“ஒரு அறிவிலி கூட வரலாற்றை உருவாக்க முடியும். ஆனால் ஒரு மேதையால்தான் வரலாற்றை எழுத முடியும்” என்ற “ஆஸ்கார் வைல்ட்” அவர்களின் கருத்தை முன்வைத்து “தமிழகம்… பிரமிப்பூட்டும் ஒரு மக்கள் வரலாறு” என்ற நூலை முனைவர் கே மோகன்ராம் மற்றும் முனைவர் ஏ.கே காளிமுத்து ஆகியோர் எழுதியுள்ளனர்.
இந்த நூலைப் பற்றி :
இந்த நூல் மொத்தம் ஐந்து பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. நாம் வழக்கமாக படிக்கும் வரலாற்று நூல்களில், குறிப்பாக தமிழக வரலாறு என்று தலைப்பிட்ட வரலாற்று நூல்களை, படித்தோமானால், சங்க காலம் தொடங்கி, சங்கம் மருவியகாலம், பிறகு பல்லவர் காலம், சோழர் காலம் , பாண்டியர் காலம், விஜயநகரப் பேரரசு, நவாப்புகள் ஆட்சி, பாளையக்காரர்கள் முறை, பிரிட்டிஷ் ஆட்சி , போன்று ஒரு வழக்கமான காலவரிசைப்படி வரலாற்றுத் தகவல்கள் நிரம்பி இருக்கும். அவற்றைக் குறித்த நுட்பமான விமர்சனம் ஏதும் இருக்காது. அவ்வாறு ஒரு திறந்த மனதுடன் விமர்சனப் பூர்வமாக வரலாற்றை அணுகும் நூல்கள் அரிது. இந்த நூல் அப்படிப்பட்டது அரிதான நூல்களில் ஒன்றாகும்.
இந்நூல் வெறுமனே, வரலாற்றுத் தகவல்களைச் சொல்லிச் செல்லாமல்,விருப்பு வெறுப்பின்றி, விமர்சனங்களையும் முன்வைக்கிறது.
இந்நூலில் உள்ள தலைப்புகளே, மற்ற நூல்களைவிட வேறுபட்டு நிற்பதற்கு சான்றாக உள்ளது.
மண்ணும் மனித உறவுகளும்,
செழித்தோங்கிய வாணிபமும் சிலிர்த்தெழுந்த சமணமும்,
வர்ணாசிரமும் ஆச்சாரமும்,
வேளாண் விரிவாக்கமும்
பிரம்மதேயமும்,
போரும், புது ரத்தமும்,
சத் சூத்ரரும் , சைவ சித்தாந்தமும்,
காணி ஆட்சியும் , மேல் சாதிகளும்,
போன்று அன்றைய தமிழ்ச் சமூகத்தில் நிலவிய மண்ணுக்கும் மக்களுக்கும் இடையேயான சாதி, சமய, அரசியல் குறித்த ஒரு வரலாற்றை ஒரு புத்தம்புதிய தலைப்புகளில் மிக விரிவாக நுட்பமாக இந்த நூல் விவரிக்கிறது.
இது மட்டுமின்றி நாம் அன்றாடம் வாசித்து கடக்கும் நூல்களின் பகுதிகளில் உள்ள செய்திகளை வேறு கோணத்தில் அணுகுகிறது.
சான்றாக சில தலைப்புகளை பார்க்கலாம்.
ஹொய்சாளரும், துலுக்கானியமும்,
மாறிவரும் புவியியலும், புலம்பெயரும் சாதிகளும்,
வலங்கையும் , இடங்கையும்,
கொள்ளையடிக்கும் கவர்னர்களும், துணைபோகும் துபாஷிகளும்,
அரசியல் புவியியலும் ஆற்காடு நவாபும்,
காலனிய அரசின் கல்விக்கொள்கையும், சமயப் பூசல்களும்,
அடிமை ஒழிப்பும், மறைமுக நிலவுடைமையும்
சுயமரியாதை இயக்கமும், எதிர்வினைகளும்
பொருளாதாரப் பெரும் மந்தமும் , குடியானவர்களும்
உள்ளிட்ட பல தலைப்புகளில் வரலாற்றை மிக நுட்பமாகப் பேசுகிறது.
இந்த நூலின் பின்னிணைப்பாக சில ஆர்வமூட்டக் கூடிய செய்திகளும் கொடுக்கப்பட்டுள்ளன.
பிரிட்டிஷ் ஆட்சியின் போது தமிழகத்தில் புழக்கத்திலிருந்த அளவுகள், திசைகள், நாணயங்கள் மற்றும் 1851 ஆம் ஆண்டில் இருந்த தஞ்சை டெல்டாவின் பெரு நில உடைமையாளர்களின் பெயர் பட்டியல் உள்ளிட்ட தகவல்களும் கொடுக்கப்பட்டுள்ளன.
ஐரோப்பிய சமயப் பூசல்களுக்கும் , தமிழ்நாட்டில் நிகழ்ந்த மாற்றங்களுக்கும் உள்ள தொடர்பு குறித்து இந்நூலில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதாவது , இத்தாலியில் இருந்த போப்பாண்டவருக்கு எதிராக ஒட்டுமொத்த ஐரோப்பிய நாடுகள் கிளர்ந்தெழுந்து, எதிர் கிறிஸ்துவத்துக்கு மாறிய பொழுது, தென் ஐரோப்பாவில் மேற்குக் கரையில் இருந்த ஸ்பெயின், போர்ச்சுகல் போன்ற நாடுகள்தான் கத்தோலிக்கத் திருச்சபையின் பிரச்சனைகளுக்கு களமாயின. கடல்வெளியில் பயணித்த வாஸ்கோடகாமா இஞ்சியையும் ,மிளகையும் மட்டும் தேடி வரவில்லை , கிழக்கு ஆப்பிரிக்காவில், மலபார் கடற்கரையில் திசைமாறிய கிறிஸ்தவர்களையும் தேடித்தான் வந்தான். கள்ளிக் கோட்டையில் தான் கண்ட கோயில்கள் உண்மையில் மாதா கோவில்கள்தான் என்றும் கருவறையிலிருந்த அம்மன் தங்கள் மேரி தான் என்றும் நம்பினான் என்ற சமயம் சார்ந்த விவரங்களையும் கூறுகிறது.
ஆங்கிலேயர்கள் சென்னையை ஆக்கிரமித்து, ஆட்சி செய்த காலகட்டத்தில் நிகழ்ந்த வழக்குகள், தண்டனைகள் தொடர்பான செய்தியொன்றையும் கூறுகிறது.
ஆங்கிலேயர்கள் சென்னையை ஆக்கிரமித்த போது, அதன் துவக்க காலத்தில், சென்னையில் பயிற்சி பெற்ற வழக்கறிஞர்கள் இல்லையெனவும், ரெக்கார்ட்ஸ் கோர்ட்டில் வழக்குகள் கையாளப்பட்டன எனவும், ஜூரி என்ற நடுவர் மன்றத்தில் இந்தியர்களும் இருந்தனர் எனவும், அதில் பெரும்பாலும் இந்திய வழக்கத்தில் உள்ள தண்டனைகள்தான் வழங்கப்பட்டன எனவும் செய்திகளைக் கூறுகிறது. பழுக்க காய்ச்சிய இரும்பால் முத்திரையிடுவது, குற்றம் நடந்த இடத்தில் தூக்கிலிடுவது, சுமத்ரா நாட்டிற்கு கடத்துவது, சவுக்கடி வழங்குவது போன்ற தண்டனைகளே வழக்கத்தில் இருந்தன எனவும், சாவடியின் அடித்தளத்தில் உள்ள கைதிகள் சிறை வைக்கப்பட்டனர் எனவும் தகவல்களைச் சொல்கிறது.
பிரிட்டிஷ் ஆட்சி காலத்தில் தொலைத்தொடர்பு எவ்வாறு இருந்தது என்பது குறித்தும் கூறப்பட்டுள்ளது 1800 லிருந்து 1815 வரை தொலைத்தொடர்பு சந்தித்த சவால்களையும் இந்த நூல் விவரிக்கிறது. தொலைத்தொடர்பு வழியில் நான்கு மைல்களுக்கு ஒரு நிறுத்தம் உண்டு. தபால் ஓடிகளால்தான் தபால்கள் ஓரிடத்திலிருந்து மற்றோர் இடத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டன. அவர்கள் நீண்ட தூரம் ஓடிய பிறகு, ஓவெடுக்க ஓய்வு இருப்பிடங்கள் இருந்ததுண்டு. அங்கு ஒரு குடிசையில் மாற்று தாபால் ஓடிகள் இருப்பர்.
ஒவ்வொரு இடத்திற்கும், இரண்டு தபால் ஓடிகள் பைகளை சுமந்து கொண்டு தொடர்ந்து ஒன்றரை மணி நேரம் நிற்காமல் ஓடுவார்கள். தபால் ஓடிகளின் கால்களுக்கு மசாஜ் செய்ய ஊழியர்கள் இருப்பார்கள். தபால் பைகளில் லேபிள் ஒட்டி, புறப்படும் இடம், சேரும் இடம் , ஒவ்வொரு பையிலும் குறிக்க வேண்டும். ஒரு மணி நேரத்திற்கு 5 மைல் தூரம் ஓட வேண்டும். 12 மணி நேரத்தில் 60 மைல்கள் ஓடலாம். இதுதான் ராணுவத்தின் வேகம் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், சமூக சீர்திருத்த இயக்கங்களைப் பற்றியும் சில செய்திகளைக் கூறுகிறது. 1927 லிருந்து குடியரசு நாளிதழில், சாதி, சமய எதிர்ப்பு கருத்துக்களையும், இதிகாச புராணங்களையும், ராமாயணத்தையும், தாக்கி எழுதும் போது, இவை பார்ப்பனீயத்தை தான் குறிக்கிறது என்று கூறி அதனை அறிஞர்கள் வரவேற்றனர் எனவும், இரண்டாம் கட்டமாக சைவ சமயத்தையும், பெரியபுராணம், திருவிளையாடற் புராணங்களையும், குடியரசு இதழ் விமர்சனம் செய்யும் பொழுது, வேளாளர்கள் தங்களை தாக்கியதாக கருதி, வேளாளர்களில் மறைமலை அடிகள் போன்றோர்கள், குடியரசு இதழை எதிர்த்து போராட்டத்தை நடத்தினர் எனவும், சுயமரியாதை இயக்கம் என்பது சைவ சமயத்தை அழிக்க, வைணவர்கள் சூழ்ச்சியாக துவக்கிய முயற்சி என்று கூறினர் எனவும் இந்நூல் தகவல்களை முன்வைக்கிறது.
மேலும், குடியரசு இதழில் மறைமலையடிகள் கூறும் வாதங்களுக்கு கைவல்யம் சாமியார் கடுமையாக கட்டுரைகள் எழுதினார். உணர்ச்சி வேகத்தில் வசைப் பாடல்கள் பாடப்பட்டன எனவும் தகவல்களைக் கூறுகிறது.
மேற்கண்டவாறு, அரிய தகவல்களை நமக்கு வழங்குவதோடு, விமர்சனப்பூர்வமாகவும் வரலாற்றை அணுகும் இந்நூலை அனைவரும் வாசிக்க வேண்டுமென பரிந்துரைக்கிறேன்.
நன்றி
தொடர்புக்கு : சு.ஈஸ்வரன். [email protected]
நூலின் பெயர் : தமிழகம் பிரமிப்பூட்டும் ஒரு மக்கள் வரலாறு.
ஆசிரியர்கள் : முனைவர்.கே.மோகன்ராம்.
முனைவர்.ஏ.கே.காளிமுத்து
பதிப்பகம் : Jazym Publication, திருச்சி.
விலை: ரூ.250/-
சிறந்த பதிப்பு வாகழ்த்துக்கள் அய்யா