தாய்ப்பால் எனும் ஜீவநதி 4 – டாக்டர் இடங்கர் பாவலன்

தாய்ப்பால் எனும் ஜீவநதி 4 – டாக்டர் இடங்கர் பாவலன்



தாய்ப்பாலூட்டுவதால் தாயிற்கும் நன்மையே!

அன்புள்ள அம்மாக்களுக்கு!

பத்து மாதங்களும் பிள்ளையைச் சுமந்து பெற்றெடுத்த களைப்பெல்லாம் நீங்கி இப்போது எல்லோருமே நலமாய் இருக்கிறீர்களா? அடடா, இப்போது பிள்ளையும்கூட உங்களைப் பார்த்தவுடனே அழகாகக் குலுங்கிச் சிரிக்கக் கற்றுக் கொண்டார்களே! அதுசரி, நீங்கள் எப்போதும் போல பிள்ளைக்குத் தாய்ப்பால் மட்டும் தானே கொடுத்துக் கொண்டு இருக்கிறீர்கள். ஆனாலும் ஒருசில தாய்மார்கள் உங்களைப் போல் இல்லாமல் இன்னும் தாய்ப்பால் புகட்டுவதைப் பற்றிய குழப்பத்திலேயே இருக்கிறார்கள். இந்த மாதிரியான தயக்கங்களால் குழந்தைக்குத் தேவையான தாய்ப்பால் மார்பில் சுரப்பது குறைவதுடன், கூடுதலாக அம்மாக்களுடைய மன அழுத்தத்தையும் அதிகரிக்கும் என்பதைப் பற்றி யாருமே புரிந்து கொள்வதில்லை.

தாய்ப்பால் எப்படிச் சுரக்கிறது என்பதைப் பற்றி ஏற்கனவே நாம் சென்ற கட்டுரைகளில் பார்த்தோம் அல்லவா! ஒருவேளை அதைப் பார்த்தவுடன், “ஆமாம், தாய்ப்பால் எங்களுக்குச் சுரக்குப் போகிறது, அதைப் பிள்ளைகளும் குடிக்கப் போகிறார்கள், அவ்வளவுதானே! உங்களுக்கென்ன எல்லாவற்றையும் சுலபமாகச் சொல்லி விடுவீர்கள். ஆனால் பிள்ளை பெற்றவளுக்குத் தானே வலியும், வேதனையும் எல்லாம்” என்று நீங்கள் யோசித்தால் இந்தக் கட்டுரை முழுவதும் உங்களுக்காகத்தான். ஆம், தாய்ப்பால் கொடுப்பதால் தாய்மார்களுக்கு எவ்வளவு நன்மைகள் கிடைக்கின்றன என்பதைப் பற்றித் தான் இக்கட்டுரை முழுவதுமாகப் பேசப் போகிறோம்.

பிரசவத்திற்குப் பின்பான மன அமைதி

தாய்மார்கள் குழந்தையைப் பெற்றவுடனேயே “அப்பாடா!” கொழந்த பொறந்ததுமே உடம்பே இலேசாகிடுச்சு! என்று நிம்மதி பெருமூச்சை விடுவார்கள். அப்போது உடம்பே காற்றைப் போலாகி வானத்தில் பறப்பது போலவும், அதேசமயம் உடம்பை அசைக்கவே முடியாதவாறு அசதியாகவும் உணருவார்கள். ஏனென்றால் அதுதான் பிள்ளையைப் பெற்றெடுத்தக் களைப்பு.

முதன் முதலாக பிள்ளையைப் பெற்றெடுக்கும் தாய்மார்களுக்கு ஏதோ ஒரு இனம் புரியாத உணர்வில் பூத்துக் குலுங்கிக் கொண்டிருப்பார்கள். “ஆஹா! என்னவொரு ஆனந்தம், நானும்கூட இப்போது அம்மாவாகிட்டேன்” என்று பலமுறை தங்களுக்குள்ளாகவே பூரித்துக் கொள்கிறார்கள். இந்த உணர்ச்சிப் பெருக்கை அனுபவிக்காமல் எந்த அம்மாக்களாவது கடந்து வந்திருக்க முடியுமா? அவர்களுக்குத் தான் பிள்ளையை இறுக அணைத்துக் கொண்டு கொஞ்சுவதிலும், பிஞ்சு விரலுக்குள் தங்கள் விரலை நுழைத்து பிடிக்கச் சொல்லி விளையாடுவதிலுமே சந்தோசங்கள் அத்தனையும் கிடைத்துவிடுகிறதே! ஆம், அம்மாக்களுமே அதைத் தவிர வேறென்ன கொண்டாட்டத்தைத் தான் எதிர்பார்த்துவிடப் போகிறார்கள்?

எப்படா பிள்ளையைப் பார்ப்போம்! என்கிற ஏக்கத்தை பெண்கள் கருவாகியிருந்த காலத்திலிருந்தே கொண்டிருப்பார்கள். சில சமயங்களில் சிசேரியன் செய்து கொண்டு பிள்ளையைப் பார்க்க முடியாமல் பாதி மயக்க நிலையிலே இருக்கும் போதும், பிள்ளைக்கு ஏதேனும் காய்ச்சல், மஞ்சள் காமாலை என்று அவர்களை அவசரப்பிரிவு பகுதியில் வைத்திருக்கும் போதும் குழந்தையைக் காணாமல் அழுதுப் புலம்பியபடி பெற்றவளும் மன அழுத்தம் ஏற்பட்டுத் தவிப்பதை இன்னொரு தாயால் மட்டுமே புரிந்து கொள்ள முடியும்.

இத்தகைய மனஅழுத்தத்திலிருந்தும், பிரசவத்தின் உடலில் சோர்வு மற்றும் கவலைகளிலிருந்தும் அவர்கள் விடுபட ஒரே ஒரு மருந்துதான் இருக்கிறது. உடனே, எனக்கும் அந்த மருந்தைத் தர முடியுமா? என்று கேட்கத் துவங்கிவிடுவீர்களே! ஆனால் அத்தகைய அருமருந்து இப்போதும்கூட உங்களிடம் தான் இருக்கிறது. சுத்தி வளைக்காம சீக்கிரமா சொல்லுங்க சாரே! என்று அவசரப்படாதீர்கள். அத்தகைய அதிசய அருமருந்தே உங்கள் பிள்ளைதானம்மா!

ஆம், தாய்மார்கள் தங்களுடைய பிள்ளையின் அருகிலேயே இருபத்தி நான்கு மணி நேரமும் படுத்துக் கொண்டு அவர்களுக்குப் பசிக்கும் போதெல்லாம் தாய்ப்பாலூட்டுவது மட்டும் தான் அதற்கான ஒட்டுமொத்த வைத்தியமே. அதனால் தான் குழந்தைகளை உறவினர்கள்கூட அடிக்கடி தூக்கக்கூடாது என்றும், அம்மாவின் அருகிலேயே அவர்களை படுக்க வைத்திருக்க வேண்டுமென்றும் செவிலியர்கள் உறவினர்களை ஒரேயடியாக வெளியே துரத்தியபடியே இருக்கிறார்கள். அதனால் மற்றவர்களிடமிருந்து குழந்தைகளுக்கு கிருமித் தொற்று ஏற்படுவதையும்கூட தடுத்துவிட முடியுமல்லவா.

இப்படித் தாயும் சேயும் அருகருகே ஒரே படுக்கையில் படுத்துக் கொண்டு தாய்ப்பால் ஊட்டுவதால் இருவருக்குமே கிடைக்கும் பலன்கள் ஏராளம். குழந்தையின் தோலும், அம்மாவினுடைய தோலும் எப்போதும் தொடர்பிலேயே இருப்பதால் அம்மாவின் தோலில் இருக்கின்ற நல்லது செய்யும் பாக்டீரியாக்கள் குழந்தையின் தோலிற்குச் சென்று அவர்களுக்கும் பாதுகாப்பினைக் கொடுக்கிறது. இதனால் குழந்தையின் உடலில் வெப்பத்தின் அளவும், சர்க்கரையின் அளவும் சீராக பராமரிக்கப்பட்டு அவர்களின் வளர்சிதை மாற்றங்களும் தங்கு தடையில்லாமல் வேகவேகமாக நடந்தேறுகிறது.

அம்மாவும் குழந்தையும் உடலோடு உடல் நெருங்கியிருக்கும்போது ஒருவரையொருவர் உடல் ரீதியாகவும், மனரீதியாகவும் புரிந்து கொள்வதற்கான வாய்ப்புகள் கிடைத்துவிடுகின்றன. இதனால் இருவருக்கும் இடையிலான அன்பும் பெருக்கெடுத்து பாசப்பிணைப்பும் அதிகரிக்கிறது.

இப்படியாக அருகருகே உறங்கும்போது அம்மாவும், குழந்தையுமாக இருவருமே நல்லபடியாக தூங்கியெழ முடியும். இதனால் குழந்தைகளுமே இரவிலே தூங்கி பகலிலே எழுகின்ற பழக்கத்தை சீக்கிரமாக அம்மாவிடமிருந்து கற்றுக் கொள்கிறார்கள். பிரசவித்து ஒரே படுக்கையில் தாய், சேய் இருவருமே ஒன்றாய் இருக்கின்ற நேரம் தான் மிகவும் முக்கியமான நேரமும்கூட. இந்த நேரத்தில் குழந்தையின் அருகாமையிலே அம்மாக்கள் இருப்பதால் குழந்தையின் குணாதிசயங்களை, மன ஓட்டத்தைக்கூட தாயவளால் எளிதில் புரிந்து கொள்ள முடிகிறது. மேலும் குழந்தைகளும் வயிற்றுக்குள்ளே இருக்கும் போது உணர்ந்திருந்த அம்மாவினுடைய உடல் வாசனையையும், குரலையும், இருதய துடிப்பையும் வைத்தே பிறந்து வெளியே வந்ததும் அம்மாவை அடையாளம் கண்டு கொண்டு தாயவள் மீது இன்னும் கூடுதலான அன்பைப் பொழிகிறார்கள்.



மேலும் குழந்தைக்கு எப்போது பசிக்கும், எப்போது தூங்கியெழுவார்கள், எதற்காக அழுகிறார்கள் என்றெல்லாம் மருத்துவமனையில் தங்கியிருக்கின்ற இந்த குறைவான காலத்திலேயே தாயவள் தன் குழந்தையைப் பற்றி முழுவதுமாகக் கற்றுக் கொள்கிறாள். இதனால் குழந்தைகளின் பசிக்கான ஆரம்பநிலை செய்கைகளான உதட்டைச் சுழித்தல், சுவைத்தல், வாயினை அகலத் திறத்தல், நாக்கை காற்றிலே துளாவுதல், விரல்களைச் சுவைத்தல், வாநீர் வடித்தல் போன்ற அறிகுறிகளை வைத்தே அவர்களின் பசியினை ஆரம்ப நிலையிலேயே புரிந்து கொண்டு, பசியைப் பொறுக்க முடியாமல் அவர்கள் விரக்தியில் அழுவதற்கு முன்பாகவே தாய்ப்பாலூட்டக் கற்றுக் கொள்வார்கள். இத்தகைய அனுபவத்தால் வீட்டிற்குச் சென்ற பின்பு குழந்தைகளின் நடவடிக்கைகளைக் கண்டு அச்சப்படாமல் அவர்களைக் கையாளும் கலையைக் கற்றுத் தேறவும் உதவுகிறது. இதனால் குழந்தையை வளர்ப்பதற்கான தன்னம்பிக்கையையும் தாய்மார்களுக்குக் கூடி வருகிறது.

குழந்தைகளும்கூட அம்மாவினை நன்கு புரிந்து கொண்டு அவர்கள் பேசுகையில் புரிந்ததைப் போன்று தலையாட்டிச் சிரிக்கிறார்கள். அம்மாவுடன் சேர்ந்து அமைதியாக தூங்கக் கற்றுக் கொள்கிறார்கள். அம்மாவின் அருகிலேயே இருக்கையில் வெளியுலகம் பற்றிய பயம் குறைந்து எதற்கெடுத்தாலும் அழுகாமல் அமைதியான குழந்தைகளாக வளருகிறார்கள். இதனால் அம்மாவிடம் இருந்து நல்ல பழக்கங்களைக் கற்று நல்லொழுக்கங்கள் உடையவர்களாகவும், ஆரோக்கியமான குழந்தையாகவும் முதிர்ச்சியடைகிறார்கள். மேலும் அவர்களின் வளர்ச்சியும்கூட இதனால் வேகவேகமாக நடக்கிறது. குழந்தைகளும்கூட எப்போதும் சுறுசுறுப்பாக இருப்பவர்களாகத் தெரிகிறார்கள். குழந்தைகளின் எடையும்கூட சீக்கிரமாகவே அதிகரிக்கிறது. இவையனைத்தும் அம்மாவும் பிள்ளையும் அருகாமையில் இருப்பதால் மட்டுமே நடக்கிறது என்பதையும் மனதில் வைத்துக் கொள்ளுங்கள்.

அம்மாக்களும் தங்கள் குழந்தைகளுக்குத் தாய்ப்பாலூட்டும் கலையை விரைவிலேயே கற்றுத் தேர்ந்து விடுகிறார்கள். தாய்ப்பாலும் அம்மாவின் மனமகிழ்ச்சியை வைத்தே சுரக்கின்ற காரணத்தினால் குழந்தையுடன் பூரண சந்தோத்தில் இருக்கிற அம்மாக்களுக்கு தாய்ப்பால் சுரத்தலும் தங்குதடையின்றி அதிகரிக்கிறது. குழந்தையின் சிரிப்பும், அழுகையும் (கேட்கும் நரம்புகள்), அவர்களின் உடல் வாசமும் (வாசனைக்குரிய நரம்புகள்), அவர்களின் உருவமும் (பார்வை நரம்புகள்) அதனதன் நரம்புகளின் வழியே தூண்டப்பட்டு, அவை மூளைக்குச் சென்று தாய்ப்பால் சுரப்பதை அதிகப்படுத்துகிறது. இதனால் இருவருமே அருகருகே இருக்கும் நிகழ்வால் தாய்ப்பால் பற்றிய பிரச்சனைகள் இந்த தாய்மார்களுக்கு ஏற்படுவதேயில்லை.

குழந்தை பிறந்தவுடன் பெரியவர்கள் அவர்களை தூக்கி வைத்துக் கொண்டு “பெரிய மனுசனாட்டம் பாட்டிய எப்படி உத்து உத்துப் பாக்குறான்னு பாரு” என்று கொஞ்சிக் கொண்டிருப்பார்கள். உண்மையில் பிறந்தவுடனே குழந்தைகளுக்கு பார்வை தெரியுமா? என்றால், ஆம், பார்வை தெரியும். ஆனாலும் அவர்கள் மிகவும் குறைபாடான பார்வையைத் தான் ஆரம்பத்திலே கொண்டிருப்பார்கள். அதாவது குழந்தைகளின் கண்களுக்கு 20செ.மீ தூரத்தில் தெரிகின்ற உருவங்களை மட்டுமே அவர்களால் காண முடியும். பெரியவர்களைப் போன்ற பார்வையை அவர்கள் பிறந்த எட்டாவது மாதத்தில் தான் பெறுகிறார்கள்.

கேளுங்கள், அம்மாக்களுக்கு மட்டும் ஒரு இரகசியம் சொல்கிறேன். உங்களது காதைக் கொஞ்சம் இப்படிக் கொடுங்கள். உங்களது குழந்தையை கையிலே பூப்போலத் தாங்கிக் கொண்டு மார்பில் தாய்ப்பால் கொடுக்கும் சமயத்தில் உங்களது முகத்திற்கும் குழந்தையின் கண்களுக்கும் இடைப்பட்ட தூரம் சராசரியாக இருபது சென்டிமீட்டர்கள் தான் இருக்கிறது. ஆகவே, நீங்கள் எத்தனை முறை, எவ்வளவு நேரம் குழந்தைக்குத் தாய்ப்பால் கொடுக்கிறீர்களோ, அந்த அளவுக்கு உங்களது முகமும், சிரிப்பும், உங்களது குரலும் குழந்தையின் மூளைக்குள்ளே பதிந்து விடுகிறது. இதனால் தான் உங்களைப் பார்த்ததுமே குழந்தைகள் ஆனந்தத்தில் துள்ளியபடி சிரிப்பதுக் களிப்புறுகிறார்கள். ஆனால் இதை மட்டும் யாரிடமுமே சொல்லி விடாதீர்கள், என்ன சரியா?



பிரசவத்திற்குப் பின்பாக அழகாகும் தாய்மார்கள்

எந்தக் காலத்திலுமே பெண்களுக்கு உடல் எடையைப் பற்றிய பயம்தான். திருமணத்திற்கு முன்பும் சரி, கர்ப்ப காலத்திலும் சரி, பிள்ளையைப் பெற்ற பின்பும் சரி, தாங்கள் குண்டாகி விடுவோமோ என்பதைப் பற்றிய கவலையோடே இருக்கிறார்கள். கர்ப்ப காலத்தில் சராசரியாக 12 கிலோ எடை அதிகரிக்க வேண்டுமென்று வேறு மருத்துவர்கள் சொல்லி விடுகிறார்கள். அப்படி அதிகரித்தால் தான் குழந்தைகளின் வளர்ச்சியும் சரியாக இருக்குமென்றும் கூறிவிடுகிறார்கள். இப்போதெல்லாம் தாய்மார்கள் கர்ப்பகாலத்தில் அதிகரிக்க வேண்டிய எடையைப் பற்றிக் கவலைப்படுகிறார்களோ இல்லையோ, பிரசவத்திற்குப் பின்பாக பழையபடி மீண்டும் எப்படி எடையைக் குறைப்பது என்பதைப் பற்றிய பயத்திலே தான் அதிகமாக இருக்கிறார்கள்.

கர்ப்பமான ஆரம்ப காலத்தில் குமட்டலும், வாந்தியும் இருப்பதாலும், அதனால் சரிவர சாப்பிட முடியாததாலும் முதல் மூன்று மாதங்களில் எடை குறைவதை கர்ப்பிணியால் உணர முடியும். அதற்குப் பின்பாகத்தான் கர்ப்பிணிகளுக்கு நன்றாகப் பசித்து சாப்பிடுவதால் அவர்களின் சீராக எடை அதிகரித்து கொழுகொழுவென பிள்ளையைப் பெற்றெடுத்துவிடுகிறார்கள். இப்படி அதிகரிக்கின்ற 12 கிலோ எடையில் தோராயமாக குழந்தை (3.3கிலோ), நஞ்சுக்கொடி (600கிராம்), தண்ணிக்குடத்தின் நீர்சத்து (800கிராம்), உடல் கொழுப்பு மற்றும் புரதம் (3.5கிலோ), கர்ப்பப்பை (900கிராம்), மார்பகம் (400கிராம்), ரத்தத்தின் அளவு (1.3கிலோ), மற்றும் பல்வேறு திசுக்களுக்கிடையேயான நீர்சத்து (1.2கிலோ) என்று பங்கு வகிக்கின்றன. என்னப்பா! ஒரே நம்பரா இருக்கு. இதெல்லாம் தெரிஞ்சுக்கிட்டு நாங்க என்னப்பா பண்ணப் போறோம்? என்று நினைத்துவிட வேண்டாம், சற்றுப் பொறுங்கள்.

மொத்த எடையில் பிரசவமானவுடனேயே தண்ணீர்க்குடம் உடைந்து, அதன்படி குழந்தையும் பிறந்து, அதன் தொடர்ச்சியாக நஞ்சுக்கொடி வெளியேறி, ரத்தம் மெல்ல மெல்லக் கசிந்து அப்போதே தோராயமாக ஐந்திலிருந்து ஆறு கிலோ எடை வரையிலும் குறைந்துவிடுகிறது. அதேசமயம் அம்மாவின் உடலிலே எஞ்சியிருக்கிற கொழுப்பு போன்றவற்றினாலான  எடையையும் குறைக்க வேண்டுமல்லவா! ஆனால் அதற்காக உடற்பயிற்சிக் கூடத்திற்குப் போங்கள் என்றெல்லாம் நான் சொல்லப் போவதில்லை. அதற்கு மிகமிக எளிமையான வழிமுறையைத் தான் சொல்லப் போகிறேன். ஆம், எப்போதும் தாய்ப்பால் ஊட்டுங்கள் என்பதே அது.

தாயானவள் ஒரு நாளைக்குச் சராசரியாக 500 லிருந்து 900 மில்லி வரையிலான தாய்ப்பாலை தன்னுடைய குழந்தைக்காகச் சுரக்கிறாள். அதற்கு அவள் செலவிடும் சக்தியோ ஒரு நாளைக்கு சராசரியாக 840 கலோரிகள். இப்படித் தாய்ப்பாலூட்டுவதன் வழியே, ஏனைய சக்தியைச் செலவிடுவதன் மூலமாகத் தான் கர்ப்பகாலத்தில் அதிகரித்த எடையினைக் குறைத்து மீண்டும் பழையபடி உடல்வாகுவைப் பெற முடியும் என்பதை தாய்மார்கள் முதலில் மனதிலே பதிய வைத்துக் கொள்ள வேண்டும்.

மேலும், கர்ப்பகாலத்திலே மார்பகத்திலும், கீழ் வயிற்றிலும், முன் தொடையிலும், இடுப்பிலுமாக சேகரித்து வைத்திருக்கிற கொழுப்பை பிரசவித்தப் பின்பாக நீக்க வேண்டுமே! இப்படியாக கொழுப்பை சேகரித்து வைத்தல் என்பதுகூட எதிர்கால வைப்பு நிதியைப் போலத்தான் என்பது உங்களில் எத்தனை பேருக்குத் தெரியும்? பிரசவமான பின்னாளில் தாய்ப்பால் சுரப்பதற்கான சக்தி ஏதும் உங்களிடம் இல்லாத போது, “அப்போ என்னோட கொழுப்பைக் கரைச்சு தேவையான சக்தியை எடுத்துக்கோங்க” என்று உடலானது கொழுப்புடன் போட்டு வைத்திருக்கின்ற கர்ப்பகால பாலிசிதான் இது. ஆனால் நீங்கள் தாய்ப்பாலே கொடுக்காமல் இருக்கையில் இந்த கொழுப்புகளெல்லாம் கரைக்கப்படாமல் அப்படியே தேங்கி நின்று உடலின் எடையைக் குறைக்க முடியாமலும் போய்விடுகிறது.

கருத்தரித்ததிலிருந்து பிரசவம் வரையிலான ஒன்பது மாதங்களும் கொஞ்சம் கொஞ்சமாகவே உடல் எடை அதிகரித்ததைப் போல, பிரசவமான பின்னர் அதிகரிந்த அத்தனை எடையும் சீராகக் குறைந்து கர்ப்பமாவதற்கு முன்னிருந்த எடையை அடைய குறைந்தபட்சம் அதே ஒன்பது மாதங்களாவது ஆகும்தானே. ஆனால் அதற்கும்கூட தாய்ப்பாலூட்டுதல் ஒன்று தான் ஒரே ஆயுதமாகவும் இருக்கிறது. ஆக, பிரசவத்திற்குப் பின்பான எடையைக் குறைத்தலும்கூட மெல்ல மெல்லத்தான் நடக்கும் என்பதைப் புரிந்து கொண்டாலே உடல் எடையைப் பற்றி யாரும் வீணாக அச்சப்படத் தேவையே இருக்காது.

மேலும், “புள்ள பெத்தாச்சு. இனி சாப்பாட்ட கொறைச்சாத்தான், ஒடம்பையும் கொறைக்க முடியும்” என்று மனதில் தப்புக் கணக்கு போடுபவர்களும் உண்டு. குழந்தைக்குத் தாய்ப்பால் ஊட்டுவதால் அம்மாவிடமிருக்கிற எஞ்சியிருக்கிற எனர்ஜியெல்லாம் கரைந்து வெளியேறுகிறது. கூடவே குழந்தைகள் வளரத் தேவையான ஊட்டச்சத்துக்களும் தாய்ப்பாலின் வழியே தான் செல்வகிறது. இதனால் எப்படிப் பார்த்தாலுமே ஊட்டச்சத்து நிறைந்த ஆரோக்கியமான உணவை அம்மாக்கள் கட்டாயம் சாப்பிட்டே தான் ஆக வேண்டியிருக்கிறது. அதேசமயம் தாய்மார்களும் ஏதாவது சாக்கு போக்குச் சொல்லிக் கொண்டு சாப்பிடாமல் இருந்து உடலில் திடீரென்று ஊட்டச்சத்துகள் குறைந்தாலும் தாய்ப்பால் சுரத்தல் தடைபடுவதற்கான வாய்ப்புகளும் அதிகமிருக்கிறது.

ஆதலால் தாய்ப்பாலூட்டும் தாய்மார்களுக்கு ஒருநாளைக்கு சராசரியாக 700 கலோரிகள் வரையிலும் எனர்ஜி தேவைப்படுகிறது என்பதைத் தெரிந்து கொண்டால் மட்டும் போதாது, அதற்கேற்ப நன்றாகச் சாப்பிடவும் வேண்டும். அதேசமயம் உணவில் மட்டும் கவனம் செலுத்தாமல் வீட்டளவிலே செய்யக்கூடிய எளிய உடற்பயிற்சிகளிலும் கவனம் செலுத்தினால் உங்களது பழைய உடல் வாகை கட்டாயம் மீண்டும் பெற்றுக் கொள்ள முடியும்.

அன்புத் தாய்மார்களே! பிரசவித்த உடனேயே உணவைப் பற்றியும், எடையைக் குறைப்பது பற்றியும் கவலைப்பட என்ன இருக்கிறது, சொல்லுங்கள்? உண்மையாகவே, பிரசவித்த பின்பு தான் பெண்கள் மிகவும் அழகான உருவத்தைப் பெறுகிறார்கள். அதற்கு இன்னும் கூடுதலான அழகைப் பெற்றுத் தருவது நீங்கள் குறைந்தபட்சம் இரண்டு வருடங்களாவது குழந்தைக்குத் தாய்ப்பால் புகட்டுவதிலே தான் இருக்கிறது.

மீண்டும் வலுப்பெறும் கர்ப்பப்பை

பெண்களது கர்ப்பப்பையினுடைய அளவானது கர்ப்பமாகாத பெண்ணிற்கு 30லிருந்து 50 கிராம் வரை மட்டுமே இருக்கும். அத்தகைய கர்ப்பப்பையில்தான் சராசரியாக மூன்று கிலோ எடையுடன் பிறக்கக்கூடிய குழந்தையும் வளரப்போகிறது என்பதை உங்களால் கற்பனை செய்தாவது பார்க்க முடிகிறதா?

No description available.

சாதாரணப் பெண்ணிலிருந்து பிரசவ நேரத்தை நெருங்குகின்ற பெண்ணின் 7 செ.மீ நீளமுள்ள கர்ப்பப்பை ஐந்து மடங்கு அதிகரித்து 35 செ.மீ ஆகவும், 5 செ.மீ அகலமுள்ள கர்ப்பப்பை ஐந்து மடங்கு அதிகரித்து 25 செ.மீ ஆகவும், 3 செ.மீ ஆழமுள்ள கர்ப்பப்பை ஏழு மடங்கு அதிகரித்து 20 செ.மீ ஆகவும், வெறுமனே 5 மில்லி கொள்ளளவு கொண்ட கர்ப்பப்பை ஆயிரம் (1000) மடங்கு அதிகரித்து 5 லிட்டர் கொள்ளளவையும் எட்டுகிறது. என்ன, கேட்டவுடனே உங்களுக்குத் தலையே சுற்றுகிறதா? பெண்களின் உடம்பினை இந்தக் கர்ப்பகாலம் எப்படியெல்லாம் போட்டு பாடாய் படுத்தி எடுக்கிறது என்பதைப் பாருங்கள்.

அளவுகள்சாதாரண பெண்ணின் கர்ப்பப்பை அளவுகள்கர்ப்பமாகிய பெண்ணின் பிரசவிக்கப் போகிற கர்ப்பப்பையின் அளவுகள்
நீளம்7 செ.மீ35 செ.மீ
அகலம்5 செ.மீ25 செ.மீ
ஆழம்3 செ.மீ20 செ.மீ
கொள்ளளவு5-10 மி.லி5000-10000 மி.லி
எடை60 கிராம்900-1000 கிராம்

இப்படிப் பத்து மாதங்களும் மாற்றங்களைச் சந்தித்து வந்த கர்ப்பப்பை மீண்டும் பழைய நிலைக்குத் திரும்ப வேண்டாமா? குழந்தை பிறந்தவுடனேயே தொப்புள் வரைக்கும் குறைந்து விடுகிற கர்ப்பப்பையின் உயரமானது 24 மணி நேரத்திற்குள்ளாகவே இடுப்புக்கூட்டின் நுழைவுப் பகுதிக்கு வந்துவிடுகிறது. ஆனால் பிரசவித்த இரண்டாவது வாரத்தில் தான் கர்ப்பப்பை பழையபடி இருந்த இடத்திற்கே போய் குடிகொள்கிறது.

இப்படியாக பழைய நிலைக்குச் செல்வதற்கு கர்ப்பப்பையானது நன்றாக கிரிக்கெட் பந்தைப் போல இறுகிச் சுருங்க வேண்டும். அப்படிச் சுருங்கினால் தானே கர்ப்பப்பையிலிருந்து சிசுவிற்கு ரத்தத்தை எடுத்துச் செல்கின்ற ரத்தக் குழாய்களும் சுருங்கியபடி ரத்தத்தை அதிகமாக வெளியேற விடாமல் தடுக்க முடியும். இப்படியான கர்ப்பப்பையின் உள்சீரமைப்புகள் பிரசவித்த ஏழாவது நாளில் துவங்கி ஆறாவது வாரத்தில் முடிந்துவிடுகிறது.

இப்படிக் கர்ப்பப்பை சுருங்குவதையும், அதனால் ரத்தக்குழாய்கள் சுருங்கப்படுவதையும் துரிதப்படுத்துவதற்காகத் தான் அனைத்து பிரசவத்திற்குப் பிறகும் ஆக்ஸிடோஸின் ஊசி இடுப்பிலே போடப்படுகிறது. ஆனாலும் இந்த ஆக்ஸிடோஸின் ஹார்மோனை இயற்கையாகவே தன் உடம்பில் சுரக்கச் செய்து கர்ப்பப்பையை சுருங்கச் செய்வதற்கு பிரசவித்த தாய்மார்களால் தங்களுக்குத் தாங்களே நிச்சயமாக உதவிக் கொள்ள முடியும்.

இயற்கையாகவே உடம்பில் ஆக்ஸிடோஸின் ஹார்மோன்களைச் சுரக்க செய்ய வேண்டுமென்றால் பிரசவித்த உடனேயே குழந்தையை அம்மாவின் மார்பில் போட்டு காம்பினைக் கவ்வச் செய்ய வேண்டும். தாய்ப்பால் கொடுப்பதை பிரசவித்த உடனே துவங்கிவிடும் போது மார்புக் காம்புகளின் நரம்புகள் விரைவில் தூண்டப்பட்டு, அது மூளைக்குச் சென்று, பிட்யூட்டரி சுரப்பியின் வழியே ஆக்ஸிடோஸின் ஹார்மோன்கள் இரத்தத்தில் கலந்துவிடுகிறது. ஆனால் சிசேரியன் பிரசவத்தில் இப்படி தூண்டுதல் உடனேயே சாத்தியமில்லாமல் போவதால் மருத்துவர்கள் குளுக்கோஸ் வழியாக ஆக்ஸிடோஸின் ஹார்மோன்களை அனுப்பி கர்ப்பப்பையைச் சுருங்கச் செய்கிறார்கள்.

இறுதியாக கர்ப்பப்பையானது பழையபடி சாதாரண நிலைக்குத் திரும்பியதுடன் மறுபடி மாதவிடாய் ஏற்படுத்துவதற்காகவும், தாம்பத்தியத்தில் ஈடுபட்டால் மற்றுமொரு குழந்தையைப் பெற்றுக் கொள்வதற்கான கருத்தரித்தலுக்கும் சிறிது காலத்திலேயே தயாராகிவிடுகிறது.



பிரசவத்திற்கு பின்பான இரத்தப் போக்கு மற்றும் இரத்தச்சோகையிலிருந்து பாதுகாப்பு

பெண்ணானவள் வயதிற்கு வந்ததிலிருந்து மாதவிலக்கு ஆகும் வரை மாதாமாதம் அவள் மாதவிடாயினை சந்திக்கிறாள். மாதவிடாயின் போது அவள் ஒவ்வொரு மாதமும் 30 லிருந்து 50 மில்லி லிட்டர் வரையிலான இரத்தத்தையும் கூடவே இழக்கிறாள்.

கர்ப்பம் தரித்த நாளிலிருந்தே அவளுக்கு மாதவிடாய் சுழற்சியிலிருந்து தற்காலிக விலக்கு கிடைத்து விடுகிறது. அப்படி ஒவ்வொரு மாதமும் 30லிருந்து 50 மில்லி ரத்தமாகச் சேர்த்து வைத்து பத்து மாதங்களில் அவளது உடல் 300 லிருந்து 500 மில்லி லிட்டர் ரத்தத்தை தனக்குள்ளே கர்ப்பகாலத்திற்கென்றே ஒதுக்கி வைத்துக் கொள்கிறாள். கர்ப்பிணிப் பெண்கள் பிரசவிக்கும் போது சராசரியாக 300 லிருந்து 500 மில்லி அளவு இரத்தம் வரை இழப்பது என்பது இயல்பானது ஒன்றுதான். அது உங்களது உடலிலே ஏற்கனவே வெளியேற்ற வேண்டி பாதுகாக்கப்பட்ட ரத்தத்தின் இழப்பீடு தானே தவிர அதற்காக பயப்பட வேண்டிய அவசியமில்லை. ஆனால் பிரசவத்தின் போது 500 மில்லிக்கு மேலாக இரத்த இழப்பு ஏற்படும் போதுதான் தாய்மார்கள் ஆபத்தான கட்டத்திற்குள் நுழையவே செய்கிறார்கள்.

இத்தகைய இரத்த இழப்பீடு ஏற்படுவதற்குப் பல்வேறு காரணங்கள் இருந்தாலும் 80 சதவீதம் கர்ப்பப்பை பலவீனமாக இருக்கின்ற காரணத்தினால் தான் ஏற்படுகிறது என்று ஆய்வுகள் சொல்கின்றன. சர்வதேச அளவில் தாய்மார்களின் இறப்பு விகிதத்தில் 35 சதவீதம் பிரசவத்திற்குப் பின்பு ஏற்படுகின்ற அபரிதமான இரத்தப்போக்குதான் காரணமாக இருக்கிறது. இதனைக் காரணமாக வைத்துதான் பிரசவிக்கின்ற அனைத்து கர்ப்பிணிகளுக்கும் ஆக்ஸிடோஸின் ஊசி கூடுதலாகப் போடப்படுகிறது என்பதை நாம் எளிதில் புரிந்து கொள்ளலாம். இதனால் பிரசவத்தின் போது ஏற்படுகின்ற பெரும்பாலான இறப்புகளும் தடுக்கப்படுகின்றன.

இந்த ஆக்ஸிடோஸின் ஹர்மோன்களால் கர்ப்பப்பை விரைவாகச் சுருங்கிவிடுகிறது. இதனால் நஞ்சுப்பையும் சீக்கிரமாகவே கர்ப்பப்பையிலிருந்து பிரிந்து வெளியே வந்துவிடுகிறது. அங்கு நஞ்சுப்பை பிரிந்த இடத்திலிருந்து உடைந்து கசியும் இரத்தக்குழாய்களும் கர்ப்பப்பையினுடைய சுருக்கு தசைகளின் உதவியால் விரைவாக உறைந்து இரத்த இழப்பையும் குறைத்துவிடுகிறது. இதனால் பிரசவத்திற்கு பின்பு ஏற்படக்கூடிய ரத்தச்சோகை நோயினையும் தடுத்துவிட முடிகிறது.

சாத்தியமாகும் இயற்கைவழி கருத்தடை

பெண்கள் பிரசவித்தவுடன் அடுத்த பிரசவத்திற்குக் குறிப்பிட்ட கால இடைவெளியைக் கொடுக்க வேண்டும். அத்தகைய இடைவெளிக் காலம் தான் கர்ப்பப்பையிலே மீண்டும் ஜனித்த சிசுவை கலைந்து விடாமல் தாங்கி வளர்ப்பதற்கு வலுவானதாக இருக்கும். ஒரு பிரசவத்திலிருந்து அடுத்த பிரசவத்திற்கான இடைவெளியானது சுகப்பிரசவம் ஆகிறவர்களுக்கு இரண்டு வருடங்களும், சிசேரியன் செய்து கொண்டவர்களுக்கு மூன்று வருடங்களும் குறைந்தபட்சம் தேவையாகிறது.

பெண்களுக்கு மாதவிடாய் ஏற்படுவதற்கு முக்கியக் காரணமாக இருப்பது சினைப்பையில் சுரக்கக்கூடிய ஈஸ்ட்ரோஜென் மற்றும் புரோஜெஸ்ட்டிரோன் ஹார்மோன்கள்தான். இத்தகைய ஹார்மோன்கள் சுரப்பதை தடுப்பதன் மூலம் உடலிலே மாதவிடாய் ஏற்படாமல் தடுத்து இயற்கையாகவே கருத்தரித்தலைத் தாமதப்படுத்த முடியும். ஆனால் தாய்ப்பால் கொடுப்பதன் மூலம் இதெப்படி சாத்தியமாகிறது என்று தானே கேட்கின்றீர்கள்?

ஆம், இயற்கையான கருத்தடை கூட தாய்ப்பால் கொடுப்பதால் தான் சாத்தியமாகிறது. நீங்கள் பிரசவித்தவுடனேயே தாய்ப்பாலைக் கொடுக்கும் போது அதன் தூண்டுதலால் மூளையானது புரோலாக்டின் ஹார்மோன்களைச் சுரக்கும் என்பது நாம் ஏற்கனவே அறிந்ததே! இந்த புரோலாக்டின் ஹார்மோன்கள் குறிப்பாக மூளையிலிருந்து மாதவிடாயினை கண்காணிக்கக்கூடிய FSH (Follicle Stimulating Hormone) மற்றும் LH (Luteinizing Hormone) ஹார்மோன்களின் சுரப்பையும் கட்டுப்படுத்துகிறது. இதனால் இத்தகைய ஹார்மோன்கள் சினைப்பையினைத் தூண்டி அதனால் மாதவிடாயினை ஏற்படுத்தவல்ல ஈஸ்ட்ரோஜென், புரோஜஸ்ட்டிரோன் ஹார்மோன்கள் சுரப்பதையும் தடுத்துவிடுகிறது.

No description available.

இப்படியாகத் தான் நீங்கள் தாய்ப்பால் கொடுக்கும் காலம் வரையிலும் கருத்தடை என்பது சாத்தியமாகிறது. ஆனாலும் தாய்ப்பால் கொடுக்கும் போது தாம்பத்திய வாழ்வில் ஈடுபட்டால் நான் கருத்தரிக்க மாட்டடேன் தானே? என்றும் நீங்கள் முடிவுக்கு வந்துவிட முடியாது. என்ன குழப்பமாக இருக்கிறதா? ஆம், அதற்கும் சில அளவுகோல் இருக்கின்றன. ஏனென்றால் தாய்ப்பால் கொடுக்கிற காலத்திலே கருவுருதலுக்கான வாய்ப்புகள் பிரசவித்த முதல் மூன்று மாதங்களில் பூஜ்ஜிய சதவீதமாகவும், மூன்று முதல் ஆறு மாதம் வரையிலும் இரண்டு சதவிகிதமாகவும், ஆறுமாதத்திற்குப் பிறகு ஆறு சதவீதமாகவும் இருப்பதாக ஆய்வுகள் கூறுவதால் தான் இத்தகைய குழப்பமே!

அதாவது தாம்பத்தியத்தில் ஈடுபடுகிற தாய்மார்கள் பிரசவமான முதல் ஆறு மாத காலத்திற்குள்ளாக இருக்க வேண்டும். ஆறு மாதத்திற்குப் பின்பாக இந்த இயற்கையான கருத்தடை முறை வேலை செய்யும் என்று உறுதியாகச் சொல்லிவிட முடியாது. மேலும் பிரசவித்த முதல் ஆறு மாதங்களும் அறிவுறுத்தியபடி தாய்ப்பால் மட்டுமே முழுக்க முழுக்க குழந்தைக்கு புகட்டியவர்களாகவும் இருக்க வேண்டும். அடுத்ததாக அவர்கள் மாதவிடாய் வராதவர்களாகவும் இருக்க வேண்டும். இத்தகைய விதிக்குள்ளாக வராதவர்கள் தாம்பத்தியத்தில் ஈடுபடும்போது செயற்கையான கருத்தடைகளை உபயோகிப்பதுதான் நல்லது.

நாம் புரிந்து வைத்திருப்பதெல்லாம் வயதிற்கு வந்த பின்பு மாதாமாதம் மாதவிடாய் வரும். பின்னர் இரத்தம் வெளியேறிய நாளிலிருந்து குறிப்பிட்டதொரு நாளில் கருமுட்டை வெளியேறும். அந்தக் கருமுட்டை வெளியேறும் நாட்களில் சரியாக தாம்பத்தியம் வைத்துக் கொண்டால் கரு ஜனித்து சிசுவாக வளரும். ஆனாலும் தாய்ப்பாலூட்டும் காலத்தைப் பொறுத்தவரையிலும் நாம் இன்னும் சில விசயங்களைப் பற்றி அறிந்து கொள்ள வேண்டும்.

பொதுவாக தாய்ப்பாலூட்டும் தாய்மார்களுக்கு முதல் ஆறு மாதத்திற்குள்ளாக மாதவிடாய் வருவதில்லை. அப்படியே பிரசவமாகிய ஆறு மாதங்களுக்குள்ளாக மாதவிடாய் ஏற்பட்டாலும்கூட அது பெரும்பாலும் கருமுட்டை வெளிவராமலேயே தான் நடக்கிறது. மாதவிடாய் வந்தாலும் கருமுட்டை வெளிவந்தால் தானே தாம்பத்தியம் மூலம் கருத்தரிக்க முடியும்?

ஆனாலும் ஐந்து சதவிகித பிரசவித்த தாய்மார்களுக்கு மாதவிடாய் வருவதற்கு முன்பாகவே கருத்தரிக்க வாய்ப்புகள் இருக்கிறதாகவும் சில ஆய்வுகள் சொல்கின்றன. அடடா, இதென்ன இன்னொரு குழப்பம் என்று நினைக்கத் தோன்றுகிறதா. மாதவிடாய் வருவதற்கு முன்பாகவே கருமுட்டையானது ஒருசிலருக்கு வெளியேறுவதே இதற்குக் காரணம்.

ஆக, தாய்ப்பால் ஊட்டினாலும் இயற்கையாகவே கருத்தடை ஏற்படுவதிலும் சந்தேகம் கொள்ள வாய்ப்பு ஏற்பட்டுவிடுகிறது. உண்மையிலேயே நாம் கருத்தடை ஏற்படுவதற்கான வாய்ப்புகளை தாய்ப்பால் கொடுப்பதன் மூலம் அதிகரிக்கத்தான் முடியும். அதாவது பிரசவித்தவுடனேயே ஆறு மாதம் வரை தாய்ப்பால் மட்டுமே கொடுக்கும் தாய்மார்களுக்கு தான் 98 சதவீதம் இயற்கையான கருத்தடை என்பது வேலை செய்கிறது.

இயற்கையான கருத்தடைக்கான வாய்ப்புகளை அதிகரிக்க பிரசவித்த முப்பது நிமிடத்திற்குள்ளாகவே தாய்ப்பால் கொடுக்க வேண்டும். சிசேரியன் செய்தவர்களாக இருந்தால் குறைந்தபட்சம் இரண்டு மணி நேரத்திற்குள்ளாகவாவது தாய்ப்பாலூட்ட வேண்டும். இரண்டு முதல் மூன்று மணி நேரத்திற்கொருமுறை தாய்ப்பாலைப் புகட்ட வேண்டும். தாய்ப்பால் கொடுக்கின்ற நேரமும் தொடர்ந்து, குறைந்தது இருபது நிமிடங்களாவது இருக்க வேண்டும். மேலும் அம்மாவிடம் இருந்து குழந்தையைப் பிரிக்கவே கூடாது. அம்மாவும் குழந்தையின் அருகிலேயே உறங்க வேண்டும். குழந்தையைப் பிரித்தால்கூட புரோலாக்டின் சுரப்பது தடைபட்டு கருத்தடையும் சரியாக வேலை செய்யாது.

தாய்மார்கள் திடீரென்று தாய்ப்பால் கொடுப்பதை நிறுத்திவிட்டாலோ, ஏதேனும் புட்டிப் பால் கொடுத்தாலோ தாய்ப்பால் சுரப்பது தடைபட்டு அதனாலே இயற்கைவழி கருத்தடைக்கும் வாய்ப்பில்லாமல் போக வாய்ப்பிருக்கிறது. மேலும் கரு உருவாவதற்கான ஹார்மோன்கள் இரவில் தான் அதிகமாகச் சுரக்கிறது. ஆகவே நாம் இரவிலே குழந்தைகளுக்கு தாய்ப்பால் புகட்டி பராமரிக்கும் போது புரோலாக்டின் ஹார்மோன்களும் அதிகமாகச் சுரந்து கருத்தடையை உறுதிப்படுத்துகிறது.

அதே சமயம் தாய்ப்பாலூட்டாத தாய்மார்களுக்கு 40% பேருக்கு ஆறாவது வாரத்திலும், 80% பேருக்கு பன்னிரெண்டாவது வாரத்திலும் மாதவிடாய் ஏற்படுவதால் அவர்களது தாய்ப்பாலூட்டும் காலத்திலேயே மீண்டும் கர்ப்பமாக வாய்ப்புகள் அதிகரித்துவிடுகின்றன. எனவேதான் தாய்மார்களே! நீங்கள் பிரசவித்த பின்பு தாம்பத்தியத்தில் கருத்தரிக்காமல் இருப்பதற்கு இயற்கையாகவே ஒருவழி இருக்கையிலே ஏன் தேவையில்லாமல் பயப்பட வேண்டும்?

தாய்ப்பால் கொடுக்கும் போது எதிர்பாராதவிதமாக கருத்தரித்துவிட்டால் என்ன செய்வது? தாய்ப்பால் தொடர்ந்து கொடுப்பதால் வளருகின்ற கருவிற்கு ஏதேனும் பாதிப்பு ஏற்படுமா? என்பதைப் போன்ற சந்தேகமும் சில தாய்மார்களுக்கு வரலாம். தாய்ப்பாலூட்டுவதன் மூலம் கருமுட்டை வெளிவருவதையும், அது கர்ப்பப்பையில் பதிவதையும்தான் தடுக்க முடியும். ஒருவேளை ஜனித்த கருவானது கர்ப்பப்பையில் பதிந்துவிட்டால் தாய்ப்பால் கொடுப்பதால் சிசுவினுடைய வளர்ச்சியில் எந்தவித பாதிப்பும் ஏற்படுவதில்லை. மேலும் தாய்ப்பால் புகட்டுவதால் பெண்கள் கர்ப்பமானதை சிறுநீரில் பரிசோதனை செய்யும் முடிவிலும் எந்த பாதிப்பும் ஏற்படுவதில்லை. ஆகவே சிறுநீர் பரிசோதனையின் வழியே பெண்கள் தாங்கள் கருவுற்றிருப்பதை உறுதி செய்து கொள்ளவும் முடியும்.

இறுதியாக, தாய்ப்பால் ஊட்டுவதன் மூலமாக இயற்கைவழிக் கருத்தடை என்பது உண்மையிலேயே கணிக்கமுடியாத ஒன்றுதான் என்றே கூறவேண்டும். இந்த முறையினால் கருத்தரித்தலை தள்ளிப் போட முடியுமே தவிர முற்றிலுமாக நிறுத்த முடியாது. இத்தகைய கருத்தடை முறையின் வெற்றி என்பது முழுக்க முழுக்க தாய்ப்பால் கொடுக்கிற உங்களது கையிலே தான் இருக்கிறது.



பிரசவத்திற்குப் பின்பாக காய்ச்சலிலிருந்து பாதுகாப்பு

பிரசவத்திற்குப் பின்பாக ஏற்படக்கூடிய தாய்ப்பால் சுரப்பது தொடர்பான பிரச்சனைகளிலிருந்து ஆரம்பித்து இரத்தப்போக்கு, இரத்தச்சோகை, இரத்த அழுத்தம், மன அழுத்தம் பற்றிய நோய்களைப் பற்றி இன்று தாய்மார்களிடையே ஓரளவு விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது. ஆனாலும் குழந்தை பிறந்தவுடனே வரக்கூடிய காய்ச்சலைப் பற்றி இன்றைய தாய்மார்கள் இன்னும் அலட்சியமாகவே நடந்து கொள்கிறார்கள். பிறப்புறுப்பில் ஏற்படுகின்ற கிருமித்தொற்றுகளின் மூலமாக பிரசவமான தாய்மார்களின் இறப்பு 15 சதவிகிதமாக இருக்கிறது என்பது நமக்கெல்லாம் ஓர் அதிர்ச்சியூட்டும் தகவல்.

சில நேரங்களில், கிருமித்தொற்றைத் தவிர வேறு சில காரணங்களாலும் அம்மாக்களுக்கு காய்ச்சல் ஏற்பட வாய்ப்பிருக்கிறது. பொதுவாக தாய்மார்கள் சரியான முறையில் தாய்ப்பாலைக் கொடுக்காத போதும், தாய்ப்பாலினைத் தவிர்த்து செயற்கை பாலினை நாடும் போதும் மார்பிலே தாய்ப்பால் கட்டிக் கொண்டு வீக்கம் ஏற்பட்டு அதனாலும் காய்ச்சல் ஏற்படுகிறது. ஆனாலும்கூட இதனை மிக எளிதாகவே குணப்படுத்திவிட முடியும். குழந்தைக்குத் தொடர்ந்து தாய்ப்பால் ஊட்டிக் கொண்டே இருக்கும் போது இப்படியான காய்ச்சல் ஏற்படுவதைத் தவிர்த்து அதனால் குழந்தைகள் பாதிக்கப்படுவதையும்கூட தடுத்துவிட முடியும்.

தாய்ப்பால் புகட்டுவது என்பது அம்மா, குழந்தை இருவருக்குமே நல்லதுதான் என்கிற முடிவுக்கு இப்போதாவது வந்துவிட்டீர்களா? சரி, வாருங்கள் இன்னும் உங்களுக்காக சில தகவல்கள் இருக்கின்றன.

மார்பகம் மற்றும் சினைப்பை புற்றுநோயிலிருந்து பாதுகாப்பு

இன்றைய சூழலில் மக்களுக்கு பெரும் ஆபத்தாகவும் பயமுறுத்துகிற விசயமாகவும் இருப்பது புற்றுநோயைப் பற்றித்தான். உலகிலேயே மக்கள் இறப்பில் புற்றுநோய் தான் முன்னனியில் இருக்கிறது. அதிலே புற்றுநோய் தான் ஒட்டுமொத்தமாக 9.6 மில்லியன் மக்கள் இறப்பிற்கும் காரணமாக இருக்கிறது. இதிலே 2.09 மில்லியன் இறப்புகள் என்பது மார்பகப் புற்றுநோயினால் மட்டுமே இறந்தவர்கள் என்பதும் நமக்கு பெரும் அதிர்ச்சியான செய்தி. ஆனாலும் நாம் பயப்படாமல் தைரியமாக இருப்பதற்கான ஒருவழியும் இருக்கிறது.

பெண்களுக்கு பெரிதும் அச்சமூட்டுகின்ற மார்பகம் மற்றும் சினைப்பை புற்றுச் செல்களுக்கு ஊட்டச்சத்தை ஊட்டி வளர்க்கும் ஹார்மோன்கள் பெண்களின் உடம்பிலேதான் சுரக்கிறது. அதுதான் ஈஸ்ட்ரோஜென் ஹார்மோன். பெண்களுக்கு ஏற்படுகின்ற 80 சதவிகித புற்றுநோய் செல்களை ஈஸ்ட்ரோஜென் தான் தாயாக இருந்து வளர்த்தெடுக்கிறது. ஈஸ்ட்ரோஜென் ஹார்மோன்கள் எல்லோருக்கும் தானே சுரக்கிறது, அப்படியானால் பெண்கள் எல்லோருக்குமே புற்றுநோய் வருமா? என்றால், இல்லை என்பதுதான் பதில். அதைப் பற்றி சற்று விளக்கமாகப் பார்ப்போம்.

5-10% புற்றுநோய்கள் மரபுவழியாகவும், 90-95% புற்றுநோய்கள் சுற்றுசூழல் காரணிகளாலும் ஏற்படுகிறது. எனவே புற்றுநோயினை ஏற்படுத்தக்கூடிய காரணிகளான உடல் பருமன், துரித உணவுகள், உடற்பயிற்சியின்மை, வைரஸ் கிருமிகள், கதிரியக்கம் மற்றும் வேதியல் தொழிற்சாலையில் வெளிப்படும் நச்சுப்பொருட்கள் போன்றவற்றை எதிர்கொள்ளும் தாய்மார்களுக்குத்தான் புற்றுநோய் வருவதற்கான அதிகமாக வாய்ப்புண்டு. இப்படிப்பட்ட சூழலைப் பயன்படுத்திக் கொண்டு வளருகின்ற புற்றுநோய் செல்களைத்தான் ஈஸ்ட்ரோஜென் மேன்மேலும் வளர்த்தெடுக்கிறது.

ஆதலால் இப்போது நமக்கு ஒன்று தெளிவாகிவிட்டது. பெண்கள் எவ்வளவு தூரம் ஈஸ்ட்ரோஜெனை விட்டு விலகி இருக்கிறார்களோ அந்த அளவுக்கு புற்றுநோய் வரும் வாய்ப்புகளிலிருந்தும் தள்ளியே இருப்பார்கள், அப்படித்தானே!



ஈஸ்ட்ரோஜென் ஹார்மோன் எப்போது சுரக்கும்?

பெண்கள் மாதவிடாய் சுழற்சிக்கு உள்ளாகும் போதெல்லாம் ஈஸ்ட்ரோஜெனும் உடலிலே சுரக்கும். அப்படிச் சுரக்கும் போது புற்றுச் செல்கள் உடலில் இருந்தால் அதனையும் சேர்த்தே வளர்க்கிறது. பெண்ணொருவர் 15 வயதில் வயதிற்கு வந்து, 45 வயதில் மாதவிலக்குக்கு உள்ளாகிறார் என்றே வைத்துக் கொள்வோம். அவர் தம் வாழ்நாளில் 30 வருடங்கள் அதாவது 360 மாதங்கள் மாதவிடாய் சுழற்சிக்கு உள்ளாகியிருப்பார். என்ன கணக்கு சரிதானே!

அதுவே சீக்கிரமாகவே வயதிற்கு வருபவர்களுக்கும், காலந்தள்ளி மாதவிலக்கு ஆகிறவர்களுக்கும் இந்த மாதவிடாய் காலங்கள் என்பது இன்னும் அதிகமாகத் தானே இருக்கும். எனவே இவர்களும் ஈஸ்ட்ரோஜெனுடன் சேர்ந்தே அதிக காலம் வாழ வேண்டிய நிர்பந்தம் வந்துவிடுகிறது. இதனால்தான் மேற்சொன்னவர்களுக்கு புற்றுநோய் வருவதற்கான வாய்ப்பும் கூடிவிடுகிறது.

இப்போது பெண்ணொருவர் கருத்தரித்து பிரசவமாகிவிட்டார் என்று வைத்துக் கொண்டால் அவரது தாய்ப்பாலூட்டும் காலங்களிலே ஈஸ்ட்ரோஜென் சுரப்பதை புரோலாக்டின் ஹார்மோன் தடுத்துவிடுகிறது என்பதை நாம் முன்பே தெரிந்து கொண்டோம் அல்லவா. இப்படியாக ஒரே பிரசவத்திலோ அல்லது அடுத்தடுத்த பிரசவத்திலோ சேர்ந்து மொத்தமாக 12 மாதங்களுக்கு மேலாக தன் வாழ்நாளில் தாய்ப்பாலூட்டியிருக்கும் ஒரு தாயிற்கு மார்பக புற்றுநோய் வருவதற்கான வாய்ப்புகள் 90% குறைந்து விடுகிறது; சினைப்பை புற்றுநோய் வருவதற்கான வாய்ப்புகளும் 91% குறைந்துவிடுகிறது. அதேபோல் ஏற்கனவே புற்றுநோய் இருக்கும் தாய்மார்களுக்கும் அது முற்றிப் போகாமல் இருக்க உதவுகிறது.

தாய்ப்பால் ஊட்டுவதால் புற்றுநோய்க்கு எதிராக உடல் எப்படி வேலை செய்கிறது என்பதைப் புரிந்து கொள்ள வேண்டுமென்றால், அது ஈஸ்ட்ரோஜென் தாக்கத்தைக் குறைத்து புற்றுநோய் செல்களை வளரவிடாமல் தடுப்பதன் வழியேதான் செய்கிறது. சுற்றுச்சூழலில் இருந்து உருவாகின்ற புற்றுநோய்க் காரணிகளெல்லாம் கொழுப்புச் செல்களிலே போய் தான் படிகின்றன. தாய்ப்பாலூட்டும் போது கொழுப்புச் செல்கள் கரைக்கப்படுவதால் புற்றுநோயிலிருந்து பாதுகாப்பும் உறுதியாகிறது.

தாய்ப்பாலூட்டுவதால் ஏற்கனவே பாதிப்பிற்குள்ளான மற்றும் புற்றுநோயினை உருவாக்கவல்ல செல்களும் அம்மாவின் உடம்பினை விட்டு இதனால் வெளியேறுகின்றன. மேலும் மார்பகத்தில் இருக்கின்ற சாதாரணச் செல்கள் கூட புற்றுநோய்க்கு எதிரான தகவமைப்பைப் பெற்றுக் கொள்கின்றன என்றால் பாருங்களேன். மிக முக்கியமாக தாய்ப்பாலில் இருக்கக்கூடிய ஹியூமன் லாக்டோ அல்புமின் (HLA) என்கிற புரதம் புற்றுநோயிற்கு எதிராக செயல்படும் தன்மை கொண்டதாக இருக்கிறதென்றால், இதைவிட சந்தோசம் வேறு என்ன இருக்கிறது?

எனவே தான் தாய்மார்களே! ஈஸ்ட்ரோஜென் தாக்கத்திலிருந்து மார்பகம் மற்றும் சினைப்பை தப்பித்து புற்றுநோய் வராமல் இருக்க வேண்டுமானால் உங்களது குழந்தைக்குத் தாய்ப்பாலை திகட்டத் திகட்டப் புகட்டுங்கள்… என்ன புரிகிறதா?

இருதயநோய் மற்றும் பக்கவாத நோயிலிருந்து பாதுகாப்பு

ஆஹா! எம் பிள்ளைக்குத் தாய்ப்பால் கொடுத்தா ஹார்ட் அட்டாக்கும் வராதாமே! என்று இதைப் பார்த்தவுடனே உங்களுக்கு ஆச்சரியமாய் இருக்கும். தாய்ப்பால் கொடுப்பதனால் இருதய நோய், பக்கவாதம் வருவதற்கான வாய்ப்புகளும் குறைகின்றன என்று அமெரிக்காவின் இருதய அமைப்பு நடத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது நமக்கெல்லாம் மகிழ்ச்சியான செய்தி தானே!

இரண்டு வருடங்களுக்கு மேலாக ஒருவர் தன் வாழ்நாளில் தாய்ப்பால் கொடுத்திருக்கும்போது அவருக்கு இருதய நோய் வருவதற்கான வாய்ப்புகள் 18 சதவீதமும், பக்கவாதம் வருவதற்கான வாய்ப்புகள் 17 சதவீதமும் குறைந்துவிடுகிறது.

பிரசவமான உடனேயே பெண்களின் உடலில் வளர்ச்சிதை மாற்றங்கள் முற்றிலுமாக மாறிவிடுகிறது. இந்த மாற்றங்களானது முக்கியமாக உடலில் இருக்கின்ற அனைத்து கொழுப்புகளிலுமே ஏற்படுகின்றன. இந்த கொழுப்புகள் தாய்ப்பால் உற்பத்தி செய்வதில் உபயோகப்படுத்தப்பட்டு உடலில் இருந்து வெளியேற்றப்படுகின்றன. இதனால் கொழுப்புகள் தேவையில்லாமல் ரத்தநாளங்களில் படிந்துவிடாமல் தடுத்து அதன் மூலமாக ஏற்படக்கூடிய இருதய நோய் மற்றும் பக்கவாதத்திலிருந்தும் பாதுகாக்கிறது.

மேலும் தாய்ப்பால் கொடுக்கக்கூடிய காலங்களில் நாம் பின்பற்றுகின்ற சத்தான ஆகாரங்கள் மற்றும் ஆரோக்கியமான பழக்கவழக்கங்களால் இத்தகைய நோய்களெல்லாம் தாய்ப்பால் ஊட்டுகிற தாய்மார்களின் வாழ்க்கையிலிருந்து எட்டித் தள்ளியே நின்றுவிடுகிறது. ஆஹா, இந்த தாய்ப்பாலூட்டும் காலம் நம்மை எப்படியெல்லாம் காப்பாற்றிக் கொண்டிருக்கிறது என்பதைப் பார்த்தீர்களா!

என்ன, இங்கே படித்துக் கொண்டிருந்த யாரையுமே காணோம்? இதைப் வாசித்து முடித்ததுமே உங்களது பிள்ளைக்குத் தாய்ப்பால் கொடுக்க அவசர அவசரமாக எழுந்து சென்றுவிட்டீர்களா! சபாஷ் தாய்மார்களே! அடுத்த பகுதியில் தாய்ப்பால் கொடுப்பதால் குழந்தைகளுடைய எதிர்காலத்தில் ஏற்படப் போகின்ற நன்மைகளைப் பற்றி பார்ப்போமா?



தாய்ப்பால் எனும் ஜீவநதி – டாக்டர் இடங்கர் பாவலன்



தாய்ப்பால் எனும் ஜீவநதி 2 – டாக்டர் இடங்கர் பாவலன்

 



தாய்ப்பால் எனும் ஜீவநதி 3 – டாக்டர் இடங்கர் பாவலன்



Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *