ஆ.இரா.வேங்கடாசலபதி எழுதிய தமிழ்க் கலைக்களஞ்சியத்தின் கதை - நூல் அறிமுகம் | A.R.Venkatachalapathy ' s Thamizh Kalaikalanjiyathin Kathai -https://bookday.in/

தமிழ்க் கலைக்களஞ்சியத்தின் கதை – நூல் அறிமுகம் 

தமிழ்க் கலைக்களஞ்சியத்தின் கதை – நூல் அறிமுகம் 

 

நூலின் தகவல்கள்:

நூல் : தமிழ்க் கலைக்களஞ்சியத்தின் கதை
ஆசிரியர் : ஆ. இரா. வேங்கடாசலபதி
விலை : ரூ.75
பதிப்பகம் : காலச்சுவடு பதிப்பகம்

ஆங்கிலத்தில் கலைக் களஞ்சியம் எனப்படும் Encyclopaedia-கள் 1771-லேயே வந்துவிட்டன. Brittanica நிறுவனம் இந்த முதல் Encyclopaedia -வை சுமார் 3 தொகுதிகளாக, ஒரு முன்மாதிரி திட்டமைப்புடன் கொண்டுவந்தது.

இந்நிறுவனம் வெளியிட்ட 11-வது திருத்தப் பதிவு 1911-ல் வெளியானது. இது இன்றளவும் மெச்சப்பட்டாலும், 2010-ற்கு பிறகு அச்சு வடிவு புத்தகங்கள் வெளியிடுவதை பிரிட்டானிகா நிறுவனம் நிறுத்தி விட்டது. ஆன்லைன் களத்தில் குதிக்க முனைந்த பிரிட்டானிகாவிற்கு விக்கிப்பீடியா காரசாரப் போட்டியாக இன்றளவும் விளங்குகிறது.

உலகெங்கிலும் ஒவ்வொரு மொழியினரும் தங்கள் மொழியில், தங்களுக்கென்று ஒரு கலைக் களஞ்சியம் உண்டு பண்ணுவதை, மொழிக்குரிய உயரிய அங்கீகாரமாகக் கருதும் வேளையில், முதலில் என்சைக்கிளோபீடியா என்றால் என்ன? தமிழில் அதற்கு என்ன தேவை வந்தது?
இந்தக் கேள்விகளை ஒப்புநோக்க வேண்டும். இவையே அவையின் கருதுகோளாக இருந்திருக்கும்.

பிரெஞ்சு கலைக்களஞ்சியம் பற்றி இராபர்ட் டார்ண்டன் எழுதிய “A Publishing History of the ‘Encyclopédie’, 1775-1800” என்ற நூலே தமிழில் கலைக்களஞ்சியம் உருவான வரலாற்றை தமக்கு எழுதத் தூண்டியதாகச் சொல்கிறார் ஆ. இரா. வேங்கடாசலபதி.

Encyclopaedia என்றால் ‘கல்விப் புலம் சுற்றிய அனைத்தும்’ என்று கரட்டு வடிவில் மொழிபெயர்க்கலாம். அப்படி என்றால் அகராதியும் இதுவும் ஒன்றா? இல்லை. அகராதி சொல்லின் பொருளை உணர்த்துவதோடு, அதன் மொழியியலை ஆராயும்; இது அப்பொருளின் தன்மையியல், பயன்பாட்டியல் குறித்து விளக்கப்படங்கள் கொண்டு அமையும்.

தமிழில் எழுதுதல் என்ன அத்தனைப் பெரிய வேலையா? இதை ஏன் மெச்சிப் பேசவேண்டும்?

ஆம். இந்த இமாலயப் பணியை முதலில் மேற்கொண்ட இந்திய மொழி தமிழ்தான். பேராசிரியர் க. அன்பழகன் இகழ்ந்துரைத்தபடி, ‘இதுவெறுமனே ஆங்கில கலைக்களஞ்சியத்தை மொழிபெயர்க்கும் வேலையாக இருந்திருந்தால் பரவாயில்லை.’ ஆனால் இது பத்து பாகங்களாக 7500 பக்கத்தில், வெறும் 15 ஆண்டுகால உழைப்பில் 1200 கட்டுரை ஆசிரியர்களைக் கொண்டு நிதி இல்லாமலும் உடல் நலம் இல்லாமலும் சில நேரங்களில் கட்டுரைகள் இல்லாமலுமே தேடித் தேடித் தேய்ந்து போய், பற்பல அறிஞர்களின் கூட்டு முயற்சியின் பெயரால் உருவான பிரம்மாண்ட படைப்பு. அதை வழக்கமான பாணியைக் காட்டிலும் மிக விறுவிறுப்பாய் பதிவு செய்துள்ளார் சலபதி.

பெரியசாமித் தூரனும் தி.சு. அவினாசிலிங்கமும் தான் எத்தனைப் பெரிய மனிதர்கள்! கிட்டத்தட்ட இந்த கலைக்களஞ்சியம் உருவான மொத்த கதையும் இந்திய அரசியலமைப்புச் சட்டம் உருவான கதையோடு கச்சிதமாய் ஒன்றிப் போகிறது. 1920-களில் சி.ஆர்.தாஸ் & மோத்திலால் நேரு முன்வைத்த அரசியலமைப்பு கோரிக்கை, 1930-களின் தொடக்கத்தில் கம்யூனிஸ்ட் முன்னோடி எம்.என்.ராயின் குரலில் ஒலிக்கிறது. பின் அது காங்கிரஸின் குரலாகவும் நேருவின் குரலாகவும் ஒலித்து முடித்து, சற்றும் பலம் குன்றாத மக்கட் குரலாய் ஒலித்த கணம், க்ரிப்ஸ் தூதுக் குழுவால் 1946-ல் நடைமுறைக்கு வருகிறது.

இதன்படியே மேனாட்டுப் படிப்பின் அறிமுகத்தால், தமிழில் கலைக் களஞ்சியம் உருவாக வேண்டும் என்று சில படித்த தமிழிர்கள் எண்ணுகிறார்கள். ஆ.முத்துத்தம்பிப் பிள்ளை எழுதிய ‘அபிதான கோசமும்’ ஆ.சிங்காரவேலு முதலியார் எழுதிய ‘அபிதான சிந்தாமணியும்’ அப்படியொரு முன்னெடுப்புதான். ஆனால் இயங்கியல் அளவில் தமிழ் – புராணம் – ஹிதிகாசம் என்று அவை சுருங்கி விட்டன. எனினும் இவை குறைத்து மதிப்பிடக் கூடியன அல்ல. பெரும் உழைப்பில் உருவானவை. அபிதான சிந்தாமணி 1938-ல் இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் கைது செய்யப்பட்ட போது, அறிஞர் அண்ணா விரும்பி வாசித்த நூல். தெ. பொ. மீனாட்சிசுந்தரனாருக்கு அறிவுத் தீனிப்போட்டதும் சிந்தாமணிதான்.

அங்கிருந்து, அறிவியல் ரீதியில் உலகந் தழுவிய எல்லாப் பொருட்களும் அடங்கியதாய், ஒரு கலைக் களஞ்சியம் தோன்ற வேண்டும் என்ற எண்ணத்தை முதலில் வெளிப்படுத்தியவர், தி.சு. அவினாசிலிங்கம் செட்டியார் (1932).பெரிய வணிகக் குடும்பத்தில் பிறந்து, பச்சையப்பனில் கல்விப் பயின்று, விடுதலைப் போராட்டத்தில் பலமுறை சிறை சென்று, பின்னர் சுதந்திர இந்தியாவில் தமிழகத்தின் கல்வித்துறை அமைச்சராக இருந்து பெரும் தொண்டாற்றிய மனிதர் இவர்.

ஆனால் 1920-களிலேயே தன் சக கல்லூரி நண்பர் சி. சுப்பிரமணியத்திடம் (பின்னாளில் மத்திய அமைச்சராக இருந்தவர். பசுமைப் புரட்சியை முன்னெடுத்தவர்) சொல்லியிருக்கிறான், பெ.தூரன். தூரனும் சி.சு.வும் ஒருசாலை மாணாக்கர் என்பதே பெரும் வியப்புக்குரிய செய்தியாக இருந்தது.

தூரனும் 1944, 47 என்று நேரம் கிடைக்கும் போதெல்லாம் இதனைச் சொல்லி வந்திருக்கிறார். இங்குதான் ஆச்சரியப்பட வேண்டியிருக்கிறது. பெ. தூரன் தலைமையாசிரியராக பணிசெய்து வந்த பெரியநாயக்கன்பாளையம் இராமகிருஷ்ண வித்தியாலயத்தை நிர்வகித்து வந்தவர், தி.சு. அவினாசிலிங்கம் செட்டியார். உடனே கல்கியின் இனஞ்சுட்டுதலால், தூரனை அழைத்து தலைமையாசிரியராகக் கொண்டு கலைக் களஞ்சியம் உருவாக்கும் பணி தொடங்கியது.

ஒன்றிய அரசின் நிதிநல்கை வேண்டி தொடங்கியபோதும், 1950-களின் பிற்பகுதியில் ஏற்பட்ட பொருளாதார வீழ்ச்சியால் மாநில அரசின் நிதியோடும் – சான்றோர்களின் உதவியோடும் இப்பணி நடந்தேறியது.

வரைவுக் குழுவிலிருந்த பலரும் பலகாலத்தில் சென்றுவிட, அம்பேத்கரின் பெரும் உழைப்பு மட்டும் சட்டப் புத்தகத்தை வடிவமைத்தது மாதிரி – வெறும் 40 வயதில் பெரியதொரு பணியைத் தன்மேல் போட்டுக் கொண்ட தூரன், 15 வருடம் விடாது உழைத்தார்.

இந்தப் பணிக்காகவே ‘தமிழ் வளர்ச்சிக் கழகம்’ என்றொரு சங்கம் நிறுவி, மதராஸ் பல்கலைக்கழகம் கடிகாரத் தூண் அறையில் செயல்படத் தொடங்கினர். வரலாறு, புவியியல், கணிதம், வேதியல், மொழியியல், சமயம் என்று எல்லாப் பொருண்மைக்கும் தனித்தனி குழுக்கள் ஏற்பாடு செய்யப்பட்டன. தொ.பொ.மீ’யின் பங்கு மட்டும் இவ்வொட்டுமொத்த கலைக் களஞ்சியத்தில் 150 பக்கத்திற்கு இருக்கும். சுமார் 2% விழுக்காடு இது.

பெரியசாமித் தூரனின் உடல் நலமும் இதற்கு ஒத்துழைக்கவில்லை. வலிப்பு நோயால் அவதிப்பட்டார். அவர் உணவு மேசையில் ஆகாரத்தை விட, மருந்து பொட்டலங்களே அதிகம் என்று ஒரு துணையாசிரியர் பதிவு செய்துள்ளார்.
இரவும் பகலும் ஓடாய்த் தேய்த்திருக்கிறார். அடிப்படையில் கணிதத் துறையில் பட்டம் பெற்ற தூரன், பல்துறை சார்ந்தும் தமிழ் ஓங்கியும் இருந்த இப்பணியில் தலைமை வகித்ததே வியப்பு. அதிலும் 4 பக்கம் பதிவுக்கு ஒரு விலங்கியல் பேராசிரியர் 150 பக்கம் எழுதியனுப்புவார். அதனைப் பொருட் குறைவு இல்லாமல் முழுவதுமாகப் படித்து சுருக்குவார் இவர். இதனை 15 ஆண்டுக்காலமும் சம்பளத்தைப் பற்றி பெரிதும் கவலைக் கொள்ளாமல் உழைத்திருக்கிறார்.

தமிழாசிரியர்களுக்கும் மற்ற துறை ஆசிரியர்களுக்கு இணையான ஊதியம் வழங்க வழிசெய்த பெருந்தகை தி.சு. அவினாசிலிங்கத்தை இவ்வுலகம் இன்னும் அடையாளங் கொள்ள வேண்டும்.

இதிலுள்ள மிகப்பெரிய சவாலே, கலைச்சொல்லாக்கம் தான்! ஏனென்றால் இதுவரை தமிழில் இல்லாத – சொல்லப்படாதவற்றை அவர்கள் எழுத விழைந்தார்கள். பெ. தூரனின் நினைவுக் குறிப்பிலிருந்து ஒரு சில பத்திகளை சலபதி கையாண்டிருக்கிறார்,

“மாலையில் சுமார் நான்கு மணிக்குக் கூடி இக்கலைச்சொல் குழுவினர் 7 மணி வரை திட்டமிடுவார்கள். எவ்விதமான கட்டணமும் இல்லை. 12 பிஸ்கோத்துகளையும் தேநீரையும் அருந்திவிட்டுப் பணி செய்ய வேண்டும். இவர்கள் செய்த பணியை என்றும் மறக்க முடியாது.
இவ்விதமாக சுமார் 18 மாதம் கலைச்சொல் குழுவினர் தமிழ் வளர்ச்சிக் கழக அலுவலகத்தில் கூடி கொண்டே இருப்பர். பொருத்தமான கலைச்சொல்லா அகப்படாவிட்டால் எளிதில் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். ஒரு நாள் மாலையில் கூடினால் பத்து பதினைந்து கலைச்சொற்களே தீர்மானமாகும். அதிகமாகப் போனால் 30 கலைச்சொற்கள் வரை முடிந்துவிடும். சில நாட்களுக்கு ஒரு சொல்லுக்கு ஏற்ற கலைச்சொல் கண்டுபிடிக்க முடியாமல் போனாலோ புதிதாக உருவாக்க மேல் போனாலோ அத்துடன் கூட்டம் நிறைவு பெறும்.”

Personality என்ற சொல்லுக்கு ஏற்ற சொல்லாக்கம் எப்படி உருவானது என்று தூரன் பதிவு செய்திருப்பது சுவாரசியமானது.

“கலைச்சொற்கள் நல்ல தமிழில் எல்லோரும் ஏற்றுக்கொள்ளும் படியாக அமைப்பது மிகக் கடினம். எடுத்துக்காட்டாக, Personality என்ற கலைச் சொல்லை எடுத்துக்கொள்வோம். இதற்கு முன்பு உளவியல் துறையில் பலர் பலவிதமாக கலைச்சொல் உருவாக்கம் முயன்றிருக்கிறார்கள். ‘மூர்த்திகரம்’, ‘தோற்றம்’, ‘தோற்றப்பொலிவு’ என்பதையெல்லாம் அவர்கள் பயன்படுத்திய சொற்களாகும். ஆனால் இவைகளில் எதையும் முழு மனநிறைவு பெறாதவையே ஆகும்…

ஆகவே இந்த ஒரு சொல்லுக்கு மட்டும் ஒரு கூட்டம் முழுவதும் செலவழித்தோம். செலவழித்தாலும் ஏற்ற சொல்லை காண முடியாமல் தடுமாறினோம். இறுதியாக பர்சனாலிட்டி என்ற சொல்லுக்கு பன்மொழிப் புலவர் திரு. தெ. பொ. மீனாட்சி சுந்தரனாரையே அடுத்த நாள் ஒரு புதுச் சொல் கண்டு பிடித்து வருமாறு கேட்டுக் கொண்டோம்…

இறுதியாக இலக்கணத்தைப் பயன்படுத்தி ‘ஆளுமை’ என்ற சொல்லை அடுத்த நாள் கூட்டத்தில் தெரிவித்தார்கள்.”

Encyclopaedia என்பதற்கு ஈடாக ‘கலைக் களஞ்சியம்’ என்ற சொல்லாக்கமே இக்குழுவின் உருவாக்கம்தான். ஏறத்தாழ இப்படியாக 25,000 சொற்கள் உருவாக்கப்பட்டதாக தூரன் சொல்கிறார்.

தமிழ் உலக மொழிகளோடு போட்டிப்போட்டபடி இன்றளவும் அறிவியல் சொற்களுக்கு இணையான பதம் கொண்டு இயங்க, இவர்கள் இட்ட புள்ளிதான் இன்று கோலமாகியிருக்கிறது.

நெடுங்காலமாய் மறைந்திருந்த இந்த அருமை வரலாற்றை, ஒரு த்ரில்லர் நாவல் வடிவில் மிகக் குறுகிய புத்தகமாக (86 பக்கங்கள்) எழுதிய சலபதி வாழ்த்துக்கும் நன்றிக்கும் உரியவர்.

தமிழ்மேல் காதல் கொண்ட அனைவரும் வாசிக்க வேண்டிய நூல்.

 

நூல் அறிமுகம் எழுதியவர்: 

இஸ்கரா



இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள்சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

 



 

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *