thamizhaga uyar kalviyin sathanaikalum savaalkalum - munaivar.arunkannan தமிழக உயர் கல்வியின்சாதனைகளும் சவால்களும் - முனைவர். அருண்கண்ணன்
thamizhaga uyar kalviyin sathanaikalum savaalkalum - munaivar.arunkannan தமிழக உயர் கல்வியின்சாதனைகளும் சவால்களும் - முனைவர். அருண்கண்ணன்

தமிழக உயர் கல்வியின் சாதனைகளும் சவால்களும் – முனைவர். அருண்கண்ணன்

தமிழக உயர் கல்வியின் சாதனைகளும் சவால்களும்

இன்றைய சூழலில் இந்திய அளவில் உயர் கல்வியில் குறிப்பிடத்தக்க சாதனைகளை புரிந்த மாநிலங்களில் ஒன்று தமிழ்நாடு. நமக்கு கிடைக்கும் பல புள்ளி விவரங்களும் இதை உறுதி செய்கின்றன. இந்திய அளவில் பள்ளி படித்து கல்லூரி செல்வோரின் எண்ணிக்கை 2001-02 ஆம் ஆண்டின் கணக்குப்படி 8.07 சதவிகிதமாக இருந்துள்ளது. அதே ஆண்டின் கணக்குப்படி தமிழகத்தில் 10.65 சதவிகிதம்  பேர் பள்ளி முடித்து கல்லூரிக்கு சென்றுள்ளனர். ஒப்பீட்டளவில் இந்த கால கட்டம் வரை ஒட்டுமொத்த இந்தியாவின் வளர்ச்சிப் போக்கை ஒத்ததாகவே தமிழக உயர்கல்வியின் வளர்ச்சிப் போக்கும் இருந்துள்ளது என்பதை இந்த புள்ளி விவரம் காட்டுகிறது.

ஆனால் அதற்கு அடுத்த இருபது ஆண்டுகளில் தமிழக உயர் கல்வியின் வளர்ச்சி இந்தியாவை ஒப்பிடும்போது இருமடங்காக அதிகரித்துள்ளதை பார்க்க முடிகிறது. (AISHE – 2020 -21) அகில இந்திய கணக்கெடுப்பின்படி தமிழகத்தில் பள்ளி முடித்து உயர் கல்வி  செல்லும் மாணவர்களின் எண்ணிக்கை 46.9 சதவிகிதமாக உள்ளது இது தேசிய அளவில் வெறும் 27.3 சதவிகிதம்  மட்டுமே. மேலும்  அதே கணக்கெடுப்பின்படி தமிழகத்தில் ஆண்களை (45.4%) விட பெண்கள் (48.6%) அதிகமாக உயர் கல்வி பயில செல்கின்றனர்( பார்க்க அட்டவணை:1). அதேபோல் அகில இந்திய அளவில் (23.1%) ஒப்பிடும்போது தமிழகத்தில் (36.8%) அதிக எண்ணிக்கையிலான தலித் மாணவர்கள் உயர் கல்வி படிக்க செல்கின்றனர்.

அதேபோல் 2023 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட தேசிய அளவில் சிறந்த உயர் கல்வி நிறுவனங்களுக்கான தரவரிசைப் பட்டியலில் தமிழ்நாட்டின் மூன்று கல்லூரிகள் முதல் பத்து இடங்களுக்குள் வந்திருக்கின்றன. இதனுடன் முதல் 100 இடங்களில் தமிழ்நாட்டின் 35 கல்வி நிறுவனங்கள் இடம்பெற்றிருக்கின்றன.

மேலும் சமீபத்தில் வெளியான புள்ளி விவரங்களின் படி  இந்தியாவில் அதிக எண்ணிக்கையிலான தன்னாட்சி கல்லூரிகள் தமிழகத்தில்தான் உள்ளன அதனுடன் தமிழகத்தில்தான் அதிக எண்ணிகையிலான நிகர்நிலை பல்கலைக்கழங்கள் உள்ளன. இப்படி நம்முடைய உயர் கல்வியின் சாதனைகளாக பட்டியல் போடுவதற்கு ஏராளமான விசயங்கள் உள்ளன.

இந்த பெருமிதங்களை திராவிட மாடல் ஆட்சியின் சாதனைகளாக கொண்டாடும் தமிழக அரசு உயர் கல்வியில் உள்ள சவால்களையும் சிக்கல்களையும் விவாதித்து அதற்கு  தீர்வுகளை காணுவதும் இன்றைய சூழலில் அவசியத் தேவையாகும்.

அட்டவணை:1

 

ஆண்டு

இந்தியாதமிழ்நாடு
ஆண்பெண்மொத்தம்ஆண்பெண்மொத்தம்
2001-029.286.718.0712.48.0710.65
2020-2126.727.927.345.448.646.9

 

தமிழகத்தில் உயர் கல்வியின் தோற்றமும் வளர்ச்சியும்

இந்து இலக்கிய சங்கத்தை சேர்ந்த கசலு லட்சுமணராசு செட்டி, ஸ்ரீனிவாச பிள்ளை, நாராயணசாமி நாயுடு போன்றவர்களின் தலைமையில் நவம்பர் 1839 ஆம் ஆண்டு 70,000 பொது மக்களின் கையொப்பங்களை பெற்று அன்றைய சென்னை மாகாணத்தின் கவர்னராக இருந்த லார்ட் எல்பன்ஸ்டோனை  (Lord Elphinstone) சந்தித்து சென்னையில் கல்லூரி ஒன்றை தொடங்குவதற்கான விண்ணப்பம் கொடுக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து 1840 ஆம் ஆண்டு மெரீனா கடற்கரையில் தற்போது  உள்ள மாநிலக் கல்லூரியும் அதே சாலையில் அமைந்துள்ள சென்னை பல்கலைக்கழகமும் உருவாவதற்கான விதைகள் போடப்பட்டது. அப்படி உருவான நம்முடைய மாநிலக் கல்லூரி தான் தென் இந்தியாவின் முதல் கல்லூரி என்பது குறிப்பிடத்தக்கது. தமிழகத்தின் நவீன உயர் கல்வியின் வரலாறு இதில் இருந்துதான் துவங்குகிறது.

1854 இல் வந்த வூட்ஸ் டிச்பேட்ச் (woods dispatch)க்கு பிறகு அரசு கல்லூரிகளுடன் அரசு உதவி பெறும் கல்லூரிகளும் சென்னை மாகாணத்தில் தொடங்கப்பட்டன. பச்சையப்பன் கல்லூரி, தாம்பரத்தில் உள்ள சென்னை கிருத்துவக் கல்லூரி மற்றும் திருச்சியில் உள்ள இயேசு சபையினரால் நடத்தப்படும் புனித வளனார் கல்லூரி போன்ற கல்லூரிகள் அந்த  கால கட்டத்தில் தொடங்கப்பட்ட அரசு உதவி பெறும் கல்லூரிகளாகும்.

அதற்கு அடுத்து சில ஆண்டுகளில் சென்னை மாகாணத்தில் கல்லூரிகளின் எண்ணிக்கை அதிகரிக்கத் தொடங்கின 1881ஆம் ஆண்டு கணக்குப்படி 24 கல்லூரிகள் செயல்பட்டன. சட்டக் கல்லூரி, மருத்துவக் கல்லூரி, பொறியியல் கல்லூரி, ஆசிரியர் பயற்சி கல்லூரிகளும் சென்னை மாகாணத்தில் இந்த கால கட்டத்தில் தொடங்கப்பட்டன. அதேபோல் 1879 ஆம் ஆண்டு முதல் மருத்துவக் கல்லூரியில் பெண்களை அனுமதிக்கத்  தொடங்கினர்.

ஒப்பீட்டளவில் சென்னை மாகாணத்தில் உயர் கல்வி தொடர்ந்து வளர்ச்சி அடைந்தது. 1927 ஆம் ஆண்டு கணக்குப்படி சென்னை மாகாணத்தில் 100 கல்லூரிகள் செயல்பட்டன. ராணி மேரி அரசு கல்லூரி மற்றும்  அரசு உதவியுடன் நுங்கம்பாக்கத்தில் பெண்கள் கிருத்துவக் கல்லூரி போன்ற கல்லூரிகள் இந்த கால கட்டத்தில் பெண்களுக்கு என்று தனியாக தொடங்கப்பட்ட கல்லூரிகளாகும்.

பெண்கள் மட்டுமின்றி ஒடுக்கபட்டவர்களும் கல்வி பெறுவதற்கான வாய்ப்புகளும் சென்னை மாகாணத்தில் உருவாக்கப்பட்டது. பார்ப்பனர் அல்லாதோர் இயக்கம், நீதிக் கட்சி, தந்தை பெரியாரால் தொடங்கப்பட்ட சுய மரியாதை இயக்கம் போன்றவை இதற்கு முக்கிய பங்காற்றின. சுதந்திர இந்தியாவிலும் தமிழகத்தில் உயர் கல்வி நிறுவனங்களின் எண்ணிக்கை பல மடங்காக அதிகரிக்கத் தொடங்கின. 1953 ஆம் ஆண்டு 53 ஆக இருந்த கலை அறிவியல் கல்லூரிகளின் எண்ணிக்கை 1967 லில் 105 ஆக அதிகரித்தது. அதற்கு அடுத்த பத்தாண்டுகளில் இந்த எண்ணிக்கை 194ஆக உயர்ந்தது.

ஆசிரியர்களின் போராட்டமும் ஒழுங்காற்று சட்டமும்

பெரிதும்  கட்டுப்பாடுகள் இன்றி வளர்ச்சி பெற்ற அரசு  உதவி பெறும் தனியார் கல்லூரி நிர்வாகங்கள் மீது 1970-களில் பல கடுமையான குற்றச்சாட்டுகள் எழத் தொடங்கின. இக்கல்லூரிகளில் பணிபுரியும் ஆசிரிய மற்றும் ஆசிரியர் அல்லாத பணியாளர்களுக்கும் அரசு நிர்ணயித்த ஊதியம்   வழங்கப்படவில்லை அதனோடு ஆசிரியர்களுக்கு மாதா மாதமும் ஊதியம் வழங்கப்படவில்லை. மேலும் எந்தவிதப் பணிப்பாதுகாப்பும் இன்றி நினைத்த நேரத்திற்கு நிர்வாகங்களால் ஆசிரிய மற்றும் ஆசிரியர் அல்லாத பணியாளர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டனர். இதனால் மாணவர்களின் கல்வி பெரிதும் பாதிக்கப்பட்டது. இந்த அநீதிகளுக்கு எதிராக  ஆசிரியர் சங்கங்கள் போராட்டங்களை நடத்தினர்.

இதன் விளைவாக அன்றைய கலைஞர் தலைமையிலான திமுக அரசால் தனியார் உதவி பெறும் கல்லூரிகளை முறைப்படுத்தவும், அவர்களைக்  கட்டுப்படுத்தவும் 1975 நவம்பரில் ஒரு அவசரச் சட்டம் கொண்டு வரப்பட்டது, இது பின்னர்  தனியார் கல்லூரிகள் ஒழுங்காற்று சட்டம் -1976 ஆக வெளிவந்தது.  இந்த சட்டத்தின் விளைவாக கல்லூரி கல்வி இயக்குநரகத்துக்கு கீழ் இயங்கும் அரசு உதவி பெறும் கலை & அறிவியல் கல்லூரிகள், ஆசிரியர் பயிற்சி கல்லூரிகள் போன்றவைகளை  ஒழுங்குபடுத்துவதற்கான வாய்ப்பு உருவானது. இது தமிழக வரலாற்றில் குறிப்பிடதக்க அம்சமாகும்.

1980 களுக்கு பிறகு ஏற்பட்ட மாற்றங்கள்  

சோவியத், சீனா போன்ற நாடுகளில் ஏற்பட்ட கம்யூனிஸ புரட்சிகள், காலனிய நாடுகளில் உருவான தேசிய இனப் போராட்டங்கள், உலகப் போர்களுக்குப் பிறகு முதலாளித்துவ நாடுகளில் உருவான நெருக்கடி நிலை போன்ற காரணங்களால் உலகின் பெரும்பான்மையான நாடுகள்1950-1970 கள் வரை மக்கள் நல அரசுகளாக செயல்பட்டன. இதன் காரணமாக இக்காலகட்டத்தில் கல்வி வழங்குவது அரசின் கடமையாக பார்க்கப்பட்டது.  ஆனால் உலக நிலைமை 70 களில் மாறத் தொடங்கியது.இந்த மாற்றங்களால் முதலாளித்துவச க்திகளின் கரங்கள் வலுப்படுத்தப்பட்டு மக்கள்நல அரசுகள் செயல்படுவதில் சிக்கல் உருவாகின.இதன் தொடர்ச்சியாக மூன்றாம் உலக நாடுகளில் கல்வி உட்பட மக்களுக்கான அனைத்து அடிப்படை வசதிகளையும் தனியார் மயப்படுத்துவதற்கான வேலைகளை உலக வங்கி போன்ற பன்னாட்டு அமைப்புகள் தொடங்கின.

இதன் எதிரொலியாக இந்தியாவில் உயர் கல்விக்கான செலவினங்களை குறைக்கத்  தொடங்கியது ஒன்றிய அரசு. 7வது ஐந்தாண்டு திட்டத்தின் (1985-90) போது ஒட்டுமொத்த கல்விக்கான செலவில் உயர் கல்விக்கு 14 சதவிகிதம் ஒதுக்கப்பட்டது. இது அடுத்த ஐந்தாண்டு திட்டத்தின் போது 11% ஆக  குறைக்கப்பட்டது. மேலும் இது  அடுத்த திட்டத்தின் போது 7 சதவிகிதமாக குறைக்கப்பட்டது. நிதி ஓதுக்கீடு குறைக்கப்பட்டதுடன் கல்வியை ஒரு விற்பனைப் பண்டமாக பார்க்கும் போக்கும் தொடங்கியது. இதன் காரணமாக அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்வி நிலையங்களில் சுயநிதிப் பிரிவுகளை தொடங்கவும் மேலும் சுயநிதிக் கல்வி நிலையங்களை தொடங்கவும் ஒன்றிய அரசு.  வழிவகுத்தது.

இந்தப் பின்னணியில் தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா, மகாராஷ்டிரா போன்ற மாநிலங்கள் உயர் கல்வியில் சுயநிதி நிறுவனங்களை அனுமதிக்கத் தொடங்கின. 1981ஆம் ஆண்டு பாலிடெக்னிக் பிரிவிலும்  1984ஆம் ஆண்டு கலை மற்றும் அறிவியில் பிரிவு என தொடர்ந்து உயர் கல்வியின் அனைத்து பிரிவுகளிலும் அரசு உதவி இல்லாமல் சுயநிதிக் கல்லூரிகளை தொடங்க தமிழக அரசு அனுமதி வழங்கியது. மேலும் அரசு உதவி பெறும் தனியார் கல்லூரிகளில் சுயநிதிப்  படிப்புகளை வழங்க அனுமதிக்கத்  தொடங்கியது.

80 களில் தனியார்மயம் தொடங்கினாலும் 90 களுக்குப் பிறகு இந்தியாவில் நடைமுறைப் படுத்தப்பட்ட  நவதாராள பொருளாதாரக்  கொள்கை  தனியார் கல்வி நிறுவனங்களின்   எண்ணிக்கையை மேலும் அதிகப்படுத்தின. இதனுடன் புதிதாக அரசு உதவி பெறும் கல்லூரி தொடங்க அனுமதிப்பதையும் தமிழக அரசு நிறுத்தியது. அடுத்த கட்டமாக  அரசு உதவி பெறும் கல்லூரிகளில் அரசு உதவி பெறும் பிரிவில் புதிதாக பாடப் பிரிவுகளுக்கு அனுமதி வழங்குவதும் நிறுத்தப்பட்டது. இதனால் வேலை வாய்ப்புகளை உடனடியாக வழங்கக் கூடிய  கணினி அறிவியல்  போன்ற பல பாடப்பிரிவுகள் சுயநிதிப் பிரிவில்/ கல்லூரிகளில் மட்டுமே தொடங்கப்பட்டன. இதன் காரணமாக அதிக கட்டணத்தை செலுத்தி மாணவர்கள் படிக்க வேண்டியநிலை உருவாக்கப்பட்டது.

அதேபோல் கடந்த 30 ஆண்டுகளில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்வி நிறுவனங்களின் எண்ணிக்கை கட்டுப்படுத்தப்பட்டு சுயநிதிக் கல்லூரிகள்/ படிப்புகளின் எண்ணிக்கையே அதிகரித்தன. 1980 இல் வெறும் 5 சுயநிதிக் கல்லூரிகள் மட்டுமே இருந்தன. அடுத்த இருபது ஆண்டுகளில் இதன் எண்ணிக்கை 609 ஆக உயர்ந்தது. 2000 ஆம் ஆண்டிற்குப்  பிந்தைய ஆண்டுகளில் இது மேலும் வளர்ச்சி அடைந்து இன்றைய நிலவரப்படி 2146  கல்லூரிகள் செயல்படுகின்றன( பார்க்க அட்டவணை:2). இது கலை மற்றும் அறிவியல், கல்வியியல் கல்லூரி, பாலிடெக்னிக் கல்லூரிகளின் எண்ணிக்கை மட்டுமே. மற்ற பாடப் பிரிவுகளை வழங்கும் கல்வி நிறுவனங்களையும் சேர்த்தால் சுயநிதிக் கல்லூரிகளின் எண்ணிக்கை சற்று கூடுதலாகவே இருக்கும்.

அட்டவணை:2

 

கல்வி நிறுவனங்ன் வகைகள்

1980-812021-22
  
அரசுஅரசு

உதவி

பெறும்

சுயநிதிமொத்தம்அரசுஅரசு

உதவி பெறும்

சுயநிதிமொத்தம்
கலை அறவியல் கல்லூரிகள் 51144195163140600903
கல்வியியல்

கல்லூரிகள்

7916714676697
பாலிடெக்னிக்

கல்லூரிகள்

30165515424414492
பொறியல்

கல்லூரிகள்

7512113456470
மொத்தம்95174527423518121462562

 

 

நவீன கல்வி நிறுவனங்கள் இந்தியாவில் உருவான காலம் தொட்டே தனியார் கல்வி நிறுவனங்கள் செயல்பட்டு வந்துள்ளன. தனியார் நிறுவனங்களுக்கு லாப நோக்கம்தான் பிரதானமாக இருக்கமுடியும் என்றாலும் 1980 கள் வரை ஆசிரிய/மாணவர் போராட்டங்கள் அரசின் தலையீடு போன்றவை ஓரளவுக்கு தனியார் கல்வி நிறுவனங்களை கட்டுப்படுத்தியது.

ஆனால் சுயநிதிக் கல்லூரிகள் செயல்பட அனுமதிக்க தொடங்கியபோதே சேவையாக பார்க்கப்பட்டு வந்த கல்வி முழுமையாக வணிகமயமாக மாறியது.  மேலும் லாப நோக்கத்துடனேயே சுயநிதிக் கல்லூரிகள் தொடங்கப்பட்டதுடன் பெரும்பாலான கல்லூரிகள் அரசியல் தொடர்புகளைக் கொண்டவர்களால் தொடங்கப்பட்டன என்பதும் குறிப்பிடத்தக்கது.

சுயநிதிக் கல்லூரி: சிக்கல்களும் சவால்களும்

சுயநிதிக் கல்லூரிகள் அனுமதிக்கத்  தொடங்கபட்ட காலம் தொட்டே இக் கல்வி நிறுவனங்களின் செயல்பாடுகள் மீது கடுமையான குற்றச்சாட்டுகள் எழத் தொடங்கின. அதில் பல குற்றச்சாட்டுகள்  இன்றும் தொடர்வதை நாம் பார்க்க முடிகிறது.  எனவே இக்கல்லூரிகளில் உள்ளசில முக்கியமான பிரச்னைகள் மட்டுமே இந்த பகுதியில் விவாதிக்கப்படுகிறது.

அடிப்படை வசதி மற்றும் கல்விக் கட்டணம்: பல சுயநிதிக் கல்லூரிகளில் கல்வி கற்பிப்பதற்கான போதுமான அடிப்படை வசதிகள் கூட இருப்பதில்லை என்பதுதான் நிதர்சனம். மேலும் இக் கல்லூரிகளில் மாணவர்களிடமிருந்து அதிக கட்டணம் வசூலிக்கப்படுவதாக அவ்வப்போது குற்றச்சாட்டுகள் வந்து கொண்டுதான் இருக்கிறது. அரசும் நீதிமன்றங்களும் இதில் சில கட்டுப்பாடுகளை கொண்டுவந்தாலும் மாற்று வழிகளில் மாணவர்களிடம் இருந்து அதிககட்டணம் வசூலிக்கப்படுவதாக தெரிகிறது.

ஆசிரியர் பணி நியமம்: அதேபோல் இக்கல்வி நிலையங்களில் ஆசிரியர்களை பணியில் அமர்த்துவது, ஆசிரியர்களுக்கு சம்பளம் வழங்குவது உட்பட பல விசயங்கள் கல்லூரி  நிர்வாகங்களின் விருப்பங்களுக்கு இணங்க நடைபெறுகிறது. அரசு இதில் எந்த வகையிலும் தலையிடுவதில்லை. இதனால் இக்கல்வி நிறுவனங்கள் விதிகளை ஒழுங்காக பின்பற்றுவதில்லை.

உதாரணமாக கலை அறிவியல் கல்லூரியில் பணியில் சேருகிற ஒரு ஆசிரியர், பல்கலைக்கழக மானியக்குழு பரிந்துரையின் படி முனைவர் பட்டம் அல்லது தேசிய/ மாநில தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவராக இருக்க வேண்டும்.ஆனால் இது இரண்டும் இல்லாமல் முதுகலை படிப்பை முடித்தவர்கள்  கூட இங்கு பணியில் அமர்த்தப்படுகின்றனர்.

ஆசிரியர் ஊதியம்:மேலே சொன்ன தகுதிகளுடன் ஒருவரை பணியில் சேர்த்தாலும் அவருக்கு மிகக் குறைந்த சம்பளமே வழங்கப்படுகிறது. அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரியில்(உதவி பெறும் பிரிவில்) பணியில் சேரும் உதவி பேராசிரியரின் மாத சம்பளம் 88,234 ஆக உள்ளது. ஆனால் சுயநிதிக் கல்லூரிகளில்10,000 த்துக்கும் குறைவாகக்  கூட சம்பளம் வழங்கப்படுவதை பார்க்க முடிகிறது.  சில கல்வி நிறுவனங்கள் இப்படி குறைவாக வழங்கும் சம்பளத்தைக்  கூட மாதம் மாதம் ஒழுங்காக வழங்குவதில்லை என்ற குற்றச்சாட்டை பொறியியல் கல்லூரி ஆசிரியர்கள் பலரும் கூறுகின்றனர். கடந்த பல ஆண்டுகளாக பொறியியல் கல்லூரிகளில் மாணவர்களின் சேர்க்கை விகிதம் குறைந்து கொண்டே வருகிறது. இதனால் ஒவ்வொரு ஆண்டும் கலந்தாய்வு முடிந்த பிறகும் பல ஆயிரம் இடங்கள் காலியாக உள்ளதை பார்க்கமுடிகிறது. இந்த ஆண்டும் கூட வெறும் 16 கல்லூரிகளில்தான் அனைத்து இடங்களும் நிரம்பியுள்ளதாக தெரிகிறது. இதனால் சுயநிதிக் கல்லூரிகளில் ஆசிரியர்கள் மாணவர்களை சேர்த்துவிட நிர்ப்பந்திக்கப் படுவதாகவும் மேலும் மாணவர்கள் சேர்ந்தால் மட்டுமே சம்பளம் தர முடியும் என்று இக்கல்லூரி நிர்வாகங்கள் கூறுவதாகவும் ஆசிரியர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

பணி நீக்கம்:அதேபோல் இக் கல்லூரிகளில் பணிபுரியும் ஆசிரியர்களை எப்போது வேண்டுமானாலும் பணியில் இருந்து நீக்குவதற்கான அதிகாரம் முழுமையாக நிர்வாகத்திடம் தான் உள்ளது. இதை எதிர்த்து கேள்வியெல்லாம் ஆசிரியர்களால் கேட்க முடியாது. விதிவிலக்காக சிலர் இத்தகைய பணி நீக்கங்களை எதிர்த்து அரசு அலுவலகங்களையும்  நீதிமன்றங்களையும் நாடுவதை பார்க்கமுடிகிறது. இதில் கல்லூரி கல்வி இயக்குநரகம்  போன்ற இடங்களில் ஆசிரியர்கள் இது தொடர்பாக புகார் கொடுக்கச் செல்லும்பொழுது நாங்கள் நிதி எதுவும் கொடுக்காததால் எங்களால் இந்த நிறுவனங்களை கட்டுப்படுத்த முடியாது. எனவே இப்படி தேவையில்லாமல் அலைவதை விட்டுவிட்டு வேறு வேலைக்கு போகுமாறு பெரிய அதிகாரிகளே கூறுகின்றனர். நீதிமன்றத்தைப்  பொறுத்தவரை நெய்வேலி ஜவகர் கல்லூரியில்1993ஆம் ஆண்டு  23 பேராசிரியர்களின் பணி நீக்கத்தை எதிர்த்து தொடர்ந்த வழக்கில் தனியார் கல்லூரி ஒழுங்காற்று சட்டம் 1976 ஐ பயன்படுத்தி அப் பணி நீக்கத்தை தடுத்து நிறுத்தியது. இதைத் தவிர வேறு வழக்குகளில் சுயநிதிக் கல்லூரிகளில் பணி நீக்கம் நீதிமன்ற தலையீட்டினால் நிறுத்தி வைக்கப்பட்டதாக தெரியவில்லை. இந்த தீர்ப்பின் அடிப்படையில் தான் பலரும்  1976 சட்டம் சுயநிதிக் கல்லூரிகளுக்கும் பொருந்தும் என்று கூறுகின்றனர்.

சட்டப் பாதுகாப்பு: சுயநிதிக் கல்லூரிகளுக்கு தனியார் கல்லூரி ஒழுங்காற்று சட்டம் 1976 பொருந்தும் என்றாலும் அதை பயன்படுத்தி தீர்வுகள் எதுவும் ஜவகர் கல்லூரி தீர்ப்புக்குபிறகு கிடைத்ததாகவும் நமக்கு தெரியவில்லை. இருப்பினும் இந்த சட்டம் கூட கல்லூரி இயக்குநரகத்துக்கு கீழ் இயங்கும்  கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள், கல்வியியல் கல்லூரிகளுக்குத் தான் இதை பயன்படுத்த முடியும். ஒருவேளை இத்தகைய கல்வி நிறுவனங்களில் ஆசிரியர் சங்கங்கள் உருவாகி வலுப்பெற்றால் ஆசிரியர்களுக்கான தீர்வுகள் கூட இச் சட்டத்தை பயன்படுத்தி பெறலாம்.

ஆனால் ஒட்டுமொத்த சுயநிதிக் கல்லூரிகளில் சரிபாதியாக உள்ள பாலிடெக்னிக் மற்றும் பொறியியல் போன்ற கல்வி நிறுவனங்களில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு இப்படியான சட்டப் பாதுகாப்பு கூட கிடையாது என்பது முக்கியமான விசயமாகும்.

அசல் சான்றிதழ்கள்: 30 ஆண்டுகளுக்கு குறையாமல் ஒருவர் தன்னுடைய படிப்பை தொடர்ந்து முனைவர் பட்டம் பெறுகிறார். அப்படியான முனைவர் பட்டத்துடன் மிக குறைவான சம்பளத்துடனும் எப்போது வேண்டுமென்றாலும் பணியில் இருந்து நீக்கப்படலாம் என்ற அச்சத்துடன் பணி புரிகின்றனர். மேலும் அவர் படித்து பெற்ற பத்தாம் வகுப்பு சான்றிதழ் தொடங்கி முனைவர் பட்டம் வரை அவர் பணிபுரியும் நிறுவனத்திடம் சமர்ப்பித்துவிட்டுதான் (அடகுவைத்துவிட்டு) பணியில் சேர முடியும்.  ஏதேனும் காரணங்களுக்காக ஆசிரியர்களுக்கு சான்றிதழ்கள் தேவைப்பட்டால் இக் கல்வி நிறுவனத்திடம் இருந்து அவ்வளவு எளிதாக பெறமுடியாது. சில நிறுவனங்கள் சான்றிதழ்கள் திருப்பி தருவதற்கு பணம் கேட்பதையும் பார்க்கமுடிகிறது.

விடுப்பு:பொதுவாக அனுமதிக்கப்பட்ட சாதாரண  12 நாள் விடுப்பை கூட ஆசிரியர்கள் எடுப்பதற்கு எளிதாக அனுமதிப்பதில்லை சுயநிதிக் கல்லூரிகள். மருத்துவ விடுப்பு பற்றிய பேச்சுக்கே பல கல்லூரிகளில் இடமில்லை. மகப்பேறு விடுப்பும் பெண்களுக்கு கிடையாது, வேண்டும் என்றால் சம்பளமின்றி எடுத்துக் கொள்ள அனுமதிக்கப்படுவதாக கூறுகின்றனர் பெண் ஆசிரியர்கள்.

ஆசிரிய/ மாணவ அமைப்புகள்: ஜனநாயகத்தில் அனுமதிக்கப் பட்ட உரிமைகளான சங்கம் அமைப்பதற்கான உரிமைகள் மாணவர்கள் மற்றும்  ஆசிரியர்கள் இருவருக்குமே இக் கல்வி நிறுவனங்களில் மறுக்கப்படுகிறது. ஒருவேளை சங்கம் அமைக்க முயற்சி எடுத்தாலோ அல்லது இருக்கிற சங்கங்களில் சேர்ந்து செயல்படுவது தெரிந்தாலோ உடனடியாக கல்லூரியில் இருந்து நீக்கும் போக்கு இக்கல்லூரிகளில் பரவலாக இருப்பதை பார்க்க முடிகிறது.

மேலே சொன்ன விசயங்களுடன் சமூக பாதுகாப்பு அம்சங்களான மருத்துவக் காப்பீட்டுத் திட்டங்கள் இக்கல்லூரி ஆசிரியர்களுக்கு வழங்கப்படுவதில்லை.

இதுபோன்று பல சவாலான சூழலில்தான் இக்கல்வி நிலையங்களில் ஆசிரியர்கள் பணி புரிகின்றனர்.(AISHE – 2020 -21) அகில இந்திய கணக்கெடுப்பின்படி தமிழகத்தில் ஒட்டு மொத்தமாக 2657 கல்லூரிகள் உள்ளன. அவற்றில் 2020 கல்லூரிகள் சுயநிதிக் கல்லூரிகளாக உள்ளன இதில் 12,19, 814 மாணவர்கள் பயிலுகின்றனர் (பார்க்க அட்டவணை:3). சுயநிதிக் கல்லூரிகளில் இவ்வளவு மோசமான பணி சூழலில் ஆசிரியர்கள் பணி புரிவது அங்கு பயிலும் 12 லட்சம் மாணவர்களின் கற்றல் செயல்பாட்டை பாதிக்கிறது என்பதை கணக்கில் கொள்ள வேண்டியது அவசியம்.

அட்டவணை:3

2020 – 2 1

(All India Survey on Higher Education, Ministry of education, India )

கல்லூரிகளின் தன்மைநிறுவனங்களின் எண்ணிக்கைமாணவர்களின் எண்ணிக்கை
அரசுக்  கல்லூரிகள்372465148
உதவி பெறும் கல்லூரிகள்265490400
சுயநிதிக் கல்லூரிகள்20201219814

 

 ஆசிரியர் இயக்கங்களும் தமிழக அரசும் செய்ய வேண்டியவை

தமிழகத்தில் கல்வியைப் பரவலாக்கியதில் சுயநிதிக் கல்லூரிகள் முக்கிய பங்காற்றி உள்ளது என்பது உண்மைதான். இது ஒருபுறம் இருக்க தமிழக உயர் கல்வியின் தரம் மிகவும் மோசமாக உள்ளதாக பல அறிக்கைகள் கூறுகின்றன. தமிழக அரசின் 2017 ஆம் ஆண்டின் “மனிதவள மேம்பாட்டு அறிக்கை”, பேராசிரியர்கள் கலையரசன் மற்றும் விஜயபாஸ்கர் இணைந்து எழுதிய திராவிட மாடல்புத்தகம் போன்றவைகளில் அதை பார்க்க முடிகிறது.

சுயநிதிக் கல்லூரிகளின் கட்டுப்பாடற்ற வளர்ச்சியும் அங்கு பணிபுரியும் ஆசிரியர்களின் மோசமானபணிச்சூழலும் தமிழக உயர் கல்வியின் தரம் மோசமாவதற்கு மிக முக்கியமான காரணங்களில் ஒன்று என்பதை அரசு உணரவேண்டும். எனவே அரசு இதை சரி செய்வதற்கு உடனடியாக கீழ்கண்ட சில விசயங்களை செய்யவேண்டியது அவசியமாகும்.

  • ஒன்று:போதுமானகட்டுமான வசதிகள் மற்றும் தகுதியான ஆசிரியர்கள் இன்றி செயல்படும் கல்வி நிலையங்களின் அங்கீகாரத்தை அரசு உடனடியாக ரத்து செய்யவேண்டும்.
  • இரண்டு:மாணவர்களிடம் இருந்து அதிக கட்டணம் வசூலிக்கும் கல்வி நிலையங்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
  • மூன்று: கல்லூரிகளில்மாணவர் அமைப்புகள் செயல்படுவதையும் அதற்கான தேர்தல்கள் நடத்துவதையும் கட்டாயமாக்க வேண்டும்.
  • நான்கு: தற்போதுஉள்ள தனியார் கல்லூரி ஒழுங்காற்று சட்டம் 1976 ஐ அனைத்து தனியார் கல்லூரிகளுக்கும் பொருந்தும் வகையில் சட்டத்தில் உரிய மாற்றங்களை கொண்டு வரலாம்.
  • ஐந்து:அதேபோல் தனியார்கல்லூரி ஒழுங்காற்று சட்டம் 1976 சுயநிதிக் கல்லூரிகளுக்கு பொருந்தும் என்பதை தெளிவுபடுத்தும் வகையில் சட்டத்தில் உரிய திருத்தத்தை மேற்கொள்வது அவசியம்.
  • ஆறு: அல்லது கேரளாவை போன்று சுயநிதிக்கல்லூரிகளுக்கு என்று தனியான சட்டத்தை இயற்றி அனைத்து சுயநிதிக் கல்லூரிகளையும் அதன் ஆளுகைக்கு கீழ் கொண்டு வரலாம்.
  • ஏழு: கல்லூரிகல்வி இயக்குநரகங்கள் சுயநிதிக் கல்லூரிகளில் இருந்து பெறப்படும்  முறையீடுகளை குறிப்பிட்ட கால கெடுவுக்குள் தீர்ப்பதற்கு ஏற்றார்போல் இந்த அலுவலகங்களை பலப்படுத்துவது அவசியமாகும்.
  • எட்டு: பல்கலைக்கழக மான்யக்குழு பரிந்துரைத்துள்ள அடிப்படை ஊதியமான 57,700 ஐ  கொடுப்பதுகட்டாயம் என்று   அரசு ஆணையிட வேண்டும். அதற்கு முதல் கட்டமாகஅரசு கல்லூரிகளில் பணி புரியும்  கௌரவ விரிவுரையாளர்களுக்கு அரசு இந்த அடிப்படை சம்பளத்தை வழங்குவது அவசியம்.
  •   ஒன்பது: நிபுணர் குழு அமைத்து சுயநிதிக்கல்லூரிகளைப்  பற்றி வெள்ளை அறிக்கை ஒன்றை அரசு உடனடியாக வெளியிட வேண்டும். இக்குழுவில் ஆசிரியர்/ மாணவர்  சங்கங்களைச்  சேர்ந்தவர்களும் கல்வியாளர்களும் இதில் அவசியம் இடம் பெறுவதை அரசு உறுதி செய்ய வேண்டும். இந்த அறிக்கை இந்த கல்லூரிகளின் நிலையை முழுமையாக புரிந்துகொள்ள உதவும்.

பணிப்பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டு விட்டால் விடுப்பு, அசல் சான்றிதழ் வாங்கிவைத்துக்  கொள்வது போன்ற விசயங்களை ஆசிரியர்களே சரி செய்துகொள்ளும் நிலைமை உருவாகிவிடும்.

ஆனால் இவற்றையெல்லாம் அரசு எளிதாக செய்துவிடாது. போராட்டங்களின் மூலம் தான் அரசை செய்ய வைக்க முடியும். இதற்கான போராட்டங்களை  முன் எடுக்கும் பொறுப்பு நிரந்தர கல்லூரி ஆசிரியர் சங்கங்களுக்குத் தான் உண்டு. அப்படி தொடங்கும் போராட்டத்தில் மாணவர் அமைப்புகளும் சுயநிதிக் கல்லூரி ஆசிரியர்களும் பெரும் அளவில் கலந்து கொள்ள வேண்டும்.

ஏற்கனவே நாம் அனுமதித்த கட்டுப்பாடற்ற தனியார்மயத்தால் உயர் கல்வியின் நிலை மிகவும் மோசமாக உள்ளது. இந்நிலையில் ஒன்றிய அரசின் தேசிய கல்வி கொள்கை முழுமையாக உயர் கல்வியை தனியார்மயத்தை பரிந்துரைக்கிறது. பொதுவாக தேசிய கல்வி கொள்கையை எதிர்ப்பதாக கூறும் திராவிட முனேற்ற கழக அரசு   அதில் உள்ள தனியார்மயத்தை பொறுத்தவரை எதிர்க்கும் என்று எதிர்பார்ப்பது அபத்தமானதாகும். எனவே ஆசிரியர் மற்றும் மாணவர்  அமைப்புகளுடன் இடதுசாரி இயக்கங்கள் உட்பட அனைத்து முற்போக்கு சக்திகளையும் ஒன்றிணைத்து ஒரு வலுவான போராட்டத்தை நடத்தி  அரசை நிர்பந்திப்பது மட்டுமே நம் முன்னே இருக்கும் ஒரே வழி.

நம் உயர் கல்வியின் பெருமைகளின் அடித்தளம் மிகவும் பலவீனமாக உள்ளது அதை சரி செய்ய தவறும் பட்சத்தில் அது நம் கண்முன்னே சரிந்து விழுவதை தவிர்க்க முடியாது. இதை சரி செய்யப் போகிறோமா இல்லை சரிந்து விழ அனுமதிக்கப் போகிறோமா என்பதை நாம் தான் முடிவு செய்ய வேண்டும்.

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *