’தாய்மை’ சிறுகதை – ச.லிங்கராசு

’தாய்மை’ சிறுகதை – ச.லிங்கராசு




வைகறையின் வனப்பை ஜன்னல் வழி ரசித்தப்படி, குளிக்க தயாரானாள் செல்வி. நேற்றைய உழைப்பு, அம்மா பூங்காவனத்தை அயர்ந்து தூங்க வைத்துக் கொண்டிருந்தது. செல்வி அம்மாவைப் பார்த்தவள் மனம் வெதும்பினள்.

‘இன்னும் எத்தனை நாள் நீ உழைத்து உழைத்து உருக்குலைய போகிறாய் அம்மா?’

‘நான் உன்னை வீட்டில் இருக்கவைத்து எப்போதும்மா பாத்துக்கொள்வது? அப்பாவின் நம்பிக்கை துரோகம் உன்னை இப்படி ஆக்கி வைத்திருக்கிறதே?’

சற்று நேரத்திற் கெல்லாம் காலை சிற்றுண்டியை தயார் செய்த செல்வி, அம்மாவை எழுப்பத் தொடங்கினாள். பள்ளிக்கு செல்ல இன்னும் நேரமிருந்தது. அம்மா வேலைக்கும் சென்று, பின்னர் வீட்டிலும் வந்து எல்லா வேலைக
ளையும் இழுத்துப் போட்டுக் கொண்டு செய்வதை விரும்பாத செல்வி, வீட்டு வேலைகளை கற்றுக் கொண்டு செய்ய ஆரம்பித்திருந்தாள். பூங்காவனத்திற்கு இது ஒத்தாசையாக இருந்தாலும், மகள் சிரமம் படுவதை அவள் விரும்பவில்லை. இதை கூடவேலை செய்யும் தன் தோழி ஒருத்தியிடம் சொல்லி இருக்கிறாள்.

” என்னடி பேசுற நீ? போற எடத்திலே இதெல்லாம் செய்யவேணாம்? செய்யட்டும் செய்யட்டும் விடுவியா?” என்று அவள் கூறியதிலும் நியாயம் இருப்பதாக பூங்காவனம் நினைத்தாள்.

” என்னடா இன்னிக்கி சாப்பிட பண்ணி இருக்க?” பூங்காவனம் வேலைக்கு புறப்பட்டுக்கொண்டே செல்வியிடம் கேட்டாள்.

” தோசைத்தான் ஊத்திஇருக்கேன் சட்னியும் ரெடி நீ முதல்ல சாப்பிடுமா?” செல்வி தட்டில் வைத்து நீட்டினாள்.

” நீ சாப்பிடலே?”

” நீ சாப்பிடுமா எனக்கு ஸ்கூல் போக இன்னும் டைம் இருக்கு நான் சாப்பிட்டுக்கிறேன்” பூங்காவனம் தோசையை சாப்பிட ஆரம்பித்ததும் கண்களில் நீர் கசிய தொடங்கியது…….

” பாவி பாவி என்னையும் என் கொழந்தையையும் இப்புடி அனாதையா விட்டுட்டு, வேற பொண்டாட்டியே கட்டிட்டு ஓடிட்டியே நீ நல்லா இருப்பியா?”

அரட்டும் அம்மாவிற்கு ஆறுதல் சொல்ல முடியாமல் செல்வி கலங்கி நின்றாள்.

பூங்காவனம் மாரிமுத்து தம்பதிக்கு திருமணமாகி, இருபது வருடங்கள் குழந்தை பேறுகிட்ட வில்லை. போகாத கோயிலில்லை பார்க்காத வைத்தியமில்லை இருவரும் ஊரிலுள்ள பண்ணையில் தான் விவசாயத் தொழிலாளர்களாக வேலை செய்து கொண்டிருந்தார்கள். மாரி முத்துவுக்கு பண்ணைக்கு வேலைக்குப் போவது மனதிற்குப் பிடிக்காமல், வெளி மாநிலத்திற்கு வேலைக்குப் போவதில் ஆர்வமாக இருந்தான்.

வெளிமாநிலத்தில் கட்டிட வேலைக்கு அதிக கூலி கிடைப்பதாக நண்பர்கள் மூலம் அறிந்திருந்தான். இதை பூங்காவனத்திடம் சொல்ல அவள் தான் சொந்த ஊரை விட்டு வரமுடியாது என்று தீர்மானமாகச் சொல்லி விட்டாள். தான் மட்டும் சென்று வேலை செய்து மாதம் பணம் அனுப்புவதாக மாரிமுத்து வாக்களித்தான்.

இதற்கிடையில் பூங்காவனம் கருவுற்றாள். இது மாரிமுத்தையும் பூங்காவனத்தை மும் பெரும் மகிழ்ச்சியிலாழ்த்தியது. இத்தனை வருடங்கள் கழித்து குழந்தைப் பேறு, இயற்கையின் விளையாட்டு எப்படியெல்லாம் மனிதர்களை ஆட்டுவிக்கிறது?

நாற்பது வயதில் தாய்மை பெண்களுக்கு வரமா? சாபமா? மருத்துவர் பரிசோதித்து விட்டு, பிரசவம் சற்று சிரமம் என்றும் மருந்து மாத்திரைகள் எடுத்துக் கொண்டு அறிவுரைப் படி நடந்தால் எதுவும் சாத்தியமே என்று நம்பிக்கையூட்டினார். மாரிமுத்து வெளிமாநிலம் செல்ல, பூங்காவனம் தனியே இருக்க ஆரம்பித்தாள். மாதம் ஒரு முறை வரும் மாரிமுத்து பூங்காவனத்தை மருத்துவரிடம் தவறாமல் காண்பித்து விட்டுத்தான் திரும்புவான்.

இப்படி ஒரு பொறுப்பான கணவராய் நடந்து கொண்ட மாரிமுத்து பின்னால் நடந்து கொண்ட விதம்……………..?.

காலம் யாருக்காகவும் காத்திருக்க வில்லை. பத்து மாதங்களுக்கு பின்னர் பூங்காவனம் அழகான ஒரு பெண் குழந்தையை பெற்றெடுத்தாள். குடுபத்தில் குதூகலம் பொங்கியது. சிறிது காலம் வீட்டிலிருந்த பூங்காவனம் பண்ணைக்கு மீண்டும் வேலைக்கு செல்ல வேண்டும் என்ற எண்ணத்தில் இருந்தாள். தன் கணவனின் வருமானம் மாத்திரம் பெண் குழந்தையை வளர்த்து ஆளாக்க போதுமானதாக இருக்காது என்பதையும் உணர்ந்து இருந்தாள்.

தான் வேலைக்குச் சென்று விட்டால் குழந்தையை கவனித்துக் கொள்ள ஆள் வேண்டுமே! பூங்காவனம் யோசித்து ஒரு முடிவுக்கு வந்தாள். தன் கடைசி தங்கை கமலத்தை இங்கு கூட்டி வந்து வைதத்துக் கொண்டால் குழந்தை செல்வியை கவனித்துக்கொள்ள ஏதுவாக இருக்கும். இதை கணவன் மாரிமுத்து விடம் சொன்னதும், அவனும் மறுப்பேதும் சொல்ல வில்லை

பூங்காவனம் தான் குடும்பத்தில் மூத்தவள். அவளுக்கு கீழ் இரண்டு பெண் குழந்தைகள். அப்பா அம்மா உயிரோடு இருக்கும் போதே இரண்டு பெண்களுக்கும் எப்படியோ திருமணத்தை நடத்திமுடித்து விட்டவர்கள் கடைசிப் பெண் கமலத்தை கரை சேர்க்க முடியா கவலையோடு போய் சேர்ந்து விட்டார்கள்.

கமலம் இரண்டாவது அக்கா பாதுகாப்பில் தான் இப்போதும் இருக்கிறாள். இரண்டாவது அக்கா தங்கம் சற்று வசதியான குடும்ப பின்னணியில் இருந்ததால் கமல்த்தை ஒரு குழந்தைப் போல் பார்த்குக் கொண்டாள். வரனும் பார்த்துக்கொண்டுதான் இருந்தாள்.

பெரியக்கா பூங்காவனம் வீட்டுக்கு வந்த கமலம், குழந்தை செல்வியை கண்ணாக கவனித்துக் கொண்டாள். மாரிமுத்து வெளி மாநிலத்தில் வேலை செய்வதால் மாதம் ஒரு முறைதான் ஊருக்கு வந்து கொண்டிருந்தவன், இப்
போதெல்லாம் அடிக்கடி வர ஆரம்பித்தான். குழந்தைப் பாசம் அவனை இருக்க விடவில்லையோ? பூங்காவனம் பெருமையாக நினைத்தாள். ஆனால் நடந்தது……?

எப்போதும் போலவே அன்றும் விடிந்தது ஆனால் பூங்காவனம் வாழ்வு விடியாது போயிற்று! மாரிமுத்துவையும் கமலத்தையும் காணவில்லை. இரண்டு பாய்கள்மட்டும் சாட்சியாக சுருட்டி வைக்கப்பட்டிருந்தன.

தன் தலையில் கல்லை தூக்கிப் போட்டு விட்டுப் போன அந்த இருவரையும் வசைபாடியும், சாபம் விட்டும் தன் ஆத்திரத்தை தணிக்கும் நிலைக்கு பூங்காவனம்
தள்ளப்பட்டாள. தணிந்ததா ஆத்திரமும் ஏமாற்றமும்?

ஊரே பூங்காவனத்தின் நிலை கண்டு பரிதவித்தது. எவ்வளவு பெரிய துரோகம் இது?அதன் பின்னர் குழந்தை செல்வியை வைத்துக் கொண்டு பூங்காவனம் பட்ட துயரங்கள், கஷ்டங்கள் எத்தனை? எப்படியோ அவளை
வளர்த்து, பன்னிரண்டாம் வகுப்பும் படிக்க வைத்துக் கொண்டிருக்கிறாள்.

அந்தி சாயும் நேரத்தில் அந்த துயர செய்தி பூங்காவனத் தின் காதுகளில் விழுந்தது. கணவன் மாரிமுத்து வின் இறப்பு செய்தி தான் அது. ஊரிலுள்ள மாரிமுத்து வின் நண்பன் கண்ணுச்சாமிக்கு கைபேசி வழியாக வந்தது. கண்ணுச்சாமி சிறிது காலம் மாரிமுத்து வோடு வெளிமாநிலத்தில் வேலை செய்தவன்தான்.

பூங்காவனத்தின் இதயம் ஒரு கணம் துடித்து அடங்கியது. விபரம் தெரிவதற்குள் விட்டுப்பிரிந்த அப்பாவின் முகத்தை கற்பனை செய்த செல்வி, சலனமற்று நின்று கொண்டிருந்தாள்.மாரிமுத்து வின் எந்த அடையாளத்தை பூங்காவனம் விட்டு வைக்க வில்லையே! துக்கம் விசாரிக்க அக்கம் பக்கத்தினர் திரண்டனர்.

” என்ன பூங்காவனம் நீ சாவுக்கு போய் ஆகணுமில்லே”
கூட்டத்தில் ஒரு வயதானப் பெண்மணி மெதுவாக கேட்டார்.

” நான் போனா மட்டும் போன உயிர் திரும்பி வந்துருமாக்கும்? போன உயிரு போனதுதான். ஆனா இரண்டு கொழந்தைகளோட அனாதயா நிற்கிறாளே நான் தூக்கிவளர்த்த தங்கச்சி ! சாகும் போது அப்பாவும் அம்மாவும் அவளை என் கையிலே புடிச்சி கொடுத்து பார்த்துக்க சொன்னாங்களே! நான் என் சுகத்தை மட்டுந்தானே பார்த்தேன்”
பூங்காவனம் உடைந்து அழுதாள்.

“இப்புடி ரெண்டு பேரு வாழ்க்கையையும் நாசமாக்கிட்டு நிம்மதியா அந்த ஆளு சேர்ந்துட்டாரு. ஒரு பெண்ணும் பையனும் பொறந்தப் பொறகாவது குடியை விட்டிருக்க வேணாம்? நல்லவனா இங்க வேஷம் போட்டவரு போன
எடத்துலே இப்புடி ஆட்டம் போட்டு குடும்பத்தை நடுத்தெருவிலே விட்டுட்டான் பாவி மனுசன்” பூங்காவனம் குமிறினாள்.

” போகட்டும் நீ அங்கே போயிட்டு சடங்கு, மத்த காரியமெல்லாம் பார்க்கணுமில்லே ” அந்தவயதான பெண்மணி ஆதரவாய் தோள்களை தொட்டாள்.

“கமலம், தான் ரெண்டாவது பெஞ்சாதியினு காட்டிகாமித்தான் அந்த ஊருலே வாழ்ந்திருக்கா. இப்போ நான் அங்க போனா அக்கா வாழ்க்கையே தட்டி பறிச்சவனு பேரு அவளுக்கு வர நான் சம்மதிக்க மாட்டேனக்கா” பூங்காவனம்
உணர்ச் சிப்பிரவாகத்தில் திணறினாள்.

” சரி, அப்போ அவளை அப்புடியே விட்டுறப் போறியா?”

” அவ இந்த அக்காவ தேடி எப்ப வேண்ணா வரட்டும் நான் காத்திருக்கேன்” பூங்காவனம் கண்ணீரைத் துடைத்துக் கொண்டாள். காலமெல்லாம் தன் கணவனையும் தங்கையையும் திட்டிக்கொண்டு சாபமெல்லாம் விட்ட பூங்காவனமா இது? வந்தவர்கள் திகைத்தார்கள். செல்விக்கு ஒரே குழப்பமாகவே இருந்தது.

– ச.லிங்கராசு

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம். 



Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *