தங்கேஸ் கவிதைகள்

 

மதமற்றதொரு இடத்திற்குச் சென்றேன்

கடவுளை தரிசிக்க

பஜனைகள் பாங்கொலிகள் பிரசங்கங்கள்

எதுவும் கேட்காத இடமது

சாமியானாக்கள் ஊது பத்திகள் பிளாஸ்டிக் சேர்கள்

எதுவும் தென்படாத இடமது

நான் நினைத்தது போல் அவர்

அத்தனை முதியவராக இல்லை

என்னை விடவும் இளமையான தோற்றத்தில்

பளீர் புன்னகையில்

மாசற்ற சிறுவனைப் போல் இருந்தார்

கயிற்றில் தொங்கும் ஈரத் துணிபோல் ஆடும் மனதை

கவ்விப் பிடித்தது அவர் புன்னகை

ஏதும் செய்ய இயலாதென

கைகளைப் பிடித்தவரின் விரல்கள்

வெம்மையில் தகித்தன

கடவுளாய் இருப்பதின் துக்கம்

அதிர்வுகளில் தெரிந்தது

விடைபெறும் நேரம்

ஒரு பறவை போல இந்தப் பூமியை

சிறகுகளில் ஏந்திச் செல்ல தோன்றுகிறது ஆனால்

சிறகுகளைத் தான் அசைக்க முடியவில்லை என்றார்

பிம்பங்கள் நொறுங்க

மனிதனாக இருப்பதை விடவும்

கடவுளாக இருப்பதின் துக்கம்

கடல் மடங்கு பெரிது என்று

துக்கித்து நின்றேன்

 

யாதுமாகி நிற்பவன்

 

இந்த கடுங்கோடையில் பூக்களற்றுப்போய்

வெறுமை பசலியிருக்கும்

இந்த வெற்றுக் கிளைகளில் கவிழ்ந்து படுத்து

ஆதுரமாய் அணைத்துக் கொண்டிருப்பவன் நான் தான்

 

புலம் பெயர்ந்து போகும் போதும்

பெயர்த்தெடுக்க இயலாமல்

இதயத்தை ஈரமண்ணிலேயே

புதைத்து நடக்கும்

அந்த ஆதரவற்ற கால்களில்

ப்ரிய சகியாய் ஒட்டி ஒட்டி உதிரும்

ஈரமணல் நான் தான்

 

தூர தூர தேசமொன்றில்

காற்று போய் வர மட்டும்

அனுமதித்திருக்கும்

புழுவற்ற ஊமச்சி கூட்டிற்குள்

சுவாசமாய் போய் வருவதும் நான் தான்

 

நத்தைக் கூட்டுக்குள் சுருண்ட சதைக் கோளமாகி

சதைக்கோளம் கொப்புளிக்கும் குருதியில்

கசிந்துருகும் உங்களின் காதல்

துயர நதியும் நான் தான்

 

சாதியின் பெயரால் வன்புணரப்பட்டு

நீதி மறுக்கப்பட்டு

தொடையிடுக்குகளில் இரத்தத் தீற்றல்களுக்கு

இரணத்தில் அவியும்

எம் சகோதரிகளின் சாபமும் ஒப்பாரியும் கூட

நானே

 

கூர் தீட்டப்பட்ட மதத்தின் கொம்புகள்

குத்திக் குத்திக் கிழித்து

குடல் சரிந்து சாயும் எம் சகோதரர்களின்

கடைசி ஓலமும் என்னுடையதே

 

நதிகளின் தோலைக் கிழித்து

ஆன்மாவைக் குப்பிகளில் அடைத்து

சதைகளைக் கூறுகளாக்கி

லாரிகளில் ஏற்றி விற்றுத் தீர்த்த பின்பும்

இச்சை தீராமல்

அதன் கருவறை கிழிக்கப்படும்போது

வேதனை தாங்காது திசைகள் கிழிய

ஒலமிடும் இறந்து கொண்டிருக்கும்

அந்த நதியின் ஓலமும் கூட என்னுடையதே

 

முப் போகமற்று வீடற்று வாசலற்று

பாளம் பாளமாய் வெயிலுக்கு வெடித்த

வயல் பார்த்து குமைந்து

பசியைத் தின்று

பசிக்கு எலி தின்று

தற்கொலைக்குத் தப்பி

தலைநகரில் தரையில் உருண்டழும்

தலைகளும் என்னுடையதே

 

பிச்சை சிறார்களாய்

பசி மகளிராய்

ஆணவக் கொலை மகளிராய்

சாலையோரப் பிணங்களாய்

அநாதை இல்லத்தின் உடற் கூடுகளாய்

பிற பிற

விளிம்பு நிலை ஜீவன்களாய்

யாதும் யாதுமாகி நிற்பவனும் நானே

என்று அறிந்து கொள்க

 

உலகெங்கும் நடக்கும்

கொடுமைகளுக்கும் பழகிப்போய்

செய்தித் தாள்களில் அடுத்தடுத்த பக்கங்களுக்கு

தாவும் கங்காரு குட்டிகளுக்கும்

கொஞ்சமே கொஞ்சம் மனச்சாட்சியின்

உளைச்சலுக்கு

பிக்பாஸ் பார்த்து குணப்டுத்திக் கொள்ளும்

நாட்டு வைத்தியர்களுக்கும் தப்பி

 

இந்த கவிதையை நீங்கள் வாசிக்கும் நேரம்

இன்னதென்று தெரியாமலே உள்ளே சுரந்து எழுந்து

உருண்டு உருண்டு

உங்கள் கன்னங்களில் வழிந்தோடும்

என்றுமே அழிக்க முடியாத

இரு துளி கண்ணீர் உருண்டைகளும் கூட

நான் தான் நானே தான்

 

தங்கேஸ்

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *