அறிவுத்தோட்ட்த்தில் சென்ற மாதம் நடைபெற்ற விவசாயிகள் மாதாந்திரக் கூட்டத்தில் டாக்டர் பெரு. மதியழகன், பதிவாளர் ( ஓய்வு), கால்நடைப் பலகலைக்கழகம் அவர்கள் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டார்.

கால்நடைத்துறையில் மிகப் பெரும் ஆளுமை அறிவுத்தோட்டத்திற்கு வந்ததில் மகிழ்ச்சியில் திளைத்த தருணத்தில் எனக்கு நினைவுப் பரிசாக ஒரு சிறு புத்தகம் அளித்தார். தனக்கென வாழாத தன்மைக் கொண்ட உங்களுக்கு இந்த புத்தகத்தை கொடுப்பது மிகப் பொருத்தம் எனக் குறிப்பிட்டார்.
புத்தகத்தின் தலைப்பு : “தமக்கென வாழாதவை” . இது ஒரு கவிதைத் தொகுப்பு. தனது கல்லூரி நாட்களிலிருந்து 30 ஆண்டுகளாக எழுதியவைகளின் தொகுப்பு.
கல்லூரி வாழ்க்கை, கவிதை இரண்டினையும் இணைப்பது காதல்தான். எனவே , காதல் கவிதையாகத்தான் இருக்கும் என்ற பொதுக் கருத்தின் அடிப்படையில் இருந்து விட்டேன்.. ஆனால், பத்து நாட்களுக்கு பிறகு அதனை புரட்டும் போதுதான் தெரிந்த்து. அது உன்னதக் காதலை அடிப்படையாக்க் கொண்டது. இதுவரை யாரும் முயற்சிக்காத ஒன்றாக தான் கற்று , பணியாற்றும் துறையான கால்நடைகளைப்பற்றிய கவிதைகள்.. சக மனிதர்களை புகழ்ந்து எழுதப்படும் கவிதைகளுக்கு இடையே வாழ்நாள் முழுவதும் மனிதர்களுக்காக உழைத்து மாளும் ஆடு, கோழி, மாடுகளைப் பற்றியது என்ற போது மெய்சிலிர்த்தது.
பணவள பெருகிட பால்வளம் விளைத்திடும்
பண்பின உடையது பசுவினம்
கனமிகு சுமைப்பொறி கட்டைவண்டியை
களிப்புடன் இழுப்பவை எழுதுகள்
இப்படி நீள்கிறது அந்த தலைப்புக்கவிதை.

கால்நடைகள் பராமரிப்பதற்கும் நோய்களுக்கான தீர்வுகளையும் எளிய கவிதையில் கொடுத்திருப்பது அற்புதம்.

கோமாரி என்றொரு நோய்யுண்டு அந்த
கொடும் நோயில் கால், வாயில் புண்கள் தோன்றும்
கால் நோய் வாய் நோய் என்றும் சொல்வர்
கட்டாயம் தடுப்பூசி போட்டோர் வெல்வர்

ஆமை புகுந்தால்
வீட்டுக்கு ஆகாது – இது
அஞ்ஞானம்
ஆர்பி புகுந்தால்
ஆட்டுக்கு ஆகாது – இது
விஞ்ஞானம்

கிரகங்கள் தாண்டி விசாலப்பட்டு சிந்திக்கும் வித்தகராக எழுதுகிறார் :

இந்த நூற்றாண்டின்
முதல் பொங்கலை
பூமியில் வைத்தோம்
இறுதி பொங்கலை
செவ்வாயில் வைப்போம்.

இயற்கை உரத்திற்கும் இசைவான கவிதையினையும் கொடுத்துள்ளார்:

வேதி உரங்கள் போட்டுப் போட்டு
பாதிப்படைந்த பாழ் நிலம் திருத்த
ஆட்டுப் பட்டியை அந்த நிலத்தில்
நாட்டி வைத்து கிடை போட்டாலே
நாட்டு நிலமெல்லாம் நன்னிலமாகும்
வாட்டும் நோய்வரா நன்னிலை மலரும்

விவசாயியின் எதார்த்தமான பிரச்சனையிலும் கவிதையினைப் பிணைக்கிறார்:

தட்டுவிலையும் ஏறிப்போச்சு
தவிட்டு விலையும் ஏறிப்போச்சு
பொட்டுவிலையும் ஏறிப்போச்சு
பிண்ணாக்கும் ஏறிபோச்சு

ஒரு ரூபா பால்விலைய
உயர்த்தியதைத் தாங்காம
வால்வால்னு கத்துராங்க
வயித்தெரிச்சல் கொட்டுராங்க

குடிதண்ணீர் லிட்டருக்குக்
கொடுக்கிறாங்க பத்து ரூபா
மடிக்கறந்த பால்கொடுத்தா
மலைக்கிறது எதனாலே?

தொழில் நுட்பத்தை சாதாரண விவசாயிகளுக்கு சேர்க்கவும் புதிய வேலை வாய்ப்புக்க்ளை இளைஞர்களுக்கு உருவாக்கவும் உருகிஉருகி கவிதைகள் தந்துள்ளார்.
அழகியலோடு கவிதைகள் அழகாகப் பாய்ந்துள்ளன.

மாடாய் உழைக்கும் மனிதர்களுக்கே மதிப்பில்லா இந்த உலகில்
மாடாய்,ஆடாய், கோழியாய் தனக்கென வாழாதவைகளுக்கு குரல் கொடுக்கும் இந்த கவிதைப் புத்தகம் அவசியம் அனைவரும் வாசிக்க வேண்டிய ஒன்று.

நூல் : “தமக்கென வாழாதவை”
ஆசிரியர்: டாக்டர் பெரு. மதியழகன், 9443728122
வெளியீடு : இலக்கிய வீதி, சென்னை
விலை: ரூ 50

வாழ்த்துக்களுடன்,
கு.செந்தமிழ் செல்வன், 9443032436
அறிவுத்தோட்டம், வேலூர்

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம். 



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *