தாய்ப்பால் எனும் ஜீவநதி பாகம் – ΙΙ : தொடர் 1 – டாக்டர் இடங்கர் பாவலன்தாய்ப்பால் பள்ளிக்கூடம்

அடடே, குழந்தை பிறந்துவிட்டதா? சரி சரி வாருங்கள், நாம் பள்ளிக்கூடம் போவோம்! என்றவுடன், அட இப்பத் தானே எங்களுக்குக் குழந்தையே பிறந்திருக்கிறது? அதுக்குள்ளே பள்ளிக்கூடத்தைப் பற்றிப் பேசுகிறீர்களே என்று யோசிக்கிறீர்கள் அல்லவா! ஆம், தாய்மார்களே! நம்முடைய பிள்ளைகள் பாடம் படிக்க வேண்டிய முதல் பள்ளிக்கூடத்திற்குத் தான் இப்போது நாம் போய்க் கொண்டிருக்கிறோம். நம் பிள்ளைகள் அங்கு சென்றால் தானே அவர்களுக்கான முதல் பால பாடமான தாய்ப்பால் குடிப்பதைப் பற்றி கற்றுக் கொள்ள முடியும்? என்ன தாய்மார்களே, புரியவில்லையா? வாருங்களேன், கொஞ்சம் இதைப் பற்றி நாம் இன்னும் விரிவாகப் பார்ப்போம்.

ஒருசில தாய்மார்கள் கர்ப்பமாயிருக்கும் வரையிலும் என் கண்ணே! மணியே! எப்போது பிறந்து வெளியில் வருவாய் என்று கால்கடுக்க காத்துக் கிடப்பார்கள். ஆனால் அவர்கள் பிறந்து வெளிவந்த பின்போ நிலைமை அப்படியே தலைகுப்புற மாறிவிடும். அவர்கள் தூங்காமல் கொள்ளாமல் விழித்திருந்து, பொழுதிற்கும் பிள்ளைக்குத் தாய்ப்பாலூட்டி, எந்நேரமும் ஆராரோ பாடித் தூங்க வைத்து, பெரியவர்களாய் அவர்களை வளர்ப்பதற்குள் ஸப்பா..! எப்போதுதான் இவர்களெல்லாம் வளர்ந்து வந்து கூடிய சீக்கிரத்தில் பள்ளிக்கூடம் போவார்களோ? என்று புலம்பியபடியே கண்ணைக் கசக்கத் துவங்கிவிடுவார்கள். ஆனால் அம்மாக்களுக்குத் தான் தெரியவில்லை, அவர்கள் பிரசவித்திருப்பதே குழந்தைகளின் முதல் பள்ளிக்கூடத்தில் தான் என்று..!

ஆம், குழந்தைகளின் முதல் பள்ளிக்கூடமே அவர்கள் பிறந்த மருத்துவமனைதான். அவர்களின் முதல் டீச்சர்களே, குழந்தைகளை ஊசி போட்டு எந்நேரமும் அழ வைக்கிற டாக்டரும், நர்சுங்களும் தான். இங்கே ஒழுங்காக தாய்ப்பால் குடித்து படித்துத் தேருகிற பிள்ளைகள் தான் அதிபுத்திசாலிகளாக இன்றுவரையிலும் நாட்டின் பெரிய பெரிய இடத்திற்கெல்லாம் சென்றிருக்கிறார்கள். ஆக, இந்த தாய்ப்பால் பள்ளிக்கூடத்தில் படிப்பதென்பது நம் பிள்ளைகளுக்கு எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த விசயமென்பதை நாம் கொஞ்சம் புரிந்து கொள்ள வேண்டும். ஆம், இத்தகைய தாய்ப்பால் தானே அவர்களின் மூளை வளர்ச்சியிலிருந்து எல்லாவற்றிற்குமே அஸ்திவாரமாக இருக்கிறது!

குழந்தைகள் தத்தக்க புத்தக்க என்று தவழ்ந்து எழுந்து நடக்க ஆரம்பித்துவிட்டாலே, அப்ப சரி, பையன் பள்ளிக்கூடம் போக ரெடியாகிட்டான்! என்று பிளே ஸ்கூலில் போய் அட்மிசன் போடுகிற பெற்றோர்களாக இன்று நாம் வளர்ந்துவிட்டோம். இரண்டரை வயதில் பிளே ஸ்கூலில் ஆரம்பிக்கிற அவர்களின் ஓட்டம் மூணரை வயதில் எல்.கே.ஜி, நான்கரை வயதில் யு.கே.ஜி, ஆறு வயதில் முதலாம் வகுப்பு என்று அடுத்தடுத்து பத்து, பன்னிரெண்டாம் வகுப்பு வரைக்கும் நல்லபடியாக தேர்ச்சியாகி, பின்பு கல்லூரியில் சேர்ந்து முதுகலைப் பட்டம் பெற்று, பெரிய பெரிய கம்பெனிகளில் வேலை வாங்கி சம்பாதிக்கும் வரை ஒரே ‘விடு ஜூட்’ தான்.

ஆனாலும் குழந்தைகள் எல்லாம் பாவம் இல்லியா? அவர்களது உடல் வளர்ச்சிக்கேற்ப வளர்ந்து, நோய்நொடியின்றி ஆரோக்கியமாக வாழ்ந்து, நல்ல புத்திசாலியான பிள்ளைகளாக வளர வேண்டுமென்றால் மேலே சொன்ன பள்ளிக்கூடங்களைவிட, அதன் பாட திட்டங்களைவிட மருத்துவமனையிலே மருத்துவரும் செவிலியரும் சொல்லித் தருகிற தாய்ப்பால் பால பாடங்களே மிக மிக முக்கியமானவை. ஆனால் இதைப் பற்றியெல்லாம் யோசிப்பதற்குத் தான் இன்றைய தலைமுறைத் தாய்மார்களுக்கு நேரங்காலமே இல்லாமல் போய்விட்டதே!

வயது வருடங்களில் 0 முதல் 2 2 ½ முதல் 3 1/2 3 ½ முதல் 4 ½ 4 ½ முதல் 5 ½ 6 வயது
பாடம் தாய்ப்பால் வகுப்பு பிளே ஸ்கூல் எல்.கே.ஜி யு.கே.ஜி முதல் வகுப்பு

உண்மையைச் சொல்ல வேண்டுமென்றால், நீங்கள் மாசமாய் இருக்கும் போதிலிருந்தே பிள்ளைகளின் பள்ளிக்கூடக் காலம் துவங்கிவிடுகிறது. பிள்ளைகளால் கண்ணைத் திறந்து படித்து புரிந்து கொள்ள முடியாதல்லவா? அதனால் தான் அம்மாவாகிய நீங்கள் ஒவ்வொன்றாகப் படித்துவிட்டு கர்ப்பப்பையில் வளருகிற பிள்ளையின் அடிவயிற்றைத் தடவியபடியே, அம்மா எப்படி உன்னைச் சுமந்தே குண்டாயிட்டேன் பாத்தியா? என்று முறையிட்டோ, அம்மாவை இப்படியா எட்டி உதைப்பாய்? என்று கடிந்து கொண்டோ, அவர்களுக்குக் கதை கதையாய் சொல்வது போல நாமுமே சிலவற்றைப் படித்துத் தெரிந்து கொள்ள வேண்டியிருக்கிறது. அப்படியென்ன, பிள்ளைகள் கருவாய் இருக்கும் போதே அவசியமாய் படிக்க வேண்டிய பாடம்..? என்று தானே யோசிக்கிறீர்கள். ஆம், அதற்குமே தனித்தனி பாடத்திட்டம் இருக்கிறது தாய்மார்களே!

கர்ப்பகாலம் (மாதங்கள்) 0-3 4-6 7-9
தாய்மார்களுக்கான பாடத்திட்டம் மசக்கை மற்றும் கர்ப்பத்தைப் பற்றி புரிந்து கொள்ளுதல் பிரசவத்தைப் பற்றி விளங்கிக் கொள்ளுதல் மற்றும் அதற்கு மனதளவில் தயாராகுதல் தாய்ப்பால் விழிப்புணர்வு மற்றும் குழந்தைகள் வளர்ச்சி பற்றி தெளிந்து கொள்ளுதல்

பெண்கள் கர்ப்பம் தரித்தவுடன் மசக்கையால் அவர்கள் படுகிற அவதியைச் சொல்லி மாளாது. முதல் முறையாக தாங்கள் தாயான மகிழ்ச்சியை அனுபவிக்கவும் முடியாமல், இந்த மசக்கையால் உடலில் உண்டாகிற அசௌகரியங்களைச் சகித்துக் கொள்ளவும் முடியாமல், அன்றாடம் அவர்கள் நிலை கொள்ளாமல் தவியாய்த் தவிப்பதை நம்மால் கண்கொண்டுப் பார்க்கவும் இயலாது. இப்படியும் இவள் பிள்ளை பெறத்தான் வேண்டுமா..? என்கிற அளவிற்குப் பொங்கி கண்ணீரே நமக்கு வந்துவிடுவது போலிருக்கும்.

ஆகையால் தான் பெண்கள் கர்ப்பம் தரித்த முதல் மூன்று மாதங்களிலே அந்த மசக்கையிலிருந்து விடுபடுவதற்கு கர்ப்பமாகிய நமது உடலிலே என்னென்ன மாற்றங்களெல்லாம் நடக்கின்றன, அதற்கு மனதளவில் கர்ப்பவதி எப்படி தன்னைத் தாயார் படுத்திக் கொள்ள வேண்டும், அத்தனை உபாதைகளையும் மீறி தன்னுடைய உடலை எப்படித் தேற்றிக் கொள்வது, தனக்குள்ளேயே இவ்வளவு மாற்றம் நிகழுகிற போது வயிற்றுக்குளே குழந்தைகள் எப்படியெல்லாம் வளருகிறார்கள் என்பன போன்ற சமாச்சாரங்களையெல்லாம் படித்துத் தெரிந்து கொள்ள வேண்டியது மிகவும் அவசியமாகிறது. (மசக்கை புத்தகம், பாரதி புத்தகாலய பதிப்பகம்)
அடுத்து நான்காவது முதல் ஏழாவது மாத காலகட்டத்தில் பிரசவம் தொடர்பான விசயங்களைப் பற்றி தெளிவாக்கிக் கொள்ள வேண்டும். ஏனென்றால் பிரசவம் தொடர்பான அச்சத்தினாலே பெரும்பாலான பிரசவங்கள் சிசேரியன் செய்வதற்குக் காரணமாகின்றன என்பதான அதிர்ச்சியான ஆய்வுகளெல்லாம் இப்போது வந்த வண்ணமாக இருக்கின்றன. அதனால் தான் அதற்கடுத்த மூன்று மாதங்களில் பிரசவம் எப்படி நடக்கிறது, பிரசவத்தின் போது என்னென்ன செய்ய வேண்டும், அதற்கு மனதை எவ்வாறு தைரியப்படுத்திக் கொள்ள வேண்டும், பிரசவத்திற்கு எப்படி மருத்துவர்களுக்கு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட விசயங்களைக் கற்றுக் கொண்டு மனதை தெளிவுபடுத்திக் கொள்ள வேண்டி அறிவுறுத்துகிறார்கள்.

அதென்னவோ இப்போது யோசித்துப் பார்த்தால் கடைசி மூன்று மாத காலங்களில் கர்ப்பவதிகள் எல்லாருமே ஒரு கணக்கு டீச்சராகவே மாறிவிடுகிறார்கள். ஆஹா, பிரசவிக்க இன்னும் ஒரு மாசம்தான் இருக்கிறது, அட இன்னும் ஒரு வாரம், அச்சச்சோ இன்னும் இரண்டே நாள் தான்..! என்று பிரசவ தேதியை நெருங்க நெருங்க குழந்தைகளைப் போல குறும்புத்தனத்தோடு, பிள்ளையைப் பற்றிய கனவுகளோடும், கூடுதல் ஆசைகளோடும் கண்கள் விரிய நாட்களை எண்ணித் தவிக்கத் துவங்கிவிடுவார்கள்.

இப்படியாக குழந்தைகளைப் பற்றியே எண்ணிக் கொண்டிருக்கிற காலகட்டத்தில் தான் நமக்கு எப்போது தாய்ப்பால் சுரக்கும், எப்படிச் சுரக்கும், எவ்வளவு சுரக்கும், பிரசவித்த உடனேயே தாய்ப்பால் சுரந்துவிடுமா, அதை எப்படி குழந்தைக்குப் புகட்டுவது, பிள்ளைகள் சரியாகத் தான் குடிக்கிறார்களா, நான் சரியாகத்தான் புகட்டுகிறேனா, எனக்குத் தாய்ப்பால் போதுமானதாக இருக்கிறதா போன்ற எல்லா கேள்விகளுக்குமான விடையை இந்த மூன்றுமாத காலத்திலேயே முழுவதுமாகக் கற்றுத் தேர்ச்சி பெற வேண்டும்.

ஏனென்றால் ஏற்கனவே நாம் சொன்னபடி பிரசவித்த அரை மணி நேரத்திற்குள்ளாகவே மருத்துவர்களும் செவிலியர்களும் உங்களது பிள்ளைக்குத் தாய்ப்பால் கொடுப்பதற்கு அவசரப்படுத்துகையில், நீங்கள் பிரசவித்த களைப்பிலும், இரத்தப்போக்கு உண்டான சோர்விலும், பசித்து மயங்கிய அயர்ச்சியிலும் இருந்தாலும்கூட, பசிக்கு அழுகிற பிள்ளைக்கு நீங்கள் அவசியமாக தாய்ப்பால் புகட்டித் தானே ஆக வேண்டியிருக்கும்? எனவே அப்படியான மயக்க நிலையில் இருக்கிற போதும்கூட, நீங்கள் உங்கள் பிள்ளைக்கு ஏதும் புரையேறிவிடாமல், வயிறு நிரம்ப நிரம்ப தாய்ப்பால் புகட்ட வேண்மென்றால், அதைப் பற்றிய புரிதலை பிரசவத்திற்கு முன்னமே ஏற்படுத்தியிருந்தால் தானே சாத்தியமாகும்? என்ன, நான் சொல்வது சரிதானே? அதனால் தான் கடைசி மூன்று மாத காலத்தை முழுக்க தாய்ப்பால் பற்றிய விழிப்புணர்வுக்கென்று ஒதுக்கிவிடுங்கள் என்று அறிவுறுத்த வேண்டியிருக்கிறது.

அதெல்லாம் சரிதான். ஏதோ நாங்கள் பள்ளிக்கூடத்தில் சென்று படிக்க வேண்டுமென்று சொல்லிக் கொண்டிருந்தீர்களே! அப்படி என்னதான் பள்ளிக்கூடமோ, பாடமோ எங்களுக்கு ஒன்றும் விளங்கவில்லையே? என்று நீங்கள் நச்சரிப்பதும் புரிகிறது தாய்மார்களே! ஆனால் அதற்கு முன்பாக பிரசவித்தவுடன் இப்பள்ளிக்கூடத்தில் படிப்பதற்காக உங்களது மனதை எப்படி பக்குவப்படுத்திக் கொள்ள வேண்டுமென்பதைப் பற்றி முதலில் தெரிந்து கொள்வோமே!

தாய்மார்களே! முதலில் இந்த முக்கியமான பால பாடத்தை மனதில் பதிய வைத்துக் கொள்ளுங்கள். அதாவது இப்போது தானே நீங்கள் முதல் பிரசவத்திலே சமத்தாக பிள்ளையைப் பெற்றெடுத்திருக்கிறீர்கள். ஆதலால் முன்னே – பின்னே தாய்ப்பால் புகட்டிய அனுபவம் உங்களுக்கு இல்லாதிருக்கும் போது, கட்டாயம் இது புதியதோர் அனுபவமாகத்தான் இருக்கும். அதுமட்டுமல்லாமல் இந்த பூமிக்குப் புதிய ஜீவனாய் பிறப்பெடுத்து இப்போது தான் கண்விழித்துப் பார்த்திருக்கிற உங்களது பிள்ளைக்கும்கூட எப்படி அம்மாவை சிரமப்படுத்தாமல் தாய்ப்பாலைக் குடிக்க வேண்டுமென்பதும்கூட தெரியவே தெரியாது.

ஆக, தாய்ப்பால் பற்றிய அனுபவம் இரண்டு பேருக்குமே புதிதானது தான் என்பதை நாம் ஒப்புக் கொள்ள வேண்டியிருக்கிறது. அதனால் தாய்ப்பால் கொடுப்பதற்கு அம்மாக்களும், அந்தப் பாலருந்திக் குடிப்பதற்கு பிள்ளைகளும் பால்வாடியில் படிக்கிற கத்துக்குட்டி பிள்ளைகளைப் போல இனிமேல் தான் கற்றுக் கொள்ளவே போகிறார்கள். மேலும் மடியேந்தி பிள்ளையை மார்பில் போட்டு நானும் பாலூட்டப் போகிறேன் என்று ஏனோதானோ என்றெல்லாம் தாய்ப்பாலைக் கொடுத்துவிடவும் முடியாதல்லவா! மருத்துவமனையில் இருக்கிற மருத்துவர்களும், செவிலியர்களும் சொல்கிறபடி முறையாகக் கேட்டுப் பயிற்சி எடுத்த பின்பே நம் பிள்ளைக்குத் திகட்டுகிற அளவிற்குப் பசியாற பாலூட்ட வேண்டும். பொதுவாகவே இரண்டாவது குழந்தையைப் பெற்றுக் கொள்கிறவர்களுக்கும்கூட தாய்ப்பால் புகட்டுவதில் இதே சிரமங்கள் இருக்கத்தான் செய்கின்றன. அப்படியிருக்க முதல் பிரசவமாகிற உங்களுக்கு வருகிற இந்தக் குழப்பங்களும், சந்தேகங்களும் வெகு இயல்பானதுதான் என்பதை நாம் துவக்கத்திலேயே புரிந்து கொள்ள வேண்டும்.

முதலில் நாம் செய்ய வேண்டியது என்னவோ, பிரசவித்துச் சோர்ந்துவிட்ட மனநிலையின் பாதிப்பிலிருந்து விடுபட்டு இயல்பான மனோபாவத்திற்கு வருவதுதான். ஏனென்றால் அப்போது தான் நமக்குப் பிரசவம் நடந்து, இரத்தப் போக்கெல்லாம் உண்டாகி, தையல் போட்டு, உடல்நிலையில் கொஞ்சம் கொஞ்சமாக தேறியே வந்திருப்போம். இதிலிருந்து முற்றிலுமாக நாம் மீண்டு வந்த பின்பு தெள்ளத் தெளிவாக தாய்ப்பால் புகட்டுவது பற்றிக் கற்றுத் தேர்ந்து நம் பிள்ளைக்குப் பாலூட்ட வேண்டுமென்றால் பெற்றவளுக்கு இயல்பாகவே குறைந்தபட்சம் வாரக் கணக்கிலாவது நாட்கள் எடுக்கத் தானே செய்யும்? அது ஏன், மருத்துவம் படித்தவர்களுக்கும்கூட சரியாக தங்கள் பிள்ளைகளுக்குத் தாய்ப்பாலூட்டிப் பழகுவதற்கு கொஞ்ச காலம் எடுக்கத் தானே செய்கிறது?

ஆக, நாம் தாய்ப்பாலை சரியாகத்தான் புகட்டுகிறோமா என்று புரிந்து கொண்டு பாலூட்டுவதற்கும், அதன்படி பிள்ளையும் கச்சிதமாக மார்பைக் கவ்விக் கொண்டு வயிறு முட்ட பால் குட்டிப்பதற்கும் நீண்ட கால பயிற்சிகள் தேவைப்படத்தான் செய்யும். அப்படி நீங்கள் கற்றுக் கொள்வதும்கூட மெதுமெதுவாகத்தான் நடக்கும். குழந்தைகளைப் பிரசவித்த முதல் பாலூட்டலிலே, அதுவும் முதல் நாளிலேயே, ஆத்தா நான் பாஸாகிட்டேன்..! என்று எல்லாவற்றையும் கற்றுக் கொண்டுவிட முடியாது. அப்படி தாய்ப்பால் அளவாகச் சுரக்கும்படி, தாய்ப்பால் சுரந்து சரியாகக் கவ்விக் குடிக்கும்படி அம்மாவும் பிள்ளையும் முழுவதுமாக பயிற்சி பெறுவதற்கு ஒரு மாதத்திலிருந்து ஒன்றரை மாதம் வரையிலும் இயல்பாகவே நாட்கள் எடுக்கத்தான் செய்யும் என்பதை நாம் முதிலிலே புரிந்து கொள்ள வேண்டும். எனவேதான், முதல் நாளிலேயே எனக்குத் தாய்ப்பால் கொடுக்கத் தெரியவில்லை, குழந்தைக்கும் சரியாக குடிக்கத் தெரியவில்லை என்று புட்டிப்பாலுக்கு மாறுவதை எப்பேர்ப்பட்ட தவறான விசயமென்று மருத்துவமனையில் அழாத குறையாக மீண்டும் மீண்டும் அறிவுறுத்திக் கொண்டே இருக்கிறார்கள்.

மேலும் மருத்துமனையில் தங்கியிருக்கிற இத்தகைய நாட்களில் பாலூட்டுவதில் அம்மாக்களும், பசியாறுவதில் பிள்ளைகளும் அறியாமல் செய்கிற தவறுகளை மருத்துவர்களிடமும், செவிலியர்களிடமும் தெளிவாகக் கேட்டு அவர்களின் கண்முன்னாலே நல்ல பிள்ளையாக பயிற்சி எடுத்துக் கொண்டு ஆரம்பித்திலேயே கற்றுத் தேறிவிட வேண்டும். இத்தகைய தாய்ப்பால் புகட்டும் பாடத்தைப் பொறுத்தவரையிலும் தினந்தினம், ஏன் ஒவ்வொருமுறை தாய்ப்பால் புகட்டுகிற போதும் புதிதுபுதிதாக ஏதேனும் ஒன்றைக் கற்றுக் கொண்டே இருக்கிற மாதிரியே இருக்கும். இதற்கு நாம் செய்ய வேண்டியதெல்லாம் கற்றுக் கொள்கிற ஆர்வத்தை வளர்த்துக் கொள்வதும், அதன்படி கற்றுக் கொண்டு செவிலியர்கள் முன்பே பயிற்சி எடுத்துக் கொண்டு தெளிவடைவதும்தான்.

இதையெல்லாம் விட மிக முக்கியமாக அம்மாக்கள் தங்களுக்குத் தாய்ப்பால் கட்டாயம் சுரக்கும் என்பதை மனதார நம்ப வேண்டும். நாம் இப்போது நன்றாகப் பிள்ளையைப் பெற்றெடுத்துவிட்டோம், அதேபோல பிள்ளைக்குத் தாய்ப்பாலையும் நன்றாகப் புகட்டி நம்மால் வளர்த்துவிட முடியும் என்கிற தன்னம்பிக்கையை தாங்களாகவே வளர்த்துக் கொள்ள வேண்டும். எந்தக் காலத்திலும் பிள்ளையைப் பெற்று குழந்தைக்குத் தாய்ப்பால் பற்றாமல் போனதாக வரலாறே இல்லை. அப்படியிருக்க தாய்ப்பால் நமக்கு இல்லையென்று சொன்னால், தாய்ப்பால் சரியாகப் புகட்டத் தெரியாத நம்மிடம்தான் ஏதாவது தவறு இருக்குமே தவிர உண்மையில் தாய்ப்பால் சுரக்காமல் எல்லாம் இருக்கவே இருக்காது. ஆக, உறுதியாக நமக்குத் தாய்ப்பால் சுரக்கும், கட்டாயம் நம்மாலும் தாய்ப்பால் புகட்ட முடியும் என்கிற மனஉறுதியை நாம் இதற்கிடையே ஏற்படுத்திக் கொள்ள வேண்டும்.

தாய்ப்பால் புகட்டுவதும் அதை கற்றுக் கொள்வதுமே நாளாக நாளாக மிதவேகத்தில் கற்றுக் கொள்கிற ஒரு தொடர் கற்றல் முறைதான். பிரசவித்த முதல் நாளே அச்சச்சோ, எனக்கு தாய்ப்பாலே வரலியே? என்று பதறியபடி பதட்டத்தோடு எல்லாம் நாம் தாய்ப்பால் புகட்டத் தேவையில்லை. இதற்கெல்லாம் அம்மாவிற்கு அளவு கடந்த பொறுமை அவசியம் தேவை. தாய்ப்பால் புகட்டுகிற நாம் நிதானமாகவும், அமைதியாகவும் மனதை இயல்பாக வைத்துக் கொள்வது மிகமிக முக்கியம். தாய்ப்பால் சுரக்குமா இல்லியா, நம் பிள்ளைக்குப் பால் பத்துமா பத்தாதா என்றெல்லாம் யோசித்து சந்தேகத்தோடு எல்லாம் நம் பிள்ளைக்குத் தாய்ப்பால் கொடுக்கக் கூடாது. பிள்ளைகள் அழுக அழுக, அய்யோ பிள்ளை அழுகிறானே! ஒருவேளை தாய்ப்பால் இல்லியோ? என்று பதட்டமாகி அவசரப்படவும் கூடாது. தாய்ப்பால் மெல்ல மெல்ல சுரப்பதைப் போலவே, தாய்ப்பால் புகட்டிப் பழகுவதும்கூட மெதுமெதுவாகத் தான் நடக்கும் என்பதையும் எப்போதும் நாம் மறந்துவிடக் கூடாது.

நம்மைச் சுற்றியுள்ளவர்கள் எப்போதும் எதையாவது சொல்லிக் கொண்டேதான் இருப்பார்கள். பிள்ளைக்குத் தாய்ப்பால் போதவில்லை, பால்பவுடரையே ஆத்திக் கொடுத்திருவோம், நீ சரியாக சாப்பிடவில்லை, அதனால் தான் தாய்ப்பால் இல்லாமல் போய்விட்டது, இப்படியாக எதையாவது சொல்லி உங்களை யாரேனும் கஷ்டப்படுத்தினால் எதையுமே காதிலே வாங்கிக் கொள்ளாதீர்கள். உங்களைப் பொறுத்தவரையிலும் உங்களது மருத்துவரும், செவிலியரும் சொல்வது தான் சரி. அவர்கள் தான் கையிலே பிரம்பிற்குப் பதிலாக ஊசியை வைத்திருக்கிற வாத்தியார். அவர்களிடம் எதையும் மனதுவிட்டுக் கேட்டு எதையும் வெளிப்படையாகக் கலந்தாலோசித்தபடி அவர்கள் முன்னாலே தாய்ப்பாலைப் புகட்டி, நான் சரியாகத்தான் புகட்டுகிறேனா என்று பயிற்சி எடுத்துக் கொண்டாலே வெகு சீக்கிரமாக எல்லா விசயத்திலுமே நீங்கள் தெளிவாகிவிடுவீர்கள். அதனால் எதற்காகவும் பயந்து, பதட்டம் கொண்டு உங்களைக் குழப்பிக் கொள்ளத் தேவையில்லை, தாய்மார்களே!

இப்படியாக நம் மனதையெல்லாம் பக்குவப்படுத்திவிட்ட பின்னால் தான் நம்முடைய பள்ளிக்கூடத்திற்குப் போகவே முடியும். அதுசரி, எல்லோரும் பள்ளியறைக்குள் சென்று பாடம் படிக்கத் தயாராகத் தானே இருக்கிறீர்கள்?

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.