தாய்ப்பால் எனும் ஜீவநதி – டாக்டர் இடங்கர் பாவலன்ஒரு தாய்ப்பாலூட்டுகிற அம்மாவின் ஒப்புதல் வாக்குமூலம்

கயல்விழி,
சித்தன்னவாசல்.

கொழந்தையைப் பெத்துக்கிட்டு நான் தாய்ப்பால் கொடுத்த அனுபவத்தை எப்படிச் சொல்றதுன்னே தெரியல. நான் ஆபரேசன் தியேட்டர் போகுறதுக்கு முன்னாடியே சந்தோசமாத்தான் உள்ள போனேன். நம்ம கொழந்தை வெளியில வரப் போகுது. நம்ம பிள்ளைய சீக்கிரமா பாக்கப் போறோங்குற சந்தோசத்துல முதுகுல மயக்க ஊசி போடுற வலிகூட எனக்குத் தெரியல. மயக்க மருந்து ஊசி போட்டா ரொம்பவும் வலிக்கும்னு எல்லோரும் பயமுறுத்திக்கிட்டே இருந்தாங்க. அதுகூட ஒரு வலியா எனக்குத் தெரியவே இல்லை. சரி, என்ன வலிச்சாலும் பரவாயில்லை. நம்ம கொழந்தைய இப்போ வெளியில பாக்கப் போறோம். அதுமட்டும் போதும் நமக்கு. அந்த யோசனைதான் எனக்குள்ள முழுசும் இருந்துச்சு.

ஆபரேசன் பண்றப்போ தியேட்டர்ல டாக்டரும் என்கிட்ட தொடர்ந்து பேசிக்கிட்டேதான் இருந்தாங்க. உள்ள போய் அஞ்சு நிமிசத்துலயே குழந்தை வெளியில வந்துருச்சு. உடனே டாக்டரும் பாத்துட்டு உனக்கு பையன் பொறந்துருக்கான்பா, நல்லா இருக்கான்னு சொன்னவுடனேயே எனக்கு அந்த சமயத்துல வேற எதுவுமே தோணல. அவனைப் பாக்கனும்.. இப்பவே அவனைப் பாக்கனும்னு தான் மனசுக்குள்ள ஓடிக்கிட்டே இருந்துச்சு. டாக்டருமே, நர்ஸுங்களை கூப்பிட்டு அம்மாகிட்ட வந்து கொழந்தைய காட்டிட்டு போங்கன்னு திரும்பத் திரும்ப சொல்லிக்கிட்டே இருந்தாங்க. ஆனா நர்ஸூங்க வந்து கொழந்தைய எடுத்துக்கிட்டு இன்குபேட்டர்ல வச்ச பின்னாடி அவனை வெளியில இருக்கிற மத்தவங்களுக்கு காட்டுறதுக்காக தூக்கிட்டுப் போயிட்டாங்க.

ஆபரேசன் தியேட்டருக்குள்ள இருந்துகிட்டு அவங்க வர்ற வரைக்கும், இன்னும் நம்ம கிட்ட கொழந்தையக் காட்டல. ஏன், இன்னும் நம்ம கிட்ட யாருமே கொழந்தையக் கொண்டு வந்து காட்டவே இல்லை, அப்படின்னு யோசிச்சுக்கிட்டே இருந்தேன். ஆனா ஆபரேசன் பண்ணுறப்பவே பையன் நல்லா ஆரோக்கியமா இருக்கான். ரெண்டரை கிலோ இருக்கான்னு கொழந்தையைப் பத்தி டாக்டரும் எல்லாமே சொன்னதுனால சரின்னு அமைதியா இருந்தேன்.

பிரசவம் ஆன பிறகு படுத்தே தான இருப்போம். அந்த அசதியில கொழந்தையத் தூக்கவும் முடியாது. பக்கத்துல யாராவது வந்து பையனை காட்டுவாங்கன்னு பாத்தா யாருமே என்னைக் கண்டுக்கவே இல்ல. வந்த எல்லோரும் பையனை அவங்களே பாக்குறதுலதான் கவனமா இருந்தாங்க. தொட்டில்ல படுக்க வச்சுட்டு எல்லோருமா அவனைச் சுத்தி சுத்தி நின்னு பாத்துக்கிட்டே இருந்தாங்க. அதுவரைக்கும் என்கிட்ட யாருமே வந்து காட்டனும்னு நெனைக்கவே இல்ல. அதுக்கப்புறமா என்னோட கணவர் வந்து தான் அவளும் பாக்கட்டும்னு சொல்லி தொட்டிலைப் பிடிச்சு எனக்குப் பக்கமா தள்ளி வச்சுக் காட்டுனாரு. அப்போ டக்குனு அவனும் தலையைத் திருப்புனான். அது அப்படியே என்னையப் பாத்த மாதிரியே இருந்துச்சு. அப்போ ஒடம்பு முழுசும் சிலிர்த்துக்கிச்சு. அவன் நம்ம பையன்தான், அம்மாவைத்தான் பாக்குறான். அந்த மாதிரி ரொம்பவுமே சந்தோசமா ஆகிருச்சு.அப்புறமா டாக்டர், நர்ஸ் எல்லோருமா வந்தாங்க. அவங்க வந்த உடனேயே மார்பை செக் பண்ணிட்டு உன்னால கட்டாயம் தாய்ப்பால் கொடுக்க முடியும். நீ, யாரு என்ன சொன்னாலும் காதுலயே வாங்கிக்காத. தாய்ப்பால் தான் கொடுக்கனும். அதுதான் கொழந்தைக்கு நல்லது. நீ தைரியமா இரு, அப்படின்னு சொல்லிட்டுப் போயிட்டாங்க.

நர்ஸ் வந்ததும் பையைனைத் தூக்கி என்னோட கையில கொடுத்து மார்புக்குக் கிட்ட வச்சதுமே, கொழந்தைங்க பொதுவா வாய் அசைக்காதாம். சொல்லி சொல்லித்தான் குடிக்க வைக்கனுமாம். ஆனா, இவன் வாய் வச்சதுமே குடிச்சுட்டான். உடனே நர்ஸ், உங்க பையன் ரொம்ப தெளிவா இருக்காங்க. வாய் வச்சதுமே சட்டுன்னு குடிச்சுட்டான். இனிமே உங்களுக்கு கஷ்டமே இல்லை. அப்படின்னு சொன்னதுமே, ஓகே! இனிமேல் பையன் நம்ம கூட வந்து நல்லா பழகிடுவாங்குற மாதிரி சந்தோசமா ஆயிடுச்சு. நாம எந்திரிக்க முடியலைனா கூடப் பரவாயில்லை. இப்படி சாய்மானமா உட்காந்து வச்சுகிட்டேகூட அவனுக்கு தாய்ப்பால் குடுத்துரணும்னு நம்பிக்கை வந்துருச்சு.

என்னோட பிள்ளைக்கு தாய்ப்பால் மட்டும்தான் குடுக்கனும்னு மாசமா இருக்குறப்ப இருந்தே யோசிச்சுகிட்டு இருப்பேன். ஏன்னா, நாம நெறையப் படிச்சுருக்கோம். அதனால தாய்ப்பால நல்லபடியா பிள்ளைக்குக் கொடுத்துறனும்னு அதே யோசனையிலேயேதான் இருப்பேன். ஆனா வீட்டுல இருக்குறவங்களும், சுத்தி இருக்குறவங்களுமா ஒன்னு சேந்துக்கிட்டு, பாரு, பையன் பொழுதுக்கும் நை நைன்னு அழுதுகிட்டே இருக்கான். போச்சு! உனக்குத் தாய்ப்பாலே பத்தல.. பத்தல.. பத்தலைன்னு குத்தம் சொல்லிக்கிட்டே இருந்தாங்க.

நானும் கெஞ்சாத குறையா சொல்லுறேன். தாய்ப்பால்லாம் கொழந்த பொறந்த உடனே வராது. கொஞ்சம் கொஞ்சமாத்தான் வரும். கொழந்தைக்கு சின்ன உடம்புதான். சின்ன குடலுதான். அவனுக்கு சின்ன அளவே போதும் அப்படின்னு நானும் என்னோட அந்த வலியிலகூட என்னென்னமோ சொல்லிப் புரிய வைக்கப் பாக்குறேன். ஆனாலும் யாருமே அதைப் புரிஞ்சுக்கத் தயாராவே இல்ல.

என்னோட பாட்டி, அத்தை எல்லோருமா சுத்தி இருந்துகிட்டு என்னோட காது படவே பேசிக்கிட்டு இருக்காங்க. இந்த பசும்பால அவனுக்கு ஊத்தி விட்ரனும். அதெல்லாம் சரியாகிடும். நான் அந்தக் காலத்துலயே பசும்பாலைத்தான் என் பிள்ளைக்கு ஊத்துனேன்னு. பாட்டியும்கூட, சரி, இப்போ என்ன பண்றது. அது நல்லா சாப்பிட்டுருக்கனும். அது மட்டும் நல்லா சாப்பிட்டுருந்தா இப்போ தாய்ப்பால் நல்லா இருந்துருக்கும்ல. இப்படி வேற அவங்களும் திட்டிட்டே இருந்தாங்க. நானும் பழங்கள் எல்லாமே சாப்பிட்டத்தான் செஞ்சேன். ஆனா எல்லோருமே சொல்ற அளவுக்கு சாப்பிடலைதான். அதனால அப்போதுல இருந்தே என்னோட மனசுல, போச்சு! நமக்கு ஏதோ பிரச்சனை இருக்கு போல. நம்மளால, கொழந்தையும் ஆரோக்கியமா இல்லாம போகிடுவான் போல, அப்படின்னுலாம் ரொம்பவும் பயப்பட ஆரம்பிச்சுட்டேன்.எங்க அப்பத்தா என்கிட்ட சொல்றாங்க, நான் ஏழு புள்ள பெத்துருக்கேன், எனக்குத் தெரியாதான்னு? நான் அப்பவும்கூட கெஞ்சுறேன், நீங்க ஏழு புள்ள பெத்துறுக்கீங்க தான் அப்பத்தா. ஆனா தயவுசெஞ்சு நான் தூங்குறேன், முழிச்சுருக்கேன்னு பாத்து என் பிள்ளைக்கு எதையும் வாங்கிக் கொடுத்துறாதீங்க. நான் கையெடுத்துக் கும்பிட்டுக் கேட்டுகுறேன்னுதான் அழுதேன். ஒருபக்கம் எனக்குத் தையல் போட்டது, மயக்க மருந்து கொடுத்தது எல்லாமுமா சேர்ந்து மயக்கமா வருது. ஆனாலும் அவங்க ஏதாவது பையனுக்குக் கொடுத்துருவாங்களோங்குற பயத்துல நாம தூங்கக்கூடாது.. இனி தூங்கவேகூடாதுன்னு எனக்கு நானே சொல்லிக்கிட்டு முழிச்சுக்கிட்டேதான் இருந்தேன்.

எனக்கு பிரசவ சமயத்துல வர்ற பிரஷர் வேற அதிகமா இருந்துச்சு. அதனால மருந்தோட அளவு வேற அதிகமா கொடுத்துருந்தாங்க. என்னோட அம்மான்னாகூட கொஞ்சம் கோபமா சண்டை போட்டு அதை செய்யக்கூடாதுன்னா செய்யக்கூடாதுன்னு கண்டிப்பா சொல்லிடுவேன். ஆனா வேற யாரையும் அப்படிச் சொல்ல முடியாதே! அதனால அவங்ககிட்ட எல்லாம் கையெடுத்து கெஞ்சுக் கேட்டுக்குறேன். அப்படி, இப்படின்னு எதையெதையோ சொல்லித்தான் என்னோட கொழந்தைய நான் பாத்துக்குற மாதிரி இருந்தது. எனக்கு என்னமோ அவங்ககிட்ட இருந்து என் கொழந்தைய உடனே காப்பாத்திறனும்குற அளவுக்குப் பயம் வந்துருச்சு. எனக்கு இந்த இடத்துல வேற யாருமே வேண்டாம். இப்போ உடனே எல்லோரையும் எதிர்க்கனும்னுகூட தோண ஆரம்பிச்சுருச்சு.

எல்லாருமே, பையன் வீக்காதான் இருக்கான். இன்னும் இவன் குண்டாகல. நீ நல்லா சாப்பிடல. அதனாலதான் உன்னோட கொழந்தை குண்டாக மாட்டேங்குறான்னு பேச ஆரம்பிச்சுட்டாங்க. அவன் பொறந்தப்போ ரெண்டரை கிலோ எடை இருந்தான். இப்போ மூணரை கிலோ இருக்கான். அவன் கொஞ்சம் வெயிட் போட்ட மாதிரிதான் எனக்குத் தெரியுறான். ஆனாலும் அவனுக்குப் பால் சுத்தமா பத்தல போல. அவனுக்கு வயிறு நெறையல போல. அதனாலதான் வெயிட் போட மாட்றான். அவன் காலோட அளவுக்கு அவனோட கையும் இருக்கனும். உன்கிட்டதான் ஏதோ சிக்கல் இருக்கு. உன்கிட்டதான் ஏதோ பிரச்சனை இருக்கு. நீ முதல்ல தூக்கத்தைத் தொலை. பசிக்குதோ, பசிக்கலையோ மூணு வேளைக்கும் சாப்பிடு. தெனமும் ரெண்டு பேருக்குமா சேத்து சாப்பிடுன்னு அட்வைஸ் பண்ணிக்கிட்டே இருந்தாங்க.

ஆனா, என்னால முடிஞ்ச அளவுக்கு நானும் சாப்பிடத்தான் செய்யுறேன். ஆனா அவங்க எல்லாருமே நீ வெயிட் போட்டுருவேன்னு பயப்படுற, நீ குண்டாயிருவேண்ணு பயப்படுறேன்னு சேந்து திட்டுறாங்க. ஆனா நான் குண்டாகுறதப் பத்தியே பயப்படல. ஏன்னா நான் ஒல்லியா இருந்தா தான் பயப்படனும். நான் எப்பவுமே குண்டா தான இருந்துருக்கேன். நான் அதைப் பத்தியெல்லாம் பயப்படவே இல்ல. எனக்கும் கொழந்தை நல்லா இருக்கனும், அவன் நல்லா சத்தா இருக்கனும்னு ஆசைலாம் இருக்குது. அப்புறம் ஏன், எல்லோருமா வந்து இப்படிச் சொல்றாங்கன்னு வருத்தமா இருந்துச்சு.எல்லோரும் அட்வைஸ் பண்ணுறப்போலாம் நாம எதுக்கும் லாயிக்கு இல்லை போல, இன்னும் நாம அதுக்குத் தகுதியாயில்ல போல, அப்படிங்குற வார்த்தை மட்டும்தான் மனசுல வரும். நானும் எங்க அம்மாகிட்டயே போய், என்னையும் நீ இப்படிதானம்மா பெத்து வளத்துருப்பீங்க. அப்படித்தான உங்களுக்கும் ஒரு அனுபவம் வந்திருக்கும். அதே மாதிரி எனக்கும்கூட அந்த அனுபவம் அவனை பாத்து வளக்குறதுலதானம்மா வரும்னு சொல்லி அழுவேன்.

பிரசவமான சமயத்துல என்னால கொழந்தைக்கு எதுவுமே செய்ய முடியலைதான். ஆனாலும் எல்லாத்தையும் நானா செஞ்சுக்குறேன்னு சொல்லி யாரையும் என்னால எதிர்த்தும் பேச முடியல. எல்லாருக்கும் கொழந்தைய வளத்த அனுபவம் இருக்குறதுனாலதான் சொல்றாங்க. ஆனா அந்த அனுவத்தை நம்ம மண்டைக்குள்ள திணிக்குறப்போ யாருக்குன்னாலும் கோவம் வரத்தான் செய்யும்னு ஏன், அவங்க புரிஞ்சுக்க மாட்றாங்கன்னு தெரியல. அவனை என்கிட்ட விட்டுருங்க. நானா அவனுக்கு எது தேவைங்குறதைப் புரிஞ்சுகிட்டு பண்ணா அவனை நல்லா பாத்துக்குவேங்குற நம்பிக்கை எனக்கு இருக்குது. ஆனாலும் சுத்தி இருக்குறவுங்க கொடுக்குற பிரஷர்னால, போச்சு! நம்மளால முடியாது போல. நாம வந்து அவன நல்லா கவனிக்க மாட்டோம் போலன்னு ஒவ்வொன்னா மனசுக்குள்ள நிறைய ஓட ஆரம்பிச்சிருச்சு.

அவன் இப்பத்தான் பொறந்துருக்கான். பெறந்து கொஞ்ச நேரம்தான் ஆகியிருக்கு. அதைப் பத்தின நெனைப்பே இல்லாம, போச்சு!  நம்மளால அவன பாத்துக்க முடியாது. நாம எதுக்குமே லாயிக்கு இல்ல. அப்படி இப்படின்னு என்னென்னமோ பழசு, புதுசுன்னு எல்லா பிரச்சனையையும் போட்டு மண்டைக்குள்ள யோசிக்க ஆரம்பிச்சுட்டேன். ஏன், அந்த குழப்பத்துல என்னோட பையனப் பத்திகூட என்னால யோசிக்க முடியாமப் போயிடுச்சு. அவன் நம்ம கொழந்தைதாங்குற உணர்ச்சிகூட போயி நாம எதுக்குமே தகுதி இல்லைங்குறது மட்டுமா தான் மனசு முழுசா இருந்துச்சு.

அதுபோக அவனுக்கு மஞ்சக்காமாலை வேற இருக்குதுன்னு சொல்லிட்டாங்க. அதுக்கு டாக்டர் வந்து, உங்க கொழந்தைக்கு நீங்க பால் கொடுக்க கொடுக்க அதுவாவே சரியாகிடும்னு சொல்லிட்டாங்க. இவனுக்குப் பால் குடிக்கக் கொடுத்தா கொஞ்ச நேரமா முழிச்சுக்கிட்டு பால் குடிக்கிறான். அப்புறம் கொஞ்ச நேரம் அமைதியா தூங்கிடுறான். ஆனாலும் எங்க வீட்டுல இருக்குறவுங்க எல்லாருமே, டாக்டருங்க அவனுக்கு தாய்ப்பால் குடுக்க குடுக்கத்தான் சரியாகும்னு சொன்னாங்கள்ல. அவன் தொடர்ந்து குடிச்சுக்கிட்டே இருக்கனும்னு சொல்லி என்னைக் கட்டாயப்படுத்தி அவனுக்குப் பால் கொடுக்க வச்சுக்கிட்டே இருந்தாங்க. அதனால நானும் அவன் தூங்கிட்டே இருந்தாலும் பரவாயில்லைன்னு எழுப்பி எழுப்பி தாய்ப்பால் கொடுத்துக்கிட்டே தான் இருந்தேன்.

அவனும் குடிச்சுக் குடிச்சு சோர்ந்து போயி மார்புல வாய் வைக்கலைன்னா, உடனே அவங்க எல்லோருமா சேர்ந்து என்னோட மார்ப புடிச்சு, இழுத்து, அமுக்கி, என்னென்னமோ செஞ்சு, எனக்கு அவ்ளோ வலியா இருக்குது. ஆனாலும் என்னால வெளியில அதைச் சொல்ல முடியல. எனக்கு ரொம்ப வலிக்குது. நீங்க இதைச் செய்யாதீங்க. நானா எல்லாத்தையும் பாத்துக்குறேன்னுகூட சொல்ல முடியல. ஏன்னா, அவங்களைப் பொருத்தவரைக்கும் இப்போ பையன் தான் முக்கியம். அவன தான் முதல்ல இப்போ சரி பண்ணனும். ஆனா, அதைத் தவிர என்னோட நிலைமை என்னனு கேக்குறதுக்கு யாருமே தயாரா இல்ல.அம்மாவும்கூட அப்பப்போ வீட்டுக்கும் ஆஸ்பத்திரிக்குமா போயிட்டு போயிட்டு வருவாங்க. அவங்க இல்லாத சமயத்துல இவங்க பண்றதெல்லாம் பாத்துட்டு அம்மா வந்தவுடனேயே, அம்மா என்ன விட்டுட்டு எங்கயுமே போயிடாதீங்கம்மா. என்னால அவுங்க பண்றத தாங்கவே முடியலன்னு சொல்லி கைய இறுக்கிப் பிடிச்சுகிட்டு அழுதேன். இப்ப நெனைச்சாக்கூட அதெல்லாம் ஞாபகம் வந்து அழுகை அழுகையாதான் வருது.

அதுக்கு அப்புறமா டாக்டரே நேரா வந்து சொன்னாங்க. நீங்க அந்தக் கொழந்தைய அம்மாகிட்ட விட்டாதான் அழாம அமைதியா இருக்கும். நீங்களே மாறி மாறி வச்சுருந்தா கொழந்தைக்குக்கு அம்மாவோட அரவணைப்பே கிடைக்காது. அம்மாகிட்டயும்கூட கொழந்தை சரியா பழகாது. நீங்க முதல்ல கொழந்தைய அவங்க கையில குடுங்க. அவங்க முதல்ல பால் கொடுக்கட்டும். அவளா எல்லாமே பண்ணட்டும்னு சொல்லிட்டுப் போனாங்க.

நான் நைட்டி போட்டுருந்ததுனால என்னால சரியா எந்திரிக்கவும் முடியல. ஆனாலும் நம்மளைப் போட்டு எல்லாருமே இப்படிப் பண்றாங்களே, நம்மளால கண்டிப்பா முடியும்னு நானா வந்து கட்டில் கம்பியைப் புடிச்சிக்கிட்டு, அந்த குளுக்கோஸ் ஊசி கையில போட்டதுலாம்கூட குத்துது. ஆனாலும் வேற எதைப் பத்தியும் நெனைக்காம பல்ல கடிச்சுக்கிட்டு அப்படியே எந்திரிச்சு உக்காந்துகிடுவேன்.

உன்னால எந்திரிச்சுலாம் உக்கார முடியாதுன்னு எல்லோருமா அடிக்கடி புத்திமதி சொல்றாங்க. அதைக் கேட்டதுமே எனக்கு அழுகையா வந்திடும். உடனே, பாத்தியா!  உன்னால உக்கார முடியல. அதனாலதான் நீ அழுகுற. பேசாம, நீ படுத்து ஓய்வெடுத்துக்கோ. நாங்களே கொழந்தைய வச்சுக்குறோம், அப்படின்னு அவங்களே திரும்பவும் பேசிக்குறாங்க. நானுமே அதெல்லாம் இல்லை, என்னால உக்கார முடியலைன்னாலும் பரவாயில்ல என்கிட்டயே அவன் இருக்கட்டும். அவனை என்கிட்டயே கொடுங்கன்னு கெஞ்சுக் கேட்டாலும் அவங்க புரிஞ்சுக்கவே மாட்டேங்குறாங்க.

பையன் பொறந்தவுடனே உண்மையாவே கொழந்தைய எப்படிப் பாத்துக்குறதுண்ணு எனக்குத் தெரியல. இத்தனைக்கும் எல்லோருமே வந்து, நீ எப்படிம்மா கொழந்தைய தூக்கிட்ட. பரவாயில்லயே! நீயாவா கொழந்தைய கையில தூக்கிட்டன்னு ஆச்சரியமா பேசிக்குறாங்க. நான் எதையும் சரியா பண்ணா அதுக்கு யாரும் பாராட்டுறது கெடையாது. ஆனா, சரியா செய்யலைன்னா மட்டும் குறை சொல்றதுக்கு மட்டும் கூட்டம் கூட்டமா வந்துடுறாங்க. அது மட்டும் ஏன்னு புரியல.நான் அவனை நல்லா பாத்துக்குவேன். அவனை நானே வச்சுகிறேன். என்கிட்டா இருந்தாத்தான் என்னோட வந்து ஒட்டுவான். நீங்க அவன் அழுகும்போது இப்படி இப்படி ஆட்டுனா அழுகைய நிப்பாட்டுறான்னு நினைக்குறீங்க. ஆனா அவன் என்கிட்ட இருந்தாலே அழ மாட்டான். அதனால அவனை என்கிட்டயே கொடுங்க. நானே பாத்துக்குறேன்னு சொல்லிக் கெஞ்சுவேன். கடைசியா எங்க டாக்டர் மாமா ஒருத்தர் வந்து, நீங்க எல்லோரும் வச்சுருக்குறதவிட அவனோட அம்மா அரவணைப்புல இருந்தாதான் நல்லா இருப்பான். அவகிட்டயே கொடுத்துருங்க. அவளே வச்சுருக்கட்டும்னு சொன்னுதுக்கு அப்புறமாதான் பையன முழுசா என்கிட்டயே கொடுத்தாங்க. பையனை வாங்கி என் பக்கத்துல படுக்க வச்சதுமே அவன் அப்படியே சிரிச்சுகிட்டு பேசாம இருந்துக்கிட்டான்.

சொந்தக்காரங்க வந்து ஒவ்வொன்னா பிரஷர் பண்ணப் பண்ண உடனே, நமக்கும் கொழந்தைக்கும் நடுவுல இருக்குற அந்த பாசமே சுத்தமா இல்லை போல. அதனாலதான் நம்மட்ட அவன் ஒட்ட மட்டேங்குறான் போல அப்பட்டிங்குற அளவுக்கு பயம் வர ஆரம்பிச்சுருச்சு. பாருங்க, என் பையன் என்கிட்டயே வரமாட்டேங்குறான். எல்லாம் இவங்களாலதான். இவங்க எல்லாராலும்தான். அவனுக்கு இனிமேல் என்னைப் பிடிக்காது போல. அப்படிங்குற நெனப்புலாம் வேற வர ஆரம்பிச்சிருச்சு. அது வேற எனக்கு ரொம்ப டென்ஷனாவே இருந்துச்சு.

அதே மாதிரி கொழந்தைக்கு சின்ன பிரச்சனைன்னாகூட அம்மாவத்தான் வந்து கொறை சொல்ற மாதிரி பேசறப்ப, என்னடா இது? எல்லாத்துக்கும் நம்ம மேலயே பழியைப் போடுறாங்களேங்குற மாதிரி கஷ்டமா இருந்துச்சு. போச்சு, அவனுக்கு இப்படி ஆகிடுச்சா! அதுக்கு காரணம் நீ தான். நீ நல்லா இருந்தேன்னா அவனுக்கு ஒன்னுமே செய்யாது. நீ இப்படி இருந்தேன்னா, அவனுக்கு ஏன் இதெல்லாம் வரப்போகுதுங்குற மாதிரி மாத்தி மாத்தி எதையாவது சொல்லிகிட்டே இருக்குறாங்க. அதைக் கேட்டுக் கேட்டு ஒரு சமயத்துல என்னைப் பாத்தே நான் பயப்பட ஆரம்பிச்சுட்டேன். எல்லாத்துக்குமே ஏன் அம்மாவை குறி வச்சே குறை சொல்றாங்கன்னு மட்டும் புரிய மாட்டேங்குது.

ஆபரேஷனோ, நார்மல் டெலிவரியோ எல்லாம் நம்ம மனசுதான் அப்படிங்குறத மொதல்ல இருந்தே நான் யோசிச்சுக்கிட்டுதான் இருந்தேன்.  ஏன்னா, எனக்கு பிரஷர் இருந்ததால டாக்டரும் ஆரம்பத்துல இருந்தே உனக்கு ஆபரேசன்தான் வாய்ப்பு அதிகம்னு சொல்லிட்டே இருந்தாங்க. அப்போ ஆரம்பத்துல நடந்துலாம்கூட பாத்தேன். அப்பகூட நாம ஆபரேசன் பண்ணா நம்ம கொழந்தை பத்திரமா வெளியில வந்திரும்ல, அப்படிங்குற நம்பிக்கையிலதான் இருந்தேன். ஆனா சுத்தியிருக்குறவங்க எல்லாரும், நீ ஆபரேசன் பண்றியா? அப்ப உனக்கு வந்து நார்மல் டெலிவரி ஆகாதா?  ஏன் ஆகாது? அதுக்குதான் நீ நல்லா நடந்துருக்கனும். நல்லா வேலை செஞ்சுருக்கனும். நீ குனிஞ்சு நிமிந்து உக்காரல. அப்படி இப்படின்னு குறை சொன்னப்போ எனக்கே ஒருமாதிரி பயம் வர ஆரம்பிச்சிருச்சு.

போச்சு! ஆபரேசன் வேற பண்ண போறோம். நம்மளை யார் யாரெல்லாம் என்னென்ன சொல்லப் போறாங்களோ? அப்படின்னுகூட பயப்பட ஆரம்பிச்சுட்டேன். கொழந்தையப் பாக்க வர்றவங்க எல்லாரும் நார்மல் டெலிவெரியே அவளுக்கு முயற்சி பண்ணிருக்கலாம். அவளுக்குத் தான் தைரியம் பத்தாது. அதுனாலதான் ஆபரேசன் பண்ணிட்டாங்க. இப்படி வேற எல்லோருமே சொல்லிக் காட்ட ஆரம்பிச்சுட்டாங்க. அதுவேற எனக்குக் கஷ்டமா இருந்துச்சு.ஒரு சமயத்துல எப்படா வீட்டுக்கு ஓடுவோம்குற மாதிரி ஆகிடுச்சு. வீட்டுக்குப் போயிட்டா அப்போ வேற யாருமே பக்கத்துல வரமாட்டாங்கள்ல. அதனால ஆசுபத்திரில இருக்குறப்பவே டாக்டர்கிட்டயே போயி, என்னைய வேகமா விட்ருங்களேன் டாக்டர். உங்க முன்னாடி வேணும்னா இப்படி இப்படி நடந்து காட்டுறேன்னு வேற சொல்லி அடம் பிடிக்க ஆரம்பிச்சுட்டேன். அந்த ஆஸ்பத்திரியில என்னைய சுத்தி நிறைய பேர் இருக்குற வரைக்குமே எனக்கு ரொம்ப டென்ஷனாதான் இருந்துச்சு. அப்போல்லாம் எல்லாருமே வந்து நம்மகிட்ட எதையாவது திணிக்குற மாதிரியே தான் இருக்கும்.

அதுக்கப்புறமா அம்மாவையும் அப்பாவையும் மட்டுமா ரூமுக்குள்ள வச்சுக்கிட்டு ரொம்ப நேரமா அழுதேன், பொலம்புனேன், எல்லாமே செஞ்சேன். அதுக்கப்புறம் அம்மாவும்கூட வர்ற எல்லார்கிட்டயுமே கொஞ்சம் இப்படிலாம் சொல்லாதீங்கன்னு பேசுனாங்க. நான் ஒன்னே ஒன்னுதான் சொல்லுவேன். என்கிட்ட யாருமே நெகடிவ்வா பேசாதீங்க. நெகடிவ்வா பேசுறதும், அப்புறமா இல்லை, இல்லைன்னு சொல்றதும் எதுவுமே எனக்குப் பிடிக்காது. இருக்கோ இல்லையோ, இல்லைன்னு ஏன் சொல்லனும்? அப்படின்னுதான் நான் சொல்லுவேன். எனக்குப் பால் குடுக்க முடியுது, பால் கொடுக்க முடியல. அதை வந்து மத்தவங்க இல்லை இல்லைன்னு சொல்றப்ப, இருக்குறதுகூட இல்லாமப் போயிடுமோங்குற பயம் தான் எனக்கு வருது. அதனால இல்லைங்குற வார்த்தையே என்கிட்ட சொல்லாதீங்க. அப்படின்னு எல்லார்கிட்டயும் கத்திச் சொல்லனும்னு மனசுக்குள்ள தோணுனாலும் வெளியில எதையுமே காட்டிக்க முடியாது.

நாம ஏதும் சொன்னா, நீதான் பிள்ளையப் பாக்கனும். பிள்ளைய பாக்குறதைவிட உனக்கு என்ன வேற வேலை. நீ முழிச்சுட்டுதான் இருக்கனும். ராத்திரி தூக்கத்த விட்டாதான் கொழந்தைய வளக்க முடியும்னு பேசுறாங்க. அவங்க, ஏன் தூங்கக்கூடாது, கொழந்தையத்தான் பாக்கனும்னு சொல்லுறாங்கன்னு எனக்கு புரிஞ்சாக்கூட நம்மலோட மனநிலையை கேட்க அவங்க யாருமே தயாரா இல்லைங்குறப்போ எனக்கு ஏக்கம் அதிகமாகுது. அந்த பிரஷர்ல இருந்து வெளியில வர்றதுக்கு நானேத் தான் முயற்சி பண்ண வேண்டியிருக்கு. எனக்கு யார்கிட்டயும் சொல்றதுக்கு வேற பயமா இருக்கு. இந்த பிரஷர்ல பழைய சின்னச்சின்ன விசயங்களும்கூட ஞாபகத்துக்கு வந்து என்னைப் பாதிக்குற மாதிரி இருக்குது. எனக்கு இப்போ ஒரு மாதிரியா இருக்கு, ரொம்பவும் சோர்வா இருக்குன்னு யார்கிட்டயும் வெளியில சொன்னாக்கூட எதுவும் நெனைப்பாங்களோன்னு வேற பயமா இருக்குது.

என்னைப் பாக்க வர்றவங்க எல்லாம் எனக்கு நல்லதுதான் செய்யுறாங்க. என்னோட ஒத்தாசைக்குத்தான் அவங்க இருக்காங்க. ஆனாலும் ஒத்தாசைங்குற பேருல அவங்க வந்து சொல்லுறது, செய்யுறது எல்லாம் எனக்குக் கஷ்டமா இருக்கு. அதை ஏன் அவங்க புரிஞ்சுக்கவே மாட்டேங்குறாங்க.

எங்களோட குடும்பமும் ரொம்பப் பெருசு. வீட்டு ஆட்களும்கூட நிறையவே இருப்பாங்க. அதனால அறிவுரையும் நிறைய கிடைக்கும். என்னோட கணவர் என்கூட இருந்தா மட்டும் என்னையச் சுத்தி ஒரு கதவைப் போட்டு அடைச்ச மாதிரி. அவரைத் தாண்டி யாரும் என்கிட்ட வர மாட்டாங்க. அதனால அவரு இருந்தா மட்டும் எனக்கு அந்த பயம் எல்லாமே போயிடும். இப்போ நம்மகிட்ட யாருமே வந்து பேச மாட்டாங்கள்ல. எல்லோருமே வெளியில போயிடுவாங்கள்லன்னுதான் தோணும்.

ஆனாலும் கொழந்த பொறந்த சமயத்துல கணவரைக்கூட நம்மகிட்ட இருந்து விலக்கி வைக்கத்தான் எல்லாரும் பாக்குறாங்க. கணவர் பக்கத்துல வந்து இருந்தாக்கூட அவருக்கு முன்னாடிலாம் பால் கொடுக்கக் கூடாதுன்னு சொல்லுவாங்க. அவருக்கு முன்னாடி பால் கொடுக்கக் கூடாதாம்? நான், ஒரு கட்டத்துல நீங்க என்னத்துக்காக சொல்றீங்கன்னு தெரியல. ஆனா என்னோட கணவர் பக்கத்துல இருந்தா, எனக்குப் பாதுகாப்பா இருக்குற மாதிரி தோணுது. அதனால நான் அவருக்கு பக்கத்துல வச்சுதான் பால் கொடுப்பேன்னு சொல்லிட்டேன்.உடனே, அவருக்கு முன்னாடி வச்சு நீ பால் கொடுத்தா தாய்ப்பால் பத்தாம போயிடும், அப்படின்னு அவங்களோட பழைய கதையெல்லாம் சொல்ல ஆரம்பிச்சுட்டாங்க. எனக்கு அவங்க பழைய கதையெல்லாம் புரியுது. ஆனா அவரு இருந்தா எனக்குச் சௌகரியமா இருக்குதே! அதனால, நான் அவரை பக்கத்துல வச்சுக்குவேன்னு பொறுமையாவும், ஒருசில நேரம் ரொம்ப கோவமாவும்கூட எல்லார்கிட்டயும் சொல்லிடுவேன்.

அதே மாதிரி சில நேரம் கணவர் மேலேயும் கோவமா வரும். எல்லோருமா சேந்து நம்மளைக் குறை சொல்லுறப்போ இவங்களுமே யாரையும் எதுவும் கேக்க மாட்றாங்களே, நம்மளுக்காக யாரையும் எதுத்துப் பேச மாட்றாங்களேன்னு கஷ்டமா இருக்கும். அதுக்காக நான் அவருகிட்ட சண்டைலாம்கூட போட்டுருக்கேன்.

எனக்கு மாசமா இருக்குறப்போ இருந்த சந்தோசம்கூட கொழந்தை பொறந்ததுமே இல்லை. அவன் பிறந்த அந்த ஒரு மாசத்துக்கு ரொம்ப டென்சனாவேதான் இருந்துச்சு. அவனோட என்னால சகஜமா பழகவே முடியாத அளவுக்கு டென்ஷன் அதிகமா இருந்துச்சு. கணவரும்கூட வந்து என்கிட்ட, கொழந்த பொறந்த சந்தோசத்த நீ கொஞ்சம்கூட அனுபவிக்குற மாதிரியே தெரியலையே! ஏன் பித்துப் புடிச்ச மாதிரி இருக்க? அப்படின்னே கேட்டுட்டாங்க. நானும் அவருகிட்ட, எனக்கு ஒன்னும் இல்ல. நான் நல்லாதான் இருக்கேன். அப்படின்னு சொல்லி சமாளிச்சாக்கூட நாம நார்மலா இல்லையோங்குற பதட்டம் உள்ளுக்குள்ள இருக்கத்தான் செஞ்சது.

அதே மாதிரி எல்லாருக்கும் முன்னாடி பையனைக் கொஞ்சுறது இன்னும் எனக்கு சுத்தமா வரவே மாட்டேங்குது. ஒரே கூச்சமாவும் இருக்கு. அப்போ நம்மளை எல்லோரும் கவனிக்குறாங்களோங்குற நெனைப்பு அதிகமா இருக்கும். ஆனா, நான் மட்டும் வீட்டுல தனியா இருந்தேன்னா அவனோட பாட்டுப் பாடிட்டு இருப்பேன். பதிலே பேசலைனாலும் அவனோட ஆசையா பேசிக் கொஞ்சிகிட்டு இருப்பேன். ஒருவேளை யாராவது வந்து பக்கத்துல நின்னா மட்டும் அப்படியே டக்குனு பேசாம அமைதியாகிடுவேன்.

இப்போல்லாம் யாராவது வீட்டுக்கு வர்றாங்கன்னாலே ஒருமாதிரி பதட்டமா வந்திடுது. நம்ம கொழந்தையைப் பாக்க வர்றாங்களேங்குற சந்தோசம் இல்லாம, தம்பிய பாக்க வருவாங்க, ஒல்லியா இருக்கான்னு சொல்லுவாங்க, அவன் அவங்க அப்பா மாதிரி கருப்பா ஆகிடுவான்னு சொல்லுவாங்கன்னு அடுத்தடுத்து மனசுக்குள்ள தோண ஆரம்பிச்சுடும். அவனுமே இப்போ பெறந்த கொழந்தை தான. ஆனா வெளியில தெரியுறத வச்சு பொறந்த கொழந்தைய குத்தமா பேசுறதைப் பாத்தா கோவமா இருக்கும். யாருமே கொழந்தை ஆரோக்கியமா இருக்குறதப் பத்தி பேசாம, வந்த உடனே காதத் திருகித் திருகி பாப்பாங்க. அவன் உன்னைய மாதிரி இல்லையே. அவன் அவனோட அப்பனை மாதிரியே இருக்கானேன்னு குத்திக் குத்தி காட்டுவாங்க. அப்போல்லாம் எனக்கு ரொம்பவே கஷ்டமா இருக்கும்.

எங்க பாட்டி கொழந்தைய குளிக்க ஊத்த தெனமும் வருவாங்க. அவங்க வர்றதுக்கு முன்னாடியே எனக்கு அந்த நேரத்துல பதட்டமாயிடும். பத்து மணி ஆனா, அய்யோ! பாட்டி குளிக்க ஊத்துறதுக்குள்ள எதாவது பேசுவாங்களே. நம்ம பிள்ளைய சரியா பாத்துக்க மாட்றோம்னு நம்மளை போட்டு அட்வைஸ் வேற பண்ணுவாங்களே. அம்மா, பிளீஸ்மா! நீங்களே அவனுக்கு குளிக்க ஊத்துங்கம்மா. பாட்டியோட பேச்ச என்னால கேக்கவே முடியலம்மான்னு கெஞ்சுவேன்.இப்போ பாட்டி குளிக்க ஊத்துற சமயத்துல கொழந்தைக்கு ஏதாவது அடி பட்டுருச்சுன்னா அதை எப்படிச் சரி பண்றதுன்னு மட்டும்தான் தோணனுமே தவிர வேற எதுவும் தோணக் கூடாது. ஆனா அந்த அஞ்சு நிமிசத்துல, அய்யோ நாளைக்கு எல்லோருமே வருவாங்க. ஏன் இப்படி ஆச்சுன்னு கேப்பாங்க. நம்ம அப்பா, அம்மாவை எதாவது குத்தம் சொல்லுவாங்கன்னு அந்த ஒரு விசயத்துக்காக அவ்ளோ பெரிய மனப் போராட்டத்துக்குள்ள போயிட்டு வரும் போது அப்படியே எனக்கு பித்துப் பிடிச்ச மாதிரி இருக்கும்.

எல்லாத்தையுமே மண்டைல ஏத்திக்க கூடாதுன்னு அப்பா வந்து அடிக்கடி சொல்லுவாங்க. ஒரு காதுல வாங்கி ஒரு காதுல விட்ருன்னு சொல்லுவாங்க. உனக்குத் தேவையானதை எடுத்துக்கோன்னு சொல்லுவாங்க. ஆனா எனக்குத் தேவையானது எது, தேவையில்லாதது  எதுன்னு இப்போல்லாம் எதையுமே பிரிக்க முடியல. எல்லாமே மூளைக்குள்ள போய் குப்பை மாதிரி நெறைஞ்சுருச்சு. எதை உள்ள வச்சுக்கிட்டு எதை வெளியில தூக்கிப் போடனும்ணு தெரியலையேப்பான்னு அப்பாகிட்ட சொல்லிச் சொல்லி அழுவேன். இப்போ என்னோட மனசுமே ஆரம்பத்துல இருக்குற மாதிரி இல்லவே இல்லை. நான் வந்து எதையுமே எடுக்குறதைத்தான் எடுத்துக்குவேன், அது தேவையில்லைனா விட்ருவேன். ஆனா சுத்தி இருக்கிறவங்க சொல்றது எல்லாமுமே உள்ள போயிட்டே இருக்குறதுனால என்னால சுத்தமா எதுவுமே யோசிக்க முடியுறதில்ல.

நான் அப்பா அம்மாகிட்ட எல்லாமே பொதுவா ஷேர் பண்ணிட்டுதான் இருப்பேன். கல்யாணத்துக்கு அப்புறமா கொஞ்சம் இது சொல்லலாம், இது சொல்லக்கூடாதுங்குறத நானாவே பிரிச்சுக்கிட்டேன். இவ்ளோதான் சொல்லனும். இதெல்லாம் சொல்லத் தேவையில்லைன்னு. ஏன்னா, அவங்களுக்கு அது எந்த விதத்துலயும் பாதிச்சுறக் கூடாத மாதிரிப் பாத்துக்குவேன். அதனால என்னோட பிரஷரையும் போய் அவங்ககிட்ட திணிச்சேன்னா அவங்களுமே கஷ்டப்படுவாங்க. அதனால எனக்கு நானே கேள்வியக் கேட்டு எதையுமே அவங்ககிட்ட சொல்லாம விட்ருவேன். நேத்துகூட அப்பாகிட்ட, எனக்கு பைத்தியம் பிடிக்குற மாதிரி இருக்குப்பா. என்னால எதையுமே சமாளிக்க முடியல. என்ன எதாவது சைக்காட்ரிஸ்ட் கிட்ட கூட்டிட்டு போறீங்களாப்பான்னு அழுதுகிட்டே சொன்னேன்.என்னப் பாக்க வந்த பிரண்ட்ஸ்லாம்கூட அங்கிள், நாங்க வந்து ஹாஸ்டல்ல அவளை சைக்காட்ரிஸ்ட்னுதான் கூப்பிடுவோம். என்ன பிரச்சனைனாலும் அவ ரூம் வாசல்லதான் நாலு பேரு வந்து நிப்பாங்க. அவகிட்ட பேசுனா போதும், எல்லாமே சரியாகிடும்னு வந்து அப்பாகிட்ட சொல்றாங்களாம். அப்பா அதையுமே என்கிட்ட சொல்றாங்க. உன் பிரண்ட்ஸ்லாம் வந்து அப்படிச் சொல்றாங்க. நீ என்னடான்னா ஒரு சைக்காட்ரிஸ்ட்ட போகனும்னு நெனைக்குறியேன்னு கேக்குறாங்க. மத்தவங்களுக்குன்னா சரி, ஆனா எனக்குங்குறப்போ மட்டும் என்னோட மூளை எதுவுமே பதில் சொல்ல மாட்டேங்குதே. பொதுவா எனக்கு ஏதாவது பிரச்சனைன்னா அதை அப்படியே கடகடன்னு எழுத ஆரம்பிச்சுடுவேன். இப்போ என்ன பிரச்சனை, இந்த சமயத்துல என்ன நான் நினைக்குறேன் அப்படிங்குறத ஒரு பேப்பர்ல எழுதி அதை முடிச்சதுமே, திருப்பிலாம் படிச்சுப் பாக்க மாட்டேன். அதை அப்படியே கசக்கி கீழ போட்டுருவேன். அப்போ அந்த விசயத்தை எனக்கு உள்ள இருந்து வெளிய எடுத்துப் போட்ட மாதிரி இருக்கும்.

அதே மாதிரி இப்ப எதாவது எழுதனும்னு நெனைக்குறேன். ஆனா எழுத வரமாட்டேங்குது. எதையுமே எழுத முடியல. எழுத யோசிக்கவும் முடியல. அழுகையா வருது. தனியா உக்காந்து அழுகுறேன். நான் எதாவது யோசிச்சு அழுகுறேன். நான் எதுக்கு அழுகுறேன்னும் தெரியல. ஆனா அழுகையா மட்டும் வருது.

ஆனா இதுல இருந்து சீக்கிரமா நான் மீண்டு வரனும், கட்டாயம் வந்துருவேன். அதே சமயம் என்னோட கொழந்தைய நல்லா பாத்துக்கனும்னு ஆசையும், நம்பிக்கையுமா அதிகம் இருக்கு. அதுக்காக யார் எதைச் சொன்னாலும் சரி, என்னோட நம்பிக்கைய எப்பவும் நான் கைவிட மாட்டேன். என்னோட கொழந்தைக்கு தாய்ப்பாலை தவிர வேற எதுவுமே எப்பவுமே கட்டாயமா கொடுக்கப் போறதில்ல. எப்படியும் ரெண்டு வயசு வரைக்குமாவது கட்டாயம் தாய்ப்பால் கொடுத்தே தீரனுங்குறத மட்டும் நான் உறுதியா இருக்கேன்.

Image

உலக புத்தக தினத்தையொட்டி பாரதி புத்தகாலயம், புதிய கோணம், இளையோர் இலக்கியம் மற்றும் புக்ஸ் ஃபார் சில்ரன் வெளியிட்டுள்ள அனைத்து நூல்களுக்கு 25% சிறப்புக் கழிவு உண்டு. (23.04.2021 – 05.05.2021 வரை மட்டும்)