இரா. தங்கப்பாண்டியன் கவிதைகள்இசை


இன்னும் பத்து நிமிடம்

பேருந்து நிற்கும் என்ற

அறிவிப்பைத் தொடர்ந்து

பகல் தூக்கம் தொலைத்தது பயணக் கூட்டம்.

டீ, காபி, டிபனுக்கான அழைப்போசைகள்

காதைக் கிழித்துக் கொண்டிருந்தன…

கொஞ்சிக் கொஞ்சி பேசிக்கொண்டிருக்கிறாள்               

பன்பலை அறிவிப்பாளினி ஒருத்தி…

வறுகடலை, சுண்டல்,

வாட்டர்  பாக்கெட்டுகளோடு

பான்பராக்கும் விற்கிறான் கடைக்காரன்…

ஐந்து ரூபாய்க்கு ஒரு ரூபாய்

குறைவாகக் கொடுத்த கிராமத்துப் பெண்ணை

ஏளனமாகப் பார்க்கிறான்

கட்டணக் கழிப்பறைக்காரன்….

சுதி கெட்டுப்போன தாளக் கட்டையில்

இசை எழுப்பி பாடிப்பாடி

பிச்சை எடுக்கிறான் கழைக்கூத்தாடி…….

பயண தூரம் கருதி ஓட்டுநர்

வண்டி எடுக்க ஆயத்தமாக

எல்லோரும் வண்டி ஏறுகிறார்கள்…

சேரும் இடம் தெரியாமல்

அடுத்த பேருந்தின் வரவுக்குக்

காத்திருக்கிறான் இசைப் பிச்சையன்.

எல்லோருக்கும் சேருமிடங்கள்

அவ்வளவு எளிதில் கிடைத்துவிடுவதில்லை.வித்தைகளும், வித்தை களங்களும்

தரையில் நின்றே குனிந்து தொடும்

தண்ணீா் நிறைந்தது எங்கள் கிணறு

தென்னை மரத்திலேறி

தலைகீழாய் “சொர்க்” அடிப்பான்

காவல்கார ராமசாமி மகன்…

ஏழாள் மட்டமோ….பத்தாள் மட்டமோ…

எவ்வளவு தண்ணியிருந்தாலும்

தவ்விக் குதித்து தரை மண் எடுப்பான்

தம்பி நாயுடு மகன் எா்ரய்யா…

கிணற்றில் தொட்டு விளையாடும் போது

ஒரு போதும் சிக்க மாட்டான்

ஆட்டுக்கார பெருமாள் மகன்…

பட்டினத்தில் படித்துக் கொண்டிருந்த

லிங்கையா வாத்தியார் மகனுக்கு

கயிறு கட்டித்தான் நீச்சல் பழக்கி விட்டோம்…

சுரக்குடுக்கையும் டயர் டியூப்பும்தான்…

பெரிய வீட்டுப் பிள்ளைகளுக்கு

நீச்சல் சொல்லித் தந்தது…

ஒழிந்து ஒழிந்து நீச்சல் பழகிய 

பழனிவாடன் மகன் தான்

பல்கலைக் கழக அளவில் 

நீச்சல் போட்டியில் முதலாவதாய் வந்தான்

லாரி லாரியாய் மணல் நிரப்புகிறார்கள்

இன்றோ நாளையோ

இருந்த சுவடு மறையலாம்

செத்துக் கொண்டிருக்கின்றன…..

வித்தைகளும் வித்தைக் களங்களும்.உயிருள்ள பொம்மைகள்

வெள்ளையும் சிவப்புமாய்

ரோஜாக்கள் அணிவகுத்து நின்ற

கேரள தேவாலயத்து வாசலில்

ஷீ மாட்டி குட்டைப் பாவாடையில் நின்றாள்………

”எந்தே சேட்டா இவடே …. …”

காந்த விசையாய் மலையாளம் பேசி

கன்னம் குழிவிழச் சிரித்து வைத்தாள்… …

தமிழும் மலையாளமும்

இரண்டறக் கலந்த எல்லையோர நகரத்தில் 

ஊா் சுற்றிப் பார்க்க வந்த வெளி நாட்டவா்களோடு

நுனி நாக்கு ஆங்கிலத்தில் பேசிச் சென்றாள்….

இரயில் பயணத்தைப்  போலொரு

மெல்லிய புன்னகையை அவசர அவசரமாய்

இருவரும் வீசிக் கொண்டோம்… …

உயா்தர விடுதிகளில்… விருந்தினா் மாளிகையில் 

மார்பு தெரிய நிற்கும் வெள்ளச்சிகளுடன்

நின்று பேசி இந்திய கலாச்சாரம் பரப்புகிறாள்… …

பஞ்சுக் கரங்களையும் பிஞ்சு விரல்களையும்

தொட்டுப் பார்க்கவே கை குலுக்கும்

தமிழ் இளைஞா்களின் சீண்டல்களை

நாகரீகமாய் சகித்துக் கொண்டும்…

வேட்டை நாய்கள் நிறைந்த உயா்தர விடுதிகளில்

நொடி நொடியாய் கற்பு காத்து

அருவருப்பு உரசல்களை உதறித் தள்ளி விட்டுமாய்

வாழ்ந்து கொண்டுதானே இருக்கிறார்கள்

எம் தேசத்தின் படித்த இளம் பெண்கள்….!டோன்ட் டச் மீ

கரித்தூள்….

சாம்பல்…

குறுமணல்…

விம்பார்….

வாசிங் ஆயில்…

 

அது இது 

எது போட்டுக் கழுவினாலும்

அழுக்குப் போகாமல்

தனித்துக் கிடக்குது

 

அரசு அதிகாரிகளின்

தேநீா் குவளைகள்….

 

ஆளுக்கொரு தட்டு…

ஆளுக்கொரு டம்ளா்…

பேருக்கொரு இருக்கை…

பதவிக்கொரு மேசை விரிப்பு.கைத்தலம்..

உன்னோடு மட்டுமே

உரையாடிக்கொண்டிருக்கும்

உத்தியோக லட்சணம் வாய்க்காதா…?

 

கோப்புகளும் கணினிகளும்

தொலைக்காட்சியும் செல்போனும்

மாறி மாறி நம் காதலைக் கொன்று தீர்க்கின்றன

கண்ணும் கண்ணும் 

பேசிடும் வார்த்தைகள் ஏதுமின்றி

கழியுதடி நம் காதல்

ஒரு நொடிகூட

உன் இமை பார்த்துருக

நேரமில்லாத வாழ்வும் ஒருவாழ்வா…?

 

மடிமீது தலை சாய்த்து

கதை பேசி கண்ணயர்ந்ததெல்லாம்

கனவாகிப் போய்விட்டதடி…….

 

தனிமை கிடைத்த போதெல்லாம்

கட்டியணைத்து முத்தமிட்டநம்

கைகளும் இதழ்களும் கட்டுண்டு கிடப்பது ஏனடி?

 

அவசர யுகங்கள் உண்டு தீர்த்து விட்டன

அன்பு கலந்த நம்  நெஞ்சங்களை…..

 

ஓவென அழத் தோன்றும் நேரங்களிலாவது

உன் தோள்கள் கிடைக்குமா…?