thalaikeezh vagupparaiyee kaalaththin theevaai book reviewed by v.sankar நூல் அறிமுகம்: தலைகீழ் வகுப்பறையே காலத்தின் தேவை – வே.சங்கர்
thalaikeezh vagupparaiyee kaalaththin theevaai book reviewed by v.sankar நூல் அறிமுகம்: தலைகீழ் வகுப்பறையே காலத்தின் தேவை – வே.சங்கர்

நூல் அறிமுகம்: தலைகீழ் வகுப்பறையே காலத்தின் தேவை – வே.சங்கர்

நூலின் பெயர் : தலைகீழ் வகுப்பறையே காலத்தின் தேவை
ஆசிரியர் : சு.உமா மகேசுவரி
வெளியீடு : பன்மைவெளி
பக்கங்கள் : 168
விலை : ரூ.150/-

”கொஞ்சம் ஏமாந்தால் எமனையே பலகாரம் பண்ணி சாப்பிட்ருவான் இவன்” என்று எங்கள் ஊர்ப்பக்கம் ஒரு சொலவடை உண்டு. அப்படிப்பட்ட ”இவன்கள்” பெரும்பாலும் பணம்படைத்தவர்களாக இருக்கிறார்கள் அல்லது நமக்கு மேலே அதிகாரம் செலுத்தும் அதிகாரிகளாக இருக்கிறார்கள்.

எண்ணிகையில் கொஞ்சம் முன்னப்பின்னே இருக்கலாம். ஆனால், அவர்களில் பெரும்பாலும் நம் கண்முன்னே ஒன்றுமே தெரியாதது போல் கல்வித்துறையில் இருப்பதுதான் வேதனையான விசயம். அவர்கள் செய்துகொண்டிருப்பது அல்லது செயல்படுத்த முயற்சிப்பது தவறுதான் என்று தெரிந்தாலும் சாதாரண மனிதனால் ஒன்றும் செய்துவிடமுடியாது. அத்தனை இறுமாப்பு சேர்ந்தேதான் இருக்கிறது அவர்களிடம்.

”மத்திய அரசாங்கம், நான் தான் கல்விக்கு அதிபதி, நான் சொல்வதைத்தான் மாநில அரசுகள் கேட்கவேண்டும் என்று சட்டம் போட்டுச் சத்தமிடுகிறது. அதை நிறைவேற்றும் பொருட்டு, இதுதான் கல்வி நாங்கள் கூறுவதை அச்சுப் பிசகாமல் பள்ளிகளில் செயல்படுத்துங்கள் என்ற மாநில அரசின் வழிகாட்டுதல் கல்வித்துறையின் கட்டளையாக இருக்கிறது”. என்று சுட்டிக்காட்டும் இந்நூலின் ஆசிரியர் 23 கட்டுரைகளுக்குள் தான் சொல்லவருவதை நறுக்குத் தெறித்தாற்போல் அவருக்கே உரிய எள்ளல் நடையில் மிகக்கச்சிதமாக சொல்லியிருக்கிறார்.

”கல்விக்களத்தைத் தங்கள் பிடியில் வைத்திருப்பதன் வழியாக அறிவுப் புலத்தையும், மன விழுமியங்களையும் தங்களுக்கு ஏற்ற வகையில் வடிவமைப்பதில் எப்போதுமே ஆதிக்கவாதிகள் குறியாக இருக்கிறார்கள். தங்களது அடாவடிகளைக் கேள்வி கேட்கும் மன உறுதியற்றவர்களை அறிவாளிகள் என்ற பட்டத்தோடு கல்வியின் வழியாக உருவாக்கவே விரும்புகிறார்கள்” என்று பதிப்புரையாளர் இந்நூலுக்கு வலுசேர்க்கிறார்.

எல்லோருக்குள்ளும் எழும் இயல்பான சந்தேகம் போல எனக்குள்ளும் பல கேள்விகள் எழுந்தது. “இந்நூல் யாருக்கானது?, ஆசிரியர்களுக்கானதா? இச்சமூகத்திற்கானதா? மேல் அதிகாரிகளுக்கானதா?, அப்படியானால் மத்திய அரசு அதிகாரிகளுக்கானதா? அல்லது மாநில அரசு அதிகாரிகளுக்கானதா? போன்ற எல்லாக் கேள்விகளுக்கும் ‘ஆம்’ என்ற பதிலே இறுதிவரை கிடைத்தது. ஒருவேளை உங்களுக்குள்ளும் சிலபல கேள்வி எழுந்தால் நீங்கள் இந்நூலைத் தெளிவாக வாசித்துப் புரிந்துகொண்டிருக்கிறீர்கள் என்று பொருள்.

”ஆசிரியர்கள் எதற்காகவும் மறுப்போ, எதிர்ப்புக்குரலோ பதிவு செய்ய முன்வராத மிக நல்ல மனிதர்கள். மாணவர்களிடம் எப்படி கீழ்படிதலை எதிர்பார்க்கிறார்களோ அதே போல, அவர்களும் அதிகார அடுக்குகளுக்கும் ஆணைகளுக்கும் கீழ்ப்படிந்து நடக்கும் நற்குணம் பெற்றவர்கள்” என்ற வரிகளை வாசிக்கும்போது கொஞ்சம் பதைபதைப்பாகத்தான் இருந்தது. இது வெறும் பகடிக்காகச் சொல்லப்பட்டது போலத் தெரியவில்லை ஒவ்வொரு ஆசிரியரும் முதுகெலும்பைச் சோதித்துக்கொள்ள வேண்டிய தருணமாகவே பட்டது.

ஆனால், உண்மையில் 90 சதவீதத்திற்கும் மேற்பட்ட அரசுப்பள்ளி ஆசிரியர்களுக்கு புதிய கல்விக்கொள்கை என்ன சொல்கிறது என்பது தெரியவில்லை. அதைவிட தெரிந்துகொள்வதில் அக்கரையில்லை. அப்படியே ஒன்றிரண்டு செய்திகள் தெரிந்திருந்தாலும் அது ஏதோ அமெரிக்கா, ஜப்பான் போன்ற நாடுகளுக்கானது என்று எண்ணிக்கொண்டிருக்கிறார்கள்.

23 கட்டுரைகளுக்குள் இந்நூல் ஆசிரியர் எத்தனை செய்திகளைச் சுட்டிக்காட்டுகிறார் என்று எண்ணிப்பார்க்கும்போதே மலைப்பாக இருக்கிறது. அதற்காக அவர் ஏராளமான கள ஆய்வுகளையும், நேர்காணல்களையும் செய்திருக்கிறார் என்பது புலப்படுகிறது.

முதல் கட்டுரையிலேயே, மாணவர்களின் இடைநிற்றலைப் பற்றிப் பேசுகிறார். அதைத் தடுப்பது எப்படி என்று ஆலோசனையும் வழங்குகிறார். பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை ஏன் தனியார் பள்ளியில் சேர்க்க முனைப்புகாட்டுகிறார்கள்? என்று அவர்களது எண்ணவோட்டத்தைச் சொல்வதோடு விட்டுவிடாமல் அரசுப்பள்ளிகளில் உள்ள குறைபாடுகளையும் சுட்டிக்காட்டத் தவறவில்லை.

தேசியக் கலைத்திட்ட வடிவமைப்பு -2023 என்ன சொல்கிறது?, என்னவெல்லாம் செய்ய இருக்கிறது? என்பதைச் சுட்டிக்காட்டுகிறார். உதாரணத்திற்கு, இல்லம் தேடிக்கல்வித் திட்டம், எண்ணும் எழுத்தும் திட்டம், நம்ம ஸ்கூல் திட்டம், நான் முதல்வன் திட்டம், கல்லூரிகளில் ஒரே பொதுப்பாடத்திட்டம், பள்ளிக்கல்விக்கான தேசியக் கலைத்திட்டம் எப்படியெல்லாம் பொதுமக்களுக்கும், ஆசிரியர்களுக்குத் தெரியாமலே ஊடுருவியிருக்கின்றன என்பதை இந்நூலின் ஆசிரியரைவிட யாராலும் விளக்கிக்கூற முடியாது.

எல்லாத் திட்டங்களுக்கும் மத்திய அரசுதான் நிதி கொடுக்கிறது. ஐந்து ஆசிரியர்கள் இருக்கக்கூடிய தொடக்கப்பள்ளிகள் எவ்வளவு தேடினாலும் கிடைக்காது. ஓராசிரியர் பள்ளியிலும் ஈராசிரியர் பள்ளியிலும் பயிலும் குழந்தைகளுக்கு, தரமான கல்வி என்பது எப்படி எட்டாக்கனியாகவே இருக்கிறது என்ற செய்தி மனதிற்குள் குடைந்துகொண்டே இருக்கிறது.

தினந்தோறும் ஆசிரியர்களை வதைக்கும் எமிஸ் திட்டத்தைக் கொண்டுவந்தது யார்? அதன் அடுத்தடுத்தத் திட்டங்கள் என்ன? இதனால், ஆசிரியர்கள் கற்பித்தல் பணியைச் சிதைத்த பெருமை யாரைச் சாரும் என்ற கேள்விகளுக்கெல்லாம் இந்நூலை வாசித்தாலே போதும் அதற்கான விடை கிடைத்துவிடும்.

உலகத்தரத்துக்கு இணையான கல்வித்தரம் கொண்டுவந்துள்ளோம் என்று பெருமை பேசுவதற்காகத் தயாரிக்கப்பட்ட பாடநூல்களால் மாணவர்களும், ஆசிரியர்களும் படும் துன்பங்கள் கொஞ்ச நஞ்சமல்ல. அதனால், ஏற்படும் பின்விளைவுகளாக, மாணவர்களுக்குள் ஏற்படும் உளவியல் சிக்கல்களை மிகநன்றாகவே விளக்கியிருக்கிறார் இந்நூலின் ஆசிரியர்.

ஆசிரியர்களைப் பணியாற்றவிடாமல், சிந்திக்கவிடாமல், மேலும் மேலும் அழுத்துகிறது பள்ளிக்கல்வித்துறை. இங்கு இன்னும் கற்றல் நிகழவே இல்லை என்று தனது ஆதங்கத்தைப் பதிவு செய்யும் அவரேதான் ‘எல்லாத் திட்டங்களையும் செயல்படுத்தும் அரசு எதையோ செய்ய நினைக்கிறது, ஆனால், அதை நடைமுறைப் படுத்துவதில்தான் சிக்கல்கள் ஏற்படுகிறது என்கிறார்.

பள்ளிகள் கற்றல் கற்பித்தல் நிகழும் களங்களாகத் திகழவேண்டியவை. ஆனால், அவற்றைத் தவிர மற்றெல்லா வழிகளிலும் நேரத்தையும் மனித உழைப்பையும் வீணடிக்கும் சந்தைகளாக மாறியுள்ளன என்ற வரிகள் தன்னிடம் பயிலும் குழந்தைகளுக்காகவே தன் வாழ்நாளைக் கழித்துக்கொண்டிருக்கும் எல்லா சிறந்த ஆசிரியர்களுக்கும் வேதனிக்கவே செய்கிறது. சிறிதளவும் அதை மறுப்பதற்கில்லை.

ஒரு நாள்கூட பள்ளிக்கு வராத மாணவனை 12 ஆம் வகுப்புப் பொதுத்தேர்வு எழுத வைக்கும் நடைமுறையை என்னவென்று சொல்வது? என்ற கேள்வி சமூகத்தை நோக்கித் தூக்கி எறியப்பட்ட ஒற்றைத் தீப்பொறியாகவே பார்க்க முடிகிறது.

கட்டுரை முழுக்க வெறும் குற்றச்சாட்டுகளை மட்டுமே அடுக்கிக்கொண்டு செல்லாமல் அரசுத்திட்டங்களில் அங்கொன்றும் இங்கொன்றுமாய் மின்னி மறையும் நல்ல விசயங்களைப் பாராட்டவும் செய்கிறார். அந்தவிதத்தில் “தலைகீழ் வகுப்பறையே காலத்தின் தேவை” நூல் ஆசிரியர் சு.உமா மகேசுவரி ஒரு சிறந்த நடுநிலை வாதியாகவும் நம்முடனே பயணிக்கிறார் என்பதை உணந்துகொள்ளமுடிகிறது.

உமா மகேசுவரி போன்றே கல்வித்துறையில், கல்வியில், மாணவர்களின் மேல் அக்கரைகொண்ட, சிறந்ததொரு மாற்றத்தை விரும்பும் அனைத்து குரல்களும் தொடர்ந்து ஒலிக்கட்டும். ஏதேனும் ஒருநாள் அதிகாரத்தில் இருக்கும் மிகச்சரியான காதுகளுக்கு எட்டும் என்று நம்புவோமாக. நன்றி.

Show 1 Comment

1 Comment

  1. பாலகுமரன்

    தொடர்பு எண்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *