தங்க கூண்டு - சிறுகதை , பூ. கீதா சுந்தர் | Thanga Koondu Tamil Short Story (Sirukadhai), Geetha Sundar - BookDay - https://bookday.in/

தங்க கூண்டு – சிறுகதை

தங்க கூண்டு – சிறுகதை

 

” ஏங்க.. எத்தனை தடவ சொல்றது உங்களுக்கு .. இன்னைக்கு ஒரு நாள் தான கேக்கறேன்.. தினமுமா கேக்கறேன்..”

” முடியவே முடியாது சித்ரா… நீ வேற எத வேணாலும் சொல்லு நான் செய்றேன்… இன்னைக்கு என்னை ஆள விடும்மா.. ” என்று ஆபிஸ் லேப் டாப் பேக்கை எடுத்து மாட்டிக் கொண்டான் தீனா.

” ஏங்க உங்களுக்கு மனசாட்சியே இல்லையா.. இப்டி கராரா பேசறீங்க.. நானும் மனுஷி தான.. இன்னைக்கு ஒரு நாள் தானே கேக்கறேன்.. ப்ளீஸ்ங்க ” என்று கெஞ்சி புலம்பினாள்.

” பாரு சித்தும்மா.. இது வரைக்கும் நீ கேட்டு நான் எதாவது பண்ணாம இருந்து இருக்கேனா.. இந்த விஷயத்துல மட்டும் என்ன இழுக்காத… ” என்று அவள் தோளை தொட்டு சமாதானம் செய்ய போனான். அவன் கைகளை தள்ளி விட்டாள்.

” ஏங்க அவன் உங்களுக்கும் புள்ள தானே… எதுக்கு நான் மட்டும் எப்பவும் … ”

” இப்ப என்ன பண்ண சொல்ற டீ.. ”

” இன்னைக்கு நீங்க போங்க.. இல்லன்னா எங்கூடவாவது வாங்க.. ”

” புரிஞ்சிக்கோம்மா இன்னைக்கு ஆபிஸ்ல நிறைய வேலை இருக்கு.. அங்க போய்ட்டு வந்தா ஒரு நாள் வீணா போவும்.. அதோட செமையா பிபி எகிறிடும் … சொன்னா கேளும்மா … தங்கம் இல்ல.. ”

” ம்… ஒரு நாளைக்கே உங்களுக்கு இப்டி இருக்குன்னா தினமும் எனக்கு எப்டி இருக்கும்.. ”

” நான் அப்பவே சொன்னேன் இல்ல.. அங்க வேணான்னு .. நீ தானே ஒத்தக்கால்ல நின்னு அடம் பிடிச்ச.. இப்ப என்னை குறை சொல்லிட்டு இருக்க.. ” மீண்டும் எழுந்து கிளம்பினான்.

” ப்ச்.. ஆமா.. நான் தான் காரணம் போதுமா.. ” என்று கத்தியவள் உடனே குரல் தாழ்த்தி..

” ஏங்க.. வேற வழியே இல்லையா.. நான் தான் போயாகனுமாங்க.. ” என்று மீண்டும் கெஞ்சினாள்.

” ஆமாண்டி செல்லம்.. வேற வழியே இல்ல… நீ தானே இதுக்கு ஆசப்பட்ட ராஜகுமாரி.. அப்ப நீ தான் போயாகணும்.. ”

” போறேன், போயி தொலையிறேன்.. ” என்று கோபமாகவும் வீரமாகவும் எழுந்து போய் புடவை கட்டிக் கொண்டு கிளம்பினாள்.

” ஏண்டா அவ எங்க தான் கூப்பட்றா.. ? கூட போய் தான் வாயேன்டா.. ” என்றார் தீனாவின் அம்மா.

” ம்மா… சும்மா இரு சொல்லிட்டேன்.. இப்ப தான் அவளை சமாதானம் செஞ்சி வச்சிருக்கேன்.. நீ மறுபடியும் அவளை மலை ஏத்திடாத.. ”

” டேய்… இப்ப நான் என்னடா கேட்டேன்.. எங்கிட்ட இப்டி பேசற? ”
அப்டி எங்க தாண்டா கூப்பட்றா.. சொல்ல கூடாத எடமாடா அது ? ”

” ம்.. ஸ்ரீ யோட ஸ்கூலுக்கு கூப்பட்றா ..”

” என்னது ஸ்கூலுக்கா… ? அடச் சே.. இதுக்காடா ரெண்டு பேரும் இப்டி சண்டைய போட்டுக்குறீங்க .. ? ” என்று ஆச்சரிமாக அலுத்துக் கொண்டார் அம்மா.

” ம்கும்… சும்மா ஒன்னும் இல்லம்மா… இன்னைக்கு இன்னா டே தெரியுமா? .. ”

” அதுக்கூட தெரியாமலா ஆபிஸ்க்கு போற நீ.. ”

” ம்மா… வர வர உனக்கு கிண்டல் அதிகமா போச்சி… இன்னைக்கி ஓபன் டே.. அதாவது ஓபன் டே.” என்று அழுத்தமாக கூறி விட்டு,
” இன்னைக்கி பரிட்சை முடிஞ்சி ரேங்காடு குடுப்பாங்க ஸ்கூல்ல… ”

” யாருக்கு… ? ஸ்ரீ க்கு தான.. ”

” ஆமா… அவனுக்கு தான்.. ”

” அதுக்கு எதுக்கு நீங்க போவனும்… நீ ஸ்கூலுக்கு படிக்கும்போது நீ தானே ரேங்காடு கொண்டு வந்து அப்பாகிட்ட கை எழுத்து வாங்கினு போவ… ”

” அதெல்லாம் அப்போ… இப்ப பெத்தவங்க தான் ஸ்கூலுக்கு போவனும்… அதுக்கூட பரவாயில்ல.. அங்க நம்மள நிக்க வச்சி கிரிமினல் மாதிரி நடத்துவாங்க பாரு… ப்பா.. அதை நினைச்சா தான் படபடப்பு எகிறுது… குழந்தைகாக அவங்க திட்றத எல்லாம் வாங்க வேண்டிய தலை எழுத்து… ”

டிபன் சாப்பிட்டுக் கொண்டு இருந்த ஸ்ரீ ‘ கெக்க பெக்க ‘ என்று சிரிக்க..

” டேய் என்னடா சிரிப்பு… சீக்கிரம் சாப்ட்டு கிளம்பு .. ” என்று அதட்டினாள் சித்ரா.

” ஒரு நாளைக்கு கூட உங்களுக்கு வர முடியல.. என்ன மட்டும் எதுக்கு அந்த ஸ்கூலுக்கு தினமும் அனுப்பறீங்க.. ? ”

” எங்ககிட்ட மட்டும் நல்லா வாய் பேசு.. ஆனா பரீட்சையில கோட்டை விட்டுடு.. ”

” ஏம்மா ஸ்ரீ ஆறாவது தான் படிக்கிறான்.. அதுக்குள்ள பிள்ளைய எதுக்கு இந்த பாடு படுத்தறீங்க.. ”

” அத்தை.. நீங்க இவனுக்கு சப்போர்ட் பண்ணாதீங்க.. அவ்ளோ தான் தல மேல ஏறி உட்கார்ந்துடுவான்.. ”

” என்னவோ போங்க… எல்லாத்துக்கும் ஒரே கத்தலு.. கோவம் … ஊருல இருந்து வந்தாலே எப்படா ஊருக்கு போவோம்னு இருக்கு.. ” என்று புலம்பி கொண்டே வராண்டாவில் போய் உட்கார்ந்து கொண்டார்.

” ஏங்க… இப்ப இவங்க வேற ஏங்க கோச்சிக்கிறாங்க… நான் அவங்கள என்ன சொன்னேன் இப்போ… ”

” சித்து, அம்மா எதுவும் கோச்சிக்கல.. சும்மா தான் போனாங்க… நீ ஏன் டென்ஷன் ஆகற? சரி நான் கிளம்பறேன்.. நீ ஸ்கூலுக்கு போய்ட்டு வந்துடு..அங்க பேசறத ரொம்ப சீரியசா எடுத்துக்காத சரியா… ” என்று கூறி விட்டு தீனா கிளம்பி விட்டான்.

அன்று ஓபன் டே என்பதால் பள்ளிக்கு வந்த அத்தனைப் பெற்றோரின் முகத்திலும் கடுகடுப்பு.. பயம்… தன் குழந்தை மீது கோபம்.. என்று தாண்டவமாடியது.

ஸ்ரீ க்கு ஒதுக்கப்பட்ட நேரத்திற்கு தான் ஆசிரியர்கள் அறைக்கு செல்ல வேண்டும்.. அதற்குள் ஒவ்வொரு நிடமும் ‘ தட தட ‘ வென ரயில் ஓடியது சித்ரா உடம்பில்.

‘ ச்சே.. எதுக்கு நமக்கு இந்த பொழப்பு, அவர் அப்பவே சொன்னாரு இந்த மாதிரி ஹை ஃபை ஸ்கூல் எல்லாம் வேணாம்… கொஞ்சம் சுமாரான ஸ்கூல்ல கூட சேத்துக்கலாம்னு.. நான் தான் கேக்காம போய்ட்டேன்..’ என்று தன்னை தானே நொந்துக் கொண்டாள்.

ஸ்ரீ யுடன் பிரின்ஸ்பால் அறைக்குச் சென்றாள். பிரிஸ்பால் பக்கதில் சுற்றி வகுப்பு ஆசிரியர்கள் அமர்ந்து இருக்க, அனைவருக்கும் வணக்கம் தெரிவித்து விட்டு இருக்கையில் அமர்ந்தாள். பக்கத்தில் ஸ்ரீ பாவமாக கைக் கட்டி நின்றுக் கொண்டு இருந்தான்.

முதலில் ஒரு டீச்சர் கணைக்க,

‘ ரைட்டு ‘ என்று மனதில் நினைத்துக் கொண்டாள் சித்ரா.

ஒவ்வொரு சப்ஜக்ட் டீச்சராக ஆரம்பித்து கழுவிக் கழுவி ஊற்றிக் கொண்டுக் கொண்டிருக்க… தன் பிள்ளையைப் பற்றி இவ்வளவு குறை சொல்ல சொல்ல சித்ராவுக்கு மனம்
‘ வள வள” வென்று வதங்கிப் போனது. இருபது நிமிடம் மேல ஆகுது. காதுக்குள் ரம்பம் வைத்து அறுத்தது போல் இருந்தது சித்ராவுக்கு. ஸ்ரீ நிற்க முடியாமல் கால் வலியில் நெளிந்துக் கொண்டே இருந்தான்.

பி.ஹெ.டி முடித்திருந்த சித்ரா தன் குழுந்தையின் படிப்புக்காகவும், அவனை கவனித்துக் கொள்ளவும் தான் பார்த்து வந்த கல்லூரி வேலையை விட்டு விட்டாள். இதை தெரிந்து வைத்திருந்த பிரின்ஸ்பால் ஒவ்வொரு முறையும் சித்ராவை பார்த்து கேட்கும் கேள்வி இது தான்,

” நீங்க படிச்சவங்க தானே… வீட்டுல என்ன பண்றீங்க? உங்க ஒரு குழந்தைக்கு கூட உங்களால சரியா பாடம் சொல்லி தரக் முடியாதா? … படிச்சவங்க வீட்டுலயே இவ்ளோ பொறுப்பு இல்லாமல் இருந்தா எப்டிங்க? ” என்று கேட்கும் போதெல்லாம் சித்ராவின் ஈகோவை குத்தி கிளறி கிழிப்பது போல் இருக்கும்.

” ஸ்ரீ யோட ப்ரோகரஸ் கார்டு குடுங்க ” என்று பிரின்ஸ்பால் கேட்க.. அவனுடைய வகுப்பாசிரியை அவரிடம் தந்தார்.

‘ ஓ.. இப்பதான் கார்டையே பாக்கறாங்களா? இதுக்கு எதுக்கு இவ்ளோ நேரம் எனக்கு பாடம் எடுத்தாங்க’ என்று மனதில் நினைக்க,

” அம்மா நீ மைண்ட் வாய்ஸ்ன்னு நினைச்சி சத்தமா பேசற ..” என்று அவள் காதில் கிசுகிசுத்தான் ஸ்ரீ.

” ஸ்ரீ கொஞ்ச நேரம் கூட பேசாம இருக்க மாட்டியா நீ .. இப்டி தான் மேம், கிளாஸ்ல பிரேக் பீரியட்ல கூட பேசிக்கிட்டே இருக்கான்.. ” என்று வகுப்பாசிரியை போட்டுக் கொடுக்க,

” ஈஸ் இட்? பிரேக் பீரியட்ல கூடவா பேசற நீ..? ”

” ம்.. ஆமாம் மேம்.. ” என்றான் ஸ்ரீ.

” பாத்தீங்களா மேம் உங்ககிட்டயே எவ்ளோ தைரியமா பேசறான்..”

” மேம் கேட்டதால தான சொன்னேன்” என்றான் ஸ்ரீ.

” ஸ்ரீ சும்மா இரு.. இப்டில்லாம் பேசக் கூடாது ” என்று சித்ரா கண்டிக்க,

” மேம் இதெல்லாம் வீட்டுல வச்சி சொல்லிக் குடுங்க.. இங்க வச்சி இல்ல..”

” ஓ.கே, ஓ. கே மேம் .. சாரி ”
என்று பம்மினாள் சித்ரா.

” மேம், ஸ்ரீ ரொம்ப வாலு பண்றான், எப்ப பாரு பக்கத்துல பேசிக்கிட்டே இருக்கான்… லஞ்ச் டைம்ல என்ன என்ன பண்ணான்னு அவனையே கேளுங்க..மேம் ”

” என்னடா பண்ண? ”

” லஞ்ச் டைம்ல நான் ஒன்னும் பண்ணலம்மா.. சாப்டேன் அவ்ளோ தான்.. ” என்றான்.

” ம்… ஒன்னும் பண்ணலையா? எல்லா பசங்களோடயும் சாப்பாடு வாங்கி சாப்டறான்… இவன் சாப்பாட்டை அவங்களுக்கு கொடுக்கறான்… அது கூட எப்டி, பெஞ்ச் மேல தாவி ஏறி நடந்து போய் .. ப்பா என்னால முடியல மேம்… ”

” ஸ்ரீ பெஞ்ச் மேல ஏறி தாவி போனியா? ”

” ஆமாம்மா… மிஸ் தான் சாப்பிடும் போது யாரும் கீழே இறங்கி தரையில நடக்க கூடாதுன்னு சொன்னாங்க … அதாம்மா பெஞ்ச் மேல தாவி போனேன்… ” ஸ்ரீ அப்படி சொல்லவும் , சித்ராவும் பிரின்ஸ்பாலும் உதட்டை கடித்து, சிரிப்பை அடக்க வேறு பக்கம் திரும்பிக் கொண்டனர்.

” மேம் ப்ரோக்ரஸ் கார்டுல சைன் பண்ணிட்டு… ” என்று இழுத்தாள் சித்ரா.

” ம்… ஓ. கே மேம்.. ” என்று மார்க்குகளை பார்த்தவர்,

” என்ன இது போன தடவை விட இரண்டு, மூன்று மார்க் குறைவா இருக்கு, இப்டியே போச்சுன்னா சரிப்படாது.. பார்த்துக்கோங்க மேம்..” என்று கூறி விட்டு கை எழுத்து போட சித்ராவிடம் கொடுத்தார்.

கை எழுத்து போட்டு விட்டு கை எடுத்து கும்பிட்டு விட்டு அங்கிருந்து கிளம்பியவள், வண்டியை வேகமாக ஓட்டிக் கொண்டு வந்தாள். வண்டி நேராக ஒரு ஐஸ் கிரீம் பாய்லரில் போய் நின்றது.

இரண்டு ஐஸ் கிரீம் வாங்கி ஒன்றை ஸ்ரீ யிடம் கொடுத்து வி்ட்டு மற்றொன்றை சோறு திண்பது போல் திண்று முடித்தாள்.

‘ என்னாச்சி அம்மாவுக்கு ‘ என்று ஸ்ரீ கண்கள் விரிய அவளையே பார்த்துக் கொண்டு இருந்தான்.

இரவு டிபன் சாப்பிடும் போது,

” என்ன சித்து ஸ்கூலுக்கு போயிருந்தியே .. என்ன சொன்னாங்க? மார்க்கெல்லாம்
ஓ. கே தான… ” என்று தீனா கேட்க,

” ம்… சாப்டுங்க, நாளைக்கு பேசிக்கலாம்… ” என்று மென்மையாக பதில் அளித்தாள்.

‘ என்னடா இது ஆச்சரியமா இருக்கு? அம்மா இவ்ளோ கூலா பதில் சொல்றாங்க.. எப்புர்ரா!!! தீனா ஆச்சரியமாக கேட்க,

” இல்லங்க, போற போக்குல ‘ ஓபன் டே’ அப்டின்னாலே பேரண்ட்ஸ திட்றதுன்னு முடிவு பண்ணிட்டாங்க போல… அரை மணி நேரம் அவங்க முன்னாடி உட்கார்ந்து இருக்கவே என்னால முடியல… உண்மையாவே ஸ்ரீ நிலமை.. பாவம் தான்… எப்ப பாரு
‘ நீங்க படிச்சவங்க தானே படிச்சவங்க தானே’ ன்னு என்னை வேற வச்சி செய்றாங்க.. நான் படிச்சவங்கறத்துல இவங்களுக்கு என்ன பிர்ச்சனை.. அப்புறம் இவங்ககிட்ட எதுக்கு இவ்ளோ பீஸ் கட்டி ஸ்கூலுக்கு அனுப்பறோம்… சும்மா எல்லா ஓபன் டே வயும் எழுதி வச்சி ஒரே மாதிரி பேசிக்கிட்டு இருக்காங்க.. ”

” பேசறது தப்பு, விளையாடறது தப்பு, சாப்பாட்டை ஷேர் பண்றது கூட தப்புன்னு.. எவ்ளோ கம்ளைண்ட்… அப்பப்பா.. யாருங்க இவங்கல்லாம்.. ”

” பணத்தையும் கட்டிட்டு கூனி குறுகி அவங்க முன்னாடி குற்றவாளி மாதிரி உட்காரும் போது… அப்டி இருக்கு… இப்படி ஒரு டென்ஷன் நமக்கும் வேணாம், நம்ம பிள்ளைக்கும் வேணாம்… நாளைக்கு நாம ஸ்கூலுக்கு போறோம் வாங்க…

” நானா ? ” என்று தீனா வாயை பிளக்க..

” பயப்படாதீங்க, நாளைக்கு பேசற இடத்துல நம்ம இருப்போம்… ” என்றாள் தெளிவாக.

 

எழுதியவர்:

பூ. கீதா சுந்தர்

 



இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள்சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

 



Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *