இவள் உயிர்ப்புள்ள தமிழணங்கு
“தமிழணங்கு என்ன நிறம்?”- தலைப்பே படிக்கத் தூண்டுகிறது. இந்த நூல் பொறியாளர் மு இராமனாதன் எழுதிய சமூகம், அரசியல் சார்ந்த கட்டுரைகளின் தொகுப்பு. நடைமுறை சம்பவங்களையும் தரவுகளின் அடிப்படையிலான தர்க்கங்களையும் கொண்டிருப்பது இந்நூலின் சிறப்பு. உயிரோடு இருப்பது எல்லோருக்கும் சாத்தியம், உயிர்ப்புடன் இருப்பதுதான் தனித்துவம். இப்படி தனித்துவமான கட்டுரைகள் அடங்கிய நூல் இது. ‘இந்து தமிழ் திசை’யின் நடுப்பக்கத்திலும் இன்னும் பல அச்சு, இணைய இதழ்களிலும் வெளியான கட்டுரைகள் சிலவற்றைத் தேர்ந்தெடுத்து அவற்றை நூலுக்காகச் செழுமைப்படுத்தியிருக்கிறார் ஆசிரியர்.
நூலில் சமூகம், கொரோனா, புலம்பெயர் தொழிலாளர், அரசியல், தேர்தல், பெண், அதிகாரம் என்னும் ஏழு துணைத் தலைப்புகளில் 29 கட்டுரைகள் அடங்கியிருக்கின்றன. நூலுக்கு அணிந்துரை வழங்கியிருக்கும் பழ. அதியமான், “இந்தக் கட்டுரைகள் கடந்த 10 ஆண்டு தமிழ்நாட்டு வரலாற்றின் அகவயமான சாட்சியங்கள்” என்கிறார்.
உண்மையான வரலாற்றைக் குறித்து பெருமிதப்பட முடியாமல் கற்பனைக் கதைகளின் செல்வாக்கில் மயங்கி நிற்கிற காலமிது. இதற்கு ஆவணப்படுத்தலில் நிலவும் அலட்சியமும் அக்கறையின்மையும்தான் காரணம் என்கிறது ஒரு கட்டுரை. ஆவணப்படுத்தலில் அனைவருக்கும் பொறுப்புணர்வு பெருக என்ன செய்யலாம் என்றும் அந்தக் கட்டுரை பரிந்துரைக்கிறது.
மக்கள் தொகை என்பது மனிதவளம். அதில் சரிசமமாக இருக்கும் பெண்களை விலக்கிவிட்டு ஒரு நாட்டின் பொருளாதாரம் எப்படி வளர முடியும் என வினவி, தமிழக அரசின் மகளிர் உரிமைத் திட்டமானது பெண்கள் உற்பத்தியில் பங்கெடுப்பதை எவ்விதம் முன்னெடுக்க உதவும் என்பதை பன்னாட்டு எடுத்துக்காட்டுகளுடன் நிறுவுகிறது இன்னொரு கட்டுரை.
“கடவுள் ஏன் சைவர் ஆனார்?” என்ற கட்டுரை சுவாரசியமானது. பவுத்த, சமண மதங்களின் செல்வாக்கினால்

வேத, சைவ மதங்கள் கொல்லாமை, புலால் மறுத்தல் கொள்கைகளைத் தழுவிக் கொண்டதையும், எந்த உணவும் உயர்ந்ததும் அல்ல தாழ்ந்ததும் அல்ல என்பதையும் சொல்லி, உணவின் பெயரால் நடத்தப்படும் அரசியலுக்கு முடிவு கட்ட வேண்டுமென்கிறார் ஆசிரியர்.
ஏ.ஆர்.ரஹ்மான் சமூக வலைதளத்தில் பகிர்ந்த தமிழணங்கு கறுப்பாக இருந்தாள். அப்போது எழுந்த விவாதங்களைப் பேசுகிற கட்டுரை, நம்மவர்கள் சிகப்பு மோக வலைக்குள் சிக்கித் தவிப்பதைக் குறித்து ஆதங்கப்படுகிறது. தான் எதிர்கொண்ட யதார்த்தமான நிகழ்வுகள் மூலம் தனது வாதங்களுக்கு வலுச் சேர்க்கிறார் ஆசிரியர்.
மாநிலங்களின் மக்கள் தொகைக்கு ஏற்ப மக்களவையின் இடங்களை நிர்ணயிக்கும் சட்டத்தையும், அதன் நடைமுறைச் சிக்கலையும் விவரிக்கிறது “புதிய நாடாளுமன்றத்தில் தமிழ்நாடு தண்டிக்கப்படுமா?” என்ற கட்டுரை. குடும்பக் கட்டுப்பாட்டுத் திட்டத்தைச் சிறப்பாக செயல்படுத்திய தமிழ்நாடு முதலான தென் மாநிலங்கள் சந்திக்க இருக்கும் சவால்களையும், சாத்தியமான தீர்வுகளையும் கட்டுரை விவரிக்கிறது.
இளைஞர்கள் நிறைந்த, மனித வளத்தில் பெருகி நிற்கும் இந்தியா, அவர்களுக்கு ஏற்ற வேலை வாய்ப்பை உருவாக்க சரியான திட்டங்களைத் தீட்டி செயல்படுத்த வேண்டும். கல்வியிலும் உடல் நலத்திலும் சிறந்த சமூகம் பொறுப்புணர்வு மிக்கதாகவும் இருக்கும். அது மாநிலங்களிடையே மக்கள் தொகை வளர்ச்சியை சீராக்கும். -இவை ஒரு கட்டுரையின் சாரம்.
“சின்ன விஷயங்களின் கதை” பெரிய விஷயங்களை விளக்குகிறது. தேர்தலில் சின்னம் ஒரு அடையாளம் மட்டுமே, அது மக்களுக்குத் தெரியும். தங்கள் மீதும் தங்கள் கொள்கைகளின் மீதும் நம்பிக்கை இல்லாதவர்களே சின்னத்தை காட்டி வாக்கு வாங்கிவிடலாம் என நம்புகிறார்கள். இந்தப் பகுதியில், தன்னுடைய இளமைக்காலத் தேர்தல் அனுபவங்களை நகைச்சுவை மிளிர எழுதியிருக்கிறார் நூலாசிரியர்.
துப்புரவுப் பணியைப் பற்றிய கட்டுரையில் ஆசிரியர் தனது ஹாங்காங் அனுபவங்களைப் பகிர்ந்து கொள்கிறார். எந்த பணியும் தாழ்வானது இல்லை என்ற அங்கு நிலவும் மனநிலையே இதற்குக் காரணம் என்கிறார். ஹாங்காங்கில் துப்புரவுப் பணி சாதியச் சங்கிலியோடு பிணைக்கப்படவில்லை என்பதையும் சுட்டிக்காட்டுகிறார்.
இந்த நூலின் இன்னொரு சிறப்பம்சம் கட்டுரையின் தலைப்புகள். அவை கட்டுரையின் ஆதார சுருதியை வெளிப்படுத்துவதாக அமைந்திருக்கின்றன. கொரோனா பற்றிய கட்டுரை ஒன்றின் தலைப்பு: “வைரஸின் முன் அனைவரும் சமம்; சிலர் மற்றவர்களை விடக் கூடுதல் சமம்”
அதிகாரத்தை பற்றி அலசும் பக்கங்களில் இந்தியாவில் மூத்த அதிகாரிகள் பலரும் ஆள், அம்பு, சேனைகளுடன் உலவுவதையும், அவர்கள் காலனி ஆட்சியின் வெள்ளை அதிகாரிகளின் மனோபாவத்திலேயே இன்னமும் இருப்பதையும் வெளிச்சத்துக்கு கொண்டு வருகிறார் ஆசிரியர். ஆங்கிலேயர்களின் காலத்திய இந்தத் துருப்பிடித்த வடிவம் நம் நாட்டில் இன்றும் தொடர்வது எத்துணை அபத்தமானது என்பதைத் தனது வெளி நாட்டு அனுபவங்களின் வாயிலாக விளக்குகிறார்.
ஒரு விஷயத்தின் அடியாழத்தை இலகுவாகத் தொட்டு விளக்கும் முறையை “தமிழருக்கு தேவைதானா குடும்பப் பெயர்?” எனும் கட்டுரையில் காண முடிகிறது. 1929இல் நடந்த சுயமரியாதை மாநாட்டில் பெயரோடு சாதிப் பட்டத்தைச் சேர்த்துக்கொள்ளும் பழக்கத்திற்கு எதிராகத் தீர்மானம் நிறைவேற்றினார் தந்தை பெரியார். நாளடைவில் தமிழ்ச் சமூகம் அதை ஏற்றுகொண்டு சாதிப் பெயரைத் துறந்தது. ஆனால் இன்றையக் காலத்தில் பெயரைக் குறிப்பிட வேண்டிய பல படிவங்களில் முதற் பெயரும், குடும்பப் பெயரும் தேவைப்படுகிறது. மற்ற பல மாநிலத்தவர் சாதிப் பெயர்களைக் குடும்பப் பெயராகச் சேர்த்துக்கொள்கிறார்கள். தமிழர்கள் அப்படிச் செய்வதில்லை. ஆகவே இல்லாத குடும்பப் பெயரை அவர்கள் உருவாக்கிக்கொள்ள வேண்டியதாகிறது. தமிழர்களுக்கு மட்டுமே பிரச்சனையாக இருக்கும் இந்த விஷயத்தை அலசி ஆராய்ந்து அதற்கு தீர்வு காண முயற்சிக்கிறார் ஆசிரியர். தமிழர்கள் தங்களுக்குரிய ஒற்றைப் பெயரை மட்டும் வைத்துக்கொள்ள வேண்டும். இதற்குத் தமிழ் அறிவாளர்களும், அரசும் முன்கை எடுக்க வேண்டும் எனும் கோரிக்கையை முன்வைக்கிறது இந்நூல்.
இப்படி சமூகம் எதிர்கொள்கிற பல சிக்கல்களை எடுத்தாண்டு, அவைகளைத் தரவுகளோடு அலசி ஆராய்ந்து தீர்வை நோக்கி நகர்த்துகிறது இந்நூல் என்பது இதன் சிறப்பம்சம்.
நூலின் தகவல்கள்
நூல் : தமிழணங்கு என்ன நிறம்?
ஆசிரியர் : மு.இராமனாதன்
வெளியீடு : பாரதி புத்தகாலயம்
பக்கங்கள் : 176
விலை : ரூ.170
தொடர்புக்கு : 7, இளங்கோ சாலை
தேனாம்பேட்டை, சென்னை – 600018
தொலைபேசி : 044-24332424, 24330024
நூலறிமுகம் எழுதியவர்
பால பன்னீர்செல்வம், பொறியாளர், சூழலியலாளர்.
தொடர்புக்கு: [email protected]
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.