அ.கரீம் எழுதிய தாழிடப்பட்ட கதவுகள் - நூல் அறிமுகம் | Thalidapatta Kathavukal - A.Kareem - Short Stories - Bharathi Puthakalayam - https://bookday.in/

தாழிடப்பட்ட கதவுகள் – நூல் அறிமுகம்

தாழிடப்பட்ட கதவுகள் – நூல் அறிமுகம்

நூலின் தகவல்கள் : 

நூல் : தாழிடப்பட்ட கதவுகள்

ஆசிரியர் : அ.கரீம்

வெளியீடு : பாரதி புத்தகாலயம்

முதல் பதிப்பு : டிசம்பர் 2016

நான்காம் பதிப்பு : டிசம்பர் 2022

நூலைப் பெற : thamizhbooks.com 

1998 கோவை கலவரத்தை அடிப்படையாக வைத்து எழுதப்பட்டுள்ள சிறுகதைகளின் தொகுப்பு.

செல்வராஜ் என்ற இந்து காவல்காரர் கொல்லப்பட்டதை அடுத்து இந்து முன்னணி மற்றும் சில இந்து அமைப்புகள் முன்னின்று காவலர்களின் துணை கொண்டு கொலைக்கு எந்தத் தொடர்பும் இல்லாத இஸ்லாமிய மக்கள் 19 பேரைக் கொன்று பிணமாக்கியும் பல இஸ்லாமிய குடியிருப்புகள் மற்றும் வர்த்தக நிறுவனங்களை சூறையாடியும் தீயிட்டு பொசுக்கியபோதும் அந்த மக்களின் மனநிலையும் அவர்கள் அனுபவித்த வலியும் வேதனையும் ஒவ்வொரு கதையிலும் சொல்லப்பட்டுள்ளது.

தனி மனிதர் மீதான தாக்குதல் எவ்வாறு இனப்படுகொலையை நோக்கி இழுத்துச் செல்லப்பட்டது என்பதையும் அதற்கு அரசு எந்திரங்கள் எப்படி துணை போயின என்பதையும் இதில் உள்ள ஒவ்வொரு கதைகளும் வேதனையுடன் பதிவு செய்கின்றன.

வீதியில் அடுக்கப்பட்டு இருக்கும் பிணங்கள் யார் யாருடையது என்பதை அடையாளம் காண்பதற்காக ஒவ்வொரு முஸ்லிம் பெண்களும் கதறி நிற்கும் காட்சி இனப்படுகொலையின் மாபெரும் விளைவுகளை நமக்குள் கடத்துகிறது.

மதச்சார்பற்ற நாடு சகோதரத்துவம் சமத்துவம் என்பது எல்லாம் அரசியல் அமைப்பிலும் சட்டத்திலும் ஏற்றுக்கொண்டு பல்வேறு இனங்கள் மொழிகள் வர்க்க பேதங்கள் சாதி என துண்டு பட்டாலும் இந்தியர்கள் என்ற ஒற்றை அமைப்பின் கீழ் வாழும் மக்களுக்கிடையே எப்படி மதம் உள் நுழைந்து பிணக்குகளை ஏற்படுத்துகிறது என்பதை ஒவ்வொரு சிறுகதைகளும் எடுத்துக்காட்டுகின்றன.

கலவரத்திற்கு சிறிதும் தொடர்பில்லாத இஸ்லாமியன் என்ற ஒற்றைக் காரணத்திற்காகவே எத்தனையோ பேர் சிறைச்சாலைக்கு இழுத்துச் செல்லப்படுகிறார்கள் 10 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் அடைக்கப்படுகிறார்கள் அவர்களுக்கான தீர்வு எந்த விதத்திலும் வழங்கப்படவில்லை என்பதையும் இந்த நூலின் கதைகள் குறித்துக் காட்டுகின்றன.

குடும்ப அமைப்பு உறவு முறைகள் சமூக நிறுவனங்கள் வசிப்பிடம் வாழ்வாதாரம் இறை மார்க்கத்தின் மீதான நம்பிக்கை பிறருக்கு உதவி செய்யும் மனப்பாங்கு தனது குடும்பத்தை கட்டிக் காக்கும் இல்லற வாழ்வின் மேன்மையான வாழ்வாதாரம் என மனிதர்களின் மீதான நம்பிக்கையில் தொழில் நிறுவனங்களிலும் சுய நிறுவனங்களையும் நடத்தி வந்த இஸ்லாம் பெருமக்கள் மீதான கட்டவிழ்த்து விடப்பட்ட தாக்குதல் அவர்களுக்கு மனரீதியாகவும் வாழ்வியல் ரீதியாகவும் எவ்வளவு பெரிய விளைவுகளை ஏற்படுத்தின என்பதை இந்தக் கதைகள் எடுத்துக் காட்டுகின்றன.

ஒரு பகுதிக்கு 144 தடை உத்தரவு பிறப்பிப்பதற்கு பல்வேறு வகையான சட்டதிட்டங்களை பின்பற்றி அமல் படுத்த வேண்டிய சூழலில் சட்டத்தைப் புறம் தள்ளி 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்படுதல் என்பது எவ்வளவு கொடூரமானது என்பதையும் 144 என்ற சிறுகதை மிகச் சிறப்பாக விளக்குகிறது. மர்மம் நிறைந்த திகில் படம் பார்ப்பது போன்ற உணர்வும் அருமையான காதல் கதையை கண்டு ரசித்தது போன்ற உணர்வும் ஒரு இல்லறம் எவ்வளவு சிறப்பாக நடைபெறுவதற்கு கணவனும் மனைவியும் உழைத்துக் கொண்டிருக்கின்றனர் என்பதையும் ஒருசேர பிணைத்து எழுதப்பட்டிருக்கும் 144 சிறுகதை துப்பறியும் நாவலின் அடுத்தடுத்த பக்கங்களை வேக வேகமாக புரட்டுவதைப் போல ஒரு நிருபரின் அழகான ஆராயும் திறனை சிறப்பாக வெளிப்படுத்துகிறது.

நூலின் ஆகச்சிறந்த கதையாக அன்புள்ள அத்தாவுக்கு மற்றும் மொதொ கேள்வி ஆகிய இரண்டு கதைகளையும் கூறலாம். ஆனாதிக்கத்தின் கீழே பெண்கள் ஒடுக்கப்பட்டிருக்கும் இன்றைய சூழலிலும் இஸ்லாமியப் பெண்களுக்கான சுதந்திரம் என்பது எப்படி அவர்களுக்கு மறுக்கப்படுகிறது என்பதையும் படித்தவர்கள் ஆனாலும் அவர்களுக்கு தங்களது அமைப்பில் வாக்குரிமை செலுத்துவதற்கு தகுதியில்லை என்பதை ஒரு பெண் கேள்வி கேட்க முயலும் போது அவள் எவ்விதமான விளைவுகளை சமூகத்தில் எதிர்கொள்ள நேர்கிறது என்பதையும் மிகச் சிறப்பாக எடுத்துக் கூறுகிறது மொதொ கேள்வி சிறுகதை.

அன்புள்ள அத்தாவுக்கு கதை மனிதத்தை படம் பிடித்துக் காட்டுகிறது. கலவரத்தில் பாதிக்கப்பட்டு காணாமல் போன தனது மகன் தன்னைத் தேடி வருவான் என்ற நம்பிக்கையில் உயிரை கையில் பிடித்துக் கொண்டிருக்கும் முதியவருக்கு சம்பந்தமே இல்லாத யாரோ ஒருவர் எழுதும் கடிதம் எவ்விதம் மன சாந்தியை கொடுக்கிறது என்பதை இந்த கதை எடுத்துக் கூறி எல்லோருடைய உள்ளங்களிலும் மனிதம் நிறைந்திருந்தால் அன்பு கலந்து இருந்தால் கருணை மிகுந்திருந்தால் காணும் இடம் எங்கும் மனிதர்களுக்கு சொர்க்கமே என்பதை தெளிவுறக் காட்டுகிறது.

கலவரத்தில் பாதிக்கப்பட்டு குற்றுயிராகத் தவித்துக் கொண்டிருந்தவரைக் காப்பாற்றச் சென்ற அப்பாவி இளைஞனைக் கைதியாக்கி இந்து அமைப்பினர் நடத்திய அராஜக செயலை விவரிக்கும் முதல் கதையே நம்மை மனிதன் என்ற தன்மையிலிருந்து விடுவித்து கேவலமான பிறவியாக உணரவைத்து விடுகிறது.

அன்பு மனைவியையும் அருமை மகனையும் வைத்துக்கொண்டு கலவரத்தில் தனது குடும்பம் நிலைகுலைந்து விடக்கூடாது என்பதை கருத்தில் கொண்டு ஐந்து நாட்களுக்கும் மேலாக தனது வீட்டில் பூட்டிக் கொண்டு வீட்டுக்குள்ளேயே பதுங்கி இருக்கும் இல்லறத் தலைவனின் மனநிலை எப்படியான ஒரு கொடுமையை அனுபவிக்க முடியும் வாய்விட்டு அழக் கூட முடியாத சூழலை கலவர பூமி ஏற்படுத்தி விட்டதே என்று கதறும் அவரது குரல் வாசிக்கும் ஒவ்வொருவரின் செவியிலும் இடியென விழுகிறது.

தாழிடப்பட்ட கதவுகள் வழியே அவர் தேடிக் கொண்டிருப்பது ஒவ்வொரு மனிதர்களின் மனங்களில் ஒளிந்து கொண்டிருக்கும் மனிதத்தை தானே.

சட்டம் அனைத்து மக்களுக்கும் பொதுவானதுதான் என்பதையும் எல்லோருக்கும் பாதுகாப்பும் பயமின்றி வாழ்வதற்கான அடிப்படை உரிமைகளை வழங்குவதற்கும் பொறுப்பான காவல்துறையானது தனது தார்மீகக் கடமையிலிருந்து விலகி நின்று வேடிக்கை பார்த்ததன் விளைவே கலவரத்தின் கொடூரத்தை அதிகப்படுத்திவிட்டது.

கலவரத்தை நடத்தியது என்ற சந்தேகத்தின் பேரில் எவ்விதத் தவறையும் செய்யாத அப்பாவி கைது செய்யப்பட்டு 17 ஆண்டுகள் சிறைதண்டனை அடைகிறான். பிறகு நிரபராதி என விடுவிக்கப்பட்டவனை அவனது மகள் திரும்பிக்கூடப் பார்க்காமல் புறக்கணிக்கிறாள்.குண்டு வச்சவனோட பொண்ணு என்ற சமூகத்தின் ஏச்சும் பேச்சும் 17 ஆண்டுகளாக அவளது மனதை எவ்விதம் கொடுமையாக்கி அவளது அன்றாட வாழ்வை சூறையாடி இருக்கும் என்பதை உணரத் தெரிந்தவர்கள் ஆயுதத்தை கையில் எடுக்கத் துணிவார்களா?

எவரோ சிலர் ஏவிவிடும் போது ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த இந்துக்கள் ஏன் என்றும் எதற்கு என்றும் எப்படி என்றும் வினா எழுப்பாமல் கலவரத்தில் ஈடுபட்டு தமது வாழ்க்கையை தொலைத்ததையும் இந்த நூல் பதிந்து வைக்கிறது. இந்து சமூகத்தில் சிலருடைய தூண்டுதலின் பேரில் மக்களுக்குள் ஏற்படும் கலவர உணர்வும் தெளிவாக காட்டப்படும் அதே வேளையில் இஸ்லாத்துக்குள் பரவி வரும் தீவிரவாதம் தர்கா எதிர்ப்பு பெண்களுக்கு உரிய இடம் அளிக்காத இறுக்கம் போன்றவற்றையும் கேள்வி கேட்கிறது நூல்.

சுய சிந்தனையைத் தொலைத்த ஒவ்வொரு மனிதர்களும் அன்பை மறந்த மிருகங்களாக மாறிவிட்ட மனித சமூகமும் இன பேதத்தை கையில் எடுத்து அப்பாவிப் பொதுமக்களின் வாழ்வை சிதைப்பது என்பது மிகக் கொடூரமானது மிகவும் கேவலமானதும் கூட. அந்த வகையில் கலவரத்தில் ஈடுபடும் ஒவ்வொருவரினுடைய குடும்பத்தையும் அவர்கள் நினைத்துப் பார்த்தால் இத்தகு கலவரங்கள் நிகழ்வதற்கு வாய்ப்பே இல்லை.

மனிதர்களுக்கு அடிப்படையாக நாம் கல்வி நிறுவனங்களில் கற்றுக் கொடுக்க வேண்டியது இன ஒற்றுமையையும் மனிதத்தையும் என்பதை இந்த நூல் சிறப்புற அறிவுறுத்துகிறது. அரசியல் சாசனத்தின் படி நடந்து கொள்ளும் அரசு இயந்திரம் இன்னும் முழுமையாக தனது சட்ட திட்டங்களை பயன்படுத்தவில்லை என்பதை உணரும் ஒவ்வொருவருக்கும் இக்கதைகள் எதிர்பார்ப்பது பதில்களை அல்ல எல்லோருடைய மனங்களிலும் இன பேதத்தைத் துறந்த சகோதரத்துவத்தை ஏற்படுத்தக்கூடிய புதியதொரு மாற்றத்தை என்பதை வாசிக்கும் ஒவ்வொருவரும் உணர்ந்து கொள்ள வேண்டும்.

நூலின் தகவல்கள் : 

இளையவன் சிவா



இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள்சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.



Show 1 Comment

1 Comment

  1. அ.கரீம்

    நீண்ட நாட்களுக்குப் பிறகு தாழிடப்பட்ட கதவுகளை குறித்த நூல் அறிமுகம் காண்கிறேன்.. இந்த புத்தகத்தில் உள்ள ஒவ்வொரு கதையையும் உணர்வு ரீதியாக வாசித்து அதை எழுத்தாக கடத்திய அன்பு தோழர் இளையன் சிவா அவர்களுக்கு நெஞ்சம் நிறைந்த நன்றியும் அன்பும்..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *