தங்கேஸ் கவிதைகள் -தங்கேஸ்வரன்

தங்கேஸ் கவிதைகள் -தங்கேஸ்வரன்




கவிதை 1
இதயம் இல்லையோ வென்று
நினைக்கத் தோன்றும்
சபிக்காத நாளில்லை
அவனை

நம் கட்டடற்ற நேசிப்பை பெரும் பலவீனமாக கண்டவன்
இதயங்களை சிதைத்து சிதைத்து
சிற்றில் கட்டி
விளையாடி வன்
பிறன்மனை நோக்கி
பேராண்மை  சரிந்தவன்

நம்பி வந்த இல்லாளை
சொற்களால் சுட்டவன்
முத்தமிட வந்த மகனுக்கு
முகத்தை காட்ட மறுத்தவன்
உறவுகளையும் நட்புகளையும்
வேர் அறுத்து சென்றவன்

கொரனாவில் இறந்து போய்
இன்றோடு ஒரு வருடம் ஆகிறது
கடைசியாக உகுத்த கண்ணீர்
யாருக்கென்று  கேட்டால்
எள்ளி நகையாடுகிறது காலம்.

முல்லைப் பெரியாற்றங்கரையில்
காரியம் செய்து
பிண்டங் கரைத்து
அவனுக்கு பிடித்த வெள்ளை வேட்டி

வெள்ளை சட்டையை ஆற்றில்
மிதக்க விட்டபோது
அச்சு அசல் அவன் மிதந்து சென்றது போலவே   இருந்தது
கண்ணுக்குள்ளேயே இருக்கிறது

பிண்டங்களை கரைத்து விட்டு வரும் மனதுகளால்
ஏனோ கடைசிவரையிலும் நினைவுகளை
கரைக்க முடிவதேயில்லை
எந்த நதியில் யார் மிதந்து செல்கிறார்களோ
எந்த நதி யாருக்குள் மிதக்கிறதோ
யார் கண்டது

கவிதை 2
வாசல் வேப்ப மரத்தில் வழக்கம் போலவே வந்தமர்ந்தது
மரகத நாணயம் போலவே ஒரு குட்டி குட்டி தேன் சிட்டு

அப்பா  இதற்கு என்ன பெயர் வைக்கலாம் ?
என்று கேட்டான் என் குட்டிப் பையன்
உன் பெயரையே வைத்து விடலாம் **தம்பி ** என்றேன்
அப்ப அது தம்பி தேன் சிட்டு என்று துள்ளினான்

சற்று நேரத்தில் அது   மேலேழும்பி  பறக்க
அப்பா தம்பி தேன்சிட்டு எங்கே பறக்குது ?
உயிர்த்திசை நோக்கித்தான்  என்றேன்

உயிர்த்திசை என்றால் என்ன  அப்பா ?
உயிர்த்திசை என்றால்  வானம்    என்றேன்
வானத்திற்கு தான் திசைகளே இல்லையே …
இருகைகளையும் வண்ணத்துப்பூச்சியாய் விரித்திருந்தான்
எல்லாத்திசைகளும்  வானத்தில்தான் முடிகின்றன  தம்பி
அப்ப எங்க   இருந்து  ஆரம்பிக்குது எல்லாம் ?
அதுவும் வானத்தில்   இருந்து  தான்  தம்பி  என்றேன்

ம்ம்ம் பறப்பதற்கு எல்லாமே வானம் தானா என்று ஆச்சரியப்பட்டவன்  அப்படியென்றால்
** வானத்திற்கு அம்மாவின் பெயரையே வைத்துவிடு ** என்றான்  சட்டென்று

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம். 



Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *