தாய்ப்பால் எனும் ஜீவநதி 6 – டாக்டர் இடங்கர் பாவலன்கர்ப்ப காலத்திலேயே தாய்ப்பாலூட்டத் தயாராகுங்கள்

தாய்ப்பாலென்பது குழந்தைகள் பிறந்த பின்னால் சுரக்கப் போவது தானே? அதற்காக நீங்கள் என்னவோ கர்ப்பகாலத்திலேயே தாய்ப்பாலூட்டச் சொல்லி புதிதாக எங்களை ஏதேதோ பேசிக் குழப்புகிறீர்களே? என்று யோசிக்கிறீர்கள் அல்லவா! அப்படியானால் இந்த ஒரு விசயத்தைக் கவனியுங்கள். நாம் கர்ப்பமாயிருக்கிற காலத்தில் பாறையிலிருந்து கசிகிற நீர்ச்சுனை போல மார்பிலிருந்து அவ்வப்போது கசிந்து வருகிற தாய்ப்பாலை நீங்களும்கூட கவனித்திருக்கக்கூடும். அப்படியிருக்கையில் பிரவசித்தவுடன் தாய்ப்பாலூட்டுவதற்கான ஆயத்த வேலைப்பாடுகளை நமது மார்பகம் கர்ப்பகாலத்திலேயே செய்யத் தயாராகிவிட்டது என்று தானே அர்த்தமாகிறது.

பொதுவாக தாய்ப்பால் பற்றிய பேச்சைத் துவங்கிவிட்டாலே என்ன, தாய்ப்பாலைப் பத்தி மாசமா இருக்கும் போதே படிச்சுத் தெரிஞ்சுக்கணுமா! இப்பத் தானே எனக்கு எட்டு மாசமே ஆயிருக்கு. இதெல்லாம் கொழந்தைங்க பொறந்தப் பின்னாடி கேட்டுத் தெரிஞ்சுக்கிட்டா போதாதா?″ என்று தான் பெண்கள் எல்லோரும் சிந்திக்கிறார்கள். கூடவே கர்ப்பகாலம் தொடர்பாக வெளிவருகிற புத்தகங்களில்கூட தாய்ப்பால் பற்றிய விளக்கங்களை ஒரு பக்க அளவில் மட்டுமே பேசிவிட்டு கடந்துவிடுகிறார்களே! இதனால், தாய்ப்பால் கொடுப்பதெல்லாம் என்ன ஒரு பெரிய விசயமா? தாய்ப்பால் பற்றியெல்லாம் தனியே படித்து வேறு தெரிந்து கொள்ள வேண்டுமா? என்று கர்ப்பவதிகளும் இதை சாதாரணமாக நினைக்கத் துவங்கிவிட்டார்கள். ஆகவேதான் இன்று நாம் கர்ப்பகாலத்திலேயே தாய்ப்பால் புகட்டுவதன் அவசியத்தைப் புரிந்து கொள்ள வேண்டிய கட்டாயத்திற்கு வந்திருக்கிறோம்.

சமீபத்தில் திருமணமான பெண்ணொருவள் கர்ப்பமாகியிருக்கிறாள் என்று வைத்துக் கொள்வோம். உடனே உறவினர்களும், அக்கம் பக்கத்திலிருப்பவர்களும், ஏன் நாமும்கூட ஒன்றுகூடி என்ன பேசிக் கொள்வோம்? அட, இவ என்ன வயிறே இல்லாம இருக்கா! இவளுக்குப் பிள்ளை உண்டாயிருக்கா இல்லியா?″ என்று வயிற்றையே கண்ணும் கருத்துமாக வைத்துக் காதோடு காதாக மெல்ல கிசுகிசுத்துக் கொண்டிருப்போம். ஆக, இவையெல்லாமே ஒரு பெண் கர்ப்பமாகிவிட்டால் பிள்ளை வயிற்றுக்குள் தானே வளரும் என்கிற சாதாரண புரிதலின் காரணமாக வருவது தான்.

அதேசமயம் கர்ப்பத்தின் காரணமாக அந்தக் குறிப்பிட்ட பத்து மாதங்களில் உச்சந்தலையிலிருந்து உள்ளங்கால் வரையிலும் இந்த வயிற்றையும் தாண்டி ஒரு கர்ப்பவதியின் உடலிலும், மனதிலும் எவ்வளவோ மாறுதல்கள் ஏற்படுகின்றன என்பதைப் பற்றி யாரும் இங்கே பொருட்படுத்துவதில்லை. ஏன், நாமும்கூட,வயிறு பெரிதாகிவிட்டதா, இல்லையா? அப்படி வயிறு தொம்மென்று பெருத்துவிட்டால் குழந்தையும் கொழுகொழுவென வயிற்றுக்குள் வளர்ந்துவிடுவார்கள் தானே! என்று ஒப்பீட்டளவில் பருத்த வயிற்றையும் கருவின் வயதையும் கணக்கிட்டு ஒருவகையில் சமாதானம் செய்து கொள்கிறோம். இங்கே கருப்பையானது பத்து மாதங்கள் குழந்தையை வயிற்றில் சுமந்து வளர்க்கிறதென்றால் பிள்ளைகள் பிறந்த பின்னால் மார்பகம் தான் ஒரு வயதிற்கும் மேலாக அவர்களை பாலூட்டி சீராட்டி வளர்கிறது என்றால் மார்பகத்திற்கும் நாம் சம அளவு கவனமாவது தர வேண்டும் அல்லவா!

ஆனால் வயிற்றுக்கு ஈடாக சற்று மேலே மார்பகமும் கர்ப்பகாலத்தில் மெல்ல மெல்ல பெரிதாகிக் கொண்டிருப்பதைப் பற்றி நம் கர்ப்பவதிகள்கூட கண்டு கொள்வதில்லை. இப்படி மார்பகத்திற்கென தனியே கவனம் கொள்ள வேண்டுமென்று மருத்துமனையில்கூட பொறுப்பாக அறிவுறுத்தப்படுவதும் இல்லையே! நமது கருப்பை நிலத்தை உழுது, கருவை அதிலே விதைத்து, நஞ்சுக்கொடியில் பாத்திகட்டி, அதற்குள் தனது ஒட்டுமொத்த குருதியையும் பாய்ச்சி, நம் பிள்ளையை போஷாக்குடன் வளர்க்கும் அந்த சமயத்தில், அதே இரத்தத்தை தனது மார்பிலே ஏந்தியபடி தாய்ப்பாலூட்டுவதற்கான முன்னேற்பாடுகளை மார்பகமும்கூட அச்சமயத்திலே துரித வேகத்திலே துவங்கியிருக்கும். ஆக, மார்பகமும்கூட நம் கர்ப்ப காலத்தின் ஓர் அங்கம் தான் என்பதை நாம் எப்போதும் மறந்துவிடக் கூடாது.

கர்ப்பவதியாகிய நாம், நம்முடைய மார்பகங்கள் பற்றிய அடிப்படை விசயங்களில் தெள்ளத் தெளிவாக இருக்க வேண்டும். நாம் வயதிற்கு வந்த நாளிலிருந்து மார்பில் ஏற்படுகிற படிப்படியான மாற்றங்களை அன்றாடம் கவனித்தபடியே இருக்க வேண்டும். அப்போது தான் கர்ப்பவதியாக பொறுப்பேற்ற பின்னால் ஏற்படுகிற மார்பகத்தின் அத்தியாவசிய மாற்றங்களைப் புரிந்து கொண்டு அதற்கேற்ப நம்மைத் தயார்படுத்திக் கொள்ள முடியும். இப்படி ஒவ்வொரு விசயங்களாக கவனித்துப் பார்த்து பிரசவத்திற்கு தயாராகிற பட்சத்தில்தான், குழந்தை பிறந்த அடுத்த நிமிடத்திலேயே மார்பில் போட்டு பிள்ளைக்குப் பாலூட்டும் முதல் அனுபவத்தில் எவ்வித பதட்டமும், குழப்பமும் இல்லாமல் நிதானமாகக் கொடுக்க முடியும். அதேசமயம் நம் பிள்ளைக்குத் தாய்ப்பாலூட்டுகிற தனிச்சுகத்தை முழுவதுமாக மகிழ்ச்சியுடன் அனுபவிக்கவும் முடியும்.

Thaipal Enum Jeevanathi Dr Idangar Pavalan WebSeries 6 தாய்ப்பால் எனும் ஜீவநதி 6 – டாக்டர் இடங்கர் பாவலன்
படம்-1

அதெல்லாம் சரி, முதலில் மார்பகம் என்றால் என்ன என்பதைப் பற்றி புரிந்து வைத்திருக்கிறோமா? பெண்களின் நெஞ்சுக்கூட்டுப் பகுதியிலிருந்து இருபுறமும் துருத்திக் கொண்டிருக்கும் இரண்டு பெரிய பால் சுரப்பிகள் தானே! இந்தப் பால் சுரப்பியின் மேலே மென்மையான தோலினால் மூடப்பட்டிருக்கிறது, அவ்வளவுதான். அந்தத் தோலின் மையத்திலே மார்புக் காம்பும், அதைச் சுற்றி வட்டமடித்த கருமையான நிறத்தில் ஏரியோலாவும் இருக்கின்றன. இன்னும்கூட நாம் கொஞ்சம் மார்பகத்தின் உள்ளே சென்று நுண்ணோக்கியால் உற்றுக் கவனித்தோமென்றால் குட்டிக்குட்டியான பால் சுரப்பிகளெல்லாம் திராட்சைப் பழக் கொத்துகளைப் போல அழகழகாகத் திரண்டிருப்பதையும் காண முடியும்.

இந்த அனைத்து பால்சுரப்பிப் பைகளிலிருந்தும் உற்பத்தியாகிற பாலானது வழிந்து நழுவி ஒரேயொரு பால்சுரப்பிக் குழாயில் சென்று திறக்குமாறு வடிகால் போல இங்கே இலாவகமாக கட்டப்பட்டிருக்கும். இப்படி இரண்டு மார்பிலுமே 10 முதல் 20 அடுக்குகளில் பால் சுரப்பிப் பைகள் ஒன்றாகத் திரண்டு ஒரு பூச்சரம் போல வரிசையாக கோர்க்கப்பட்டிருக்கும். இந்த பால்சுரப்பிகளுக்கு இடையேயும் அதனைச் சுற்றிலும் தான் கொழுப்புச் செல்களும் மற்ற இணைப்புத் திசுக்களும் காரைச் சாந்து போல மொழுகிப் பூசியபடி மார்பகத்திற்கு ஒரு கச்சிதமான வடிவத்தை அளித்துக் கொண்டிருக்கும்.

Thaipal Enum Jeevanathi Dr Idangar Pavalan WebSeries 6 தாய்ப்பால் எனும் ஜீவநதி 6 – டாக்டர் இடங்கர் பாவலன்
படம்-2 ( பால்சுரப்பின் கட்டமைப்பு )

இப்படியாக கர்ப்பகாலத்தின் நாட்கள் செல்லச் செல்ல மார்பகத்தின் பால்சுரப்பிகளெல்லாம் தடித்து அளவிலே கொஞ்சம் கொஞ்சமாக பெரிதாகின்றன. அதிலிருந்து சுரக்கிற தாய்ப்பாலைச் சுமந்துச் செல்கிற சிறியது முதல் பெரியது வரையிலான பால் சுரப்பிக் குழாய்களும் நன்றாக இளகிக் கொடுத்து விரிந்து கொள்கின்றன. இதனால் தாய்ப்பாலும் தங்குதடையின்றி காம்பு வரையிலும் எளிதாக வெளியேறிவிட முடிகிறது. மார்பக உள்ளடுக்குகளிலும்கூட நாளுக்கு நாள் அதிகப்படியான கொழுப்புகள் வந்து படிந்த வண்ணமாகவே இருக்கின்றன. இப்படியாக வயிற்றுக்கு ஈடாக மார்பகமும் தன்னை நிதானமாக கர்ப்பகாலத்தில் நிறைத்துக் கொள்கிறது. என்ன ஒரு வித்தியாசம், இங்கே கர்ப்பம் பிள்ளையால் நிறைகிறது என்றால், மார்பகம் தன்னை கொழுப்பால் நிறைத்துக் கொள்கிறது, அவ்வளவுதான்.

சரி, இப்போது நாம் தாய்மார்களிடையே இருக்கிற ஒரு இயல்பான சந்தேகத்தைப் பற்றி விவாதிப்போமே! அதாவது சிறிய மார்பகம் என்றால் அதிலே குறைவான அளவு தாய்ப்பாலும், பெரிய மார்பகம் என்றால் அதில் அதிகப்படியான தாய்ப்பாலுமாக வித்தியமாசப்பட்டு ஒரு மார்பின் அளவை வைத்துச் சுரக்குமா என்ன? அப்படியென்றால் அளவிலே பெரிய மார்பகமாக இருக்கிற பக்கம் மட்டுமே வைத்து பாலூட்டினால் பிள்ளைகளும் ஒருவழியாக நன்றாகக் குடித்துத் தேறிவிடுவார்கள் தானே? என்ற கேள்வியும் குழப்பமுமாகத் தான் தாய்மார்கள் பலரும் இருக்கிறார்கள்.

பொதுவாக ஒரு மார்பகம் முழுமையும் எடுத்துக் கொண்டால் அதன் 20 சதவீத பகுதிகள் மட்டுமே பால்சுரப்பிகளாக இருக்கும். அதேசமயம் மீதமுள்ள 80 சதவீத பகுதியும் வெறுமனே கொழுப்புகளாலும், இதர சாதுவான திசுக்களாலும் தான் நிறைந்திருக்கும். இப்போது நாம் விளங்கிக் கொள்ள வேண்டியது என்னவென்றால், எல்லா பெண்களுக்கும் மார்பிலுள்ள பால் சுரப்பிகளின் அளவும், எண்ணிக்கையும் 20 சதவீத என்பதாக ஒரேபோலத் தான் இருக்கும். ஆனால் நாம் சொல்லுகிற மாதிரியான சிறிய மார்பகம், பெரிய மார்பகம் என்கிற அளவுகோலெல்லாம் அதிலே சேகரமாகிற மீதமிருக்கிற 80 சதவீத இதர கொழுப்புகளின் எண்ணிக்கையை வைத்து தானே தவிர பால்சுரப்பிகளினுடைய அளவையோ எண்ணிக்கையோ பொறுத்தது அல்ல என்பதைப் புரிந்து கொண்டாலே ஒருவகையில் நம் தாய்மார்களின் குழப்பம் தீர்ந்துவிட்ட மாதிரிதான்.

நம் மார்பிலுள்ள பால்சுரப்பிகள் தான் தாய்ப்பால் சுரக்கிற அத்தியாவசியமான வேலையைச் செய்கின்றன. இதில் கொழுப்புகளின் பணி என்பதோ சார்ஜ் ஏற்றி வைத்துக் கொள்ளுகிற அவசரகால பேட்டரி போலத்தான். அதாவது குழந்தைகள் பிறந்த பின்பாக, அம்மாக்களின் உடல் பலவீனமாகி, நலிவுற்று சரியாகச் சாப்பிடக்கூட முடியாமல் இருக்கிற சமயத்தில், பிள்ளைக்குத் தாய்ப்பாலூட்டுவதற்குத் தேவையான சக்தியை இத்தகைய கொழுப்புகள் தான் பெருந்தன்மையாக வாரி வழங்குகின்றன. இப்படி கர்ப்பகால முன்தயாரிப்பு வேலையாக கொழுப்புகளை உடம்பில் சேகரமாக்கிக் கொள்வது நம் மார்பில் மட்டுமல்ல தொடையிலும், புட்டங்களிலும்கூட நடந்து கொண்டு தான் இருக்கிறது. ஆக, தாய்ப்பால் சுரத்தலுக்கான பணியில் இத்தகைய கொழுப்புகளுக்கு எந்தப் பங்கீடுமே இல்லை என்பது தெள்ளத் தெளிவாகிறது அல்லவா! ஆக, மார்பகத்தின் அளவு சிறியதாக இருந்தாலும்கூட அதிலிருக்கிற பால் சுரப்பின் தயவால் தாய்ப்பால் நன்றாகச் சுரக்கத்தான் செய்யும் என்பதை நாம் இங்கே தெளிவாக புரிந்து கொள்வோம்.

மேலும் கர்ப்பவதிக்கு, கர்ப்பகாலத்தில் மார்பகம் இப்படி திம்மென்று வளர்ந்து கொண்டே போவதால் நெஞ்சுக்கூட்டில் பாரமாவதைப் போன்ற உணர்வு ஏற்படும். ஏதோ காலியான மார்பகத்தை கர்ப்பம் வந்து நிறைத்துவிட்டதைப் போலத் தோன்றும். இப்படிப் பெரியதாகிற மார்பகமும்கூட இரண்டு பக்கமும் ஒரே மாதிரியாக இருப்பதில்லை. ஒரு மார்பகம் பெரியதாகவும், இன்னொன்று சிறியதாகவும், ஏன் பார்ப்பதற்கு இரண்டு புறத்திலும் ஏற்றம் இறக்கமுமாகக் கூடத் தெரியலாம். அதற்காக நிலைக்கண்ணாடியில் மார்பைப் பார்த்துக் கொண்டே பெரியதாக இருக்கிற மார்பில் தானே தாய்ப்பால் நன்றாகச் சுரக்கும். எனவே அதில் மட்டும் தான் நான் முழுக்க பிள்ளைக்குப் பாலூட்டப் போறேன் என்று தவறுதலாக எண்ணிவிடக் கூடாது. இப்படி மார்பின் அளவை வைத்தும், வடிவத்தை வைத்தும் மட்டுமே தாய்ப்பால் சுரப்பதில்லை என்பதை ஒவ்வொரு கர்ப்பிணிப் பெண்களும் கட்டாயம் தெரிந்து வைத்திருக்க வேண்டும்.

அடுத்ததாக, அடிக்கடி மார்பகத்தின் உள்ளே சுருக் சுருக்கென்று மின்னல் வெட்டுவதைப் போன்ற உணர்வு ஏற்படும். சில நேரங்களில் சொல்லவே முடியாத அளவிற்கு மார்பில் வலியும் வேதனையும்கூட வாட்டி வதைக்கும். அடடா, என்னவென்று மேலோட்டமாகத் தொட்டுப் பார்த்தாலே குழந்தையின் சிரித்த கன்னங்களைப் போல தொம்மென்று இருக்கும். இவையெல்லாமே கர்ப்பகால ஹார்மோன்களின் தூண்டுதலால் மார்பினுள்ளே இருக்கிற சிறிய செல்களும், மெல்லியத் தசைகளும் தளர்ந்து இளகிக் கொடுப்பதாலும், அதற்கேற்ப இரத்தக்குழாய்களில் காட்டாற்று வெள்ளப் பாய்ச்சலோடு புரளுகிற குருதியின் ஓட்டத்தினாலும் தான் ஏற்படுகிறது என்பதைப் புரிந்து கொண்டாலே நாம் வீணாகப் பயப்பட வேண்டியதில்லை. மேலும் ஒரு தொட்டாச் சிணுங்கிச் செடியைப் போல கர்ப்பகால பெண்ணின் உடல் எதற்கெடுத்தாலும் உணர்ச்சித் தூண்டலுடனே இருப்பதால், நம் மார்பை இலேசாகத் தொட்டாலே நரம்புத் தூண்டலாகி வலியும், கூச்சமும், அழுத்தமும் இன்னும்கூட அதிகமாகவே தோன்றும்.

ஒருவேளை நீங்கள் குளிக்கிற போதோ, அலங்காரம் செய்ய கண்ணாடியின் முன்பு நிற்கிற போதோ மார்பகத்தைப் பார்க்க நேர்ந்தால் அதனது தோலின் நிற மாற்றத்தைக்கூட தெளிவாகக் காண முடியும். நல்ல மாநிறமாக இருப்பவர்களுக்கு தோலின் நிறம் கொஞ்சம் வெளுத்த நீலம் படிந்திருப்பதைப் போலவே தெரியும். அதைப் பார்த்தவுடனே என்னவோ, ஏதோவென்று பயப்பட வேண்டியதில்லை. மார்பகத் தோலிற்கு கீழே ஓடுகிற மெலிசான ரத்தக் குழாய்களெல்லாம் விரிவடைந்து, அதிலே இரத்த ஓட்டம் அதிகரிப்பதால், அத்தகைய இரத்தம் மற்றும் இரத்தக்குழாய்களின் நிறமே மார்பகத்தை வண்ணங்களாக, வெளுத்த ஒன்றாக மாற்றியிருக்கிறது என்பதைப் புரிந்து கொண்டாலே போதுமானதுதான். இப்படி மார்பக்கதின் ஒவ்வொரு மாற்றங்களையும் கவனிக்கிற போதுதான் இதனை எவ்வளவு அக்கறையோடு பார்த்துக் கொள்ள வேண்டியிருக்கிறது என்பதே நமக்குப் புரிய வரும்.

பொதுவாக இரண்டு மார்பகங்களின் மையத்திலும் விரல் நுனியைப் போல காம்பானது துருத்திக் கொண்டிருக்கும். இந்தக் காம்புகளும்கூட கர்ப்பகாலத்தில் அளவிலே பெரிதாகி தடித்துக் கொள்கிறது, புடைத்துக் கொண்டு நிமிர்ந்து நிற்கிறது, நன்கு நிறமேறி அடர்ந்த கருப்பாகத் தோற்றமளிக்கிறது. இந்தக் காம்பின் மையத்தில் தான் தோட்டச் செடிகளுக்கு தண்ணீரைப் பாய்ச்சுவதைப் போல பால்சுரப்பிக் குழாய்கள் மொத்தமாக வந்து திறந்து கொண்டு தாய்ப்பாலை வெளியேற்றுகின்றன. நம் குழந்தைகளுக்குத் தாய்ப்பாலூட்டுகையில் மார்பைப் பற்றியபடி அவர்கள் சவைத்துக் குடிக்கும் போது இந்த நுண் துளைகளின் வழியாகத் தான் தாய்ப்பாலும் சுரந்து வெளியேறுகிறது.

இன்னும் கூடுதலாக, காம்பினைச் சுற்றியிருக்கிற ஏரியோலா என்கிற சிறிய வட்டமான பகுதியானது இப்போது படர்ந்து இரண்டு மடங்குப் பெரிதாகிறது. இந்த அடர் நிறத்திலான கருத்த வட்டமான பகுதியில் இப்போது குட்டிக்குட்டி முகப் பருக்களைப் போல கொஞ்சமாக துருத்த ஆரம்பித்திருக்கும். உடனே அதைப் பார்த்துவிட்டு, அச்சச்சோ! காம்பெல்லாம் புண்ணாயிடுச்சே!″ என்று அச்சப்பட வேண்டாம். இத்தகைய பருக்கள் எல்லாமே உங்களது கர்ப்பத்தின் விளைவாக ஹார்மோன்களால் மாற்றம் அடைந்த வியர்வைச் சுரப்பிகள் தான், தாய்மார்களே! மேலும் இதிலிருந்து சுரக்கிற எண்ணெய் பிசுபிசுப்புடைய இயற்கையான களிம்புகள் தான் மார்புக் காம்பினை சுத்தமாகவும், உராய்வுத் தன்மை இல்லாமலும் வைத்துக் கொள்ள உதவுகிறது. இன்னும்கூடசொல்லப் போனால் இத்தகைய ஏற்பாட்டால் தான் கிருமித் தொற்றுகள் மார்பில் ஏற்படுவதுகூட தடுக்கப்படுகிறது.

Thaipal Enum Jeevanathi Dr Idangar Pavalan WebSeries 6 தாய்ப்பால் எனும் ஜீவநதி 6 – டாக்டர் இடங்கர் பாவலன்
படம்-3

அது மட்டுமா சங்கதி! ஏரியோலா பருவிலிருந்து வெளியேகிற குறிப்பிட்ட செக்கு எண்ணெய் போன்றதொரு வேதிப்பொருளானது, குழந்தையைத் தாய்ப்பால் குடிக்கச் சொல்லி நறுமணத்தோடு கவர்ந்து ஈர்க்கிற வேலையை மெனக்கெட்டுச் செய்கிறது. இப்படியாக காம்புகள் பெரிதாகுவது, அடர்ந்த நிறத்தில் தோற்றமளிப்பது, ஏரியோலா கூடுதலாகப் படர்ந்து கொள்வது, அதிலே எண்ணெய் சுரப்பது உள்ளிட்ட மாற்றங்களெல்லாமே பிறந்த குழந்தையின் மங்கலாகத் தெரிகின்ற பார்வைக்கு எளிதில் காண்கிற படியும், காம்பிலே சென்று அவர்களது வாயினைச் சரியாகப் பொறுத்திக் கொண்டு பசியாறுவதற்கும் தான் என்பதைப் புரிந்து கொண்டாலே மார்பகத்தின் இயல்பான மாற்றங்களுக்கெல்லாம் நாம் அச்சப்பட வேண்டியதிருக்காது அல்லவா! மேலும் இத்தகைய மாறுதல்களால் குழந்தைகளும்கூட எந்தச் சிரமமுமின்றி எளிதாக தாய்ப்பாலை விரும்பிக் குடிக்கவும் செய்கிறார்கள்.

மேலும் காம்பைச் சுற்றிய ஏரியோலா பகுதியில் பல்லாயிரக்கணக்கான உணர்ச்சி நரம்புகள் அதிகரித்து அவையெல்லாம் ஒன்றோடொன்று பின்னிப் பிணைந்து அங்கேயே ஒரு வலைப்பின்னலை உருவாக்குகின்றன. இத்தகைய நெட்வொர்க்கினால் தான் குழந்தைகள் காம்பிலே வாய் வைத்தவுடன் அதனால் ஏற்படுகிற நுண்ணிய அழுத்தத்தையும், நுட்பமான தொடுதல் உணர்வையும் எடுத்துக் கொண்டு மூளைக்குப் போய் தாய்ப்பால் சுரக்க வேண்டும் என்கிற அன்புக் கட்டளையை உடனே பிறப்பிக்கச் செய்கிறது.

சரி, இப்படி கர்ப்ப காலத்தில் மார்பகம் மாற்றத்தைச் சந்திப்பதெல்லாமே இருக்கட்டும். அதற்காகவென்று கர்ப்பவதிகள் தங்களைக் கர்ப்பகாலத்திலே தயார் செய்து கொள்ள வேண்டாமா? ஏனென்றால், கர்ப்பமாகியவுடன் பெண்களின் உடல் முழுக்கவே மாறிவிடுகிறது அல்லவா! அத்தோடு சேர்த்து மார்பகத்தின் அளவும்கூட மாறிவிடுகிறது என்பதையும் இப்போது நாம் புரிந்து கொண்டோம். ஆக, கர்ப்பகாலத்திலேயே உடலிற்கேற்ப ஆடைகளையும், உள்ளாடைகளையும் தேர்வு செய்ய வேண்டிய கட்டாயம் இப்போது நமக்கு வந்துவிடுகிறது.

இப்போதெல்லாம் கர்ப்பவதிகள் வீட்டை விட்டு வெளியேறும் போதும், மருத்துவமனைக்கு பரிசோதனைக்காகச் செல்கிற போதும் பொதுவாக சுடிதாரிலேயே செல்கிறார்கள். சுடிதார் என்பது கர்ப்பகாலத்திற்குப் பொருத்தமில்லாத ஆடையென்று மருத்துவமனையில் அடிக்கடி சொல்வதைக் கேட்கிறோம் அல்லவா! அதாவது தினந்தோறும் பெரிதாகும் வயிற்றுக்கு ஏற்ப சுடிதாரினால் தொடர்ந்து இளகிக் கொடுக்க முடியாது. நாமும்கூட எப்படித்தான் சுடிதாரை அளவு பார்த்து வாங்கி அணிந்து கொண்டாலும், ஏதாவதொரு பக்கமாக தொடையிலோ, இடுப்பிலோ, மார்பளவிலோ இறுக்கமாக பிடித்துக் கொள்ளத் தானே செய்கிறது. நாமும் இதற்காகவென்று அடிக்கடி ஒவ்வொரு மாதமும் போய் சுடிதாரை தைத்துக் கொண்டிருக்க முடியுமா என்ன?

அத்தோடு மருத்துவமனையில் கர்ப்பகால பரிசோதனைக்குச் செல்கையில் அடிவயிற்றில் கைவைத்து கர்ப்பப்பை பரிசோதனை செய்வதற்கு மருத்துவர்களுக்குமே இப்படி சுடிதாரைக் கட்டிக் கொண்டிருப்பது மிகுந்த சிரமமாகத்தான் இருக்கும். சுடிதார் போன்ற நெருக்கமாக ஆடைகளை அணிவதால் கர்ப்ப காலத்தில் உடலும் இறுக்கமாகி இயல்பாக மூச்சுவிடுவதைக்கூட அது சிரமப்படுத்தவே செய்கிறது. மேலும் சுடிதார் நாடாவை அடிவயிற்றில் போட்டு இறுக முடிச்சிட்டுக் கொள்வதால் தொடைப் பகுதியில் உஷ்ணம் அதிகமாகி, அதனால் நாடா கட்டிய பகுதிகள் மற்றும் தொடைப் பகுதிகளில் கிருமித்தொற்று ஏற்படவும் வாய்ப்பிருக்கிறதே!

ஆனால் சேலை கட்டுவதென்பது அப்படியல்ல. வயிறு எந்த அளவிற்குப் பெரிதாகிறதோ அதற்கேற்ப சேலையைத் தளர்த்திக் கொண்டு மேலே நெஞ்சுக்கூடு வரை ஏற்றிக் கட்டிக் கொள்ள முடியும். இதனால் மூச்சு விடவோ, வயிற்றை இளகிக் கொடுக்கவோ எந்தச் சிரமமும் இருக்காது. மருத்துவர்களுக்கும் கை வைத்துப் பரிசோதிப்பதற்கு மிக எளிதாக இருக்கும். இதனால் தான் கர்ப்பவதிகள் வெளியே செல்கையில் சேலையைப் பயன்படுத்திக் கொள்வதே நல்லது என்று மருத்துவர்கள் அறிவுறுத்துகிறார்கள். அதே சமயம் வீட்டில் இருக்கிற போது அவரவர் சௌகரியத்திற்கேற்ப தளர்வான நைட்டியாக அணிந்து கொள்ள வேண்டியது தான்.

தற்போது இவை அத்தனைக்கும் தீர்வாக பெண்கள் தங்களது சௌகரியத்திற்கேற்ற சுடிதாரினை கொஞ்சம் தளர்வாக தைக்கச் சொல்லிக் கேட்டு வாங்கிக் கொள்கிறார்கள். அப்படியும் இல்லையென்றால் கடையிலேயே தங்களுக்கெனச் சேரக்கூடிய அளவைவிட இன்னும் சற்றுக் கூடுதலான அளவிலே சுடிதாரை ரெடிமேடாக வாங்கியும் போட்டுக் கொள்கிறார்கள். மேலும் உடலை இறுக்காத, மிகவும் இளகுத் தன்மையுடைய மார்புப் பகுதியிலிருந்து குடை போல விரியக்கூடிய நவீன சுடிதார் மாடல்களும் வந்துவிட்டன. கர்ப்பகாலத்திற்கென்றே வடிவமைக்கப்படுகிற ஆடைகளும் இப்போது புத்தம் புதியதாய் வந்த வண்ணமாகவே இருக்கின்றன. ஆதலால் நாம் கவனிக்க வேண்டிய விசயமெல்லாம் பருத்தித் துணியிலான, இறுக்கமில்லாத, மென்மையான, இசையும் தன்மையுள்ள ஆடைகளைத் தேர்வு கொள்ள வேண்டுமென்பது தான். ஆக, எது எப்படியோ, கர்ப்பகாலத்தில் உங்களுக்கும், வயிற்றில் வளருகிற உங்கள் கருவிற்கும் ஏற்ற வகையில் சௌகரியமான ஆடைகளைத் தேர்வு செய்து அணிந்து கொள்வதே நல்லது.

ஆனாலும் இவையெல்லாவற்றையும்விட முக்கியமாகக் கவனிக்க வேண்டியது உள்ளாடைகளைப் பற்றிதான். ஏனென்றால் மார்பகமும் அளவிலே பெரிதாகியபடியே இருப்பதால், எப்போதும் அணிகிற அளவைவிட கூடுதலான அளவிலே உள்ளாடைகளை வாங்கி அணிய வேண்டியிருக்கிறது. அப்படி அணிகின்ற உள்ளாடைகள் இறுக்கமாக இல்லாமல் கொஞ்சம் தளர்வானதாக, பருத்தியால் ஆனதாகவும் இருக்க வேண்டியிருக்கிறது. இப்படிப் பொருத்தமான அளவில் உள்ளாடைகள் வாங்கி அணிகிற போதுதான் பிரசவத்திற்குப் பின்பாக ஏற்படுகிற மார்பகம் தளர்வடைதல் போன்ற பிரச்சினைகள் ஏதும் பெண்களுக்கு வருவதில்லை. இதனால் மார்பகம் மீண்டும் பழைய வடிவத்தைப் பெறுவதும் எளிதாகிறது.

அடுத்ததாக மார்பகக் காம்பில் சுரக்கிற சீம்பால் போன்ற நீரையும், ஏரியோலா பகுதியில் சுரக்கின்ற பிசுபிசுப்பான எண்ணெயையும் தினசரி குளிக்கும் போதோ அல்லது தனியே மிதமான சூட்டில் தண்ணீரை வைத்தோ சுத்தம் செய்து எப்போதும் மார்பகப் பகுதியை உலர்வாகவே வைத்துக் கொள்ள வேண்டும். காம்பினை அதிகமாகத் தேய்ப்பதோ, சோப்பு உள்ளிட்ட தேவையில்லாத களிம்பினை காம்பின் மீது பயன்படுத்துவதோ தவிர்த்துவிடுவது நல்லது. ஏனென்றால் அது காம்பினைச் சுற்றிய தோலைச் சேதப்படுத்துவதுடன் பாதுகாப்புத் தருகிற எண்ணெயையும் துடைத்தெடுத்து அது தொற்று நோயிற்கு வழிவகுக்கவும் வாய்ப்பிருக்கிறது.

இப்படி கர்ப்பிணிப் பெண்களுக்கு ஏதுவான ஆடைகள் மற்றும் உள்ளாடைகளை அணியாமல் இருந்தாலோ, மார்பகத்தில் சுரக்கின்ற பிசுபிசுப்பை தினசரி சுத்தம் செய்யாமல் போனாலோ மார்பகத்தில் தொடர்ச்சியாக உராய்வு ஏற்பட்டு அங்கங்கே அரிப்பு ஏற்படலாம். காம்பில் வெடிப்புடன்  கூடிய பிளவு ஏற்படலாம். அதில் நுண்கிருமிகள் வந்து தொற்றிக் கொண்டு புண்ணை உண்டாக்கலாம். இப்படி உண்டாகிற புண்ணால் காம்புகள் தழும்பேறி மார்பகத்தினுள் உள்ளிழுத்து புதைந்துவிடவும் வாய்ப்பிருக்கிறது. இதனால் குழந்தைகள் பிறந்தவுடனே மார்புக் காம்பினை சரியாக கவ்விப் பிடித்து தாய்ப்பால் குடிக்க முடியாமல் போய்விடவும் வாய்ப்பிருக்கிறது. ஆம், அவர்கள் காம்பினை கவ்விப் பிடித்தால் தானே நரம்புத் தூண்டலின் வழியே தாய்ப்பால் சுரத்தலை அது மூளைக்குச் சென்று துரிதப்படுத்தவே முடியும்? இதனால் பசிக்கு அழுகிற பிள்ளைக்குத் தாய்ப்பால் கொடுக்க முடியவில்லையே என்று தாயும், என்ன தான் தேடிப் பிடித்து காம்பைச் சுவைத்தாலும் பசிக்குப் பால் சுரக்கவில்லையே என்று குழந்தையும் அவதியுற வேண்டியிருக்காது அல்லவா!

எனவே தான் தாய்மார்களே! குளிக்கையில் உங்களுடைய மார்பினை கவனமாகப் பார்க்கச் சொல்லி செவிலியர்களும் அடிக்கடி அறிவுறுத்துகிறார்கள். மார்புக் காம்புகள் சரியாக வெளியே துருத்திக் கொண்டு இருக்கிறதா? காம்பின் மேலே காயம் ஏதேனும் தென்படுகிறதா? மார்பின் மேலே தொட்டுப் பார்த்து மேடிட்ட இடத்தைப் போல ஏதேனும் கட்டியை உணர முடிகிறதா? என்று உன்னிப்பாக பரிசோதித்துக் கொள்வதும் மிக முக்கியமானது. ஆக, ஒவ்வொருமுறை மார்பகப் பரிசோதனையின் போதும் காம்பினைப் பிடித்து நன்றாக வெளியே எடுத்துவிட வேண்டும். அப்படியும் ஒருவேளை மார்பகப் பகுதியில் ஏதேனும் அறிகுறிகள் தென்பட்டால் உடனே மகப்பேறு மருத்துவரிடம் சென்று அதற்கேற்ப ஆலோசனைகளைப் பெற்றுக் கொள்வதே நல்லது.

இப்போது தாய்ப்பாலைப் பற்றிச் சுருங்கச் சொல்ல வேண்டுமென்றால் நம் தாயவளின் குருதியைக் கடைந்தெடுத்து சுண்டத் தயாரித்து ஊட்டப்படுகிற ஒரு இயற்கையான அமுதம் தான் அல்லவா! இந்த அமுதச்சுவை முழுவதுமாக உருப்பெறுவதற்கு கர்ப்ப காலத்திலேயே கர்ப்பவதி நன்றாகச் சாப்பிட்டு உடலில் இரத்தம் ஏறுகிற அளவிற்குத் தெம்பாக வைத்துக் கொண்டால் தானே முடியும்? அத்தோடு குழந்தைகள் பிறந்த பின்பாக தாய்ப்பாலும்கூட நிறைவாகச் சுரக்கும்! நம் கிராமத்தில் பாட்டிமார்கள்கூட கர்ப்பவதிகள் நிறையச் சாப்பிட வேண்டுமென்று பொத்தாம் பொதுவாக அறிவுறுத்துவார்கள். அதற்கு உண்மையான அர்த்தம் என்னவோ, கர்ப்பவதிகள் நிறைய சாப்பாடு சாப்பிட வேண்டும் என்பதல்ல, நிறைவானச் சத்துடைய ஆகாரங்களாகத் தேடிப் பிடித்து சாப்பிட வேண்டும் என்பதே அது. ஆக, இப்போது புரிகிறதா, கர்ப்பகாலத்திலேயே தாய்ப்பால் ஊட்டுவதற்கு கர்ப்பிணிகள் ஏன் அவசியமாகத் தயாராக வேண்டுமென்று!மேலும் கர்ப்பவதியான காலத்தில் கர்ப்பத்தால் நமக்கு உண்டாகிற அசௌகரியங்களுக்கும், நம் பிள்ளையின் ஆரோக்கியத்தைப் பற்றி அறிந்து கொள்வதற்குமாக மாதாமாதம் பரிசோதனைக்கு மருத்துவமனை சென்று வருகிறோம் அல்லவா! ஆனால் அவ்வாறு மருத்துவமனைக்குச் செல்கையில் கர்ப்பவதிகளெல்லாம் ஏதோ ஒருவிதிமான நோயாளிகளின் மனநிலையோடு தான் செல்கிறார்கள். மருத்துவமனைகள் என்றாலே நோயாளிகள் வந்து போகிற இடம் தானே! என்று தான் நாமும்கூட பொதுவாக புரிந்து வைத்திருக்கிறோம். நம் பெண்கள் கர்ப்பமாகி பரிசோதனைக்குச் செல்வதோ, பிரசவித்து பிள்ளை பெற்றுக் கொள்ளுவதோகூட ஏதோ நோயிற்காக சிகிச்சை பெற்றுக் கொள்வதைப் போலத் தான் நாமும் நடந்து கொள்ளுகிறோம். நாம் கர்ப்பம் தரிப்பதும், பிள்ளைப்பேறு காண்பதும் எல்லாமே வெகு இயல்பானதும் இயற்கையானதுமான ஒன்றுதான். நம் தாயும் சேயும் பரிபூரண நலம் பெற்று பிரசவகால சிக்கல்களையெல்லாம் ஆரோக்கியத்தோடு கடந்து வருவதற்காகத் தான் நாம் மருத்துவமனைக்குச் செல்கிறோமே தவிர நோயிற்கான சிகிச்சை என்கிற அடிப்படையில் அல்ல என்பதை நாம் ஆரம்பத்திலேயே விளங்கிக் கொள்ள வேண்டும்.

அதேசமயம் நம்மையும் கருவாகிய நம் பிள்ளையும் மருத்துவரிடம் பரிசோதிப்பது அதற்குச் சிகிச்சை பெறுவது என்பதோடு மட்டுமில்லாமல், நமது கர்ப்பகால சந்தேகங்களைப் பற்றியும் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களிடம் கேட்டுத் தெளிந்து கொள்ள வேண்டும். மேலும் மகப்பேறு ஆலோசனைக்கென்றே இருக்கிற தனி ஆலோசகர்களிடமும் ஆற அமர உட்கார்ந்து நம் பிள்ளையின் கருவளர்ச்சியைப் பற்றியும் அவர்களது ஆரோக்கியத்தையும் கேட்டுத் தெரிந்து கொள்வதோடு மிக முக்கியமாக பிரசவத்திற்குப் பின்னால் தாய்ப்பாலூட்டுவதற்குத் தயாராக வேண்டிய அடிப்படையான விஷயங்களைப் பற்றியும் விலாவாரியாக கேட்டுத் தெளிந்து கொள்ள வேண்டும்.

ஒருவழியாக பிரவச தேதி நெருங்கியவுடன் சட்டென்று பிரவசவ வலி வந்து பிரசவ அறையில் நீங்கள் பிரசவித்த அடுத்த கணமே குழந்தைகளுக்கு பசிக்கவும், தாய்ப்பால் குடிப்பதற்குமான தூண்டல் உடனே ஏற்பட்டுவிடும். இதனால் பிரசவித்த அடுத்த நிமிடத்திலிருந்தே பிள்ளைக்குத் தாய்ப்பாலூட்டச் சொல்லி செவிலியர்களும் அவசர அவசரமாக அறிவுறுத்திக் கொண்டே இருப்பார்கள். ஏனென்றால் பிறந்தவுடனே அவர்கள் உயிர் வாழ்வதற்கு முற்றிலும் தாய்ப்பாலை மட்டுமே சார்ந்திருப்பதால் உயிர் வாழ்வதற்கான வேட்கையில் அவர்கள் அழுதழுது தாய்ப்பாலைக் கேட்டுப் பசியாறத் துவங்கிவிடுவார்கள். தாய்மார்களும் அவர்களின் பசியுணர்ந்து அதற்கேற்ப மார்பில் போட்டு உடனுக்குடன் அமர்த்தி தூங்க வைத்தால்தான் பிள்ளைகளும்கூட நன்றாக தேறி வருவார்கள். அப்படி இல்லையென்றால் அவர்களுக்குச் சரியான தாய்ப்பால் கிடைக்காமல் போய் அவர்களின் உடலில் சர்க்கரை அளவு குறைவதால் எப்போதும் சோர்வுடன் இருத்தல், மூளைக்குச் சரியான ஊட்டம் இல்லாமல் வலிப்பு ஏற்படுதல் போன்ற தொந்தரவுகள் வருவதற்கும் வாய்ப்பிருக்கிறது.

ஆனால் பிரச்சனை என்னவென்றால், அப்போது செவிலியர்களால் பரபரப்போடு சொல்லப்படுகின்ற அறிவுரைகளையெல்லாம் கேட்டுப் புரிந்து கொண்டு தெளிவாகத் தாய்ப்பால் புகட்டுவது என்பது பிரசவ களைப்பில் அயர்ச்சியோடு படுத்திருக்கிற ஒரு தாயிற்கு மிகுந்த சிரமமாகத் தான் இருக்கும். பிரசவித்த அயர்ச்சி, அது உண்டாக்குகிற மயக்கம், கசக்கிப் பிழிந்து பிள்ளையை வெளித்தள்ளிய உடலின் வேதனை, பிரசவிப்பதற்கு முன்னாலும் பின்னாலும் சட்டென்று மாறுபடுகிற ஹார்மோன்களுக்கு ஏற்ப தாயவளின் மூளையில் உண்டாகிற குழப்பமான மனநிலை ஆகியவற்றால் கர்ப்பவதிகளாலும் இயல்பாக குழந்தையைத் தூக்கி பொறுமையாக பாலூட்டவும் முடியாது. ஆக அப்பேர்ப்பட்ட சூழலில்தான் ஒரு தாயவள் தன் பிள்ளைக்கு நிதானமாக தாய்ப்பாலூட்ட வேண்டுமென்றால் அவளது கர்ப்ப காலத்திலிருந்தே தாய்ப்பால் என்றால் என்ன? அது எப்படிச் சுரக்கும்? குழந்தைக்கு எப்படியெல்லாம் புகட்டுவது? என்பதைப் பற்றியெல்லாம் நன்றாகத் தெரிந்து வைத்திருந்தால் தானே முடியும்!

ஆக, இதற்குத் தான் தாய்ப்பால் பற்றிய விவரங்களை கர்ப்பகாலத்திலே மருத்துவர்கள், செவிலியர்களிடம் கேட்டுத் தெரிந்து கொள்ள அறிவுறுத்த வேண்டியிருக்கிறது. அதுமட்டுமில்லாமல் கிராமத்தில் ஏற்கனவே பிரசவித்த தாய்மார்கள், பிரசவமாகி தற்சமயம் தாய்ப்பால் புகட்டிக் கொண்டிருப்பவர்கள் மற்றும் அனுபவமிக்க பாட்டிமார்கள் என்று இவர்களிடமெல்லாம் போய் தாய்ப்பால் புகட்டுவதைப் பற்றியும், தாய்ப்பால் நன்றாகச் சுரப்பதற்கு உண்டான ஆகாரங்கள் பற்றியும் கவனமாகக் கேட்டுத் தெரிந்து கொள்ள வேண்டும். அத்தோடு அவரவர் கிராமங்களில் பணியாற்றுகிற கிராம சுகாதார செவிலியர்களிடமும் அங்கன்வாடி ஆசிரியர்களிடமும் சென்று தாய்ப்பால் பற்றிய சந்தேகங்களைக் கேட்டுக் கொள்ளலாம். ஒரு சிலருக்கு அங்கன்வாடியில் இதையெல்லாம் சொல்லிக் கொடுப்பார்களா? என்றுகூட யோசிக்கத் தோணும். ஆனால் வாரத்தின் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் கிராம சுகாதார செவிலியராலும், அங்கன்வாடி ஆசிரியராலும் அங்கன்வாடி மையத்தில் வைத்தே தாய்ப்பால் வகுப்பு நடத்தப்படுகிறது என்பதை நீங்கள் கட்டாயம் தெரிந்து வைத்திருக்கத்தான் வேண்டும் தாய்மார்களே!

எல்லாவற்றிற்கும் கூடுதலாக தற்போது மகப்பேறு தொடர்பாக வந்திருக்கிற புத்தங்கள் மட்டுமில்லாமல் தனியே தாய்ப்பாலுக்கென்றே இருக்கிற புத்தகங்கள், வலைதள காணொளிகள், நம்பகத்தன்மையுடைய சமூக ஊடகங்களின் வழியே தரப்படுகிற ஆரோக்கியமான அறிவுறைகளையும் கவனமாகக் கேட்டு படித்துத் தெரிந்து கொள்கிற பட்சத்தில் குழந்தை பிறந்த பின்னால் தாய்ப்பால் பற்றிய எந்த கவலையுமின்றி நம்மால் நம் பிள்ளைக்கு வேண்டியதை செய்து அவர்களை ஆரோக்கியமாகவும் வளர்க்க முடியும் தானே!

முந்தைய தொடர்களை வாசிக்க:

தாய்ப்பால் எனும் ஜீவநதி 4 – டாக்டர் இடங்கர் பாவலன்

தாய்ப்பால் எனும் ஜீவநதி 5 – டாக்டர் இடங்கர் பாவலன்

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.