தாய்ப்பால் எனும் ஜீவநதி 8 – டாக்டர் இடங்கர் பாவலன்

Thaipal Enum Jeevanathi WebSeries 8 By Dr Idangar Pavalan தாய்ப்பால் எனும் ஜீவநதி 8 – டாக்டர் இடங்கர் பாவலன்



ஆனந்தக் களிப்பினாலே சுரக்கிறது பார், தாய்ப்பால்!

வீட்டு முற்றத்தின் முல்லைக்கொடியில் புல்லைக் கோர்த்துக் கட்டிய சிட்டுக்குருவியின் சின்னஞ்சிறு கூட்டில் பிரசவித்த பிஞ்சுக் குருவியை இரகசிமாய் எட்டிப் பார்த்து இரசித்துச் சிரிக்கும் குழந்தைகளைப் போல, இன்னும் பிரசவித்த கதகதப்புகூட குறையாமல் தன்னிலிருந்து பிரிந்த மீச்சிறு சிறகைப் போல அருகே  படுத்திருக்கிற பிள்ளையைப் பார்க்கப் பார்க்க ஒரு தாயிற்கு எப்படித்தான் இருக்குமோ! எத்தனை முறை பார்த்தாலும் சலித்திடாத, உள்ளங்கையில் அள்ளி அன்பொழுக எவ்வளவு முத்தமிட்டாலும் போதாத அரிய தருணங்களை எப்படித்தான் கையிலிருந்து நழுவிவிடாமல் பார்த்துக் கொள்வதோ?

பிஞ்சுக் கரங்களுக்குள் சுட்டு விரல் நுழைத்து அவர்களின் பிடிக்குள் சேகரமாகிவிடுவதன் வழியே தன்னையே முழுவதும் ஒப்புக் கொடுத்தபடி உள்ளுக்குள் கரைந்து கொண்டிருக்கும் அவளைக் கையேந்திக் கரைசேர்ப்பார் யாரோ? நட்சத்திர ஒளிவீசிடும் குறு கண்களைக் கூசித் திறந்து இமைக்குள் அம்மையைத் தேடுகிற பிள்ளைக்குத் தன்னை அடையாளம் காட்டிக் கொள்ள முகத்தையே உற்றுப் பார்த்தபடி செல்லக்குட்டி..! அம்முக்குட்டி..! வாடா செல்லம்..! என்றெல்லாம் குழைந்து பேசிச் சிரிக்கிற தாயவளின் இன்பக் கேணியிலிருந்து அவளை எவர் தான் மீட்டெடுப்பதோ? முன்நெற்றிப்பட்டையில் சரிந்து விழுகிற சாம்பல்முடிக் கற்றையை கண்விளிம்பிலிருந்து ஒதுக்கித் தள்ளியபடியும், புல்லைப் போல் கோடாய் நீளுகிற புருவத்தை விரலால் நீவியபடியும் இருக்கும் அம்மாவின் அரவணைப்பிலிருந்து குழந்தையும் துயில் களைவது எப்போதோ?

பாட்டியின் சுருக்குப்பைக்குள் பேரனுக்கென வாஞ்சையோடு மறைத்து எடுத்து மடித்துக் கொடுக்கிற அழுக்கடைந்த அந்த ஐந்து ரூபாய் நோட்டின் வெம்மையைப் போல தன் சேலையின் கசங்கிய பொதிக்குள் அலாதியாய் துயில் கொண்டிருக்கும் பிள்ளையை எப்படித்தான் தாயும் கவனமாய் தூக்கிக் கொஞ்சிக் குழையப் போகிறாளோ? தன்னியல்பில் கண்ணங்கள் உப்பி குபேரனாய்ச் சிரிக்கிற, அப்படிக் கண்ணங்கள் கனிந்து குவிகின்ற போதே குள்ளநரிக்குழியாய் அமிழ்ந்து சுழிக்கிற சிறு கண்ணக்குழியில் சுற்றிக் கொண்டிருக்கிறது அவளது சின்னஞ்சிறு பூமி! கண்ணங்களைக் கிள்ளி முத்திமிடும் உதட்டின் குளிர்ச்சியில் துள்ளியபடி புரண்டுப் படுக்கிற குழந்தையினால் ஒருபக்கமாய் சாய்கிறது அவளது ஒட்டுமொத்த பிரபஞ்சமும்! அவள் விரல்நுனியின் ஒவ்வொரு தொடுகையிலும் காம்பைத் தேடியவாறே உதட்டைச் சுழித்து அம்மையின் விரல் சுவைக்க நாவைச் சுழற்றுகிற அவர்களின் அனிச்சையான நிகழ்வைப் பார்க்கப் பார்க்க இன்னும் எத்தனை யுகம் தான் அவர்களுக்கு வேண்டியிருக்குமோ?

பிள்ளை பற்றிய அவர்களின் இரவுக் கனவுகளையும் அந்தக் கனவுகள் மெய்ப்பட பிரசவித்துப் பிள்ளை பெற்ற தருணங்களையும் இதயம் முழுக்க நிறைத்துக் கொண்டு அந்த ஒட்டுமொத்த தித்திப்பின் திகட்டல் தாளாமல் ஊற்றாகிய உணர்ச்சிப் பெருக்கையெல்லாம் கோடைக் கண்ணீராய் கண்களின் கேணிக்குள் இறைத்து நிறைத்தபடி நிற்கையில் தாயும்கூட வளர்ந்ததொரு குழந்தையாகி விடுகிறாள். அவளது விழியோரம் கண்ணீர் எந்நேரமும் அலையடித்தபடி இருக்க கண்ணங்கள் வழியப் பொங்கி வருகிற பேரானந்தத்தைப் பார்க்கையில் அது உற்சவம் கூடிய தாய்மையின் தரிசனமாகத் தான் இருக்கும். இளம் மஞ்சள் வெயில் விசிறியடிக்கையில் கூடவே ஓங்கி சடசடத்துப் பெய்கிற தும்பல் மழையினால் ஒருசேர சூழ்கிற வெதுவெதுப்பைப் போல, அம்மாக்கள் அரற்றி அழுகிற போதே கரைந்து சிரிக்கிற தருணங்களையெல்லாம் நாம் இதுவரை எந்தக் கோவில் சிற்பங்களிலுமே கண்டதில்லை. அழுகிற போதே சிரித்தபடியும், சிரித்தபடியே அழுதபடியுமாக கண்ணீர் வடித்தே கணம் தோறும் மாறுகிற அன்னையின் உணர்ச்சித் ததும்பல் போராட்டங்களை எப்போது தான் அப்பாக்களின் உலகமும் இனி புரிந்து கொள்ளப் போகிறதோ?

இத்தகைய உணர்ச்சிமிக்க தருணத்தில் தாயவள் அழுதபடி கண்ணீரைப் பெருக்குகிறாளா அல்லது பொங்கிச் சிரித்து கண்ணங்கள் வீங்க கண்ணீரை வடிக்கிறாளா என்பதையெல்லாம் நம்மால் புரிந்து கொள்ள முடிவதில்லை. இப்படியான சமயத்தில் தான் பிள்ளைப்பேறு கண்டவள் மகிழ்வாய் இருக்கையில் தாய்ப்பால் கனிந்து நிறைவாகச் சுரக்குமென்கிற மருத்துவர்களின் அசரீரிக் குரலானது குகைக்குள்ளிருந்து எழுகிற தெய்வீகக் குரலைப் போல நமக்குள்ளே எதிரொலிக்கத் துவங்குகிறது. ஆனாலும் அழுகையில் கண்கள் மினுங்க வழிகிற கண்ணீரின் உருக்கத்தைப் போல, சிரிக்கிற போதே உணர்ச்சித் ததும்பலில் ஊற்றெடுக்கிற ஆனந்தக் கண்ணீரின் பெருக்கத்தைப் போல, மகிழ்வான தருணங்களின் போதெல்லாம் தாய்ப்பால் பெருகுவதைப் பற்றியும் நாம் நிச்சயமாகப் புரிந்து கொள்ள வேண்டியிருக்கிறது.

குழந்தை பெற்ற ஆனந்த போகத்தில் திளைத்து வருகிற கண்ணீருக்கும், மகிழ்ச்சி ததும்ப மார்பில் பிள்ளையைப் போடும் போது வற்றாச் சுனை போலச் சுரக்கிற தாய்ப்பாலுக்குமிடையே இருக்கிற ஒற்றுமையைப் பற்றி நாமும் புரிந்து கொள்ள வேண்டுமல்லவா! இதையெல்லாம் நாம் விளங்கிக் கொள்வதற்கு முதலில் ஆனந்தக் கண்ணீர் சுரப்பதற்கான உண்மையைப் பற்றி முழுவதுமாகத் தெளிந்து கொள்ள வேண்டியிருக்கிறது.

குழந்தைகளின் சிரிப்பையும், அழுகையும் கேட்ட உடனே உள்ளுக்குள் ஒரு உந்துதலும், பரவசமும், உணர்ச்சிவயப்படுதலும் ஏற்பட்டு நம்மை அறியாமலே மார்பு மெல்ல கனத்து தாய்ப்பால் ஊறிப் பெருக ஆரம்பிப்பதை உணர்ந்திருக்கிறீர்களா? அச்சமயத்தில் நாம் உணர்ச்சிவசப்பட்டால் கூட தாய்ப்பால் மார்பில் சுரக்கிற பேரற்புதங்களைப் பற்றி யோசித்துப் பார்க்கையில் நமக்கெல்லாம் அது புதிதாகவும், அவையெல்லாம் பெரும் புதிராகவும் இருக்கிறது. அப்படிக் கண்ணீரையும், தாய்ப்பாலையும் இயல்பாகவும் இயற்கையாகவும் சுரக்க வைப்பதற்கு மூலகாரணமாகிய உணர்வுகளைப் பற்றியெல்லாம் நாம் தெரிந்து கொள்ள வேண்டுமல்லவா! ஆனால் அதற்கு நம் தலைக்குள்ளே கண்ணீரைச் சுரக்க வைப்பதற்கென அருளப்பட்டிருக்கிற தொழில்நுட்பத்தைப் பற்றிய தெளிவினை நாம் முழுவதுமாக உள்வாங்கிக் கொள்ள வேண்டும் தாய்மார்களே!

முதியவர்களின் வயதான தோல் சுருக்கங்களைப் போலிருக்கிற நமது மூளையின் மேல்பட்டைக்குச் சற்று கீழே தான் நாம் அறிந்து கொள்ள வேண்டிய மிகவும் சுவாரஸ்யமான பகுதியிருக்கிறது. இங்கு தான் நம் உணவுப்பழக்கம், பாலியல் தேவைகள், அடிப்படை உணர்ச்சிகளென்று அத்தனையையும் ஒருவித ஒழுங்கிற்குள் வைத்துக் கொள்வதற்கான நெறிமுறைகளையும் வகுத்துக் கொடுத்தபடி இருக்கிறது. அத்தகைய அதிநுட்பமான பகுதிக்குப் பெயர்தான் லிம்பிக் மண்டலம். லிம்பிக் என்றால் அகராதியில் ஓரத்தில் என்று பொருள் கொள்ளலாம். ஆக, மூளையின் அடிப்பாகத்தினது ஓரத்தில் இந்த லிம்பிக் மண்டலத்தினது பகுதிகள் அமைந்திருப்பதால் இப்பெயரை ஒரு நல்ல நாள் பார்த்து சூட்டியிருக்கிறார்கள் போலும்!

இந்த லிம்பிக் மண்டலத்தைப் பகுத்துப் பார்த்தால் அங்கே லிம்பிக் மடல், ஹிப்போகேம்பல், அமெக்டலா, தலாமஸ், ஹைப்போதலாமஸ் போன்ற அறிவியல்பூர்வமான பகுதிகள் அடுக்கடுக்காக வைக்கப்பட்டுள்ளன. இவையெல்லாம் இணைபிரியா இரத்த உறவுகளாக ஒன்றுக்கொன்று அருகாமையில் இருந்தபடி ஏராளமாக நுட்பமான வேலைகளை ஒருங்கிணைந்துச் செய்கின்றன. அதிலொரு பணியாகத் தானே நம்மைக் கண்ணீர் பொங்க அழவைத்து உணர்ச்சிவசப்படுகிற மனுசியாகவும் ஆக்கி வைத்திருக்கிறது.

Thaipal Enum Jeevanathi WebSeries 8 By Dr Idangar Pavalan தாய்ப்பால் எனும் ஜீவநதி 8 – டாக்டர் இடங்கர் பாவலன்

இந்த லிம்பிக் சிஸ்டத்தில் இருக்கிற அமெக்கிடெலா என்ற பகுதியே கொஞ்சம் விசித்திரமானது தான். இங்கே தான் நம் சுற்றுப்புறத்திலிருக்கிற உணர்ச்சிவசப்படக்கூடிய அபூர்வமான நிகழ்வுகளையெல்லாம் ஐம்புலன்கள் வழியாகத் திரட்டி மாபெரும் தகவல் களஞ்சியமாக உள்ளுக்குள்ளே சேமித்து வைக்கப்படுகிறது. யாரேனும் நம்மை வருத்தமுறச் செய்கிற போது வென்று கண்ணைக் கசக்கியபடி அழுவது, ஒருவர் ஏதேனும் சொல்லி நம்மை மனமுவந்து பாராட்டுகையில் முகம் வெட்கிச் சிவந்து பூரிப்பது, கோபத்தில் நாசிகள் துடிக்க பற்களைக் கடிப்பதும், நாக்கைத் துருத்துவதுமான உணர்வுகளை வெளிப்படுத்துவது போன்ற எல்லாமே இதனுடைய கச்சிதமான இயக்குநர் வேலைதான். நாமெல்லாம் சந்திக்கிற அன்றாட நிகழ்வுகளின் தன்மைக்கேற்ப நம்முடைய அற்புதமான உடல் மொழியை வெளிப்படுத்துவதன் வழியே நம்மை உணர்ச்சியுள்ள மனிதனாக காட்சிப்படுத்துவதில் அமெக்டெலாவின் பங்கென்பது மிகவும் முக்கியமானது. இப்படிப்பட்ட அமெக்டெலாவானது நாம் உணர்ச்சிவசப்படும் போது நம்மை அழவைத்து எப்படி கண்ணீரைச் சுரக்க வைக்கிறதென்று தெரியுமா?

பிள்ளையின் அழுகுரல் கேட்டுப் பிரசவித்த களைப்பெல்லாம் களைந்துவிட்டு உணர்ச்சிகளின் கொந்தளிப்பில் தாயவளோ தத்தளித்துக் கொண்டிருப்பாள். அவளோ தன் பிஞ்சுக் குழந்தையின் அழகைக் கண் கொள்ளப் பார்க்கிறாள், தொட்டணைத்துத் தழுவிக் கொள்கிறாள், உச்சி முகர்ந்து முத்தமிடுகிறாள். இப்படி அணு அணுவாக பிள்ளையைப் தொட்டும், பார்த்தும், கேட்டும், நுகர்ந்தும், முத்தமிட்டும் ஐம்புலன்களால் உணரப்படுகிற அத்தனைத் தூண்டல்களும் முதுகுத்தண்டு நரம்பின் வழியே மூளைக்குச் சென்று அங்கே ஒரு சிலந்திவலைப் பின்னலின் முடிவில் அமெக்டெலாவுக்கே வந்து சேர்கிறது.

அங்கு ஏற்கனவே எந்தச் சூழலுக்கு எத்தகைய பாவணையிலான முகபாவத்தை, உடல்மொழியை வெளிப்படுத்த வேண்டுமென்கிற தகவலானது பொதிந்து வைக்கப்பட்டிருக்கும். அப்போது பேரானந்தத்தில் உச்சி குளிர்ந்து போயிருக்கிற அன்னையின் உணர்ச்சிவசப்படக்கூடிய மனம் திறந்த மடலை அமெக்டெலா வாசித்தறிகிறது. இறுதிப் பரிசீலினையில் அம்மாவின் எல்லா உணர்ச்சிக் கொந்தளிப்பையும் சமநிலைப்படுத்துகிற வகையில் மூளையின் கண்ணீர் சுரப்பு மையத்திற்கு மறுசேதி சொல்லி உடனடியாக கண்ணீர் மடையைத் திறந்து விடச் செய்கிறது. முழுக் கொள்ளளவு எட்டும் முன்னே முன்னெச்சரிக்கையாக அணையைத் திறந்துவிடச் செய்கிற நுட்பத்தைப் போலத்தான் நம்ம மூளையும் உணர்ச்சிவசப்பட்டு வலிப்பு வரும் முன்னே அதைச் சமநிலைப்படுத்தும் நோக்கில் கண்ணீர் பையைத் திறந்துவிடுகிறது.

இந்தச் செய்தி மின்னல் பாய்ச்சலில் மூளையிலிருந்து நரம்புகள் வழியாக கீழ் நோக்கிப் பயணித்து இரு விழியோரத்திலும் பக்கவாட்டில் பதுங்கியிருக்கிற கண்ணீர் சுரப்புப்பைகளுக்குச் செல்கிறது. மூளை நரம்புகளின் வழியாக வருகிற அவசரச் சேதியின் கட்டளைப்படி அது கண்ணீர்ப் பைகளை பிழிந்தெடுத்து இரண்டு கண்ணிலிருந்தும் கண்ணீரைத் தாரைதாரையாக சுரக்கச் செய்கிறது. மேலும் இந்த உணர்ச்சிகளின் சமிக்கையானது அமெக்டெலாவின் அக்கம் பக்கத்தில் வரிசைப்படுத்தப்பட்ட ஏனைய பகுதிகளுக்கும் எடுத்துச் செல்லப்படுகிறது. இதன் வழியே முகத்தின் நுண்ணிய தசைகளின் இயக்கத்தையும் பொம்மலாட்ட வித்தையைப் போல் ஆட்டுவித்து விதவிதமான முகபாவணைகளாக நம் முகத்தில் உருப்பெறச் செய்கிறது. இதன் ஒட்டுமொத்த விளைவாகத் தான் முகத்தசைகள் ஒருவித கூட்டு இயக்கமாகி உதடுகள் விரிய அகலச் சிரிப்பதும், இரத்த வெள்ளப் பாய்ச்சலில் முகம் வெட்கிச் சிவப்பதும், தசைகளெல்லாம் தளர்ந்து போய் சோகத்தை சுமந்தபடி முகம் கவலையளிப்பதுமாகிய பாவங்களாக வடித்து நம்மைக் காட்சி வடிவில் வெளிப்படுத்துகிறது.

நம் தூசி விழுகிற கண்களில் இமைகளை மூடித் திறந்து கசடுகளைத் துடைத்தெடுப்பதற்கும், நொடிக்கொருமுறை கடற் சிப்பியையப் போல் கண்சிமிட்டித் திறக்கிற விழித்திரையின் உராய்வினைக் குறைப்பதற்கும் எப்போதுமே கண்களில் புலப்படாத அளவில் கண்ணீர் வழிய சுரந்து கொண்டேதான் இருக்கும். பொழுதிற்கும் பாதுகாப்பிற்காக கருவிழியின் மேல் படலமாய் சுரக்கிற இக்கண்ணீரெல்லாம் மீச்சிறு அளவிலேயே இருப்பதால் அவை நம் கண்ணங்கள் வழிய முகத்திலெல்லாம் வழிந்தோடுவதில்லை. இதனால் இதைப் பெரும்பாலும் நம்மால் பார்த்தறியவும் முடிவதில்லை.

ஆனால் நாம் உணர்ச்சிவசப்பட்டுத் தேம்பியழுகையில் கண்ணீர் அருவியாய் ஆர்ப்பரித்தபடி வழிந்து முகத்தில் வழித்தடத்தை அமைத்தவாறே சட்டைகள் நனைய அடம்பிடித்தழுகிற குழந்தையின் செய்கையைப் போலவே நம்மைக் காட்சிப்படுத்த வைத்துவிடுகிறது. அதிலும் உச்சகட்டமாக அழுகின்ற போதே நாசியிலிருந்து தடுமன் பிடித்ததைப் போல நீரொழுகும்படியான தோற்றத்தையும் ஏற்படுத்திவிடுகிறது. இதையெல்லாம் நினைக்கும் போதே, இதென்ன கொடுமை! அழுதால் கூடச் சளி பிடிக்குமா? என்று நமக்கு அதிசயமாகவும் ஆச்சரியமாகவும இருக்கிறது. இப்படியெல்லாம் நம் மூக்கு சிவந்து நீராய் வழிவதும்கூட விழிகளில் சுரந்த அதே கண்ணீர்தான் என்பதையும் கூடவே நாம் தெரிந்து கொள்ள வேண்டுமல்லவா!

Thaipal Enum Jeevanathi WebSeries 8 By Dr Idangar Pavalan தாய்ப்பால் எனும் ஜீவநதி 8 – டாக்டர் இடங்கர் பாவலன்

நாம் அதீத உணர்ச்சிக்குள்ளாகும் போது கண்ணீர்ப் பையிலிருந்து பெருக்கெடுத்து வெளியேருகிற அதிகப்படியான கண்ணீரானது வற்றிய மணற்பாங்கான ஆற்றின் வலசைப்பாதையில் மீண்டும் வெள்ளம் அடித்துச் செல்வது போல கண்ணக் குழிகளின் வழியே அது வழிந்தோடுகிறது அல்லது இருவிழிகளும் சந்திக்கிற உச்சிப்பொட்டில் உள்முகமாய் இருக்கிற கண்ணீர் வெளியேற்று குழாய் வழியாக மூக்குப் பகுதிக்குள் நுழைந்து அது நாசித்துளையில் வெளியேறுகிறது. இதனால் தான் அழுகையில் கண்ணத்தில் வழிகிற கண்ணீரைக் கைக்குட்டைகள் நனைய துடைத்துக் கொண்டும், நாசியில் வழிகிற கண்ணீரைச் சளியென எண்ணிக் கொண்டு உர்ர்..ரென உறிஞ்சியபடியும் இருக்கிறோம். நம் கண்ணங்களின் கால்வாயில் வழிந்தோடுகிற கண்ணீரைப் பார்த்தவுடனே நம்மால் ஒருவரது பாசத்தின் மதிப்பீட்டைப் புரிந்து கொள்ள முடிகிறது. ஆனால் கண்ணீர்ப்பையின் வெளியேற்று குழாய் வழியே பாய்ச்சலோடு மூக்கில் வடிகின்ற கண்ணீரைப் பற்றி நாம் இன்னமும் புரிந்து கொண்டபாடில்லையே!

சரி, இப்போது உணர்ச்சிப்பட்டு அழுவதும் சிரிப்பதுமாக இருப்பதற்கும் அதனால் கண்கள் கொள்ள கண்ணீர் சுரந்து பொங்கி வழிவதற்குமான விளக்கத்தைப் பார்த்தாயிற்று அல்லவா! ஆக, இப்போது தாய்ப்பாலுக்கும் மகிழ்ச்சிகரமான உணர்ச்சிக்குமான பந்தம் என்னவென்பதைப் பற்றியும் கொஞ்சம் பார்த்துவிடுவோமா!

மார்புக் காம்பில் குழந்தைகள் கவ்விச் சுவைக்கிற தூண்டுதலின் வழியே உற்சாகமாகிய மூளையானது தனது தாய்ப்பால் ஹார்மோனைச் சுரப்பதும், அதிலிருந்து தரிசனம் பெறுகிற மார்பகங்கள் குதூகலித்துத் தாய்ப்பாலை மார்பினில் பெருக்குவதும் ஒருபக்கம் இருக்க, அதற்கெல்லாம் தூபம் போடுவது என்னவோ அம்மாவின் உணர்ச்சிகள் தானே! எனவேதான் வீட்டுச் சூழலின் மனக்கசப்பில் பிள்ளை பெற்றவள் ஏதேனும் குழப்பத்துடனோ, அசௌகரியத்துடனோ, மனச்சங்கடத்துடனோ, அழுதபடியோ, தாய்ப்பால் போதாத கலக்கத்துடனோ, எப்போதும் பசியில் அரற்றி அலறுகிற குழந்தைகள் மீதான பதட்டத்தினாலோ, தூக்கமே பிடிக்காத அல்லது பிள்ளை மேலான கவனத்தில் தூங்க முடியாத எரிச்சலுடனோ பாலூட்டுகையில் இத்தகைய எதிர்மறையான உணர்ச்சிகளெல்லாம் மூளையின் லிம்பிக் மண்டலத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டு அங்கே தாய்ப்பாலைச் சுரக்கவிடாமல் செய்வதற்கான பெரும் பட்டிமன்ற விவாதமே நடக்கிறது.

இதில் எப்போதும் நீதிமானாகிய ஹைப்போதலாமஸ் தான் தன்னிடமிருக்கிற நரம்புகளின் புனிதநூலில் சொல்லப்பட்டுள்ள போதனைகளையெல்லாம் வாசித்து அது தன் இறுதிச் சாட்சியத்தை வழங்குகிறது. ஹைப்போதலாமஸிடமிருக்கிற ஆர்க்குலேட் மற்றும் பெரிவெண்டிரிகுளார் நரம்புகளின் மையக்கருக்கள் தான் அதனுடைய புனிதநூல்கள். அவை பெற்றவளினுடைய உணர்ச்சிகளை அலசிப் பார்த்து அதற்குண்டான தீர்ப்பாக தன்னிடமிருக்கிற டோபமின் என்கிற வேதிப்பொருளைச் சுரக்கிறது. இப்படி ஒவ்வொருமுறையும் நாம் எதிர்மறையாகச் சிந்திக்கிற போதெல்லாம் மூளையும் டோபமினது வேதிப்பொருளை நிறைய சுரக்கச் செய்தபடியே இருக்கும். இப்படி ஹைப்போதலாமஸிலிருந்து வெளியேறுகிற டோபமின் இரத்தக் குழாய்களின் வழியே நழுவி அடுத்துத் தந்திரமாக பிட்யூட்டரிக்குள் நுழைந்து விடுகிறது.

இந்த டோபமினுடைய வேலையே பிட்யுட்டரியில் தாய்ப்பாலைச் சுரக்கச் செய்கிற புரோலாக்டின் மற்றும் ஆக்ஸிடோசின் ஹார்மோன்கள் உற்பத்தியாவதைத் தடுத்து நிறுத்துவதுதான். ஆகையால் தான் நாம் வருத்தமாக, சோகமாக, எரிச்சலாக, பயத்துடன் என இருக்கிற போதெல்லாம் டோபமினும் ஹைப்போதலாமஸிடமிருந்து வெளியாகி தாய்ப்பால் ஹார்மோன்கள் சுரப்பதைத் தடுத்துவிடுகிறது. ஆக, இப்போது புரிகிறதா, பெத்தவ மனசு கோணாம நடந்துகோங்கப்பா! என்று பெரியவர்கள் ஏன் சொல்கிறார்கள் என்பதை?

அதே சமயம் அம்மாவுக்கும் பிள்ளைக்கும் இடையேயான பந்தபாசம் அதிகரித்தால் அத்தகைய உணர்வுகள் மீண்டும் மீண்டும் மூளைக்கு எடுத்துச் செல்லப்பட்டு அவை லிம்பிக் சிஸ்டத்தை ஓயாமல் தட்டி எழுப்பியபடியே இருக்கிறது. இப்படி ஒவ்வொரு முறை தூண்டப்படுகிற போதெல்லாம் நரம்புகளும் ஹைப்போதலாமஸிடம் சென்று, எப்பா! கொழந்த அழுறது பத்தாதுனு அந்தம்மாவும் பாசத்துல பொங்கி அழுகுறதுக்குள்ளார, பிட்யூட்டரிக் கிட்டச் சொல்லி கொஞ்சம் சீக்கிரமா தாய்ப்பாலைச் சுரக்கச் சொல்லப்பா என்று கொஞ்சிக் குழைந்தே பணிய வைத்துவிடுகிறது. உடனே ஹைப்போதலாமஸூம் ம்ம்.. சரி சரி, ஆகட்டும்! என்று பிட்யூட்டரியிக்கு உண்டான தாய்ப்பாலூட்டுவதற்கான ஒப்பந்தப் பணி ஆணையை பிள்ளை பால்குடிக்கிற காலம் வரைக்கும் வழங்கிவிடுகிறது. பிட்யூட்டரியும், சரி அப்படியே ஆகட்டும்! என்று தாய்ப்பால் ஹார்மோன்களான புரோலாக்டின், ஆக்ஸிடோசினை குழந்தைகள் பால்குடி மறக்கிற காலம் வரையிலும் சுரந்து அதனால் தொடர்ந்து இரு மார்பகத்திலும் தாய்ப்பாலை அளவில்லாமல் பெருகச் செய்தபடியே இருக்கிறது.

இதனால் தான் குழந்தையின் ஞாபகம் வருகின்ற போதும், அவர்களின் அழுகுரல் கேட்கிற போதும் சட்டென்று அத்தகைய உணர்வுகள் லிம்பிக் சிஸ்டத்தால் உணரப்பட்டு தாய்ப்பாலும் மார்பில் கனத்து சுரக்கத் துவங்கிவிடுகிறது. பேரன்பிற்குரிய தாய்மார்களே! உங்களது பிள்ளையைப் பற்றி நினைத்தாலே தாய்ப்பால் சுரக்கிறதென்றால் தன் பிள்ளையே கதியென கிடக்கிற உங்களுக்கு அணுதினமும் தாய்ப்பால் சுரக்காமலா போய்விடும்? சொல்லுங்கள் பார்ப்போம்!

படுக்கையில் குழந்தைகள் கை, கால்களை உதைத்தபடி அழுவதையும், சிரிப்பதையும் ஓரக்கண்ணால் பார்த்துக் கொண்டே அம்மாக்கள் அருகிலேயே படுத்திருப்பார்கள். குழந்தைகள் ஒவ்வொரு விரல்களாகச் சப்பிக் கொண்டே அம்மாவைப் பார்த்து ங்கே.. ங்கே.. என மழலை மொழியில் பேசுவதைக் கேட்டவுடன் என்னடா செல்லம்! பசிக்குதா? என்று அம்மாக்களும் பதிலுக்கு கொஞ்சிப் பேசியபடியே இருப்பார்கள். இப்படியான மகிழ்ச்சியான நேரங்களிலெல்லாம் டோபமின் என்கிற வேதிப்பொருள் வெளியே கொஞ்சம்கூட எட்டிப் பார்ப்பதில்லை. இதனால் தாய்ப்பால் ஹார்மோன்கள் சுரப்பதற்கென்று எந்த இடையூறும் இறுதிவரை வருவதில்லை.

இதில் இன்னொரு விசயமாக, ஆக்சிடோசின் ஹார்மோன்கள் சுரந்தவுடனே அவை அம்மாவிற்கு வேறொரு உதவியும் செய்கிறது. இந்த ஹார்மோன்கள் மூளையின் லிம்பிக் சிஸ்டத்திற்குச் சென்றவுடன், பாருங்களேன் அம்மா! இனி ஒன்றுமே பிரச்சினையில்லை. எல்லாம் நல்ல படியாகத் தான் போய் கொண்டிருக்கிறது என்று அமைதிப்படுத்துகிற வேலையிலும் நம் பிள்ளை வயிறு நிறைவதற்கு கங்கையின் தீராத பெருந் தீர்த்தம் போல தாய்ப்பால் சுரந்து கொண்டே இருக்கையில் குழந்தையுடன் கொஞ்சிக் குழாவி விளையாடிக் களிப்பதைவிட இனி உனக்கு வேறென்ன வேலையிருக்கிறது!″ என்று அம்மாக்களைத் தட்டிக் கொடுத்து ஊக்கப்படுத்துகிற வேலையிலும் ஈடுபடுகிறது. இதனால் தான் அம்மாக்கள் தன் பிள்ளை எப்படி இருந்தாலும் என் பிள்ளை தங்கமாக்கும், தெரியுமா? என்றே பெருமிதம் கொள்கிறார்கள். ஆனால் இதற்கான காரணமெல்லாமே இந்த ஆக்சிடோசின் ஹார்மோன்கள் தான்!

இப்போது நாம் கண்ணீரைப் போன்றே தாய்ப்பாலும் உணர்வுப்பூர்வமாக சுரக்கக்கூடிய ஒன்றுதான் என்பதை நன்றாகப் புரிந்து கொண்டோம் அல்லவா! இத்தகைய உணர்வுப் பூர்வமான விசயங்களை கையாளுகிற ஒன்றைத்தான் நாம் நமக்குத் தெரிந்த மொழியில் காலங்காலமாக மனசு என்று சொல்லிக் கொண்டே வருகிறோம். இந்த மனசு எப்போதெல்லாம் சந்தோசமாக இருக்கிறதோ அப்போதெல்லாம் உடம்பிலுள்ள எல்லா உறுப்புகளும் சரியாக வேலை செய்து கொண்டு தான் இருக்கும். அதாவது பிள்ளை பெற்றவளின் மனசு எப்போதெல்லாம் சந்தோசமாக இருக்கிறதோ அப்போதெல்லாம் தாய்ப்பாலும் தங்கு தடையில்லாமல் சுரந்து கொண்டே இருக்கும் என்றும் புரிந்து கொள்ளலாம்.

அருமைத் தாய்மார்களே! தாய்ப்பாலூட்டும் காலங்களில் உடலுக்கு ஈடாக நம்முடைய மனதைப் பற்றியும் நாம் கூடுதலாக கவனம் செலுத்த வேண்டியிருக்கிறது. தாய்ப்பால் சுரப்பதற்கான மருந்து, மாத்திரைகள், உணவுகள் என்பதெல்லாம் தாண்டி பெற்றவளினுடைய சந்தோஷங்கள் தான் தாய்ப்பால் சுரப்பதற்கான மிக முக்கியமான விசயம் என்பதை நாம் இப்போது விஞ்ஞானப் பூர்வமாகவே உணர்ந்து கொண்டோம் அல்லவா! ஆக, இனிமேலாவது நாம் கட்டாயம் தாய்ப்பால் புகட்டுகிற அம்மாக்களை மகிழ்ச்சியோடு பார்த்துக் கொள்வோம் தானே!

முந்தைய தொடர்களை வாசிக்க:

தாய்ப்பால் எனும் ஜீவநதி 4 – டாக்டர் இடங்கர் பாவலன்

தாய்ப்பால் எனும் ஜீவநதி 5 – டாக்டர் இடங்கர் பாவலன்

தாய்ப்பால் எனும் ஜீவநதி 6 – டாக்டர் இடங்கர் பாவலன்

தாய்ப்பால் எனும் ஜீவநதி 7 – டாக்டர் இடங்கர் பாவலன்

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.