ்சாயத்து அலுவலகத்திற்குப் பலமுறை அலைந்த பிறகே இந்தத்தகவல்களும் கிடைத்திருக்கின்றன இதன அருணா ராய் விவரமாய்க் குறிப்பிடுகிறார். விஷயம் அறிந்த ஆளுகை என்பது என்னவென்று புரிந்த படித்த வர்க்கத்தினருக்கே நிலைமை இப்படி என்றால் இந்த நாட்டின் கடைகோடி மனிதனுக்கு இது எல்லாம் சாத்தியப்படுமா? நடமுறைக்குத்தான் வருமா? என்கிற கவலை வாசகனைக் கவ்விக்கொள்கிறது.
‘இறுதி நிமிடம் வரை அனைத்துப்பதிவேடுகளும் கிடைக்கவில்லை. சில பதிவேடுகள் இப்போதும் காணப்படவில்லை’ என்பதனை அருணா ராய் குறிப்பிடுகிறார். தகவல்கள் மறுக்கப்படும் பட்சத்தில் அபராதம் விதிக்கப்படும் என்பதற்கான விதியை உள்ளடக்கிய சட்டம் அவசியம் என்பதை ஜானவாத் நேர்வுகள் வலியுறுத்தின. இந்தியாவைப் பொறுத்தவரை சட்டங்கள் என்றும் சரியாக எழுதப்பட்டிருக்கும். நடைமுறையைப் பார்க்கும் போதுதான் உண்மையான நிலைமையைப் புரிந்துகொள்ள முடியும். இதுவே சாதாரண மனிதனின் அனுபவமாகும்.
இந்திய அதிகார வர்க்கம் என்பது ஒரு இரும்புச்சட்டகம். இ.ஆ. ப ( IAS) என்கிற சொற்கள் முதன்மையான சேவைக்கு மந்திரத்தன்மை அளிப்பன. யதார்த்தத்தில் இந்த அதிகாரக்கட்டமைப்போ ஒன்றன்மீது ஒன்று வேரூன்றி நிற்கும். இதுவோ அற்பமான அரசியல் கட்டமைப்போடு இணைந்துகொண்டு அரசு சேவைகளைப்பயன்படுத்தக் காத்திருக்கும். மெய்யாய் சாமான்யர்களுக்குக் கேடு மட்டுமே எஞ்சி நிற்கும் என்று நாட்டு நடப்பினை இலக்கணச் சுத்தமாக படம் பிடிக்கிறார் அருணா ராய். இரவியின் மொழி பெயர்ப்பு உழைப்பு இவ்விடத்தே செம்மாந்து நிற்கிறது.
கோப்புக்குறிப்பு பற்றி அருணா ராய் விளக்கமாகப்பேசுகிறார். கோப்புக்குறிப்பு என்பது கோப்புக்களின் இடது பக்கத்தில் ஒரு தனித்தாளில்( பொதுவாகப் பச்சைத்தாளில்) எழுதப்படும் குறிப்பு. கோப்பின் வலது பக்கத்தில் முன் மொழிவு இடம் பெற்றிருக்கும். இடது புறம் அதிகாரியின் பரிசீலனைக்குரிய கருத்துக்கள் எழுதப்படும். முன்மொழிவின் மீது கருத்துக்கள் தெரிவிக்கப்படும். இது மூத்த அதிகாரிகளுக்கு அனுப்பப்படும். அவர்கள் தங்கள் கருத்துக்களைப்பதிவு செய்வார்கள். அதிகார வர்க்கத்தின் ஆள்வோரின் எண்ணங்கள் முடிவுகளாகி வெளிவரும். இந்த முடிவு எடுக்கும் நடை முறையை மக்கள் மேடையில் வெளிப்படுத்தாது மறைக்க மத்திய அரசு முனைப்பாக இருந்தது. இதற்காகப் பல்வேறு போராட்டங்கள் நடத்தப்பட்டன. ஜூலை 2006ல் மத்திய அமைச்சரவை ‘கோப்புக்குறிப்புக்களை வெளியிடத் தடை செய்வது’ என்கிற முடிவுக்கு ஒப்புதல் அளித்தது. மத்திய தகவல் ஆணையர் கோப்புக்குறிப்புக்களைத் தரலாம் என்று கொடுத்த ஆணையை எதிர்த்துத்தான் இந்த அமைச்சரவையின் கோப்புக் குறிப்புக்களை வெளியிடத்தடை செய்யும் முடிவு அவசர அவசரமாக எடுக்கப்பட்டது.
உச்சநீதிமன்ற நீதிபதிகளான மறைந்த கிருஷ்ண ஐயரும், ஜே எஸ் வர்மா, நீதிபதி சாவந்த் ஆகியோ அமைச்சரவையின் ஒப்புதலுக்கு எதிராகக் கருத்துத் தெரிவித்தனர். இதற்காக நடைபெற்ற தர்ணாவில் அரசு கொண்டுவரும் திருத்தங்களுக்கு எதிராகக் கடுமையான அறிக்கை வெளியிடப்பட்டது. முன்னாள் பிரதமர் வி. பி. சிங் . சி பி ஐ, சி பி எம், ஃபார்வர்ட் பிளாக் தலைவர்கள் உடன் வந்தனர். அருணா ராய் இங்கு உடன் வந்த இடது சாரித் தலைவர்களின் பெயர்களைச் சொல்லி இருக்கலாம். சொல்வதில் என்ன தயக்கமோ அவருக்குத்தான் தெரியும்.
புத்தகத்தின் இறுதியில் அருணா ராய் குறிப்பிடும் விஷயங்கள் சாதாரண மனிதர்களை கவலை கொள்ளவே வைக்கிறது. கோபாலகிருஷ்ண காந்தி திருவனந்தபுரத்தில் பேசியதை வாசகர்க்குச்சொல்கிறார் அருணா ராய்.
அவரது கேள்வி, இந்தியாவை ஆள்வது யார்? நாடாளுமன்றமா,சட்டமன்றமா பஞ்சாயத்தா அல்லது நோட்டாவா? என்பது.
பயம், அவநம்பிக்கை, பணம் இவையே இங்கு உண்மையான ஆட்சியாளர்கள் என்கிறார் கோபால கிருஷ்ண காந்தி.
இன்றைய ஆட்சியில்,
விவரம் தெரியாதவர்கள் அச்சப்படுகிறார்கள், படித்த வர்க்கத்தினர் அவநம்பிக்கையோடு வாழ்கின்றனர், கோடானுக்கோடிக்குச் சொந்தக்காரர்கள் பணத்தைவைத்துக் காயை சாமர்த்தியமாய் நகர்த்துகிறார்கள்.
இப்புத்தகம் 1987 தொடங்கி 2005 வரையிலான 18 ஆண்டுகள் சமூக நியாயத்திற்கான பயணம் எப்படி நிகழ்ந்தது என்பதனை விவரிக்கிறது. ஆண்டு தோறும் 6 லட்சம் முதல் 8 லட்சம் மக்கள் இந்தசட்டத்தை பயன் படுத்துகிறார்கள். அந்த ஒவ்வொருவரும் இயக்கத்தின் முக்கியமான வீரர்கள் என்கிறார் அருணா ராய்.
அறிந்துகொள்ளும் உரிமை வாழ்வின் அடிப்படை உரிமை. அறிந்து கொள்ளும் உரிமை வாழ்வதற்கான உரிமை. இது அரசு நிர்வாகம் என்பதைத் தாண்டிய விஷயம் என்கிறார் ஆசிரியர். ‘கேள்வி கேட்பதா வேண்டாமா’ என்பதே இன்று கேள்வியாகி நம்முன் நிற்கிறது.
அதிகாரப்பகிர்வு எப்போதும் போட்டி நிலவும் இடம்தான். ஊழலையும் தன்னிச்சையான அதிகாரப்பயன்பாட்டையும் ஆர் டி ஐ வழி கேள்வி கேட்டதால், எழுபதுக்கும் மேற்பட்டோர் தம் உயிரை இழந்துள்ளனர்
உண்மையைத்தேடி அலைந்தவர்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள். ஆர் டி ஐ சட்டங்கள் உயிர்ப்போடுதான் இருக்கின்றன என்பது நமக்கு ஆறுதல்.
சத்யமேவ ஜயதே என்று முடிக்கிறார் அருணாராய்.
இந்த புத்தகத்தின் பிற்சேர்க்கையாக ‘தகவல் அறியும் உரிமைச் சட்டம் 2005 எண் 22/2005 கொடுக்கப்பட்டுள்ளது. இவண் மொழிபெயர்ப்பாளர் இரவியின் அர்ப்பணிப்புணர்வு மெருகிடக்கண்கிறோம்.
நெஞ்சு நிறை நன்றி என்று சொல்லி இறுதியாய் ஆயிரம்போராட்ட வீரர்களின் பெயரைச்சேர்த்திருக்கிறார் அருணா ராய். இதனிலும் விடுபட்டவர்களின் பெயர் ஏதும் இருப்பின் அதற்காகத் தனது மன்னிப்பையும் தெரிவித்துள்ளார் ஆசிரியர்.
காலச்சுவடு மொழி பெயர்ப்புக்கு இந்நூலை நன்கு தெரிவு செய்துள்ளது.
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.