கவிதை 1
***********
வெற்றிடங்களாகலாம்
தாய்மை கொப்புளிக்கும்
இரவின் மார்புக்காம்பிலிருந்து
உயிர் பெற
கொஞ்சம் கருணையை உறிஞ்சிக்கொள்ளும் பொருட்டு
எண்ணற்ற ஜீவன்கள் வாய்திறந்திருக்கின்றன
மீன்குஞ்சுகளாய்
நானோ தும்பை பூவாய் பூத்துக்கிடக்கும்
கீழ்வானத்தில் விழிகளை விட்டு விட்டு
வெறுமையாகவே திரும்பி வருகிறேன்
நிரப்பிக்கொள்ளத்தான்
நீ இருக்கிறாயே
இரவில் பகலையும்
பகலில் இரவையும்
மாறி மாறி இட்டு
நிரப்பிக்கொண்டிருக்கும்
இந்த விநோத பிரபஞ்சத்தில்
என்னில் உன்னையும்
உன்னில் என்னையும்
பரஸ்பரம் இட்டு நிரப்பிக்கொள்வத்ற்காகவே
நாம் வெற்றிடமாகலாம்
வா அன்பே !
கவிதை 2
***********
இருளும் வெளிச்சமும் கலந்து செய்த
கோட்டோவியமாய்
என் எதிரில் நீ நிற்பதும்
என் பிரமையோவென
நான் கிசு கிசுக்கத்தானோ ?
பேரன்பின் எல்லையற்ற வெளியில்
அதிசயங்கள் நிகழ்ந்தவண்ணமேயிருக்கின்றன
என்பதற்கு
இதைவிடவா வேறு சாட்சி வேண்டும் சொல் ?
கவிதை 3
************
தூர தூரங்களுக்கும் அப்பால்
திரும்பவே தோன்றாத பால் வீதியின்
பள்ளத்தாக்குகளை இட்டு நிரப்ப
விழிகளை மட்டுமே
கண்ணுக்குத் தெரியாத
தன் மாயக்கரம் ஒன்றினால்
கடத்திப் போய்க் கொண்டிருக்கும்
இன்றைய இரவுக்கும்
விழித்துக் கொண்டே
உடன் பயணிக்கும்
உன் நினைவுகளை மட்டும்
ஒன்றுமே செய்ய முடிவதில்லை
என் அன்பே
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.