(பேரா. கு.வி. கிருஷ்ணமூர்த்தியின் நேர்காணல் வடிவக் குறுநூலான தமிழர்: தாவரங்களும் பண்பாடும்குறித்த பதிவு.)

தமிழரும் தாவரமும், அறிவியலின் வரலாறு போன்ற அரிய நூல்களை எழுதிய பேரா. கு.வி. கிருஷ்ணமூர்த்தி சூழலியல் சார்ந்த எழுத்து மற்றும் செயல்பாடுகளை முன்னெடுக்கும் அறிஞர். அவரது நேர்காணலே இக்குறுநூலாகியுள்ளது. இதன் ஒரு பகுதி சுதீர் செந்திலின் ‘உயிர் எழுத்து’ (ஆகஸ்ட் 2012) இதழில் வெளியானது.

இயல் தாவரங்களும் அயல் தாவரங்களும், தாவரங்களும் பண்பாடும், தமிழகமும் வேளாண்மையும், தாவரவியலும் கல்விப்புலமும், தாவரவியலும் எழுத்தும், மரபணு மாற்றப் பயிர்கள் என்ற சிறு தலைப்புகளின் வழியாக இந்த நேர்காணல் பகுக்கப்பட்டுள்ளது. அவரது அறிமுகம் மற்றும் தாவரவியல், சூழலியல் சார்ந்த புரிதல்களையும் இக்குறுநூல் ஏற்படுத்துகிறது; விரிவான வாசிப்பு, தேடல், ஆய்வுகளுக்கு வழிகோலுவதாகவும் உள்ளது.

இப்பூவுலகில் முதலில் தோன்றிய உயிரினங்கள் தாவரங்கள். இவற்றிலிருந்துதான் நாம் உயிர்வாழத் தேவையான ஆக்சிஜனையும் உணவுகளையும் பெறுகிறோம். ஐந்திணைப் பகுப்பை 2000 ஆண்டுகளுக்கு முன்னதாக அளித்த அறிவுச்சமூகம் இன்றைக்கு தாவரவியல் சார்ந்த புரிதலில் எவ்வளவு பின்தங்கியிருக்கிறோம் என்று பரிசீலித்துப் பார்ப்பதற்கான ஒரு புள்ளியாக இந்நேர்காணல் அமையும், என ஆதி வள்ளியப்பன் முன்னுரையில் குறிப்பிடுகிறார்.

தாவரங்கள் இல்லையேல் பூமியும் உயிரினங்களும் இல்லை. தாவரங்கள் மட்டுமே ஒளி ஆற்றலை வேதி ஆற்றலாக (உணவு வடிவத்தில்) மாற்றக்கூடியவை. பூமியின் சிக்கலான இயற்பியத் தொகுதிகளை (Physical Systems) சமநிலையில் வைத்திருக்க தாவரங்கள் மிகவும் அவசியமென ஜேம்ஸ் லவ்லாக்கின் ‘கையா’க் (Gaia)) கோட்பாடு வலியுறுத்துவதைச் சுட்டுகிறார். (பக்.11)

இயல் தாவரங்கள் (native plants), அயல் தாவரங்கள் (alien plants) பற்றிய புரிதல்கள் இங்கு மிகக் குறைவாகவே உள்ளன. மரம் வளர்க்க வேண்டும் என்போர்கூட எத்தகைய தாவரத்தை வளர்க்க வேண்டும் என்கிற புரிதலின்றிச் செயல்படுவது வாடிக்கை.

தாவர நூல்கள் | UYIRI

பண்டைய காலத்தில் பூக்கும் தாவரங்கள்  (angiosperms) 7,000 ஆக இருந்திருக்கலாம். தமிழகத்தில் இன்று காணப்படுபவை சுமார் 5,700; எஞ்சியவை அழிந்தன. 5,700 களில் 4,700 மட்டுமே இயல் தாவரங்கள்; 1000 அயல் தாவர வகைகள் என்று பேரா. கு.வி.கிருஷ்ணமூர்த்தி தெரிவிக்கிறார். (பக்.17)

மிளகு, பனை, செங்காந்தள், ஏலக்காய். இலவங்கம், சந்தனம், தேக்கு, கருங்காலி போன்ற தமிழகத்திற்கே உரித்தான (Endemic plants) 140 தாவரங்களும் இந்தியாவில் 600 இடவரையத் தாவரங்கள் (Endemic species) இருப்பதையும் எடுத்துச் சொல்கிறார்.

வேம்பு, சுரை, புளி, மிளகாய், தென்னை, உருளைக்கிழங்கு, தேயிலை போன்ற பல தமிழகத்திற்கு அயல் தாவரங்கள்தான். இவை தமிழ்கத்திற்கு நுழைந்த காலங்கள் வேறுபட்டன. பனை, வேம்பு, சுரை ஆகியன சங்ககாலத்திலிருந்தே இங்குள்ளது. புளி 11 ஆம் நூற்றாண்டிலும், மிளகாய் 17-18 ஆம் நூற்றாண்டிலும், உருளைக்கிழங்கு 18-19 ஆம் நூற்றாண்டிலும் இந்தியாவிற்குள் நுழைந்தவை, என்கிறார். (பக்.18)

முதலாவது கி.மு.வில் பொறிக்கப்பட்ட தமிழ் பிராமி கல்வெட்டுகள், தொல்காப்பியம், பத்துப்பாட்டு, எட்டுத்தொகை போன்ற சங்க இலக்கிய நூற்களில் பனை மரத்தைப் பற்றிய குறிப்புகள் உள்ளதை ஆய்வறிஞர்  ஆ.சிவசுப்ப்பிரமணியன் விளக்குவார். (பனை மரமே! பனை மரமே! பனையும் தமிழ்ச் சமூகமும் – ஆ.சிவசுப்ப்பிரமணியன்; காலச்சுவடு வெளியீடு)

தென்னையின் வரவிற்குப் பிறகு பனை தமிழர்களின் வழிபாட்டில் ஒதுக்கப்பட்டதும் சாதியடையாளம் அளித்து ஒதுக்கப்பட்ட நிலையும் விளங்குகிறது. தென்னையை விட குறைவான நீர்த் தேவையுடைய மிகுந்த பயனுடைய தாவரம் பனை என்பதும் குறிப்பிட வேண்டியதாகிறது.

உருளை, காரட், பீட்ருட், டர்னிப், முட்டைக்கோஸ், காலிஃபிளவர், மிளகாய், புளி, மக்காச்சோளம், பார்லி, ஓட்ஸ், கோக்கோ, ஆப்பிள், திராட்சை, பேரி, கொய்யா, பிளம், அன்னாசி  என   நாம் உண்ணும் உணவில் 80% அயல் தாவரங்கள் ஆக்ரமித்துள்ள நிலையும் விளக்கப்படுகிறது. (பக்.22)

காப்பி, தேயிலை, ரப்பர், சவுக்கு, தென்னை, யூக்லிப்டஸ் போன்ற தோட்டப்பயிர்களும், அரகேரியா, போகன்வில்லா, குடை மரம் போன்ற அலங்காரத் தாவரங்களும் அயல் தாவரங்களே. இவற்றால் பேரளவு காடழிப்பும் சூழலியல் சீர்கேடுகளும் நடைபெற்றுள்ளன.

சீமைக்கருவேலம், பார்த்தீனியம், நெய்வேலிக் காட்டாமணக்கு, ஆகாயத்தாமரை (ஐக்கோர்னியா / வெங்காயத்தாமரை) சால்வீனியா, சூபாபுல், உண்ணிச்செடி (லான்டானா) போன்றவை அயல் தாவரங்களில் மிக வேகமாக வளரும் களைகளாக (Alien invasive species)  இருப்பதும் தெரிய வருகிறது. (பக்.22)

Pasumai Vikatan - 10 June 2017 - மரம் செய விரும்பு ...

ஒரு குறிப்பிட்ட மண்ணுக்கேற்ற இயல் தாவரங்களே விரைவாகவும் நன்றாக வளரும்; சூழலுக்கும் கேடில்லாது இருக்கும். மாறாக அயல் தாவரங்களை சூழலைக் கெடுக்கும் தன்மையுடைவை.    காடழிப்பிற்கு பெயர்போன ஜக்கி வாசுதேவின் ‘ஈஷா யோகாக் கும்பலை’ச் சேர்ந்தவர்கள் அயல் தாவரங்களை விற்றும் கொள்ளையடிக்கின்றனர்.

“நாகரிகம், பண்பாடு ஆகியவை தாவரங்களால் தாக்கம் பெறுகின்றன. தமிழரின் தாவரங்கள்தான் தமிழரின் பண்பாடு, தமிழரின் பண்பாடுதான் தமிழரின் தாவரங்கள். பண்பாட்டு வழிவந்த தாவரப் பயன்பாடு அழியும்போது பண்பாடும் அழிகிறது. அந்தப் பண்பாட்டைப் பின்பற்றும் இனமும் அழிகிறது”, (பக்.26) என்று தாவரங்கள் – தமிழர் தொடர்பை விளக்குகிறார்.

“தமிழர்களின் மருத்துவ முறைகளில் தாவரவியல் அறிவு மிக முக்கியமானது. தயாரிக்கப்பட்ட மருந்துகளில் ஏறத்தாழ 90 விழுக்காடு தாவரங்களிலிருந்து தயாரிக்கப்பட்டவை. ஏறத்தாழ 8,000 வகைத் தாவரங்கள்”, பழங்குடி, சித்த, ஆயுர்வேத மருத்துவ முறைகளில் பயன்பட்டதை விளக்குகிறார். (பக்.28)

தமிழகத் தாவரவியல் வரலாற்றில் வரலாற்று ஆய்வாளர் சஞ்சய் சுப்பிரமணியனின் ‘தொடர்புடைய வரலாறு’ என்ற கருத்துருவிற்கு தாவரப் பயிராக்க நிகழ்வைக் (domestication process) குறிப்பிடுகிறார். மனித முயற்சியால் வெவ்வேறு இயல் தாவரங்கள் பயிர்த் தாவரங்களாக மாற்றப்பட்ட 350 தாவரங்களில் 117 இந்தியாவிலும் அவற்றில் பல தமிழகத்திலும் தோன்றியவை என்பதையும் குறிப்பிட்டுக் காட்டுகிறார். (பக்.32&33)

தமிழகக் கல்விப்புலத்தில் தாவரவியல் படிப்பிற்கான ஆர்வம் குறைவதும் கல்வி நிறுவனங்கள் தாவரவியலுக்குப் பதிலாக உயிர்த் தொழில்நுட்பவியல் கற்பிக்கப்படுவதையும் ஆதங்கத்தோடு பதிவு செய்கிறார். (பக்.35)

தாவரவியல் சார்ந்த எழுத்துகள், எழுத்தாளர்கள், புத்தகங்கள், ஆய்வுகள் குறித்த விவரங்களை ‘தாவரவியலும் எழுத்தும்’ என்று கட்டுரை விரிவாக எடுத்துக்காட்டுகிறது. (பக்.38-41)

மரபணு மாற்றப்பயிர்களால் ஏற்படும் சூழலியல் பாதுகாப்பு, உணவுப் பாதுகாப்பு மற்றும் ஊட்டம், சமூக, பொருளாதார, நெறி சார்ந்த பிரச்சினைகளை விரிவாக எடுத்துரைக்கிறார். (பக்.44&45)

தாவரங்களில் இயற்கையாகவே (மகரந்தச் சேர்க்கை) மரபணு மாற்றம் நெருங்கிய சிற்றினங்களில் நடைபெறுகிறது. செயற்கை மகரந்தச் சேர்க்கையையும் மூலம் நெருங்கிய சிற்றினங்களிலேயே செய்ய முடியும். தற்போதுள்ள மேம்பட்ட உயிரியல் தொழில் நுட்ப முறைகளால் எந்தவொரு மரபணுவையும் வேறு எந்த மரபணுத் தொகையத்திற்குள் (genome) நுழைத்துவிட முடிகிறது. இதனால் புதிதாக உண்டாகும் நோய்ப்பாதுகாப்பு, பூச்சிப் பாதுகாப்பு, வறட்சி, வெப்பம் , குளிர் போன்ற சூழலியல் காரணிகளின் பாதுகாப்பு எவ்வளவு காலம் நீடிக்கும் என்பதை உறுதிப்படுத்த இயலாது. அவை சில ஆண்டுகளில் செயலழந்து உறக்க நிலை (silenced) அடைகின்றன அல்லது வெளியேற்றப்படுகின்றன, என்பதை விளக்குகிறார். (பக்46)

எனவே தற்காலிக வளர்ச்சிக்காக சூழலையும் உடல்நலத்தையும் கெடுத்துக் கொள்வது எப்படி சரியாக இருக்க முடியும்? என்ற வினா எழுவது இயல்பானது. தாவரங்கள், நிலம் பற்றிய சூழலியல் அறிவும் அவற்றைப் பாதுகாக்க, பேண வேண்டிய அவசியமும் தொடர்ந்து வலியுறுத்தப்படுகிறது. வளர்ச்சி மற்றும் போலிச் சூழலியல் பேசும் மனிதர்கள் மற்றும் நூல்களின் மத்தியில் இம்மாதிரியான நூல்களின் பெருக்கம் மிகவும் அவசியமானது.

தமிழர் தாவரங்களும் பண்பாடும் - Tamizhar ...

நூல் விவரங்கள்:

 தமிழர்: தாவரங்களும் பண்பாடும்

பேரா. கு.வி. கிருஷ்ணமூர்த்தி

 (கேள்விகள்: ஆதி வள்ளியப்பன்)  

வெளியீடு: பாரதி புத்தகாலயம்

முதல் பதிப்பு: ஜூலை 2018

பக்கங்கள்: 48

விலை: 40

புத்தகம் வாங்க: https://thamizhbooks.com/product/thamizhar-thavarangalum-panpadum/

 தொடர்பு முகவரி: 

 பாரதி புத்தகாலயம்,

7, இளங்கோ சாலை,

தேனாம்பேட்டை,

சென்னை – 600018.

 தொலைபேசி: 044 24332424, 24332924, 24356935

மின்னஞ்சல்: [email protected]

இணையம்: www.thamizhbooks.com

 

One thought on “நூல் அறிமுகம்: தாவரங்களும் தமிழர்களும் – மு.சிவகுருநாதன் ”
  1. சிறப்பான அறிமுகம். தமிழர்களின் பண்பாட்டுடன் இணைந்த தாவரங்களைப் பாதுகாப்போம்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *