தங்கச்சிறையும் கொண்டாட்டங்களும்
சனிக்கிழமை வந்து விட்டாலே பல நிறுவனங்களில் வேலை செய்பவர்களுக்கு மதியத்திற்கு மேல் வேலை செய்ய மனம் வராது. அப்படி இல்லை என்றால் மற்ற நாட்களை விட இன்னும் அதிகமாகவோ அல்லது சீக்கிரமா வேலை செய்து முடித்து மறுநாள் விடுமுறையை கொண்டாட பலரும் துள்ளி குதிப்பார்கள். காரணம் மறுநாள் ஞாயிற்றுக்கிழமை. இந்தியாவில் கல்வி நிறுவனங்கள், தொழிற்சாலைகள், பத்திரிகைகள், தனியார் நிறுவனங்கள், அரசு நிறுவனங்கள் என ஒரு வாரம் முழுவதும் உழைப்பவர்களுக்கு ஞாயிற்றுக்கிழமை ஒரு நாள் தான் விடுமுறை. அதனாலே பலருக்கும் ஞாயிற்று கிழமை பிடித்த கிழமை என்றே சொல்லலாம்.
ஞாயிற்றுக்கிழமை விடுமுறை என்ற வழக்கம் ஆங்கிலேயர்களால் கொண்டுவரப்பட்டது. ஆங்கிலேயர்கள் இந்தியாவை ஆண்ட போது இந்தியாவில் பெரும்பாலும் தினச் சம்பள முறை மாறி வாரச் சம்பளம் என்ற அடிப்படையில் தொழிலாளர்கள் பணியாற்றினார்கள். வாரவாரம் குறிப்பிட்டு தொகை பெற்றுக்கொண்டு செல்வார்கள். வார சம்பளம் வழங்கும் நாள் சனிக்கிழமையாக இருந்தது. மறுநாள் ஞாயிற்றுக்கிழமை வேலைக்கு செல்லாமல் குடும்பத்தினருடன் சந்தோஷமாக ஓய்வெடுப்பார்கள். இதனால் வேலை பாதிப்பை புரிந்து கொண்ட ஆங்கிலேய அரசாங்கம் மாத சம்பளம் முறையை அறிமுகப்படுத்தியது. இந்த முறை வந்தபோது தொடர்ந்து ஒரு மாதம் முழுவதும் பணியாற்றிய பின்பு சம்பளம் தரப்பட்டது. இந்த முறை வேலைக்கு வருபவர்களிடம் சலசலப்பை ஏற்படுத்தியது. குழப்பங்களையும் ஏற்படுத்தியது. பின் விடுமுறை வேண்டும் என்ற கோரிக்கையை வேலை செய்பவர்கள் முன்வைக்க தொடங்கினர். கோரிக்கையாகவும் பலமுறை ஆங்கிலேயரிடம் தெரிவிக்கப்பட்டது.
வேலை செய்பவர்களின் உடல்நலம், மனநலம் பொறுத்து ஆலோசித்து முதலில் மாதத்திற்கு ஒரு நாள் விடுப்பு எடுத்துக் கொள்ளலாம் என்ற சட்டம் கொண்டுவரப்பட்டது. ஆனால் மாத ஒரு விடுமுறை மட்டும் எடுத்துக்கொண்டு ஓய்வெடுப்பதும், குடும்பத்தினரோடு செலவிடுவதும் போதுமானதாக இல்லை. இது மேலும் மன சோர்வு மற்றும் உடல் சோர்வை ஏற்படுத்தும் என்று பலரும் மீண்டும் கோரிக்கை எழுப்பினார்கள். மாதம் ஒரு விடுப்பு போதுமானதாக இல்லை என்று 1881 ஆம் ஆண்டு நேதாஜி லோகன் பெஜி என்பவர் ஆங்கிலேய அரசிடம் மாதம் முழுவதும் விடுமுறை இல்லாமல் தொழிலாளர்கள் வேலை செய்ய முடியாது எனவே வாரத்திற்கு ஒரு நாள் விடுமுறை வேண்டும் என்றும், அதுவும் அந்த விடுமுறை சம்பளத்துடன் கூடிய விடுமுறையாக வேண்டும் என்ற கோரிக்கை முன் வைக்கப்பட்டது.
ஆனால் ஆங்கிலேய அரசு அதை ஏற்க மறுத்தது. அது பெரும் போராட்டமாகவும் தொடங்கியது. வேலை செய்யும் தொழிலாளர்கள் அனைவருக்கும் சம்பளத்துடன் வாரத்தில் ஒரு நாள் விடுமுறை கட்டாயம் வேண்டும் என்று கோரிக்கை முன்னெடுத்து பல ஆண்டுகள் போராட்டம் நடைபெற்றது. பல்வேறு தரப்புகளும் ஆதரவு தெரிவிக்க, எட்டு ஆண்டுகளுக்கு பின், 1889 ஆம் ஆண்டு ஆங்கில அரசு ஞாயிற்றுக்கிழமை வார விடுமுறை தினமாகவும், அதுவும் சம்பளத்துடன் கூடிய வார விடுமுறை தினமாக அறிவித்தது. ஆங்கில அரசு அறிவிப்பதை தொடர்ந்து சில தனியார் நிறுவனங்களும் அந்த சட்டத்தை ஏற்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை அறிவித்தது. அது சரி வார விடுமுறை ஏன் ஞாயிற்றுக்கிழமை ஆனது ?, வேறு நாட்கள் இல்லையா ? என்ற கேள்வி உண்டு. அந்த ஞாயிற்றுக்கிழமையில் பெரும் அரசியல் ஒளிந்துள்ளது. அதற்கு முக்கிய காரணம் ஆங்கிலேயர்கள் கிறிஸ்தவர்கள். தாங்கள் மதத்தில் முக்கிய நாளாக ஞாயிற்றுக்கிழமை தாங்கள் குடும்பத்துடன் சர்ச்சுக்கு சென்று வழிபாடு நடத்துவார்கள். அதற்கு வசதியாக ஞாயிற்றுக்கிழமை விடுமுறையாக அறிவித்தார்கள். சில சமயங்களில் ஞாயிற்றுக்கிழமை வேலை இருக்கும் பட்சத்தில் தொழிலாளர்களுக்கு 30 நிமிடம் கூடுதலாக கட்டாய உணவு இடைவெளி விட வேண்டும் என்ற சட்டமும் கொண்டுவரப்பட்டது. இந்த சட்டங்களை மக்களும் ஏற்றுக்கொண்டனர். அதுவே இன்று வரை கடைபிடிக்கபட்டுள்ளது. இதற்கு முற்றிலும் மாறாக அரபு நாடுகளில் வெள்ளிக்கிழமைகளில் விடுமுறை கடைபிடிக்கப்படும். அரபு நாட்டினர் முஸ்லிம்கள். தாங்கள் மதத்தின் வழிபாடு செய்ய முக்கியமான கிழமை என்பதால் வெள்ளிகிழமை விடுமுறை அறிவித்தார்கள். தானும் வசதியாக வழிபாடு நடத்திக் கொள்வார்கள்.
சில வருடங்களாகவே ஐடி நிறுவனங்களில் தற்போது வாரத்திற்கு இரண்டு நாட்கள் சனி மற்றும் ஞாயிறு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அரசு பள்ளிகள், அலுவலகங்களிலும் சில சமயங்களில் சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினமாக உள்ளது. சில முக்கிய தனியார் தொழிற் நிறுவனங்களில் வாரத்துக்கு இரண்டு நாட்கள் விடுமுறை என வழங்கப்படுகின்றது. விடுமுறை தினங்களில் வேலை செய்தாலும் கூடுதல் சம்பளம் வழங்கப்படுகிறது.
விடுமுறை என்றாலே கொண்டாட்டங்களுக்கு பஞ்சம் இருக்காது. சிலர் டாஸ்மார்க்களில் சனிக்கிழமை இரவு என்ன குடிக்கலாம் ?, என்ன சாப்பிடலாம் ?, என்ன திரைபடம் செல்லலாம் ? என்று திட்டமிடுவார்கள். விடிய விடிய குடித்துவிட்டு வீட்டிற்கு சென்று விடுமுறை நாளில் உறங்கியே பொழுது கழிப்பவர்கள் உண்டு. சிலர் புத்தகங்களை வாசிப்பவர்கள் உண்டு, சிலர் முக்கிய கூட்டங்களில், விஷேச நிகழ்வில் கலந்து கொள்வது உண்டு. சிலர் விடுமுறை நாளில் வீட்டின் முக்கிய நிகழ்வுகளையும் ஏற்பாடு செய்வார்கள்.சிலர் டிவி, செல்போன்கள் பார்த்தபடி பொழுது கழிப்பவர்கள் உண்டு. சிலர் அன்றைய நாள் கிரிக்கெட் ,ஃபுட் பால் போன்ற விளையாட்டுக்கள் விளையாடி பொழுதை கழிப்பவர்கள் உண்டு. பைக் அல்லது கார்களை எடுத்து கொண்டு வெறுமனே ஊர் சுற்றுபவர்களும் உண்டு.சிலர் குடும்பத்தோடு அன்று வெளியில் சுற்றுலா, கோவில்களுக்கு செல்பவர்கள் உண்டு. இப்படியாகத்தான் வார விடுமுறைகள் கழிந்து கொண்டிருக்கின்றன.
இப்படி விடுமுறை நாள் பலருக்கு கொண்டாட்டமாக இருக்கும். பலருக்கு அது வரமாகவும், ஏக்கமாகவும் உள்ளது என்றால் நம்ப முடிகிறதா?, ஓமன், அபுதாபி , சவுதி, குவைத் போன்ற அரபு நாடுகளில் ஆயில் அண்ட் கேஸ் (oil and gas pipeline construction) வடக்கு மற்றும் தெற்கு பகுதிகளில் பாலைவன சைட்டில் வேலை செய்பவர்களுக்கு இரண்டு வாரங்களுக்கு ஒருமுறை தான் விடுமுறை. அதுவும் வெள்ளிக்கிழமை. போதாகுறையாக தினமும் 12 மணி நேர வேலையும் சில நிறுவனங்களில் உள்ளது. அதாவது அந்த நாட்டை சேர்ந்த மக்களுக்கு மாதத்தில் இரண்டு வாரம் வேலை. இரண்டு வாரம் விடுமுறை. அந்த கடைசி நாள் பணி முடிந்து வீட்டிற்கு செல்பவர்களுக்கும், அடுத்த இரண்டு வார பணிக்காக பயணம் செய்து வருபவர்களுக்காக இரண்டாவது வார வெள்ளிகிழமை ஒருநாள் இடைவெளி விடுவார்கள். அதன் அடிப்படையில் ஒரு நாள் விடுமுறை. அந்த தினம் இந்தியர்களுக்கும், வேலை செய்யும் பிற நாட்டினருக்கும் விடுமுறை என அறிவித்துள்ளது. அவர்கள் நாட்டு மக்கள் மட்டும் மனிதர்கள் போலவும், மாதத்தில் இரண்டு வாரங்கள் வேலை, இரண்டு வாரங்கள் விடுமுறை விட்டும். மற்ற நாட்டு மக்கள் இயந்திரம் போலவும் விடுமுறை இல்லாமல் ஓயாமல் வேலை வாங்குவார்கள். உயர் மட்ட அதிகாரியாக இருப்பவர்களுக்கு ஆறு மாதத்திற்கு பின் ஒரு மாதம் விடுமுறையும், தொழிலாளர்களுக்கு ஒரு வருடம் முடிந்து ஒரு மாதமோ, அல்லது இரண்டு வருடத்திற்கு பின் ஒரு மாதம் தான் சம்பளத்துடன் கூடிய விடுமுறை கிடைக்கிறது. வெளிநாடுகளில், அதுவும் பாலைவன பகுதியில் வேலை செய்பவர்கள் இரண்டு வாரத்திற்கு ஒருமுறை வரும் விடுமுறைகாக பலரது மனநிலையும் காத்திருக்கும். சில நேரங்களில் அவசர வேலை என்றாலோ, விடுமுறை நாட்களில் வேலை செய்தால் எக்ஸ்ரா பணம் கிடைக்கும் என்று விடுமுறையை தியாகம் செய்பவர்கள் உண்டு. அப்படியே விடுமுறை கிடைத்தாலும் பாலைவனப் பகுதியில் அவர்கள் சுற்றிப் பார்க்க என்ன இருக்கிறது ? இரண்டு கடைகள் அவ்வளவுதான். சில பகுதிகளில் அதுவும் இருக்காது. அதிகபட்சம் விடுமுறை பொழுது நீண்ட நேரம் உறங்க முடியும்.
மொபைல் போனில் இரண்டு, மூன்று படங்கள் பார்க்க முடியும். குடும்பத்தினருடன் வீடியோ கால் மூலமாக மனம் விட்டு பேச முடியும். அந்த பாலைவனப் பகுதியில் இருக்கும் கடைகளிடம் யார் மூலமாகவும் சொல்லி கிடைக்கும் அதிக விலையுள்ள மதுபானங்களை வாங்கி, அறையில் பதுக்கி வைத்து குடிக்க முடியும் அவ்வளவு தான். சவுதி போன்ற நாடுகளில் கடல்களுக்கு நடுவில் எண்ணெய் குழாய் இணைப்பு என நடத்தும் நிறுவனங்களில் இரண்டு, மூன்று மாதங்கள் தொடர்ச்சியான வேலை மற்றும் ஒரு மாதம் விடுப்பு என்று கொடுக்கப்பட்டுள்ளது. சவுதி போன்ற பகுதிகளில் வேலை நிலை மற்றும் நிறுவனத்தை பொறுத்தே விடுமுறை, ஒப்பந்தத்தின் அடிப்படையில் கணக்கிடப்படுகிறது.
வேலை பார்க்கும் நேரம் என்பது நாள் ஒன்றுக்கு , 12 மணி நேரம் வேலை.பணியின் நேரம் ,காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை .அதே போல், மாலை 6 மணி முதல் மறுநாள் காலை 6 மணி வரை, மாற்று பணியாளர்கள் இரவில் வேலை செய்வர்கள் உள்ளார்கள்.
சில பாலைவன பகுதிகளில் வேலை பார்க்கும் இடத்திலேயே தங்கும் வசதி இருப்பதால், அதிகாலை 04:30 எழுந்து, கிளம்பி 6 மணி பணிக்கு செல்பவர்கள் உண்டு.
பலருக்கு வேலை பார்க்கும் இடத்தில் இருந்து 2 மணி நேர பயணத்தில் தங்கும் விடுதி அமைந்திருக்கும். அவர்களெல்லாம், அதிகாலை 3 மணிக்கே உறக்கத்தில் இருந்து எழுந்து, தங்களை தயார் செய்து கொண்டு 4 மணிக்கு அலுவலக பேருந்தில் வேலை பார்க்கும் இடத்திற்கு 6 மணிக்கு வர வேண்டும்.
12 மணி நேர வேலை செய்து மாலை 6 :30 மணிக்கு அலுவலக பேருந்தில் தங்கும் விடுதிக்கு செல்வார்கள். விடுதியை சென்றடைய, குறைந்த பட்சம் இரவு 08:30 ஆகிவிடும் .பிறகு ,குளித்து முடித்து ,குடும்பத்துடன் பேசி ,உறங்க இரவு 10 மணி ஆகி விடும்.மறுபடியும் அதிகாலை 03 மணிக்கு எழும்ப வேண்டும்.நாள் ஒன்றுக்கு 12 மணி நேர வேலையாக இருந்தாலும்,வேலைக்கான பயண நேரங்களை கணக்கிட்டால் கிட்டத்தட்ட 18 மணி நேரம் ஆகிவிடும்.
அதில் விடுமுறை என்பது கிடைத்தாலே அதிசயம் தான். இப்படியாக தொடர்ந்து வேலை செய்பவர்களின் மனநிலை பெரும் பாதிப்பும், அதிக வெப்ப சூழலில் வேலை செய்பவர்களுக்கு உடல் பாதிப்பும் ஏற்படுத்தும். பெரிய நிறுவனங்களில் வெளிநாடுகளில் வேலை செய்பவர்களுக்கு நிறுவனங்கள் மூலம் நல்ல உணவு, இருப்பிடம், மருத்துவம் எல்லாம் இருக்கும். ஆனால் அவர்களுக்கு விடுமுறை மற்றும் மனசோர்வுக்கான எந்த ஒரு மருந்தும் கிடைக்காது. இந்த வாழ்க்கையும் சிறை போன்று தான். சிறையிலே வசதிகள் இருக்காது. ஆனால் இந்த சிறையில் எல்லா வசதிகளும் இருக்கும் தங்கச்சிறை. வருடத்திற்கு ஒரு முறை வீட்டிற்கு வந்து செல்லலாம். அந்த விடுமுறைகாக பலரும் நாட்களை எண்ணி கொண்டுள்ளார்கள். குடும்ப சூழல்காக இப்படியான பகுதிகளில் வேலை செய்கிறார்கள்.
அவர்கள் வார விடுமுறைகாக பலமுறை கோரிக்கைகள் வைத்தாலும், அந்த நாட்டு அரசாங்கமோ, நிறுவனங்களோ செவி சாய்ப்பதில்லை. இங்கு பணிபுரிவோர்களில் நூற்றில் ஐம்பது சதவிகிதம் கேரளாவை சேர்ந்தவர்களும் உண்டு. இன்னும் இந்தியாவில் பல நிறுவனங்களில் 12 மணி நேர வேலைகள் நடைபெற்றுக் கொண்டுதான் இருக்கின்றன. ஒரு வாரம் காலை 9 மணியிலிருந்து இரவு 9 மணி வரை வந்தால், ஒரு வாரம் இரவு 9 மணியிலிருந்து தொடங்கி காலை 9 மணி வரை வேலை நடந்து கொண்டிருக்கிறது. எவ்வளவோ சட்டங்கள் கொண்டு வந்தாலும், அரசாங்கத்திற்கும், சட்டத்திற்கும் அஞ்சாமல் பணத்தால் இவற்றை செய்து கொண்டிருக்கிறார்கள். அப்படிபட்ட நிறுவனங்களிலும் மக்கள் வேலை பணி தொடர்ந்து கொண்டுதான் உள்ளது. சில பகுதிகளில் ஒரு சில மக்கள் சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமைகள் மட்டும் தான் வேலை செய்பவர்களும் உண்டு. பல சுற்றுலாத் தலங்களில் விடுமுறை நாட்கள் தான் மக்கள் கூட்டம் அதிகமாக இருக்கும் என்பதை அந்த நேரத்தில் கடைகள் திறக்கவும், அந்த கிழமைகளில் மட்டும் வேலை செய்பவர்கள் உண்டு.
சம்பளத்துடன் கூடிய விடுமுறை போல போனஸ் பெற்றத்துக்கும் ஒரு வரலாறு உண்டு. ஆங்கிலேய ஆட்சியில் மாத சம்பள முறை நடைமுறைக்கு கொண்டு வந்து, 4 வாரங்களுக்கு ஒரு முறை சம்பளம் கணக்கிட்டு ஒவ்வொரு மாதமும் கொடுக்கப்பட்டது.
அவ்வாறு மாதத்திற்கு ஒரு சம்பளம் என்றால் வருடத்திற்கு 12 சம்பளம் வருகிறது. ஆனால் ஒரு வருடத்திற்கு 52 வாரங்கள் வருகிறது. அப்படியென்றால் 13 மாத சம்பளங்கள் வர வேண்டுமல்லாவா? இதனால் தொழிலாளர்கள் ஏமாற்றப்படுவதாக 1930-ம் ஆண்டு மகாராஷ்ட்ராவில் உள்ள சில தொழிற்சங்கங்கள் போராட்டத்தை தொடங்கினார்கள். தங்களுக்கு ஒரு மாத சம்பளம் தராமல் வஞ்சிக்கப்படுவதாக தொழிற்சங்கங்கள் தொடர்ந்து போராடி,10 ஆண்டு காலம் இந்த போராட்டம் நடந்தது. இதனைத் தொடர்ந்து ஒரு மாத சம்பளத்தை வழங்குவது குறித்து தொழிற்சங்க நிர்வாகிகளுடன் ஆங்கிலேய அரசு ஆலோசனை நடத்தியது. இந்தியாவில் பெரும்பான்மையான மக்களால் கொண்டாடப்படும் தீபாவளி பண்டிகையின் போது மக்களுக்கு அதிக பணத் தேவை இருக்கும் என்றும், அந்த சமயத்தில் போனஸ் வழங்கப்பட்டால் பொருத்தமாக இருக்கும் என்று தொழிற்சங்க நிர்வாகிகள் தெரிவித்தனர்.
இதையடுத்து 1940-ம் வருடன் ஜுன் மாதம் 30-ம் தேதி இந்தியாவில் முதன் முதலாக இந்தியாவில் போனஸ் வழங்கப்பட்டது. இதுதான் போனஸ் பிறந்த கதை.
விடுமுறை என்பது 24 மணி நேரம் கிடைக்கும் தனக்கான நேரம். கொண்டாடவும், ஓய்வெடுக்கவும், இயற்கையை ரசித்து பொழுதை கழிக்கவும் பயன்படுத்துங்கள். அதுவும் சிலர் தனக்காக பயன்படுத்தாமல் இருப்பவர்களும் உண்டு. சிலர் விடுமுறை என்னவென்றே தெரியாமல் உழைக்கும் வெளிநாட்டில் பணிபுரியிம் மனிதர்களும் உண்டு. உழைக்கும் மக்களுக்கு விடுமுறையில் ஓய்வு என்பது அவசியம். அதனை நிறுவனங்களும் புரிந்து முறையான விடுமுறைகளை வழங்க வேண்டும். இன்றைய அரசு சொல்வது போல “அனைவருக்கும் விடுமுறை தின வாழ்த்துகள்”.
எழுதியவர் :
கார்த்திக் கிருபாகரன்
Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1Click to Join WhatsApp Channel Link : https://whatsapp.com/channel/0029VanQNeO4NVioUBbXer3q
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.