கவிதை 1
என் வைரக் குவியல்களை
யார் களவாடிப் போனார்களோ
இந்நேரம்?

சட்டை உரித்த பாம்பு போல்
ஒரு கணம் மின்னி மறையும்
இந்த மின்னற் கொடியிடம்
என்ன விசாரிப்பது?
தினவெடுத்த முகில்கள்
மோதிக் கொள்ளும்
மோதிக் களைத்த முகில்கள்
சுருண்டு படுத்துக் கொள்ளும்
வழுக்குப் பாறையென நிலவு
முதுகில் சறுக்கிச் செல்லும்
விழிகளை சுமந்து செல்லும்
என் தீரா நதியே
இரவெல்லாம் உன்னுடன்
நகர்ந்து வரும்
வீடற்ற சகபயணி நான்

ஒரு குளிர் காற்றின்
தீண்டலுக்கு
வசமிழக்கும் இளகிய மனம்
நம் இருவருக்குமே
கவிதை 2
விடை தெரியாத கேள்விகளும்
கேள்விகளற்ற பதில்களும்
ஒரு மழைக்காலத்தும்பியின் சிறகுகளை
ஈக்களாக மொய்த்துக் கொண்டிருக்கின்றன
இவ்விரவில்
நள்ளிரவில் திசை தொலைத்தலையும்
பறவையின் துயரத்தை
அதன் சிறகுகளைத் தவிர
வேறுயாரறிவாரோ ?
புத்தனின் மனச்சுமையை
போதி மரம் அறிந்திருக்காது
அப்போது

லார்வா சித்தார்த்தனின் இளஞ்சிறகுகுகள்
தேடலின் கொடுஞ்
சக்கரங்களுக்குள்
சிக்கிப் பிழியப்பட்டு
வீதியில் தூக்கி வீசப்பட்ட நொடி
ஒற்றை சாட்சியாய் இருந்த
பித்துக் குளி நிலவு
நதியில் குதித்து தற்கொலைக்கு முயல்கிறது
தூக்கத்திலிருந்து விழித்த
நதியின் தேவதை
நீ விடியும் வரையில் மீனாக நீந்து
என்று சபித்து விட்டு
மீண்டும் சற்று கண்ணயர்கிறது
காலையில் கண் விழித்ததும்
நதியும் மீனும் புத்தனும்
காணாமல் போக
இளஞ்சித்தார்த்தன்
நேற்றுபாட்டிலில் மீதமிருந்த சரக்கால் கொஞ்சம்
நாவை நனைத்து விட்டு
வீதிக்குள் இறங்கி வருகிறான்
அன்றாடப் பணிகளுக்கு
தங்கேஸ்
தமுஎகச
தேனி