நூல் அறிமுகம்: தமிழக வரலாற்றில் ஊரும் சேரியும் (சிந்து சமவெளி தொடங்கி சமகாலம் வரை) – சுபாஷ் சந்திர போஸ், இந்திய மாணவர் சங்கம்.புத்தகம் : தமிழக வரலாற்றில் ஊரும் சேரியும் (சிந்து சமவெளி தொடங்கி சமகாலம் வரை)
ஆசிரியர் : பக்தவத்சல பாரதி
பதிப்பகம் : பாரதி புத்தகாலயம்
பக்கங்கள் : 86
விலை : ரூ. 80
புத்தகம் வாங்க: https://thamizhbooks.com/product/thamizhaka-varalattril-oorum-seriyum/

“நாகரீக சமூகம்” என்று சொல்லப்படும் சமகால சமூகத்தில் பொதுவாகவே ‘சேரி’ என்ற வார்த்தையை கேட்டாலே சீ என்று முகம் சுழிப்பர் பலர். அப்படி இந்திய சமூகத்தில் கெட்டித்தட்டி போயிருக்கும் சாதிய படிநிலையின் நிகழ்கால சாட்சியங்களில் ஒன்றாகத்தான் சேரி பகுதிகள் விளங்குகின்றன. குறிப்பிட்ட ஒடுக்கப்பட்ட மக்களை அரசே சேரிகளில் குடியமர்த்துவதும்,அவர்கள் மட்டுமே அங்கு வாழ நிர்ப்பந்திக்கப் படுவதும் சமகாலத்தில் தான் அரங்கேறிக் கொண்டிருக்கிறது. ஆனால், சங்கம் வளர்த்த தமிழ் சமூகத்தின் ஆதிக்குடிகள் சேரிக்கு அளித்திருக்கும் அர்த்தம் “அனைவரும் கூடி வாழும் இடம்” என்று அறியும்போது, சேரியை தீண்டாத இந்த 21 ஆம் நூற்றாண்டு நாகரிகமானதா? அல்லது புதைந்துபோன சங்ககால சமூகத்தோடு நாகரீகமும் புதைக்கப்பட்டு விட்டதா? என்ற கேள்வி எழுகிறது. தங்களை உயர்ந்தவராக கருதிக் கொள்ளக் கூடிய பிராமணர்கள் வாழ்ந்த பகுதியே “பிராமணசேரி” என்று வரலாற்றில் பொறிக்கப்பட்டிருப்பதை நிகழ்காலத்தில் ஒரு பிராமணர் ஏற்றுக் கொள்வாரா?

இப்படி பல்வேறு தகவல்களுடன் தமிழினத்தின் வரலாற்று விழுமியங்களை, சிந்து முதல் இன்று வரை ஆராய்ந்து அதன் அடிப்படைக் கூறுகளின் முதல் நிலையை விளக்கும் புத்தகமே “தமிழக வரலாற்றில் ஊரும் சேரியும்”. சங்க இலக்கியங்களான அக,புற நூல்கள் முழுவதிலும் ஊரும், சேரியும் நிறைந்துள்ளன. அதில் வரும் மன்னர்கள், ஊர்கள், இடப்பெயர்கள் என இன்றும் சமகாலத்தில் பல்வேறு இடங்களின் பெயர்களாக பல்வேறு நாடுகளில் வரலாற்றின் மிச்சங்களாக தொங்கிக் கொண்டிருக்கின்றன.சங்க காலத்தில் தென்படாத சாதியும், ஏற்றத்தாழ்வும் தலைத் தூக்கியதெப்போது, எப்படி மேற்கு உயர்ந்த சாதியினர் என்பாருக்கும், கிழக்கு இழிகுலத்தார் என சொல்லப்பட்டோருக்கும் இடமானது என்பதை வரலாற்று ஆவணங்களின் அடிப்படையில் விளக்கியுள்ளது இப்புத்தகம் . குறிப்பாக கீழடி, ஆதிச்சநல்லூர் என இன்னும் தமிழின் தொல்பெருமையைப் பறைசாற்றும் அகழ்வாராய்ச்சிகள், சிந்து சமவெளியில் நிரூபிக்கப்பட்ட தமிழர் சான்றுகள் என வரலாறு வெட்ட வெளிச்சத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளது. திராவிட நாகரிகத்தை எப்படி ஆரியம் கபடத்தனமாக கைப்பற்ற முயற்சித்து அதில் பாதி வென்றது, அவைதிகர்கள் எப்படி சேரிக்குள் ஒதுக்கப்பட்டனர், தீண்டத்தகாதவர்களின் உருவாக்க தத்துவம் என புத்தகம் பல முக்கிய ஆவணங்களையும், தத்துவ சூத்திரங்களையும் பேசிச் செல்கிறது.

வட இந்தியர்கள் திட்டமிட்டு தமிழக மண்ணில் குடியமர்த்த படுவது என்பது ஒரு வரலாற்றின் நீட்சிதான் என்பதை ஏழாம் நூற்றாண்டில் ஆரியர்களான பிராமணர்கள் அதிகமாக தமிழகத்தில் குடியமர்த்தப்படுவதை ஆசிரியர் குறிப்பிடுவதிலிருந்து அறிந்து கொள்ள முடிகிறது. அப்போதே தமிழ் மக்கள் அதை எதிர்த்து இருக்கின்றனர் என்ற வரிகள் தமிழ் மண்ணின் ஆரிய எதிர்ப்பு மனநிலை மரபுரீதியாகவே வந்துள்ளது என்பதற்கு சான்றாகிறது. பின்னால் வந்த கிழக்கிந்திய கம்பெனி முதல் பிரிட்டிஷ் அரசு வரை கிராமங்களை எப்படி சூறையாடியது, தன்னுடைய பிரித்தாளும் கொள்கைகள் மூலம் எப்படி பலன் பெற்றது மற்றும் அது உருவாக்கிய வரிமுறைகள், நகரமயமாக்கல் என இன்று வரை நவநாகரீக முதலாளித்துவ சமூக அமைப்பில் கிராமங்களின் நிலை, கிராமங்களின் சாதிய கட்டமைப்பு, புலம்பெயர்வு, கிராம சிதைவு, மரபு சிதைவு என எல்லாவற்றின் அடிப்படைக் கூறுகளையும் பதிவு செய்துள்ளார் ஆசிரியர் பக்தவத்சலபாரதி. எனவே தமிழ் வரலாற்றை வாரி அணைத்து முத்தமிட விரும்புவோர் , கொஞ்சம் இப்புத்தகத்தோடு கைகுலுக்கி சென்றால் சுபம்.

Image

உலக புத்தக தினத்தையொட்டி பாரதி புத்தகாலயம், புதிய கோணம், இளையோர் இலக்கியம் மற்றும் புக்ஸ் ஃபார் சில்ரன் வெளியிட்டுள்ள அனைத்து நூல்களுக்கு 25% சிறப்புக் கழிவு உண்டு. (23.04.2021 – 05.05.2021 வரை மட்டும்)