கவிதை 1
வாசற்கதவை முகத்தில் அறைந்து
சாத்துகிறது வாழ்க்கை
வறுமைமுகத்தில் படர
உடலை இலக்கற்று
சுமந்து போகின்றன கால்கள்
ஒரு கைப்பிடி அளவு
கடுகு பெற்றவள்
அது மரணம்நிகழாத
வீடு தானாவென்று ஐயம் கேட்கிறாள்
இல்லை என்றானதும் கைநிறைந்திருக்கும் கடுகை
விசிறித் தெருவில் இறைக்கிறாள்
இப்பொழுது கடுகுகள்
மரணம் நிகழாத
ஒரு வீட்டை நோக்கி
தெருவெங்கும் உருண்டோடிக்கொண்டிருக்கின்றன
கவிதை 2
முற்றிலும் கரைந்து போனவன்
எண்ணங்களிலிருந்து உயிர்த்தெழுகிறான்
பீனிக்ஸ் பறவையில்லை சாம்பலுமாகவில்லை
இத்தனை நூற்றாண்டுகள் கடந்த பின்பும்
உயிர்த்தெழுதல் என்னவோ
நினைவுகளோடு தான்
மென் காற்றில் சுழன்றாடும் முதிர்ந்த சிறகுகளுக்கு
வாழ்க்கை என்பது கிறுகிறு வண்ணம்
சுற்றுவதன்றி வேறு என்ன ?
கவிதை 3
தர்மத்தின் வாழ்வு தனைச் சூது கவ்வும்

மீண்டும் சூதே வெல்லும்
இங்கே
சாத்தான்கள் வேதம் ஓதும்
சங்குப்பூனைகள் சைவமாகும்
திடீரென்று
குள்ள நரிகள் முகமூடி போட்டு
முதல் பரிசை தட்டிப்போகும்
ஜனநாயக குலவையிட்டு
மாறு வேடப்போட்டியில்
நீயும் வழக்கம் போல்
வாக்கை விற்று
வாழ்க்கை விற்று
கால் மேல் கால் போட்டு
அலுவலகத்துக்கு விடுப்பு போட்டு
தொலைக்காட்சிக்கு கைகள் தட்டி
முடிக்க
கடந்து போயிருக்கும்
இன்னொரு தேர்தலும்
என் பாரம்பரியத் தமிழா
தங்கேஸ்
தமுஎகச
தேனி மாவட்டம்
