தாய்ப்பால் வகுப்பறை-ΙΙ,
பாடம்-1
(பிரசவ வார்டின் சூழலைப் புரிந்து கொள்ளுதல்)
கருப்பைக் கூட்டுக்குள் அடைகாத்த பிள்ளையைப் பிரசவித்து ஈருடலாய் வார்டுக்குள் நுழைகிற தாயவளை வரவேற்க வாசற்படிகளில் குடும்பமே கால்கடுக்க காத்துக் கிடக்கும். இளஞ்சிவப்பு வர்ண ரோஜாச் செடியைப் பக்கமாகப் பதியமிட்டு வளர்த்தெடுத்த மற்றுமொரு பூச்செடியைப் போல தாயிடமிருந்து கிளைபிரிந்த சின்னஞ்சிறு மொட்டாகிய பிள்ளையைப் பார்க்கப் பார்க்க நமக்கு ஆவலாதியாக இருக்கும். வரவேற்பரையில் பூங்கொத்தை கைக்களித்து வழிநடத்திச் செல்கிற ஆரவார கூட்டத்தைப் போல செவிலியரும் தாயவள் கைகளில் பிள்ளையைக் கைத்தாங்களாகக் கொடுத்து வார்டுக்கு அழைத்துச் செல்கிறாள்.
பிரவசிக்கும் வரையிலும் உடனிருக்க அறிவுறுத்தப்படுகிற ஒரு உறவினப் பெண்ணைப் போலவே பிரசவித்த பின்னாலும் கண்ணுங் கருத்துமாய் கவனிக்க வேண்டி, வார்டிலும் கூட்டமாய் செவிலியர்கள் யாரையும் அனுமதிப்பதில்லை. பிரசவத்தோடு உடனிருந்தவர்களோ அல்லது விரவம் அறிந்த முதிய பெண்களோ மட்டும் உடனிருந்து பெற்றவளை வழிநடத்திக் கொண்டால் இங்கே போதுமானதுதான். இது ஆண்களுக்கும், கூட்டமாய் படையெடுத்து வருவோருக்குமான தடைசெய்யப்பட்ட பகுதி.
இவ்வளவு அவசரகதியிலான மருத்துவமனைக் கூட்டங்களிலும் தங்களை ஆசுவாசப்படுத்திக் கொள்வதற்கென அம்மாக்களும் கைப்பிள்ளைகளும் தனித்து உலாவுவதற்கென்று பிரத்தியேகமாகக் கட்டப்பட்ட மழலையர் பூங்காக்களைப் போலவே பிரசவத்திற்குப் பிந்தைய வார்டுகளும் குழந்தைகளின் உலகத்தால் ஆக்கப்பட்டிருக்கின்றன. அங்கே நீண்டதான பளிங்கு கற்கள் பாவிய மண்டபம் போலான பெருவெளியில் ஆள் கடக்கும் இடைவெளி விடப்பட்ட தூரத்தில் பிள்ளை பெற்ற தாய்மார்கள் யாவரும் தங்களுக்கென ஒதுக்கப்பட்ட படுக்கைகளில் தாங்கள் பெற்றெடுத்த பத்தரை மாத்துத் தங்கப்பிள்ளைகளோடு அருகருகே படுத்திருப்பார்கள். குழந்தைகளின் அழுகையும் ஆர்ப்பாட்டமும், பெற்றவளின் அதட்டலும் கெஞ்சலுமாக உருக்கொள்கிற பிரசவத்திற்குப் பிந்தைய வார்டின் அழகை என்னவென்று தான் வர்ணிப்பதோ?
கடல்கன்னிகளின் தேவலோக கனவுலகத்தைப் போல அருகருகே துள்ளலோடும் துடிப்போடும் கைகால்களை உதைத்தபடி ஒரு பெரிய வால்துடுப்பைப் போல படுத்திருக்கிற பிள்ளைகளைப் பார்க்கையில் அவர்களெல்லாம் அம்மாக்களின் விலாப்பகுதியிலிருந்து துருத்திக் கொண்டிருக்கும் கடல்கன்னிகளின் துடுப்புகளாவே தெரிகிறார்கள். ஒவ்வொரு படுக்கையும் இரண்டு கள்ளங்கபடமற்ற ஜீவன்களால் நிரப்பப்பட்டிருக்கும் பிரத்தியேக அறையில் தான் புத்தம் புதியதாக பிரசவித்து நுழைகிற நமக்கென்றும் தனித்த படுக்கையொன்றை செவிலியர்கள் ஒதுக்கித் தருகிறார்கள்.
இப்பகுதியின் அத்தியாவசியமான நோக்கமே தாயும் பிள்ளையும் தொடர்ந்து அருகாமையில் தனித்திருந்து ஒருவரையொருவர் புரிந்து கொள்ள வேண்டுமென்பது தான். இப்படி இருப்பதால் தானே எந்நேரமும் தாயும் சேயும் தோலோடு தோல் நெருக்கமாய் இருப்பதும், அருகாமையிலேயே துயில் கொள்வதும், இதனால் குழந்தையின் செய்லபாடுகளை பெற்றவள் கண்டுணர்ந்து கொள்வதும் விரைவிலேயே சாத்தியமாகிறது.
ஆனாலும் ஒருசில மருத்துவமனைகளில் குழந்தைக்கு ஒரு படுக்கையும், தாயிற்கென தனிப்படுக்கையுமென ஒதுக்கித் தருகிறார்கள். இதை ஏதோ கூடுதல் வசதியென்றே பிள்ளை பெற்ற குடும்பமும் நெகிழ்ச்சியில் மூழ்கிப் போகிறார்கள். வேறுசில இடங்களில் தனித்த மரத்தொட்டில்களில் பிள்ளையைப் படுக்க வைத்துவிட்டு தாயைக் கட்டிலில் ஒய்யாரமாகத் தூங்கச் செய்கிறார்கள். பெரும்பாலான இடங்களில் அம்மாக்களின் கட்டில் அகலம் என்னவோ மிகவும் ஒடுக்கமாக ஒருவர் மட்டுமே துயில் கொள்ளுமளவு இருப்பதால், தாயும் சேயும் ஒரே கட்டிலில் அணைத்துப் படுத்திருந்தாலும்கூட, அவர்கள் எத்திசையிலும் இங்கும் அங்கும் அசையாதிருக்கும்படியான அசௌகரியமான சூழலிலே அவர்கள் துயரத்தோடு துயில் கொள்ள வேண்டியதிருக்கும்.
அப்படியே இருவரும் சகலமாக படுத்துறங்கும் படியான கட்டிலை மருத்துவமனையில் அளித்தாலும்கூட தாயிடமிருந்து பிள்ளையை அடிக்கடி அழுகிறார்கள் என்றோ, பெற்றவள் களைப்பில் தூங்க பிள்ளையை நாங்கள் கவனித்துக் கொள்கிறோம் என்றோ தாயிடமிருந்து பிள்ளையைப் பிரித்து தனித்து வைத்திருப்பதான அடாவடித்தனங்களை எல்லாம் பிரசவத்திற்குப் பிந்தைய வார்டுகிளில் உறவினர்கள் செய்த வண்ணமாகவே இருக்கிறார்கள். ஆனாலும் கவலைப்பட வேண்டாம் தாய்மார்களே, நேசத்தையே புன்முறுவலாக்கி வைத்திருக்கிற செவிலியர்கள் இந்த அற்பக் காரணங்களையும் தவிர்த்துவிட்டு நம்மையும் நம் பிள்ளையும் ஒருசேர கட்டிலில் விசாலத்துடன் கூடிய வகையில் படுத்துறங்க ஏதுவாக படுக்கை அமைத்துத் தருகிறார்கள்.
அத்தோடு ஏற்கனவே பிரசவித்து இதே படுக்கையிலிருந்து பிள்ளைக்குப் பாலூட்டி சீராட்டி வளர்த்தெடுத்த பின்பு இம்மருத்துவமனையிலிருந்து வெளியேறிச் சென்றுவிட்ட ஏதோவொரு பெற்றவளின் படுக்கையில் தான் இப்போது நமக்குமென்று ஒரு படுக்கையை ஏற்பாடு செய்துத் தருவார்கள். ஆகையில் உடலின் மீதான இரத்த கவிச்சை வாடையும், பிரத்தியேக மருந்துகளின் வாசமும் படிந்த படுக்கைத் துணிகளைத் துவைத்தெடுத்து நன்கு வெயிலில் உலர வைக்கப்பட்ட பின்னரே நம் படுக்கையில் விரித்து நம்முடலைக் கிடத்தி எவ்வித கவலையுமின்றியே கண்ணயர்ந்து தூங்கச் செய்கிறார்கள். இப்படியான படுக்கையின் வியர்க்கை நெடியும், அழுக்கும், இரத்தப் பிசுபிசுப்பும், பாலூட்டிக் கசிந்த முந்தைய கறையும் ஒருவேளை சரியாக தூய்மை செய்யப்படாவிட்டால், அடுத்ததாக வந்து தங்கப்போகிற பெற்றவளுக்கு இதனால் வரப் போகிற கிருமித்தொற்றையும், இந்தக் கவிச்சை வாசத்தினால் சரியாகப் பாலருந்தாமல் குழந்தைகள் தவிர்ப்பதையும் பற்றி செவிலியர்களுமே நன்றாகப் புரிந்து வைத்திருப்பார்கள்.
பொதுவாகவே பிரசவத்திற்குப் பின்பான வார்டில் நாம் நுழைகிற போது நம்மை அறியாமலே ஒரு அந்நியத்தன்மை வந்துவிடுகிறது. இந்த இடம் நமக்குப் புதிது, அங்கிருக்கிற செவிலியர்கள், மருத்துவர்கள் நமக்குப் புதிதானவர்கள், ஏற்கனவே பிரசவித்து தங்கள் பிள்ளையோடு படுக்கையில் அக்கம் பக்கத்தில் வீற்றிருக்கிற தாய்மார்களும் நமக்குப் புதிதானவர்களே! அப்படியிருக்க இத்தகைய விசாலமான அறைகளோடு, சுற்றியுள்ள மனிதர்களோடு நாம் வெகுவிரைவிலேயே ஒட்டிக் கொண்டால் மட்டுமே தாய்ப்பால் கொடுப்பதற்கு நமக்கு இலகுவாக இருக்கும். இத்தகைய பழக்கமில்லா இடத்திலிருந்து கொண்டு துணிந்து நாம் தாய்ப்பாலைப் புகட்ட வேண்டுமென்றால் எத்தகைய மனத்தடையுமின்றி இரண்டு மார்பகத்தையும் வெளியே எடுத்துப் போட்டு பிள்ளைக்குப் பால் கொடுக்க வேண்டியதிருக்கும் அல்லவா!
ஆகையால் தான் பிரசவத்திற்குப் பின்பான வார்டிற்குள் நுழைகிற போதே அங்கிருக்கிற இடத்தோடு, நமது படுக்கையோடு, நம் படுக்கையின் அருகாமையில் ஏற்கனவே பிரசவித்துப் படுத்திருக்கிற தாய்மார்களோடு, நமக்குத் தாய்ப்பால் பாடமெடுக்கிற ஆசானாகிய செவிலியர் மருத்துவரோடு விரைவிலேயே மனத்தடைகளை நீக்கி நெருக்கமாகிவிட வேண்டியிருக்கிறது. நாம் இப்போது பிரசவித்துப் படுத்திருக்கிற படுக்கையில் தான் பல்லாயிரக்கணக்கான பெண்கள் பிரசவித்துப் பாலூட்டி ஆரோக்கியத்தோடு மீண்டு வீடு சென்றிருக்கிறார்கள் என்பது எவ்வளவு நெகிழ்ச்சியான விசயம், கொஞ்சம் யோசித்துப் பாருங்கள்? நாம் படுத்திருக்கிற இதே இடத்தில் தான் சற்று முன்பு இன்னொரு தாயும் அவளது சேயும் துயில் கொண்டிருக்கிறார்கள் என்பது எப்பேர்ப்பட்ட மனதிற்கு இதமான ஞாபகம்! நாம் வீட்டிற்குச் சென்ற பின்னாலும்கூட நாமும் நம் பிள்ளையும் உறங்கியெழுந்த இதே இடத்தில் இன்னொரு தாயும் பிள்ளையும் வந்து துயில் கொள்ளத்தான் போகிறார்கள். ஆதலால் இவ்விடம் என்பது நமக்கு பெருமதிப்பிற்குரிய நினைவுகள் என்பதை மறந்துவிடாதீர்கள் தாய்மார்களே!
இன்னும்கூட நம்மைப் போலவே எத்தனையோ தாய்மார்களை, பிள்ளைகளை நம் கர்ப்பப்பையில் சுமப்பதைப் போல தாங்கிக் கொள்வதற்கு மருத்துவமனைப் படுக்கைகள் இன்னும்கூட சித்தமாயிருக்கின்றன. இவையெல்லாம் ஒருவேளை இயேசுபிரானைச் சுமந்த இரும்புச் சிலுவைகள் தானோ என்னவோ? சிறுகச் சிறுகச் சீவி சிறுத்துவிட்ட பென்சிலைக்கூட கைவிடாமல் தனக்கு நெருக்கமானதாக வைத்திருக்கும் ஞாபகங்களைப் போல நாம் ஏன் பிரசவித்த படுக்கையை வாழ்நாளின் முக்கியமான நினைவுச் சின்னமாக வைத்துக் கொள்ளக் கூடாது?
இப்படியாகப் பிரசவித்த தாய்மார்கள், தங்கள் அடிவயிற்றுப் பிள்ளைச் சுமையை இறக்கியவுடனே நெல்மணிகளை உதிர்த்த தட்டைகளைப் போல உடலும் இலகுவாகிப் போகும். ஆனாலும் தாய்ப்பால் புகட்டுவதில் சிறிது ஆசுவாசத்தோடு இருப்பதற்கு அத்தகைய அறையில் கொஞ்சம் அடித்து வீசுகிற தூய நல்காற்றும், மஞ்சள் பூசிப் படருகிற சூரிய வெளிச்சமும் இருக்கிற பட்சத்தில் அம்மாவும் பிள்ளையும் தங்கள் அந்நியத் தன்மையை உதிர்த்துவிட்டு வீட்டினது இணக்கமான சூழலை மருத்துவமனையிலேயே உணரத் துவங்கிவிடுவார்கள்.
அதோடு நம் அருகாமையில் ஏற்கனவே பிரசவித்துத் தாய்ப்பால் புகட்டிக் கொண்டிருக்கிற தாய்மார்களிடம் நாம் இணக்கமாகி நட்பு பாராட்டுகையில் தாய்ப்பால் புகட்டுவது தொடர்பான சந்தேகங்களை அனுபவ ரீதியில் அவர்களேகூட நமக்கு வந்து உதவக்கூடும். தங்கள் பிள்ளைகளை மார்பில் போட்டு நேரடியாகவும் அவர்கள் நமக்கு விளக்கிச் சொல்வற்கு முன்வருவார்கள். ஒருவேளை நமக்குத் தாய்ப்பால் வரவில்லையென்று உள்ளுக்குள் ஆதங்கப்பட்டாலோ, அடிக்கடி தாய்ப்பால் வேண்டுமென்று கேட்டுப் பிள்ளை பசித்து அழுதாலோ அவர்களது மடியிலே நம் பிள்ளையைக் கிடத்தி அவர்களது பிள்ளையாகப் பாவித்து மார்பிலே பாலருந்தச் செய்து நமக்கு உறுதுணையாக இருப்பார்கள். நாம் பிரசவித்த அறையில் எத்தனையோ தாய்மார்களிருக்க தாய்ப்பால் போதவில்லையென்று புட்டிப்பாலைக் கொடுப்பதைக் காட்டிலும், நம்மைப் போன்ற தாயிடம் இரவல் கேட்டு பிள்ளைக்குத் தாய்ப்பால் கொடுப்பதென்பது பெரும் மகத்தான காரியமல்லவா!
நாம் பிரசவித்த அதே மருத்துமனையில், அதே நாளில், அதே நேரத்தில், நம்மோடே பிரசவித்து பிள்ளை பெற்ற தாய்மார்களிடம்கூட நாம் வாழ்நாள் நட்பை வளர்த்துக் கொள்ளலாம் தானே! அப்படி வருடாவருடம் ஒன்றாக பிரசவித்த தாய்மார்களெல்லாம் ஒன்றுகூடி ஒரேயிடத்தில் பிறந்த நாளை, தாங்கள் பிரசவித்த பெருநாளை கொண்டாடினால் எவ்வளவு அற்புதமாக இருக்கும்? ஒவ்வொரு வருடமும் தங்கள் பிள்ளையை அழைத்துக் கொண்டு போய் தான் பிரசவித்த மருத்துவமனையில், தங்களுக்குப் பிரசவம் பார்த்த மருத்துவரோடு பிறந்த நாள் கொண்டாட்டத்தை நிகழ்த்துகிற பெற்றோர்களும்கூட இருக்கத்தான் செய்கிறார்கள். இப்படியான சின்னச்சின்ன ஞாபகங்களை நாம் மருத்துவமனையிலிருந்தும் நம் வாழ்வில் சேர்த்து வைத்துக் கொள்ளலாம் தானே!
பேரன்பிற்குரிய தாய்மார்களே! ஆகையால் தான் நாம் பிரசவித்து உள்ளே நுழைந்தவுடனே அத்தகைய சூழலை உள்வாங்கிக் கொண்டு எவ்வித கூச்சமும் பதட்டமும் இல்லாமல், செவிலியர்கள் சொல்வதைக் கேட்டு, அருகிலிருக்கிற தாய்மார்கள் வழிகாட்டுவதைப் புரிந்து கொண்டு இயல்பாக உங்கள் பிள்ளைக்குப் பாலூட்ட விரைவிலே தயாராகுங்கள் என்று துவக்கத்திலேயே சொல்லிவிடுகிறோம்.
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.