தாய்ப்பால் எனும் ஜீவநதி 2 – டாக்டர் இடங்கர் பாவலன்

தாய்ப்பால் எனும் ஜீவநதி 2 – டாக்டர் இடங்கர் பாவலன்



2. தாய்ப்பாலை மூளை சுரக்கிறது

உங்களுக்குத் தெரியுமா? தாய்ப்பாலை மூளைதான் சுரக்கிறது. அடடா, தாய்ப்பாலை மார்பகம் தானே சுரக்கிறது என்று யோசிக்கிறீர்களா? இல்லை, தாயின் மூளையே தான் சுரக்கிறது. வாருங்கள், இதைப் பற்றி முழுமையாக அறிந்து கொள்வோம்.

தாய்ப்பால் சுரத்தல் கூட மலையிலிருந்து அருவி கொட்டுவதைப் போலத்தான். பெரிய பெரிய மலைகள் மேகக்கூட்டங்களை இழுத்துப் பிடித்து அதிலிருந்து மழையைப் பெற்று மூலிகை வாசம் கமழுகிற அருவியாகக் கொட்டுகிறதல்லவா! அதைப் போலவே தாயவளும் தனது ரத்தத்திலிருந்து தேவையான சத்துக்களைப் பிழிந்தெடுத்து பால் வாசம் மாறாத தாய்ப்பாலாக மார்பிலே சேகரித்து பிள்ளைக்கும் ஆசையோடு புகட்டுகிறாள்.

குழந்தைக்குத் தாய்ப்பால் ஊட்டுவதற்குத் தேவையான மார்பகத்தின் வளர்ச்சிகளை அவள் பெரிய மனுசியான காலத்திலிருந்தே உடலில் உணரத் துவங்கி விடுகிறாள். மார்பகம் அளவில் பெரியதாகுதல், அவ்வப்போது மார்பில் நீர் சுரத்தல் போன்றவற்றையும் அவளால் நன்கு உணர முடிகிறது. ஆனால் கர்ப்பகாலத்தில் தான் பெண்ணினுடைய மார்பகம் முழு வளர்ச்சியையும் அடைகிறது என்பதை உங்களால் நம்ப முடிகிறதா?

வயதிற்கு வந்த பின்னால் அவளது உடலில் மாதா மாதம் மாதவிடாய் சுழற்சி (பீரியட்ஸ்) நடைபெறுவதற்கு முக்கியக் காரணமான ஈஸ்ட்ரோஜன் மற்றும் புரொஜெஸ்ட்டிரோன் ஹார்மோன்களெல்லாம் அவளது குட்டியூண்டு சினைப்பையில் இருந்துதான் சுரக்கின்றன. மேலும் இவைகள் தானே பெண்ணின் மார்பக வளர்ச்சியிலும் முக்கியப் பங்கு வகிக்கப் போகின்றன!

No description available.

முக்கியமான விசயம் என்னவென்றால், சினைப்பை ஹார்மோன்களால் மார்பக வளர்ச்சியைத்தான் ஊக்குவிக்க முடியுமே தவிர தாய்ப்பால் சுரத்தலில் அதனால் ஒரு பிரயோஜனும் கிடையாது. அதற்கெல்லாம் மூளையின் அடிப்பாகத்தில் இருக்கிற பிட்யூட்டரி சுரப்பி சுரக்கின்ற ஆக்சிடோஸின் மற்றும் புரோலாக்டின் ஹார்மோன்கள் தான் லாய்க்கு. இவைதான் தாய்ப்பால் சுரத்தலுக்கான வேலையைச் செய்து முடிக்கக்கூடிய ஏவாளிகள். கர்ப்பவதியாக இருக்கையிலே சினைப்பையின் ஹார்மோன்கள் மார்பகத்தை தாய்ப்பாலூட்டுவதற்குத் தயார் செய்யும் வேலையிலே மும்பரமாக ஈடுபட்டிருப்பதால் அப்போது பிட்யூட்டரியின் ஹார்மோன்களோ கையைக் கட்டிக் கொண்டு கம்மென்று அமைதியாகத்தான் இருக்கும். ஆனால் குழந்தைகள் தான் பிறக்கட்டுமே, உடனே மார்பிலிருந்து தாய்ப்பாலைச் சுரக்க வைக்கிற வேலையில் படுஜோராக தன்னை ஈடுபடுத்திக் கொண்டு களத்தில் இறங்கிவிடும்.

ஆனாலும் தாய்மார்களே, தயவுசெய்து நீங்கள் ஒன்றைப் புரிந்து கொள்ள வேண்டும். பத்து மாதம் சுமையாய் சுமந்து பத்திரமாக பிள்ளையைப் பெற்றெடுத்துக் கொடுத்தவளுக்கு மார்பிலே பாலூட்டுவதற்கு தாய்ப்பால் மட்டும் இல்லாமலே போய்விடுமா? இன்னும் இதைப் பற்றி நாம் விரிவாக தெரிந்து கொள்வோமா?
பிரசவித்தவுடன் தாயின் மூளைக்குள் “அடி பெண்ணே! உனக்குப் பிள்ளை பிறந்து விட்டதடி” என எச்சரிக்கை மணி டிங்.. டாங்.. டிங் என்று அடிக்கத் துவங்கி விடும். உடனே மூளைக்குள் இருக்கின்ற ஹைப்போதலாமஸ் மற்றும் பிட்யூட்டரி சுரப்பிகள் இரண்டுமே தங்களது வேலையைச் செய்ய வண்டியைக் கிளப்பிவிடும். அதாவது ஹைப்போதலாமஸ் சுரப்பி தன் கட்டுப்பாட்டில் இருக்கிற பிட்யூட்டரி சுரப்பி தான் சொன்னபடி ஒழுங்காக வேலை செய்கிறதா என்று கண்காணிக்கும் வேலையையும், அதன்படி பிட்யூட்டரி சுரப்பியும் மார்பிலிருந்து தாய்ப்பால் சுரக்க வைப்பதற்குத் தேவையான ஹார்மோன்களை சுரக்கிற வேலையையும் செய்யத்தான் அவை அத்தனை அவசரம் காட்டுகின்றன.

குழந்தை பிறந்தவுடனேயே தாய்ப்பாலை உற்பத்தி செய்யக்கூடிய புரோலாக்டின் ஹார்மோன்கள் இரத்தத்தில் 20 மடங்கு அதிகரித்துவிடுகிறது. அப்படியென்றால் பிள்ளைக்குத் தாய்ப்பாலூட்டுவதற்காக தாயின் உடல் எவ்வளவு தூரம் தயாராக இருக்கிறது என்பதை யோசித்துப் பாருங்கள். ஆக மொத்தம், பிரசவித்த பின்பு மூளைச் சுரப்பிகளுமே தாய்ப்பாலைச் சுரப்பதற்குத் தேவையான ஹார்மோன்களை இரத்தத்தில் கொட்டித் தீர்ப்பதற்குத் தயாராகத்தான் இருக்கிறது. அப்படியானால் மார்பிலே எப்பத்தான் தாய்ப்பால் சுரக்குமென்று சொல்லுங்களேன் என்று கேட்கிற உங்களின் ஏக்கம் புரிகிறது.



உங்களுக்கு ஒரு இரகசியம் சொல்லட்டுமா? பிள்ளை பெற்றவளுக்கு நான்காம் நாள் தான் தாய்ப்பாலே சுரக்கிறது. “அச்சச்சோ! அப்படியானால் பிறந்த குழந்தைக்கு தாய்ப்பாலைத் தவிர வேற எதையுமே கொடுக்கக் கூடாது என்று டாக்டரும் சொல்லியிருக்கிறாரே! அப்போது என் குழந்தையும் பசியென்று அழுதால் முதல் மூன்று நாட்களுக்கு நான் என்ன தான் செய்வேன்?” என்று பயப்படத் தேவையில்லை.

பசுமாடுகள், ஆடுகள் போன்ற பாலூட்டிகளைப் போலவே தாயவளுக்கும் பிரசவித்த முதல் மூன்று நாட்களுக்கு மஞ்சள் நிறத்தில் துளியளவு சீம்பால் தான் சுரக்கிறது. அதுவும்கூட பாருங்களேன், குழந்தைகளின் தேவைக்கேற்ப சொட்டுச் சொட்டாக விழுகிற அளவில் அது கொஞ்சமாகத்தான் வருகிறது. அதற்காக, “கொழந்தைங்க தாய்ப்பால் குடிக்க குடிக்க நைநைனு அழுதுகிட்டே இருக்காங்க. அம்மாகிட்ட தாய்ப்பால் இல்லாம போனதால தான் தொடர்ந்து அழுறாங்க போல. அம்மாவும் சரியா சாப்பிடாததுனாலதான் தாய்ப்பால் இல்லாமப் போச்சு. அதனால கொழந்தைக்கு பால் பவுடர், இல்லைன்னா மாட்டுப்பாலை வாங்கி ஊத்திக் கொடுத்திருவோம்” என்று பதறிப் போய் தவறான முடிவுகளை எடுக்கத் தேவையில்லை. நீங்கள் தாய்ப்பாலைத் தவிர வேறு எதையாவது கொடுக்க நினைத்தாலும், சந்தேகத்தேடு தாய்ப்பால் கொடுப்பதை நிறுத்தினாலும் இனிமேல் அம்மாவிற்கு தாய்ப்பாலே சுரக்காத நிலைகூட ஏற்பட்டுவிடும் அபாயம் இருப்பதை தாய்மார்களாகிய நீங்கள் தயவு செய்து புரிந்து கொள்ள வேண்டும்.

கர்ப்ப காலத்தில் உங்கள் குழந்தையை வயிற்றுக்குள் நன்றாக வளர்த்தும், உங்களது மார்பகத்தை தாய்ப்பாலூட்டுவதற்காக தயார்படுத்தியும் கொண்டிருந்த சினைப்பையினுடைய ஈஸ்ட்ரோஜன் மற்றும் புரோஜெஸ்ட்டிரோன் ஹார்மோன்கள் குழந்தை பிரசவமானவுடன் இரத்தத்தில் குறையத் தொடங்குகின்றன. பின்னே, இவை குறைந்தால் தானே தாய்ப்பாலைச் சுரக்க வைக்கிற புரோலாக்டின் மற்றும் ஆக்ஸிடோசின் ஹார்மோன்கள் மூளையில் சுரக்கவே ஆரம்பிக்கும். ஆக, பிரசவத்திற்கு பின்பாக ஏற்படக்கூடிய மாற்றங்களினால் முதலில் சீம்பால் குறைவாகவே சுரப்பதும், அதன் பின்பு நாளாக நாளாக முதிர்ந்த தாய்ப்பாலானது மார்பில் அதிகமாகச் சுரப்பதும்கூட இயல்பாக நடக்கின்ற ஒன்று தான் தாய்மார்களே!

தாய்ப்பால் மார்பில் உற்பத்தியாவதற்கும், சுரந்த பாலானது மார்பிலிருந்து பிழிந்தெடுத்து காம்பின் வழியே குழந்தையின் வாயில் பீச்சியடிப்பதற்கும், குழந்தைகள் தாயின் மார்பகக் காம்பினைக் கவ்விக் குடிப்பது ஒன்றுதான் தூண்டுதலாக அமைகிறது. எனவே, நீங்கள் குழந்தையை எவ்வளவு சீக்கிரமாக மார்பில் போட்டு தாய்ப்பால் குடிக்க அனுமதிக்கிறீர்களோ, ஒரு நாளைக்கு எத்தனை முறை தாய்ப்பால் தருவீர்களோ அதைப் பொருத்துதான் தாய்ப்பால் சுரத்தல் அதிகமாகும் என்பதை கட்டாயம் நீங்கள் மனதில் பதிய வைத்துக் கொள்ள வேண்டும்.

குழந்தைகள் காம்பினை கவ்விக் குடிக்கும் போதுதான் தாய்ப்பால் சுரத்தலுக்கான முதல் நிகழ்வே ஆரம்பமாகிறது. குழந்தையின் உதடுகள் பட்டதும் காம்பில் இருக்கின்ற உணர்ச்சி மிக்க நரம்புகள் தூண்டப்பட்டு உடனே அதனது சிக்னலை முதுகுத்தண்டின் வழியே மார்பகம் மூளைக்கு அனுப்புகிறது. அத்தகைய தூண்டுதல் மூளையிலுள்ள ஹைப்போதலாமஸ் பகுதிக்குச் சென்று பின்னர் பிட்யூட்டரிக்குள் நுழைந்து “என்னுடைய பிள்ளை பால் கேட்பது புரிகிறதா? உடனே அவர்களுக்கு நான் தாய்ப்பாலூட்டியாக வேண்டும். ஆதலால் தாய்ப்பாலைச் சுரப்பதற்கும் அதை வாயில் பீய்ச்சியடிப்பதற்கும் தேவையான ஹார்மோன்களை வேகமாக அனுப்பு” என்று கட்டளையிடுகிறது. பிட்யூட்டரி சுரப்பியும் பொறுப்பாக புரோலாக்டின் மற்றும் ஆக்ஸிடோசின் ஹார்மோன்களை அனுப்பவும், அது இரத்தத்தின் வழியே இரண்டு மார்புகளுக்குமே சென்றடைகிறது. இதனால்தான் குழந்தை ஒரு மார்பில் தாய்ப்பால் குடித்தாலும் இரண்டு மார்பிலுமே பால் கட்டுகிறது என்பதை நீங்கள் எளிதாகப் புரிந்து கொள்ள முடியும்.

No description available.

இப்படியாக குழந்தையின் உறிஞ்சுதலால் காம்பு தூண்டப்பட்டு, முதுகு தண்டின் வழியே சமிக்கைகள் மூளைக்குள் சென்று, ஒருவழியாக ஹைப்போதலாமஸ் மற்றும் பிட்யூட்டரிக்குச் என்னவென்று சேதி சொல்லி, முடிவாக இரண்டு ஹார்மோன்களையும் ரத்தத்தின் வழியே கையோடு அழைத்து வந்து, தாய்ப்பாலினை மார்பிலே சுரக்க வைத்து, அதனைப் பிழிந்து குழந்தையின் வாயில் அனுப்புவதற்கு, ஸப்பா… கிட்டத்தட்ட இரண்டு நிமிடங்கள் ஆகின்றன. ஆனாலும் குழந்தைகள் தான் மிகவும் சமத்தானவர்களாயிற்றே! பசியிலிருக்கிற அவர்களோ தங்களுக்குத் தேவையான தாய்ப்பாலில் 90 சதவீதத்தை நீங்கள் தாய்ப்பாலூட்டுகிற முதல் ஐந்து நிமிடங்களிலேயே சட்டென்று உறிஞ்சிக் குடித்து விடுகிறார்கள் என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்.

மார்பிலே முதன் முதலாக வாயை வைக்கிற குழந்தை தாய்ப்பால் வராத அந்த இரண்டு நிமிடத்தில் வெறும் காற்றையே குடித்துவிட்டு அதன் காரணமாக பிறகு தாய்ப்பாலைக் குறைவாக குடிக்கலாம். தாய்மார்களும் தாங்கள் தாய்ப்பால் புகட்டியவுடன் குழந்தையைத் தூக்கித் தோள் மேல் போட்டு தட்டிக் கொடுக்கும் போது அவர்கள் பால் குடிக்கையில் உள்ளே சென்ற காற்றானது குழந்தைக்கு ஏப்பமாக வெளியே வந்து விடுகிறது. அதனால் தான் தாய்மார்கள் மிகவும் பொறுமையாகவும், நிதானமாகவும் தாய்ப்பாலைப் புகட்டுவது அவசியமாக இருக்கிறது.

இப்போதெல்லாம் கர்ப்பமான பெண்களுக்கெல்லாம் எப்படி பிரசவத்தைப் பற்றிய பயம் இருக்கிறதோ, அதேபோல பிரசவமான தாய்மார்களும், நமக்கெல்லாம் எங்கே தாய்ப்பால் சுரக்கப் போகிறது? என்று யோசித்து கவலைப்பட ஆரம்பித்து விட்டார்கள். ஒன்று மட்டும் தெரிந்து கொள்ளுங்கள், தாய்மார்களே! மார்பக அளவிற்கும், தாய்ப்பால் சுரத்தலுக்கும் எந்த சம்பந்தமுமில்லை. அதேபோல குறைமாசம், நிறைமாசம் என்று பார்த்தெல்லாம் தாய்ப்பாலும் சுரக்காமல் இருப்பதில்லை. உங்கள் குழந்தைக்கு என்ன தேவையென்பதை மூளையே உணர்ந்து கொண்டு அதற்குத் தேவையானவாறு மார்பிலே தாய்ப்பாலைச் சுரக்க வைப்பது உங்களது உடம்பினுடைய இயல்பு. ஆனால் அதற்காக நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் அதற்கேற்ப ஒத்துழைப்பு கொடுக்க வேண்டியது மட்டுமே.
தாய்ப்பால் அதிகமாகச் சுரக்க வேண்டுமென்றால் புரோலாக்ட்டின் ஹார்மோன் அதிகமாகச் சுரக்க வேண்டும். மேற்கண்ட ஹார்மோன்களும் அதிகமாகச் சுரக்க வேண்டுமென்றால் பிரசவித்த ஒரு மணி நேரத்திற்குள்ளாகவே பெற்றவளும் உடனடியாகத் தாய்ப்பாலூட்ட வேண்டும். தாய்ப்பால் புகட்ட ஆரம்பித்தவுடனே புரோலாக்டின் ஹார்மோன்கள் மெல்ல மெல்ல இரத்தத்தில் கலந்து 45 நிமிடத்தில் உச்சகட்ட அளவினை எட்டிவிடும். ஆனால் இரத்தத்தில் அதிகரித்த இந்த தாய்ப்பாலைச் சுரக்கும் ஹார்மோன்கள் மீண்டும் குறையாமலிருக்க குறைந்தபட்சம் இரண்டு மணி நேர இடைவெளியில் ஒரு நாளைக்கு எட்டு முறையாவது தொடர்ந்து தாய்ப்பாலூட்டிக் கொண்டே இருப்பது என்பது மிகவும் முக்கியம்.

தாய்மார்களே, எப்படி இறைக்க இறைக்கத்தான் கிணற்றில் ஊற்றெடுக்குமோ அதேபோல குழந்தையால் மார்பகக் காம்பு சுவைக்கப்பட்டு அதிகமாக தூண்டத் தூண்டத்தான் தாய்ப்பாலும் சுரக்கும் என்பதை நீங்கள் உணர வேண்டிய தருணமிது. இரவு நேரத்திலே தான் இயல்பாகவே புரோலாக்டின் ஹார்மோன்கள் அதிகமாகச் சுரக்குமென்பதால் இரவிலே தாய்ப்பாலூட்டுவதில் அம்மாக்கள் அதிக கவனத்துடன் இருந்தால் தாய்ப்பால் சுரத்தலில் எந்தவித தடையும் இருக்காது என்பதை கவனமாக கேட்டுக் கொள்ளுங்கள்.

தாய்ப்பால் சுரத்தல் என்பது மார்பகத்தினுள்ளே இருக்கிற பதினைந்து முதல் இருபத்தைந்து எண்ணிக்கையிலான பால்பைகளில் இருந்து உற்பத்தியாகி குட்டிக் குட்டி குழாய்களின் வழியே மார்பின் நுனிப்பகுதிக்கு வந்து அது காம்பின் வழியே வெளியேறக்கூடிய ஒரு அற்புத நிகழ்வாகும். இப்போது தாய்ப்பால் நன்கு சுரந்து பிள்ளை பெற்றெடுத்தவளின் மார்பில் பால் நன்றாக கட்டிவிட்டது என்றே வைத்துக் கொள்வோம். அதாவது பால்பையில் பால் நிறைந்துவிட்டது, சரியா? அடுத்ததாக, அந்தப் பையை நன்கு கசக்கிப் பிழிந்து காம்பின் வழியே தாய்ப்பாலை வெளியேற்றும் வேலையைத்தான் ஆக்ஸிடோசின் ஹார்மோன்கள் செய்கின்றன. இவை பால்பையைச் சுற்றியுள்ள மெல்லிய தசைகளைச் சுருங்கி விரிவடையச் செய்வதன் மூலம் தாய்ப்பாலை மெல்ல மெல்ல ஒரு இசையின் தாளத்தைப் போல வெளியேற்றுகின்றன.



மேலும், இந்த ஆக்ஸிடோசின் ஹார்மோன்கள்தான் பிரசவமான உடனே கர்ப்பப்பையையும் சுருங்கச் செய்து பிரசவ சமயத்தில் அதிக இரத்தப்போக்கு ஏற்படாமல் தடுக்கிற வேலையையும் செய்கிறது. இதனால் தான் குழந்தை பிறந்தவுடன் தொப்புள் கொடியைத் துண்டிக்கும் முன்பே தாயின் மார்பிலே போட்டு காம்பினை சுவையச் செய்து இயல்பாகவே ஆக்ஸிடோசின் ஹார்மோன்களைச் அதிகமாக சுரக்கச் செய்கிறார்கள், மருத்துவர்கள்.

அதிக இரத்தப்போக்கு ஏற்படாமல் தாயின் உயிரைக் காப்பதிலும், தாய்ப்பாலைக் கொடுத்து குழந்தையின் உயிரைக் காப்பதிலும் ஆக்ஸிடோஸின் ஹார்மோன்களால் பிரசவித்தவுடன் இரண்டு பலன்கள் இருக்கிறது என்பதை இனி யாரும் மறக்க மாட்டீர்கள் தானே! மருத்துவமனைகளில் பிரசவித்த தாய்மார்கள் அனைவருக்குமே கர்ப்பப்பை சுருங்குவதற்கும், நஞ்சு எளிதில் பிரிந்து வெளியேறுவதற்கும் பிரசவித்த முப்பது நிமிடத்திற்குள்ளாக ஆக்ஸிடோஸின் ஹார்மோன்கள் ஊசி போடப்படுகிறது என்பது கூடுதலான தகவல்.

மேலே நாம் பார்த்தவை எல்லாமே குழந்தை பிறந்தவுடன் தாயின் உடலானது அதைப் புரிந்து கொண்டு தானாகவே தாய்ப்பாலூட்டுவதற்கு எல்லாவற்றையும் தயார் செய்வதைத்தான். அதுசரி, அப்படியானால் தாய்ப்பாலைப் பற்றி எல்லாவற்றையும் தாயவள் புரிந்து கொண்டு நடப்பதற்கு இதிலே வேறு என்ன தான் இருக்கிறது, அப்படித் தானே யோசிக்கின்றீர்கள்? ஆம், இருக்கிறது தாய்மார்களே!

மணி அடித்து நாய்க்கு உணவு கொடுத்துப் பழக்கப்படுத்திய பின்பு, மணி அடிக்கும் போதெல்லாம் நாயின் நாக்கில் உமிழ்நீர் சுரக்கும் என்பதை பள்ளிக் காலங்களிலே நாம் படித்திருக்கிறோம் தானே. அதே போல குழந்தையைப் பற்றியே எப்போதும் நினைத்துக் கொண்டு அம்மாக்கள் அன்பில் உருகும் போதும், குழந்தைகள் அழுகின்ற போதெல்லாம் நம்மிடம் தாய்ப்பால் கேட்டுத் தானே பிள்ளைகளும் அழுகிறார்கள் என்பதை மனதளவில் உணரும் போதும் தாய்ப்பால் சுரத்தலானது மார்பிலே அதிகரிக்கிறது என்பது உங்களில் எத்தனை பேருக்குத் தெரியும்?

தாய்ப்பாலூட்டுவதற்கு உங்கள் உடம்பு அக்கறையுடன் செயல்பட்டாலும், அதற்காக மனதும் சேர்ந்தே தயாராக வேண்டியது அதைவிட அவசியம். எனக்குத் தாய்ப்பால் கண்டிப்பாக சுரக்கும், எனக்குத் தாய்ப்பால் சுரத்தலில் எந்தப் பிரச்சனையும் இல்லை என்பதை தாய்மார்கள் முதலில் மனதளவில் உறுதியாக நம்ப வேண்டும். தாயானவள் மனஅழுத்தத்திலோ, பதட்டத்திலோ, கவலையிலோ, வீட்டாரிடம் சண்டையிட்டுக் கோபித்துக் கொண்டோ நிம்மதியில்லாமல் தாய்ப்பால் புகட்டினால் கட்டாயம் தாய்ப்பால் சுரத்தலில் குறைபடும் என்பதெல்லாம் அறிவியலின் வழியே நிரூபிக்கப்பட்ட உண்மைதான் தாய்மார்களே.



எனவேதான், தாய்ப்பால் புகட்டும் போது தாய்மார்கள் மிகவும் தன்னம்பிக்கையுடன் புகட்ட வேண்டும் என்று சொல்கிறார்கள். குழந்தையின் கண்களை நேருக்கு நேர் பார்த்து ரசித்துக் கொண்டே, அவர்களுடன் செல்லமே! என் தங்கமே! அம்மாவைப் கொஞ்சம் பாரடா! என்று கொஞ்சிக் கொண்டும், குழந்தையின் முகத்தைப் பார்த்தபடி சிரித்த முகத்தோடு தலைமுடியைக் கோதிக் கொண்டும், அவர்களைத் தன் உடலோடு உடலாக மென்மையாகக் கட்டி அரவணைத்துக் கொண்டும் தாய்ப்பாலூட்டினால் தாயின் மீது குழந்தைக்கும், குழந்தையின் மீது தாயிற்கும் அன்பும் பெருகும், அத்தோடு தாய்ப்பாலும் மார்பிலே அருவியென பெருக்கெடுத்து ஓடும்.

ஆகவேதான் தாய்ப்பாலைப் புகட்டுகிற போது கணவர்கள், குடும்ப உறுப்பினர்கள் எல்லாரும் பிள்ளை பெற்றவளின் வேலைகளைப் பங்கிட்டுக் கொண்டு அவர்களுக்கு ஒத்தாசையாக இருக்க வேண்டியது முக்கியம் என்று சொல்லுகிறார்கள். உன்னால் கட்டாயம் தாய்ப்பால் ஊட்ட முடியும் என்கிற தன்னம்பிக்கையை தாயவளிடம் ஏற்படுத்துவதற்கு வீடுகளிலும், அவர்கள் வேலை செய்யும் இடங்களிலும் உறவினர்களும், தோழிகளும் முன்வர வேண்டும். அவர்களிடம் மனக்கசப்புகள், கவலைகள் ஏற்பட்டு மனம் சோர்வடையுமாறு கட்டாயம் யாரும் நடந்து கொள்ளவே கூடாது. குழந்தையின் மீது எப்படி அன்பைப் பொழிந்து அளவில்லாத அக்கறையைக் காட்டுவீர்களோ, அதேபோல தாய்ப்பாலூட்டும் தாயையும் ஒரு குழந்தையாகவே பாவித்து அவர்களின் மீதும் அக்கறையோடும் அன்போடும் நடந்து கொள்ள வேண்டும். ஆம், இந்த கோரிக்கை மிக முக்கியமாக கணவர்களுக்குத்தான், புரிகிறதா?

ஆகா! தாய்ப்பால் சுரத்தலில் இவ்வளவு விஷயம் இருக்கிறதா என்று யோசிக்கின்றீர்களா? இன்னும் நாம் தெரிந்து கொள்ள வேண்டிய ஏராளமான விஷயங்கள் கொட்டிக் கிடக்கின்றன, என் அன்பான தாய்மார்களே. வாருங்கள், உங்களை தாய்ப்பால் பற்றிய ஒரு அற்புதமான புதிய உலகிற்குள்ளாக இனி அழைத்துச் செல்கிறோம்.

முந்தய தொடரை படிக்க கிளிக் செய்க: 

தாய்ப்பால் எனும் ஜீவநதி – டாக்டர் இடங்கர் பாவலன்

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *