தாய்ப்பாலென்பது உணவல்ல, உயிர்..
அன்புள்ள தாய்மார்களே! உங்கள் மீது எனக்குத் தீராத கோபம் இருக்கிறது. அது ஏனென்று தெரியுமா? உங்கள் பிள்ளை அழுதவுடனே, “அய்யோ! என் செல்லப் பிள்ளைக்குப் பசிக்கிறது போலும், அதனால் தான் தாய்ப்பால் கேட்டு அழுகிறான் போல” என்கிற எண்ணம் உங்கள் மனதில் உதிப்பதன் காரணமாகத்தான் இந்தப் போலிக் கோபமெல்லாம். அதுசரி, தாய்ப்பால் என்பது பசிக்காக சுரக்கின்ற வெறும் உணவுப் பண்டமா என்ன?
உடனே, “என் பிள்ளை பசியென்று அழுதால், அவர்களுக்குத் தாய்ப்பால் கொடுக்கப் போகிறேன். அதிலே உங்களுக்கு என்னய்யா பிரச்சனை?” என்று ஒருவேளை உங்களிடருந்தும் நியாயமாக கோபம் வரலாம் தான். ஆனால் இந்தக் கட்டுரையைப் படித்து முடிக்கும் போது உங்களுக்குள் தாய்ப்பால் என்பது வெறும் குழந்தையின் பசிக்காக மட்டுமே சுரக்கின்ற உணவல்ல என்பதைப் பற்றிய முழுமையான புரிதல் ஏற்பட்டுவிடும். அப்போது யாருடைய கோபம் நியாயமானது என்பதைப் பற்றிய விவாதத்தை உங்களது மனசாட்சியிடமே விட்டுவிடுவோம்.
தாய்ப்பால் என்பது பிறந்த குழந்தைக்கான உணவு என்று எண்ணுவது தான் நம்முடைய தலையாயப் பிரச்சனையே! அப்படி நினைப்பதால் தானே தாய்ப்பாலுக்குப் பதிலாக மாற்று உணவாக மாட்டுப்பால், பால்பவுடர் என்று எதைக் கொடுத்தாலும் உங்களால் எளிதாக ஏற்றுக் கொள்ள முடிகிறது. அத்தகைய தவறான எண்ணங்களை உங்கள் ஆழ்மனதிலிருந்து களைந்துவிட்டு, அந்தக் கள்ளம் கபடமில்லாத உள்ளத்தில் தாய்ப்பாலானது குழந்தைக்கு உணவைத் தருவதற்காக அல்ல, உயிரைத் தருவதற்காகவே சுரக்கிறது என்கிற பேருண்மையைப் பதிய வைப்பதே இந்தக் கட்டுரையின் முக்கியமான நோக்கம். வாருங்கள், தாய்ப்பால் பற்றிய அற்புத உலகிற்குள் சென்று அத்தகைய உண்மை என்னவென்று நாமும் தேடிக் கண்டுபிடிப்போம்.
ஆரம்பத்தில் குழந்தை பிறந்தவுடனே சுரக்கக்கூடிய சீம்பாலைப் பற்றி ஏற்கனவே நீங்கள் அறிந்திருக்கக்கூடும். அதோடு கூடுதலாக முதல் மூன்று நாட்களில் சுரக்கக்கூடிய சீம்பாலில் புரதச்சத்து அதிகமாகவும், சர்க்கரைச் சத்து மற்றும் கொழுப்புச் சத்து குறைவாகவும் இருப்பதையும் பற்றிய ஒன்றைத் தான் இப்போது நாம் விலாவாரியாக தெரிந்து கொள்ள இருக்கிறோம். அதேசமயம் இப்படிச் சுரப்பதிலேகூட ஒரு சிதம்பர ரகசியம் அடங்கி இருக்கிறதென்பது உங்களுக்குத் தெரியுமா?
சத்துகள் | புரதச்சத்து | சர்க்கரை | கொழுப்பு | தண்ணீர் |
சீம்பால் (%) | 9.00 | 3.00 | 2.00 | 86.00 |
தாய்ப்பால் (%) | 1.00 | 8.00 | 4.00 | 87.00 |
அம்மாக்களே! உங்களது வயிற்றில் பத்து மாதங்கள் பாதுகாப்பாய் சுமந்து பத்திரமாய் நீங்கள் பிரசவித்திருக்கலாம். ஆனால் உங்களுக்குத் தான் தெரியுமே, இந்த மோசமான உலகத்தைப் பற்றி! நாம் மூச்சிவிடும் காற்றோ மாசுபட்டுக் கிடக்கிறது. அந்தக் காற்றில் நோய் கிருமிகளுமே கண்ணுக்குத் தெரியாமல் மொய்த்துக் கிடக்கின்றன. இப்படிப்பட்ட உலகிற்கு எந்தவித முன் அறிமுகமின்றி வயிற்றுக்குள்ளிருந்து வெளிவருகிற புனிதப் பிறவியான பிள்ளையும் இதனால் நோய்வாய்ப்பட்டு உடல்நலமும் பாதிக்கப்பட்டுவிடக்கூடும் அல்லவா?
நமக்கு நோய்த் தொற்று என்று மருத்துவமனைக்குச் சென்றால், அதைச் சரி செய்வதற்கு மருத்துவர்களும் ஆண்டிபாடி மருந்துகளைக் கொடுப்பார்கள் தானே! அதுபோல நம்முடைய உடலும்கூட ஒரு மருத்துவர் தான். நமக்கு நோயென்று வந்துவிட்டால் இயல்பாகவே நமது உடலும் தனக்குத் தானே நோய் எதிர்ப்புச் சக்தியான ஆண்டிபாடிகளை (இம்யுனோகுளோபின்கள்) ரத்தத்தில் சுரந்து நோயிலிருந்து நம்மைக் காக்கத் தானே செய்கின்றன. அதுசரி, ஆண்டிபாடிகள் எல்லாமே வேறு என்னவென்று நினைக்கிறீர்கள்? அத்தனையும் புரோட்டீன்கள் தானே!
இப்படி முதல் மூன்று நாட்களுமே உடலில் அதிகமான புரதச்சத்துடன் சுரக்கக்கூடிய சீம்பால், குழந்தையின் உடலில் என்னவெல்லாம் செய்கின்றதென்று தெரியுமா? இந்தப் பொல்லாத மாசுபட்ட சூழலில் இருந்து உங்கள் பிள்ளையைப் பத்திரமாகப் பாதுகாத்து இப்பூமியிலே பல்லாண்டு காலம் ஆரோக்கியத்துடன் வாழ்வதற்காக அவர்களை மூன்றே நாட்களில் பக்குவப்படுத்தும் வேலையைத் தான் சீம்பாலும் மிகக் கவனமாகச் செய்கிறது.
அதுசரி, நீங்கள் சக்கரைச் சத்து பற்றி எதுவுமே சொல்லலையே? என்று யாராவது கேட்பீர்கள் என்று தெரியும். நாம் ஏற்கனவே சொன்னபடி பிறந்த குழந்தைக்கு முதல் கட்டமாக பாதுகாப்பே அவசியம் என்பதால் புரதச்சத்து நிறைந்த சீம்பால் தான் முதலிலே சுரக்கிறது. நான்காவது நாளிலிருந்து தான் தாய்ப்பாலில் சக்கரைச் சத்து அதிகரிக்கவே ஆரம்பிக்கிறது. இப்படி பிள்ளையின் அவசியம் அறிந்து சுரக்கும் சீம்பாலே ஆரம்பத்தில் சர்க்கரையைக் குறைவாக சுரக்கிறதென்றால் அப்படிச் சுரப்பதற்கான அவசியத்தை நாமும் கட்டாயம் புரிந்து கொள்ள வேண்டுமல்லவா.
பிறந்த குழந்தையின் பசியைப் போக்க இயல்பாகவே சர்க்கரைச் சத்து முதல் மூன்று நாட்களுக்குத் தேவையில்லை என்பது இதன் மூலம் நமக்குத் தெளிவாகிறது. அப்படியிருக்க நாம் சர்க்கரைத் தண்ணியைத் தொட்டு பிள்ளையின் நாக்கில் சேனை வைக்கிறோம், தேனைத் தொட்டு வைக்கிறோம் என்று செய்வதெல்லாம் நமது குழந்தையை நாமே நோயிற்கு ஆளாக்கும் செயல் தானே தவிர வேறென்ன சொல்வது?
குழந்தையின் எடை அதிகரிக்கத் தேவையான கொழுப்புச் சத்தும் சீம்பாலில் குறைவாகவே இருப்பதால் ஆரம்பத்தில் குழந்தைகள் பிறந்த எடையிலிருந்து பத்து சதவீத எடையை அவர்கள் பிறந்த முதல் மூன்று நாட்களிலேயே சப்பென்று குறைந்துவிடுகிறார்கள். குழந்தைகள் வளருகையில் முதல் மூன்று நாட்களில் எடை குறைந்து, பின்பு மெல்ல மெல்ல எடை அதிகரிப்பது என்பது இயல்பாக நடக்கக்கூடிய விசயம்தான் என்பதால் உடனே “எனக்குத் தாய்ப்பால் பத்தலை போலிருக்கு, அதனால் தான் எம் பிள்ளை மெலிஞ்சுக்கிட்டே போகுது” என்கிற முடிவுக்கெல்லாம் வரவேண்டாம், தாய்மார்களே!
மஞ்சள் நிற சீம்பால் என்பது மார்பிலிருந்து உருகி வழிகிற தங்க நீரோடையைப் போலத்தான். குழந்தை பிறந்த முதல் ஒரு மணி நேரத்தில் சீம்பால் கொடுக்கக்கூடிய நேரமும்கூட அவர்களுடைய வாழ்நாளின் பொன்னான நேரம்தான். ஆதலால் காலம் தாழ்த்தாமல் குழந்தைகள் பிறந்த முதல் ஒரு மணி நேரத்திற்குள்ளாகவே சீம்பாலைக் கொடுத்துவிட்டால் நீங்கள் சொல்வது போலவே உங்களது பிள்ளைகளெல்லாம் சொக்கத் தங்கங்களே!
பத்து மாதங்கள் வயிற்றுக்குள் இருக்கும் பிள்ளைகள் தண்ணீர் குடத்திற்குள்ளேயே உச்சா போய்விடுவார்கள். அவர்கள் தண்ணீர் குடத்திலுள்ள தண்ணீரைக் குடித்துக் கொண்டு மீண்டும் மீண்டும் உள்ளேயே சிறுநீர் கழிப்பதன் மூலமாகவும், மற்ற சுரப்பிகளின் அன்றாடச் சுரப்புகள் மூலமாகவும் கர்ப்பப்பையிலுள்ள தண்ணீர் குடத்தில் தண்ணீர் சத்து அதன் கட்டுப்பாட்டுக்குள்ளேயே இருக்கும். ஆனால் சிசுவோ வயிற்றுக்குள்ளே மலம் மட்டும் கழிப்பதேயில்லை. அது ஏன் தெரியுமா? அப்படித் தண்ணீர் குடத்திற்குள்ளேயே மலம் கழித்துவிட்டால் அது அம்மாவுக்கும், பிள்ளைக்குமே பெரிய பிரச்சனை தான். அதனாலே குழந்தைகளும் பத்து மாதங்களும் மலம் கழிக்காமல் குடலுக்குள்ளாக அத்தனையையும் அடக்கியே வைத்திருக்கும்.
அப்படிப்பட்டக் கழிவுகளை பிறந்தவுடன் எளிதாக வெளியேற்றும் மலமிளக்கியாகவும், அதற்கான ஆகச்சிறந்த மருந்தாகவும் சீம்பால் இருக்கிறதென்றால் அதனது அருமை பெருமையை என்னவென்று சொல்வது. இப்படிப் பிள்ளையின் தேவையுணர்ந்து கணக் கச்சிதமாகச் சுரக்கும் சீம்பாலைப் போலான ஒன்றை நீங்கள் எந்த மருந்துக் கடையிலாவது வாங்கி வந்து பிள்ளைக்குக் கொடுத்துவிட முடியுமா, சொல்லுங்கள் பார்ப்போம்?
குழந்தை பிறந்தவுடனே ஏற்படுகிற அடிப்படை மாற்றங்களைத் தெரிந்து கொள்வதன் மூலமாக நாம் இன்னும்கூட தாய்ப்பால் பற்றிய தெளிவான முடிவிற்கு ஓரளவு வர முடியும்.
பத்து மாதங்களும் கர்ப்பப்பையினுள் இருந்த சிசுவானது இப்போது பிறந்து வெளியுலகிற்கு வந்துவிடுகிறது. அதாவது பாதுகாப்பான கர்ப்பப்பையிலிருந்து பாதுகாப்பற்ற வெளியுலகிற்கு, அப்படித் தானே! அதேசமயம் பத்து மாதங்களும் கர்ப்பவதியின் ரத்தத்திலிருந்து குழந்தையின் வளர்ச்சிக்குத் தேவையான சத்துக்களை நயமாகப் பிரித்தெடுத்து கர்ப்பப்பையினுள் வைத்தே சிசுவிற்கு ஊட்டச்சத்து புகட்டிய நஞ்சுப்பையின் வேலையை, குழந்தைகள் பிறந்த பின்னே மார்பகம் திறமையாகச் செய்யத் துவங்கிவிடுகிறது. இதிலே ஒரே வித்தியாசம் என்னவென்றால், நறுமணத்துடன் கூடிய குழந்தைக்கென்றே பிடித்த பிளேவரில் மார்பகம் தாய்பாலைச் சுரப்பதுதான். அடடே, இவை தானே இயற்கையின் கலப்படமேயில்லாத தாய்மையின் புனித வாசனையும்கூட.
பொதுவாக வயிற்றுக்குள் இருக்கும் போது குழந்தையின் வளர்ச்சிக்கு அம்மாவின் ரத்தமே போதுமானது தான். ஆனால் பிள்ளைகள் பிறந்துவிட்டால் மார்பிலே சுரக்கும் தாய்ப்பாலுடன் கூடவே தாய்ப்பாசத்தையும் அன்பையும் சேர்த்தே அல்லவா புகட்ட வேண்டியிருக்கும். ஏனென்றால் பிறந்த குழந்தைக்கு உடல் வளர்ச்சிமட்டுமல்ல மனவளர்ச்சியுமே மிக மிக முக்கியமானதுதான். நீங்கள் நிறை மாதக் குழந்தையாய் பிரசவித்திருந்தாலும்கூட, உண்மையில் அவர்கள் பிறந்த பின்னர்தான் படிப்படியாக அனைத்து உறுப்புகளுமே முழு வளர்ச்சியை எட்டுகின்றன. குழந்தைகளுக்கு உடல் வளர்ச்சி மட்டுமே போதமானதாக இருந்திருந்தால் அவர்கள் பத்து மாதத்திற்கு மேலாக இன்னும்கூட வயிற்றுக்குள் இருந்து கொண்டே நல்லபடியாக வளர்ந்து பிரசவித்திருக்கலாம் அல்லவா?
குட்டி விலங்குகளெல்லாம் பிறந்தவுடனே தத்தித் தத்தி சட்டென்று காலூன்றி நடக்கத் துவங்கிவிடுகிறார்களே! மனிதப் பிள்ளைகளான நாம் மட்டும் அப்படிப் பிறந்து எழுந்து நடப்பதற்கு ஏன் ஒரு வயது வரை ஆகிறது? அப்படிப் பிள்ளைகளாக எழுந்து நடக்கிற வரையிலுள்ள காலம்தான் முழுவளர்ச்சிக்கான காலமென்று வைத்துக் கொண்டால்கூட நாம் அப்போது பன்னிரெண்டு மாத வளர்ச்சிக் குறையுள்ள பிள்ளைகளாகத் தான் பெற்றெடுத்திருக்கிறோம் என்று தானே அர்த்தமாகிறது.
ஆக, நாமெல்லாம் குழந்தையின் தலைகூட நிற்கும் முன்னமே தான் பிரசவித்திருக்கிறோம் என்றால் உடல் வளர்ச்சிக்கு ஈடாக பிள்ளைகளின் மனவளர்ச்சிக்கும் எந்த அளவு முக்கியத்துவம் நாம் கொடுக்க வேண்டியிருக்கிறது என்பதையும், அதற்கு தாய்ப்பால் புகட்டுதல் எந்த அளவிற்கு உறுதுணையாக இருக்கிறது என்பதையும் அவசியம் நாம் உணர்ந்து கொள்ள வேண்டும். ஆக, நிலைமை இப்படியிருக்க உங்கள் மனதில் தாய்ப்பால் என்பது வெறும் உணவல்ல, உயிரை ஈனக்கூடய ஒன்று தான் என்கிற எண்ணம் உளப்பூர்வமாக உருவானால் தானே உங்களது முழு அன்பையும் கள்ளங்கபடமில்லாமல் பிள்ளைக்குக் கொடுக்க முடியும். ஆக, அன்புத் தாய்மார்களே! தங்குதடையின்றி உங்களது அளவில்லா அன்பால் குழந்தையை அரவணைத்து தாய்ப்பாலால் குளிப்பாட்டி மகிழுங்கள்.
இயற்கையாகவே மார்பில் சுரக்கும் தாய்ப்பாலில் உயிர்ச்சத்து இருக்கும் போது அதை ஒரு உயிரைக் கொடுப்பதாக நினைத்தே தாயவள் புகட்ட வேண்டும். ஒரு புல்லாங்குழலின் மேல் காதலே இல்லாத காற்றுக்கு இன்னிசையைப் பற்றி எதாவது புரியுமா? அதுபோலத்தான் பிள்ளையின் மேல் காதலே இல்லாமல் தாய்ப்பால் புகட்டும் தாயிற்கும் தாய்ப்பால் வெறும் உணவாகவே தெரியும்.
பிறந்த குழந்தைக்குப் பற்கள் இருக்காது என்பது நம் எல்லோருக்குமே தெரிந்த விஷயம் தான். அவர்களது மழலைச் சிரிப்பை அழகாய் உதிர்க்கும் போதே நாம் அப்பட்டமாய் பார்த்துவிடலாம். ஆனால் குழந்தைகளின் வாய்ப் பகுதியையும் தாண்டி உணவுக்குழாய், இரைப்பை, குடல் பகுதி, சிறுநீரகம், கணையம், கல்லீரல் போன்ற உள்ளுறுப்புகளின் வளர்ச்சியைப் பற்றியோ, அவற்றின் முதிர்ச்சியைப் பற்றியோ நாம் இம்மியளவாவது தெரிந்து வைத்திருக்கின்றோமா என்றால், இல்லை தானே? அதைப் பற்றித் தெரிந்து கொள்ள நாம் சிறு முயற்சி எடுத்தாலும்கூட தாய்ப்பால் சுரப்பதின் அற்புதத்தை நாம் நன்றாக உணர்ந்து கொள்ள முடியும்.
பற்கள் முளைக்கின்ற நேரத்தில் தானே தாய்ப்பாலுடன் சேர்த்து மசித்த உணவையும் அவர்களுக்குக் கொடுக்க முடியும். குழந்தைகள் பிறந்த நான்கு முதல் ஏழாவது மாதத்தில் தானே பிறை போன்ற அழகிய பற்கள் முளைக்கத் துவங்குகின்றன. எனவேதான் அம்மாவின் கையினால் மசித்த நிலாச் சோற்றை குழந்தைகளுக்கு ஆறாவது மாதத்திற்குப் பின்பாக ஊட்டச் சொல்லி மருத்துவர்களும் அறிவுறுத்துகிறார்கள். இத்தகைய பற்களின் வளர்ச்சிக்குத் தேவையான கால்சியத்தையும், வாய்ப்பகுதியில் தொற்று ஏற்படாமல் இருப்பதற்கான இம்யுனோகுளோபுளின்-ஏ ஆண்டிபாடிகளையும் சுரப்பதும்கூட அம்மாவின் தாய்ப்பால் தானே!
குழந்தைகள் பிறக்கின்ற போதே அவர்களின் உணவுச் செரிமானப் பகுதியும்கூட உருப்படியாக முழுவளர்ச்சியும் எட்டியிருப்பதில்லை. அதை அவர்களின் பட்டு போலான பிஞ்சு உதட்டையும், பூவிதழ் போலான நுனி மொட்டு நாக்கையும் பார்த்தாலே தெரிகிறதல்லவா!
மிதமான சூட்டில், சரியான விகிதத்தில், பக்குவமாக, உயிர்ச் சத்துகளுடன் கூடிய சீம்பாலைக் குடிக்கிற போதுதான் அவை குழந்தைகளின் வயிற்றுக்குள்ளாகச் சென்று உணவுக்குழாயின் உட்புறமாக இருக்கும் ஜெல்லி போன்ற பகுதிகளை செழுமைப்படுத்துகிற கைப்பக்குவத்தை செய்யத் துவங்குகின்றன. அதோடு மட்டுமில்லாமல் குழந்தைகளின் செரிமானப் பகுதிகளை நோய்த் தொற்றுகள் போன்ற ஏனைய பாதிப்புகளிலிருந்து பாதுகாக்க வேண்டிய அக்கறையோடும் தான் அவை சுரக்கவே செய்கின்றன.
சீம்பாலும் சொட்டுச் சொட்டாகத் தீர்த்தம் போல குறைவாகவே சுரக்கிறது. அது குட்டி இரைப்பையையும், குறுகிய குடலையும் கொண்ட குழந்தையின் தேவைக்கேற்பவே சுரக்கிறது. பிறந்த குழந்தையினுடைய இரைப்பையின் அளவு எவ்வளவு என்று தெரியுமா? ஒரு கோலிக்குண்டு அளவுதான். அதாவது ஐந்து முதல் ஏழு மில்லிலிட்டர் அளவேயான சிரப் பாட்டிலினுடைய மூடியளவு கொள்ளளவு உடைய குட்டியூண்டு பை தான், குழந்தையினுடைய இரைப்பையும். இந்த அளவு இரைப்பைக்கு சீம்பால் சுரக்கிற அளவே போதுமானது தானே. அதனால்தான் தாய்மார்கள் யாரும் எனக்குத் தாய்ப்பால் பத்தலையே என்று பதற வேண்டியதில்லை என்று அடிக்கடி எடுத்துச் சொல்ல வேண்டியிருக்கிறது.
அதே சமயம் இரைப்பையின் அளவுக்கேற்ப சீம்பால் குறைவாகவே சுரக்கிறது என்றாலும்கூட குழந்தையின் ஒரு நாளினுடையத் தேவையைப் பூர்த்தி செய்வதற்கு நீங்களும் அடிக்கடி தாய்ப்பால் புகட்ட வேண்டியிருக்கும் என்பதையும் நன்றாகப் புரிந்து கொள்ள வேண்டும். ஆக, கடுகு சிறுத்தாலும் காரம் குறையாது என்கிற பழமொழிக்கேற்ப சுரக்கின்ற சீம்பாலும் ஆகச் சிறப்பு வாய்ந்தது என்பதை இப்போதேனும் புரிந்து கொண்டீர்களா?
தாய்ப்பாலில் இருக்கின்ற புரதங்களை இரைப்பையினால் எளிதாகச் செரித்துவிட முடியும். ஆனாலும் நம் தாய்மார்கள் இருக்கிறார்களே, அவர்கள் என்னவெல்லாம் செய்துவிடுகிறார்கள் தெரியுமா? தாய்ப்பால் கொடுக்க வேண்டிய வயதில் மாட்டுப் பால் கொடுக்கிறார்கள். பின்னர் மாட்டுப் பாலில் இருக்கின்ற சவ்வு போன்ற கேசினோஜன் புரதம் செரிக்காமல் போய் குழந்தைகளின் வயிறு புடைத்து ‘ஓ’ வென்று கரைந்து அழும்போது, அவற்றைச் செரிக்க வைப்பதற்காக கிரைப் வாட்டரை கடையில் வாங்கிக் கொடுக்கிறார்கள். ஆனால், ஒன்றைப் புரிந்து கொள்ளுங்கள் தாய்மார்களே, தாய்ப்பால் மட்டுமே குடித்து வளரும் பிள்ளைகளுக்கு செரிமானப் பிரச்சனைகள் வருவதுமில்லை, கிரைப் வாட்டர் தேவைப்படுவதுமில்லை.
ஒருசில தாய்மார்கள், குழந்தைகள் அழுவதற்கு வாயில் புட்டிப்பாலைத் திணிப்பதைப் போல கிரைப் வாட்டரையும் அடிக்கடி ஊற்றிவிடுகிறார்கள். குழந்தைகளுக்கு கிட்டத்தட்ட அதுவொரு உணவைப் போலவே மாறிவிட்டது. கிரைப் வாட்டர் என்பது குழந்தைகளுக்கு தாய்ப்பாலைத் தவிர வேறு ஏதாவது ஒன்றை புகட்டிவிட்டு அதனால் வருகிற செரிமானப் பிரச்சனைக்காக கொடுக்கிற மருந்துதானே தவிர அதை ஒரு உணவாகவே கொடுக்க வேண்டிய அவசியமுமில்லை, மாட்டுப்பால் பால்பவுடர் தேவையுமில்லை என்பதையும் அவசியம் எல்லாரும் தெரிந்து கொள்ள வேண்டும்.
இரைப்பையிலிருந்து முன்குடலுக்குள்ளே செரிமானமாகிய உணவு உருண்டு திரண்டு வரும் போது, அவை கணைய நீரினால் சின்னஞ்சிறு துணுக்குகளாக உடைக்கப்பட வேண்டும். அப்படிச் செய்தால் தானே அவற்றை உறிஞ்சிக் கொள்ள குடலிற்கும் ஏதுவாக இருக்கும். ஆனால் நாம் ஏற்கனவே சொன்னபடி கணையமும்கூட இன்னுமும் முதிர்ச்சியடையாமல் தானே இருக்கிறது. எனவேதான் தாய்ப்பாலே அதற்கான நொதிகளையும் சேர்த்தே சுரந்துவிடுகிறது.
தாய்ப்பாலில் இருக்கிற லாக்டோஸ் சர்க்கரையானது குழந்தைகளுக்குத் தேவையான சக்தியைத் தருகிறது. குழந்தைகளின் வளரும் பற்கள் மற்றும் எலும்புகளுக்குத் தேவையான கால்சியம் சத்துக்களை உடல் உறிஞ்சிக் கொள்ள ஏதுவாக இந்த லேக்டோஸ் சர்க்கரைகள்தான் துணைபுரிகின்றன. மேலும் உடலுக்கு நன்மை பயக்கக்கூடிய லேக்டோபேசில்லஸ் பாக்டீரியாக்களை குடற்பகுதியில் உருவாக்குவதற்கும் இவைதான் உதவுகின்றன. இந்த பாக்டீரியாக்கள் தான் இரைப்பையிலிருந்து அரைத்தபடி குடலிற்கு வரும் உணவிலிருந்து சத்துக்களையெல்லாம் உடைத்துப் பிரித்து, அதனை ரத்தக்குழாய் வழியே கல்லீரலுக்கு அனுப்புகிற வேலையை கடமையோடு செய்கின்றன. ஏனென்றால் கல்லீரலில் தானே நாம் சாப்பிட்ட உணவை அதிசக்தியாக மாற்றுகிற நுணுக்கமான வேலைகள் படுஜோராக நடந்தேறுகின்றன. பார்த்தீர்களா! தாய்ப்பால் லாக்டோஸ் சர்க்கரையினுடைய அற்புதமான மகிமையை.
பொதுவாக நல்லபடியாக தாய்ப்பால் கொடுத்துக் கொண்டிருக்கிற தாய்மார்கள்கூட தவறாமல் செய்கிற தவறும்கூட ஒன்று இருக்கிறது. அதுதான் பிள்ளைக்குத் தாகமாக இருக்கிறதென்று தண்ணீரைக் கொடுப்பது. அதைப் பற்றிக் கேட்டால் தாய்ப்பால் பசிக்காக, தண்ணீர் தாகத்திற்காக என்று அப்பாவித்தனமாக பதிலளிப்பார்கள். இதெல்லாம் என்ன, பெரியவர்களாகிய நாம் அன்றாடம் சாப்பிடுகிற போது தண்ணீரையும் சேர்த்துக் கொண்டு பசியாறுகிற பழக்கம் தானே. ஆனாலும் தாய்ப்பாலில் முழுக்க முழுக்க 88 சதவீதம் தண்ணீரே இருக்கும் போது நாம் ஏன் கூடுதலாக தண்ணீரைக் கொண்டே பிள்ளையின் வயிற்றை நிரப்புவதற்குத் துடியாய்த் துடிக்க வேண்டும்? இவ்வளவு தூரம் சொல்லியும்கூட இன்னமும் உங்கள் மனதிலிருந்து தாய்ப்பால் உணவுதான் என்கிற மனநிலை மாறவில்லையா?
ஒருசிலர் கோடை காலத்தில் தான் குழந்தைக்கு வியர்க்குமே, அதனால் நீர்ச்சத்தும்கூட நிறையத் தேவைப்படுமே, அப்போது நாங்கள் என்ன செய்வது?? என்று பயப்படுகிறார்கள். ஆனால் குழந்தையின் தேவைக்கேற்ப சுரப்பது தானே தாய்ப்பாலின் மகிமையே. அப்படியிருக்க நன்றாக தாய்ப்பால் அருந்திக் குடிக்கிற குழந்தைகளுக்கு கோடைக் காலமானாலும்கூட தண்ணீரின் தேவை ஏற்படுவதேயில்லை. குழந்தைகளுக்கு நாம் மசித்த உணவை ஊட்டிவிடத் துவங்கும் ஆறாவது மாதத்திலிருந்து வேண்டுமானால் கூடுதலாக தண்ணீரைக் கொடுக்க ஆரம்பிக்கலாம். இதற்கு அப்புறமும் நீங்கள் தண்ணீரைக் கொடுத்தே தீருவேன் என்று விடாப்பிடியாக இருந்தால் குழந்தைகளுக்குப் பதிலாக அம்மாவுக்கு குடிப்பதற்காக நிறைய தண்ணீரைக் கொடுங்கள், அப்போது எல்லாமே சரியாகிவிடும்.
அதேபோல அம்மாக்கள் தண்ணீரை அதிகமாகக் குடித்தால் தாய்ப்பாலும் தண்ணியாகவே சுரக்கும், தொந்தி போட்டுவிடும் என்று நினைத்தும் ஒருசிலர் தண்ணீரைக் குடிக்காமலே இருந்துவிடுவார்கள். ஆனால் பிரசவத்திற்குப் பின்பு தண்ணீரை நிறைய குடிக்கிற போதுதான் இரத்த இழப்பினால் சோர்ந்து போன இரத்த ஓட்டமும் சீராகும், அதேசமயம் இரத்தத்திலே தாய்ப்பால் உற்பத்தியும் தங்குதடையின்றி நடக்கும் என்பதையும் தாய்மார்கள் அவசியம் தெளிந்து கொண்டாக வேண்டும்.
உங்கள் பிள்ளைகளுக்கு செர்லாக் முதல் நிலை, இரண்டாம் நிலை என்று கணக்குப் போட்டு எப்போது என்ன தரலாமென, உங்களது விஞ்ஞான மூளையைக் கசக்கிப் பிழிந்தெடுத்து எதை வேண்டுமாலும் குடிக்கக் கொடுக்கலாம் தான். ஆனால் பெற்றவளின் பாசத்திலே மூளை போடுகிற கணக்கு தான் நமக்குத் தெரியுமா? குழந்தைகளின் தேவைக்கேற்ப அனைத்து நுண்ணூட்டச் சத்துக்களையும் கொண்டு சரியான அளவிலே, சரியான தரத்திலே, சரியான நேரத்திலே அந்தந்த குழந்தையின் வளர்ச்சிக்கேற்ப தாய்ப்பால் மிகக் கச்சிதமாகச் சுரக்கிறது.
இப்படிச் சுரக்கின்ற தாய்ப்பாலைப் புகட்டுகிற போதுதான் குழந்தைகளுக்கு அது நன்றாகச் செரிமானமாகி, வளர்ச்சிக்குத் தேவையான சத்துக்களையெல்லாம் குடலும் உள்வாங்கிக் கொண்டு மீதமாகிய கழிவுகளை எவ்வித சிரமமுமின்றி மலமாகவும், சிறுநீர் வழியாகவும் வெளியேற்ற முடிகிறது. அதேசமயம் எதையாவது காரணமாகச் சொல்லி நீங்கள் தாய்ப்பாலைக் கொடுக்கத் தவறிவிட்டால், அதனால் மலம் கழித்தல் தொடர்பான பிரச்சனைகளும், சிறுநீரக பிரச்சனைகளும் அவர்கள் குழந்தைகளாக இருக்கும் போதோ அல்லது பெரியவர்களாக வளர்ந்த பின்னரோகூட வருவதற்கான வாய்ப்புகளும் இருக்கத்தான் செய்கிறது என்பதையும் புரிந்து கொள்ள வேண்டும்.
தாய்ப்பாலைப் பற்றிச் சொல்ல வேண்டுமென்றால் விக்ரமாதித்யனுக்கு வேதாளம் கதை சொல்வது போல இன்னும் கதைகதையாய் சொல்லிக் கொண்டே போகலாம். ஆனாலும் இங்கே நாம் சொல்லுவதெல்லாம் வெறும் கதை மட்டுமல்ல, விஞ்ஞானத்தின் மூலம் அறிவியல்பூர்வமாக அலசி ஆராய்ந்து சொல்லப்பட்ட விசயங்களைத்தான் பேசிக் கொண்டிருக்கிறோம். சமீபத்தில் பிரசவித்த தாய்மார்களிடைய நடத்தப்பட்ட ஆய்வில்கூட ஒட்டுமொத்த பிரசவித்தவர்களில் 95% தாய்மார்கள் உடலளவில் தாய்ப்பால் ஊட்டுவதற்கு இயல்பாகவே தயாராகத்தான் இருக்கிறார்கள் என்பதாகத் தெரிவிக்கிறது. ஆனாலும் இன்னும் பலரோ தங்களுக்குத் தாய்ப்பால் சுரக்கவில்லையே என்கிற மனநிலையிலே குழப்பத்தோடுதான் இன்னும் தாய்ப்பாலைப் புகட்டிக் கொண்டிருக்கிறார்கள்.
பிரசவித்த தாய்மார்களுக்கு ஒரு நாளைக்குச் சராசரியாக 500 – 900 மில்லி லிட்டர் வரை தாய்ப்பால் சுரக்கிறது என்று கணக்கிடப்பட்டுள்ளது. இதன் மூலமாக நமது குழந்தைகளுக்குச் சராசரியாக ஒரு நாளைக்கு 520 கிலோ கலோரிகள் வரையிலும் எனர்ஜி கிடைத்துவிடுகிறது. ஆக, இவ்வளவு சக்தி வாய்ந்த தாய்ப்பாலைச் சுரப்பதற்கு அம்மாவிற்கு கொஞ்சமாவது தெம்பு வேண்டாமா? அதற்காகத் தான், குழந்தையைப் பெற்றவள் தினந்தோறும் 700 கிலோ கலோரிகள் வரை சத்து கிடைக்கக்கூடிய அளவிலே உணவைக் கட்டாயம் எடுத்துக் கொள்ள வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்திக் கொண்டே இருக்கிறார்கள்.
அதேபோல தாய்ம்மார்களாகிய நீங்களும், நாம் தான் பிள்ளை பெற்றுவிட்டோமே, இனிமேல் எதற்காக போய் மாசமாக இருக்கையில் சாப்பிட்டதைப் போலவே அதிகமாகச் சாப்பிட வேண்டும் என்று நீங்களாகவே நினைத்துக் கொண்டு சாப்பாட்டைக் குறைத்துக் கொள்ளக் கூடாது. அதேசமயம் பிரசவித்த பிறகு உடம்பைக் குறைக்கப் போகிறேன், எனக்கு மிகவும் சங்கடமாக இருக்கிறது என்று சாப்பாட்டை ஒதுக்கித் தள்ளிவிடவும் கூடாது. குழந்தைக்குத் தாய்ப்பாலூட்டுவதற்காக நீங்கள் கர்ப்பகாலத்தில் மட்டுமல்ல தாய்ப்பாலூட்டும் காலத்திலும்கூட அதிகமான சத்துள்ள ஆகாரங்களாகப் பார்த்து அவசியம் எடுத்துக் கொள்ளத்தான் வேண்டும், தாய்மார்களே.
தாய்ப்பாலில் குழந்தைக்குத் தேவையான நானூற்றுக்கும் மேற்பட்ட விதவிதமான எக்கச்சக்கமான கலவையான பொருட்கள் குவிந்து போய் கிடக்கின்றன. இவை எல்லாவற்றையுமே ஆய்வகத்திலே வைத்து பவுடர் வடிவிலே உருவாக்கிவிட முடியுமென்றா நினைக்கிறீர்கள்? சத்தியமாக முடியவே முடியாது. இப்படிப்பட்ட கலவைப் பொருட்களில் மிகமிக முக்கியமானவற்றை சொன்னால் நீங்கள் நிச்சயமாக நம்பிவிடுவீர்கள், தாய்ப்பால் உணவல்ல, உயிரே தான் என்று..
குழந்தைகளின் ஒவ்வொரு உறுப்புகளின் வளர்ச்சிக்காகவென்று தனித்தனியே வளர்ச்சிக்கான காரணிகளைச் சுரக்கிறது தாய்ப்பால். உச்சந் தலையிலிருந்து உள்ளங்கால் வரையிலும், கண்ணுக்குத் தெரிகிற தோலில் இருந்து உடலினுள்ளே இருக்கிற எலும்புகள், தசைகள், உள்ளுறுப்புகள் வரைக்குமான குழந்தையின் ஒவ்வொரு பகுதியும் முதிர்ச்சியடையக்கூடிய சூப்பர்-பவர் மூலக்கூறுகளைக் குழந்தைகளுக்காக ஓயாமல் தாய்பால் சுரந்து கொண்டேதான் இருக்கிறது. அதனால் தான் தாய்ப்பாலைக் கவனமாகக் கொடுத்தாலே குழந்தைகளின் வளர்ச்சிகள் சரியாகத்தான் இருக்கும் என்று எல்லோரும் தொடர்ந்து சொல்லியபடியே இருக்கிறார்கள். அதெல்லாம் சரி, அது என்ன அதிசக்தி வாய்ந்த சூப்பர் மூலக்கூறுகள்?
முழு உடல் வளர்ச்சிக்கு – வளர்ச்சிக் காரணிகள் (Growth Factor), தோல் வளர்ச்சிக்கு – தோல் வளர்ச்சிக் காரணிகள் (Epidermal Growth Factor), நரம்பு மண்டல வளர்ச்சிக்கு – நரம்பு வளர்ச்சிக் காரணிகள் (Nerve Growth Factor), செரிமான வளர்ச்சிக்கு – இன்சுலின் வளர்ச்சிக் காரணிகள் (Insulin Growth Factor) மற்றும் மூளையிலுள்ள பிட்யூட்டரி மற்றும் ஹைப்போதலாமஸ் சுரக்கின்ற ஹார்மோன்கள் என அத்தனையுமே தாய்ப்பாலின் வழியே குழந்தையினுடைய உடலிற்குள் செல்கிறது. இதனால் குழந்தைகளின் வளர்ச்சியும் தங்குதடையின்றி கோலாகலமாக நடந்தேறுகிறது. இவற்றையெல்லாம் கடையில் கிடைக்கிற புட்டிப்பாலும், பால்பவுடரும் நிச்சயமாகக் கொடுக்காது. இப்போது சொல்லுங்கள் தாய்மார்களே, தாய்ப்பால் என்பது …..? வெறும் உணவா?
அன்றாடம் நாம் புதிது புதிதாக கண்டுபிடித்துக் கொண்டிருக்கும் நோய்க்கிருமிகளிலிருந்து குழந்தைகளைக் காக்கும் வேலையைத்தான் தாய்ப்பாலும் பார்த்துப் பார்த்துச் செய்கிறது. ஒரு பேச்சுக்கு அம்மாவுக்கு ஏதாவதொரு கிருமித்தொற்று வந்து காய்ச்சல்-சளி பிடித்துள்ளது என்றே வைத்துக் கொள்வோம். உடனே அம்மாவினுடைய இரத்தத்தில் திமுதிமுவென இத்தகைய நோய்க்கிருமிகளுக்கு எதிரான நோய் எதிர்ப்பு சக்திகளும் உருவாகிவிடும் தானே?
ஆக, இவைதான் அத்தகைய நோய்க்கிருமிகளை எதிர்த்துச் சண்டையிட்டு அம்மாவைப் பாதுகாக்கிற போருக்கான வேலையைச் செய்கிறது. அதே சமயத்தில் இந்த நோய் எதிர்ப்பு சக்திகள் நிறைந்த இரத்தம் தானே தாய்ப்பாலாகப் பிரவாகமெடுத்து மார்பின் வழியே குழந்தைக்கும் செல்கிறது? அப்படியென்றால் இதுவரையிலும் நோய்வாய்ப்பட்டதன் மூலமாக அம்மாவின் உடலில் என்னென்ன நோய் எதிர்ப்புச் சக்தியெல்லாம் உருவாகி இருந்ததோ, அவையனைத்தும் தாய்ப்பாலின் வழியாக குழந்தையின் உடலிற்குள் சென்று அந்த குறிப்பிட்ட நோய்க்கு எதிரான நோய் எதிர்ப்புச் சக்தியை குழந்தைக்கும் கொடுத்து விடுகிறது என்பது தானே அர்த்தமாகிறது. இதனால்தான் அம்மாவுக்குக் காய்ச்சல் வந்தாலும்கூட தாய்ப்பால் கொடுப்பதை நிறுத்த வேண்டாம் என்று அறிவுறுத்துகிறார்கள்.
அப்படி, என்னென்ன நோய் எதிர்ப்புச் சக்திகளையெல்லாம் குழந்தைகளுக்கு தாய்ப்பால் கொண்டு செல்கிறதென்று தெரியுமா? இம்யுனோகுளோபின்கள், ரத்த வெள்ளையணுக்கள், லைசோசைம், மேக்ரோபேஜ், லாக்டோ பெராக்சிடேஸ் நொதிகள், லாக்ட்டோபெரின் மற்றும் பைபிடல் காரணிகளென இன்னும் நிறைய நிறைய சொல்லிக் கொண்டே போகலாம். இவையெல்லாமே குழந்தையைப் பாதுகாப்பதற்காக அம்மாவால் தாய்ப்பால் மூலமாக அனுப்பப்படுகின்ற அதிரடிப்படை வீரர்கள் தானே.
தாய்ப்பாலில் வைட்டமின் சத்துகளும் நிறைந்திருக்கின்றன. வைட்டமின்-டி சத்துகள் பற்கள் மற்றும் எலும்புகளின் வளர்ச்சிக்கு மிகவும் உறுதுணையாக இருக்கின்றன. அதேசமயம் கூடுதலாக குழந்தைகளுக்கு வைட்டமின்-டி சத்துகள் கிடைப்பதற்காக மருத்துவர் பரிந்துரைக்கிற சத்து டானிக்குகளை எடுத்துக் கொள்வதோடு, அவர்களின் மீது அதிகாலை மிதமான சூரிய வெளிச்சம் படுமாறும் பார்த்துக் கொள்ள வேண்டும் என்பதை நாம் மறந்து விடக்கூடாது.
அதேசமயம் வைட்டமின்- கே சத்துகள் குழந்தைக்குத் தேவையான அளவில் தாய்ப்பாலில் இல்லாததால், அவர்கள் பிறந்த உடனேயே வைட்டமின்- கே ஊசியை தொடையில் போடுவதற்கும் மருத்துவர்கள் அறிவுறுத்துகிறார்கள். வைட்டமின்-கே சத்துகள்தான் அடிபட்டவுடனே காயத்திலிருந்து அதிக இரத்தப்போக்கு ஏற்படாமல் உடனே இரத்தத்தை உறைய வைக்கின்ற வேலையைச் செய்கின்றது. ஆகவே, மருத்துவர்கள் அறிவுறுத்தும் இந்த வைட்டமின்களைத் தவிர்த்து வேறு எந்த சத்து டானிக்குகளும் குழந்தைகளுக்குத் தேவையில்லை என்பது இப்போது உங்களுக்குப் புரிந்திருக்குமே.
பலவித மாயாஜாலங்களை உள்ளடக்கிய தாய்ப்பால் சுரத்தலென்பது குழந்தையின் தேவைக்கேற்ப தன்னையே தந்திரமாக தகவமைத்துக் கொள்ளும் ஒரு மாய அருவி என்றே சொல்லலாம். ஒருவேளை நீங்கள் குழந்தைக்குத் தாய்ப்பால் கொடுக்காமல் மாற்றுப் பாலைக் கொடுத்துவிட்டால், இனிமேல் குழந்தைக்குத் தாய்ப்பால் தேவையேயில்லை போலும், நாம் எதற்கு மெனக்கெட்டு இரத்தத்தைப் பிழிந்து தாய்ப்பாலாகச் சுரந்து கஷ்டப்பட வேண்டும் என்று தாய்ப்பாலைக் குறைவாகச் சுரப்பதற்காக மார்பகமே தன்னைத் தயார்படுத்திக் கொண்டுவிடும் என்பதையும் நாம் புரிந்து கொள்ள வேண்டியிருக்கிறது.
அற்புத உயிரினமான பச்சோந்தி தனது வாழ்வைத் தக்க வைத்துக் கொள்வதற்காக தன் நிறத்தை தேவைக்கேற்பவாறு எப்படியெல்லாம் மாற்றிக் கொள்கிறதோ, அதேபோல தாய்ப்பாலும்கூட குழந்தையின் தேவைக்கேற்ப இரவும் பகலுமாக, ஒவ்வொரு நாளுமாக, தாய்ப்பால் கொடுக்க ஆரம்பிக்கும் போது ஒருவிதமாகவும், கொடுத்து முடிக்கப் போகும் தருவாயில் ஒருவிதமாகவும் தன்னை மாய வடிவங்களில் தகவமைத்துக் கொண்டே இருக்கிறது. என்ன தாய்மார்களே, எல்லாமே ஆச்சரியமாக இருக்கிறதா? ஆம், இனிமேல் தானே நீங்கள் இதுவரை கேட்டிராத பல ஆச்சரியமான உண்மைகளைத் தெரிந்து கொள்ளப் போகிறீர்கள்.
- காலை பால்
பொதுவாகவே அம்மாக்களுக்கு அதிகாலையில் தான் தாய்ப்பால் அதிகமாகச் சுரக்கிறது. ஆகவே தான் இந்த அதிகாலை நேரத்தைப் பயன்படுத்திக் கொண்டு குழந்தைகள் நன்றாகப் பசியாறும் வகையில் தாய்ப்பாலைப் புகட்டவும், அதேசமயம் தாய்ப்பாலை பத்திரமாக எடுத்து குவளையில் சேகரித்து வைத்துக் கொண்டு தேவைப்படும் போது மீண்டும் பயன்படுத்திக் கொள்ளவோ நாம் செய்யலாம்.
- இரவு பால்
இரவில்தான் தாய்ப்பாலைச் சுரக்க வைக்கக்கூடிய புரோலாக்டின் ஹார்மோன்கள் அதிகமாகச் சுரக்கிறது. எனவே இந்த இரவு நேரத்தில் தாய்ப்பால் புகட்டுவதில் அம்மாக்கள் அதிகமாக கவனத்தில் கொள்கிற போது தாய்ப்பால் சுரத்தல் தங்குதடையின்றி நடைபெறுகிறது.
- தினந்தினம் தாய்ப்பால்
தாய்ப்பால் சுரத்தலுடைய அளவும், அதிலுள்ள சத்துகளுடைய தன்மையும் குழந்தைகள் வளர்ந்து வருகிற வயதிற்கேற்ப தினந்தினம் மாறிக் கொண்டேதான் இருக்கும். முதல் நாள் சுரக்கும் தாய்ப்பாலைப் போலவே அடுத்த நாளும் சுரக்காது. ஒவ்வொரு நாளும் குழந்தையின் வளர்ச்சிக்கேற்ப ஒவ்வொரு தனித்தன்மையோடு தான் தாய்ப்பாலும் சுரக்கிறது.
- முதல் ஆறு மாதம்
முதல் ஆறு மாதத்திற்குச் சுரக்கும் தாய்பாலில் அதுவே குழந்தையின் முழுவளர்ச்சிக்கும் போதுமானதாக இருக்கிறது. ஆனால் அதற்குப் பின்புதான் குழந்தைகளெல்லாம் துறுதுறுவென தவழ, உட்கார, நிற்க, எழுந்து நடக்கவென்று, துள்ள ஆரம்பிப்பார்கள். அந்த சமயம் பார்த்து பிறந்த ஆறாவது மாதத்திலே குழந்தைக்கு மசித்த உணவை ஏற்றுக் கொள்ளுகிற பக்குவமும் வந்து விடுகிறது. எனவேதான் வளருகின்ற குழந்தைகளுக்குக் கூடுதலாக ஆறாவது மாதத்திலிருந்தே தாய்ப்பாலுடன் சேர்த்து கூடுதல் உணவையும் கொடுக்க வேண்டியிருக்கிறது என்பதைப் புரிந்து கொள்ளலாம்.
- குறை மாதம் – நிறை மாதம்
தாய்ப்பாலானது சிறிய மார்பகம், பெரிய மார்பகம் என்று மார்பகத்தின் அளவைப் பார்த்தெல்லாம் சுரப்பதில்லை. ஆனால் நிறைமாதமா, குறைபிரசவமா என்று பார்த்து மட்டும் அதற்கேற்ற தாய்ப்பாலைச் சுரக்கிறது. குறை மாதத்தில் பிறந்த குழந்தைகள் அம்மாவின் பத்துமாத பாதுகாப்பில் இருந்து முன்னரே பிறந்து வெளியே வந்துவிடுவதால், கூடுதல் பாதுகாப்பு வேண்டி நிறைமாதத்தில் பிறக்கின்ற குழந்தையின் தாய்ப்பாலைவிட அதிகமான புரதச்சத்துள்ள தாய்ப்பாலாகச் சுரக்கிறாள் அம்மா. ஆனால் எந்தச் சூழ்நிலையிலும் தாய்ப்பால் சுரக்காமல் இருக்காது என்பதை மட்டும் நாம் மனதில் வைத்துக் கொள்ள வேண்டும்.
- சீம்பால்
முதல் மூன்று நாட்களுக்கு கட்டியாக, பிசுபிசுப்பாக, மஞ்சள் நிறத்தில் சீம்பால் கொஞ்சமாகச் சுரக்கிறது. சீம்பாலின் முக்கியமான நோக்கமே குழந்தைகளின் வெளி உலகிற்குத் தேவையான பாதுகாப்பை உடனடியாக அளிப்பதுதான் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.
- இடைநிலை பால்
குழந்தையைப் பிரசவித்த நான்காவது நாளிலிருந்து இரண்டாவது வாரம் வரைக்கும் இந்த இடைநிலைப் பால் சுரக்கிறது. இது சீம்பாலிற்கும், முதிர்ந்த தாய்ப்பால் சுரத்தலுக்குமான இடைப்பட்ட நிலையாகும். இந்தக் காலக்கட்டத்தில் தான் சீம்பாலில் சர்க்கரையும், கொழுப்பும் குறைவாக சுரந்த காரணத்தால் முதல் மூன்று நாட்களில் குறைந்து போன பத்து சதவீத எடையைச் சமன் செய்யவும், பின்பு மீண்டும் குழந்தைகளின் எடையை அதிகரிக்கவும் வேண்டி சர்க்கரை மற்றும் கொழுப்புச் சத்து நிறைந்த தாய்ப்பாலாக மார்பகம் சுரக்கிறது. மேலும் இந்த நாட்களின் கணக்குகள் என்பவை தாய்மார்களுக்குத் தாய்மார்கள் வித்தியாசப்படும் என்பதையும் மனதில் கொள்ள வேண்டும்.
- முதிர்ந்த பால்
இது கட்டியாக இல்லாமல் தண்ணியாகச் சுரக்கிறது. உடனே எல்லோரும் தண்ணியாகச் சுரப்பதால் வேறு எந்த சத்தும் இருக்காதோ என்றெல்லாம் நினைத்துக் குழம்பிவிடக் கூடாது. குழந்தையின் வளர்ச்சிக்குத் தேவையான அத்தனை சத்துகளையும் உள்ளடக்கிய நிறைவான பாலாகவே இது சுரக்கிறது. இந்தப் பால் தான் தாய்ப்பால் கொடுக்கின்ற காலம் வரையிலும் தொடர்ந்து மார்பிலே சுரந்து கொண்டே இருக்கும். உலக சுகாதார நிறுவனத்தின் அறிவுறுத்தல்படி குறைந்தபட்சம் இரண்டு வருடங்கள் வரையிலாவது தாய்பாலூட்டுவது குழந்தை மற்றும் தாய் இருவருக்குமே நல்லது.
- முன்பால்
நீங்கள் தாய்ப்பால் புகட்ட ஆரம்பித்தவுடன் மார்பிலே முதன் முதலாக சுரப்பதுதான் முன்பால். இதில் நீர்ச்சத்து தான் அதிகமாக இருக்கும். அது நீண்ட நேரமாகவே அழுதழுது தொண்டை வறண்டு போன குழந்தையின் தாகத்தைத் தீர்ப்பதற்காகத் தான் ஆரம்பத்திலே சுரக்கிறது.
- பின்பால்
தாய்ப்பால் கொடுத்து முடிக்கிற தருவாயில் சுரப்பதே பின்பால். இதிலே கொழுப்புச் சத்து நிறைந்திருப்பதால் குழந்தையின் பசியைப் போக்கிய உணர்வைக் கொடுக்கிறது. மேலும் தாய்ப்பாலில் இருக்கின்ற இந்த கொழுப்புச் சத்துகள் தான் மூளை நரம்புகள் வளருவதற்கும், குழந்தையின் எடை கூடி அவர்கள் கொழு கொழுவென அழகாக வளருவதற்கும் உதவுகிறது. ஆக, எவ்வளவு நாள் கொடுத்தும் குழந்தையின் எடை கூடவேயில்லையே என்று சொல்லுபவர்கள் இந்த பின்பால் குழந்தைக்குக் கிடைக்கிறதா என்பதையும் உறுதி செய்து கொள்ள வேண்டும்.
பல தாய்மார்கள் சர்வ சாதாரணமாக செய்கிற முக்கியமான தவறும் இதிலே இருக்கிறது. இங்கு சற்றுக் கவனமாகவும், கொஞ்சம் பொறுமையாகவும் வாசியுங்கள் தாய்மார்களே. ஒருவேளை இன்னமும் உங்கள் குழந்தைகளுக்கு இதே மாதிரியான தவறான முறையில்கூட நீங்கள் தாய்ப்பாலைப் புகட்டிக் கொண்டும் இருக்கலாம்.
ஒருசில தாய்மார்கள் வாரக் கணக்கிலே தாய்ப்பால் கொடுத்துக் கொண்டிருந்தாலும்கூட, “என் பிள்ளைக்கு எடை கூடவே மாட்டேங்குது, டாக்டர் சொன்னபடி மூன்று நாளுக்கு அப்புறமாவது எடை போடுவானென்று பார்த்தால், இன்னும் அவன் போகப் போக வத்திக்கிட்டே போறானே தவிர சத்துப் பிடித்தார் போல எனக்குத் தெரியவில்லை” என்று மருத்துவமனை மருத்துவமனையாக வாசலேறிக் கொண்டிருப்பார்கள். ஆனால் அப்படி குழந்தைகள் எடை கூடாமல் இருப்பதிலும்கூட ஒரு அறிவியல் இரகசியம் இருக்கத்தான் செய்கிறது.
குழந்தைகள் ஒருபுறம் மார்புக் காம்பைக் கவ்வி சுவைத்தாலே இரண்டு மார்பிலும் தாய்ப்பால் சுரக்கும் என்பதை நாம் முன்னமே பார்த்தோம் அல்லவா! முதலில் நீங்கள் என்ன செய்வீர்கள் என்று சொல்லட்டுமா? குழந்தை அழுதவுடனே மார்பின் ஒருபுறம் போட்டு குழந்தைக்குத் தாய்ப்பால் புகட்டுவீர்கள். உடனே ஏதோ ஞாபகம் வந்தார் போல திடுக்கிட்டு, அச்சச்சோ! இன்னொரு மார்புலேயும் தாய்ப்பால் கட்டியிருக்கிறதே. அதை என்ன செய்ய? என்று பாதியிலேயே குழந்தையைத் தூக்கி இன்னொரு மார்பிலே போட்டுத் தாய்ப்பாலைப் புகட்டுத் துவங்கிவிடுவீர்கள், அப்படித்தானே? அப்படி நீங்கள் செய்ததே இல்லையென்றால் உங்களுக்கு ஒரு சல்யூட்..
நீங்கள் மேற்கண்டவாறு செய்கையில் என்ன நடக்கிறதென்றால், முதலிலே மார்பில் போட்டவுடன் குழந்தையின் தாகத்தைத் தீர்க்க முன்பால் மட்டுமே அப்போது சுரந்திருக்கும். நீங்கள் மறுபக்கத்தில் பால் கட்டிவிட்டதாக நினைத்துக் கொண்டு, பாதியிலேயே குழந்தையைத் தூக்கி இன்னொரு மார்பிலே போடும் போது அப்போதும் தண்ணீர்ச்சத்து நிறைந்த முன்பால் தானே அதிலும் சுரந்திருக்கும். அப்படியென்றால் நீங்கள் தாய்ப்பால் கொடுக்கிறேன் என்று சொல்லிச் சொல்லி வெறுமனே இரண்டு மார்பிலும் மாறி மாறி தண்ணீரைக் கொண்டே பிள்ளையின் வயிற்றை நிரப்பிக் கொண்டே இருக்கின்றீர்கள் என்று தானே அர்த்தமாகிறது. அதிலே இன்னொரு சிக்கலும்கூட இருக்கிறது.
முன்பால் மட்டுமே கொடுத்து வளரும் குழந்தைக்கு கொழுப்புச் சத்து நிறைந்த பின்பால் கிடைத்தே இருக்காது அல்லவா. அப்படி பின்பால் கிடைத்தால் தானே அதிலுள்ள கொழுப்புச் சத்துகளும் குழந்தைக்குச் சென்று அவர்களது எடையும் அதிகமாகும்? இப்போது புரிகிறதா, நம்முடைய குழந்தைகளுக்கு ஏன் எடை கூடுவதே இல்லையென்று? மேலும் இப்படி முன்பால் மட்டுமே குடித்துவிட்டு தூங்கும் குழந்தைகளுக்குத்தான் பசியே தீராதே, அப்புறம் என்ன, பிள்ளைகள் மீண்டும், மீண்டும் பால் கேட்டு தூக்கத்தில் எழுந்து அழத் துவங்குவார்கள். நீங்களும் பாவம் போல இரவும் பகலும் உறங்காமல் கொள்ளாமல் உட்கார்ந்து தாய்ப்பாலைப் புகட்டிக் கொண்டே இருக்க வேண்டியிருக்கும்.
ஆதலால் குழந்தைகள் மார்பின் ஒருபக்கம் முழுவதுமாக தாய்ப்பால் குடித்து முடித்த பின்னர்தான் மறுபக்க மார்பிலே தாய்ப்பாலைப் புகட்டுவதற்கு அவர்களை மாற்ற வேண்டும். அப்படி ஒருவேளை மறுபக்க மார்பிலே குழந்தைகள் பால் குடிக்காமல் தாய்ப்பால் கட்டிவிட்டாலும் கூட, அதை நீங்கள் சுத்தமான கிண்ணத்தில் பீய்ச்சியெடுத்து குளிர்சாதனப் பெட்டியில் வைத்து பராமரிப்பதன் மூலமாக 24 மணி நேரம் வரையிலும் அதை உபயோகித்துக் கொள்ளவும் முடியுமே.
இறுதியாக, தாய்ப்பாலில் மட்டுமே இருக்கின்ற டாரின், சிஸ்டின் போன்ற அமினோ அமிலங்கள் மாட்டுப் பாலிலோ, பால் பவுடரிலோ இருப்பதில்லை என்பதையும் தெரிந்து கொள்ளுங்கள். இவை நரம்பு மண்டலத்தினுடைய வளர்ச்சிக்கும், உடலைக் கட்டுப்படுத்தக்கூடிய பல்வேறு சமிக்கைகளை மூளை மற்றும் ஏனைய பகுதிகளுக்கு எடுத்துச் செல்லுகிற வேலையையும் சுறுசுறுப்பாகச் செய்கிறது. இப்படிப்பட்ட தாய்ப்பாலை எந்த ஆய்வகத்திலும் நிச்சயமாக தயாரிக்கவே முடியாது அல்லவா.
என்ன தாய்மார்களே! இப்போது ஏதோ புத்தம் புதிய உலகத்திற்குள் சென்று வந்ததைப் போல திகைப்பாக இருக்கிறதா? இவ்வளவு காலமும் தாய்மார்களாகிய நாம் இன்னமும் வழிவழியாக காதுவழியே கேட்ட அறிவுரைகளைக் கொண்டே நம்முடைய பிள்ளைகளை வளர்த்துக் கொண்டு வருகிறோம். இதிலிருந்து நம்மைப் பெற்றோரும் கூட தப்பிவிடவில்லையே. ஆனால், இப்போது நாம் தாய்ப்பால் பற்றிய தெளிவினைப் பெற்றுவிட்டோம் அல்லவா! இனி இந்தச் செய்தியை தலைமுறை தலைமுறையாக நமது ஒவ்வொரு சந்ததியினருக்குமாக எடுத்துச் சொல்வோம். தாய்ப்பால் என்பது பசிக்காகச் சுரப்பதல்ல, குழந்தைகளின் உயிரை வளர்த்தெடுப்பதற்காகவே சுரப்பது என்று உரக்கச் சொல்லுவோம்.