நிலைமை 1
மாங்கு மாங்கென்று உழைத்துத்தான் என்ன பிரயோசனம்
வெள்ளையும் சொள்ளையுமாய் கைபேசி சகிதம்
உருப்படியாய்தான் பிழைக்கத்தெரிகிறதா?
ஒரு கட்சியிலோ சாதியிலோ மதத்திலோ
அல்லது எல்லாம் கலந்த ஒரு அமைப்பிலோ
புத்திசாலித்தனமாய் புகுந்து கொண்டு
குப்பைகொட்டத்தான் முடிகிறதா?
அட இவ்வளவு ஏன்
இத்தனை வருட பழக்கத்தை வைத்துக்கொண்டு
ஒரு கிலோ சின்ன வெங்காயம் தான் வீட்டிற்கு
வாங்கி வந்து விட முடிகிறதா சொல்?
***************
நிலைமை 2
யார் அழைத்தாலும் எந்த கூட்டத்திற்கும்
யோசிக்காமல் போகலாம் தான்
பிரியாணி பேட்டா இன்ன பிற கசக்கிறதா என்ன?
இல்லை முதலுக்குத்தான் மோசமாகி விடுகிறதா?
நேற்றைய கோஷம் இன்று மறந்து போகிறது
நேற்றைய சரக்கு இன்று மறந்து போகிறது
இந்த தக்காளி விலை தான் மறக்கவே மாட்டேன் என்கிறது
*****************************
நிலைமை 3
எந்த தேசத்தில் இந்த நிலைமை சொல் ?
யார் ஒரே ஒரு நாளாவது நம்மை முதலாளியாக்குவது?
ஓட்டும் போடும் நாளில் நீ தானே முதலாளி இங்கே
ஓட்டுப்போடும் முதலாளிகளுக்கு பணமும் கொடுத்துத்து
கும்பிட்டுத்தானே
ஓட்டுக்கேட்கிறார்கள் நிஜ முதலாளிகள்
ஓட்டப்பர் ஓட்டையப்பர் எல்லாம் ஒரே அப்பர்
ஆகிவிடுவதில்லையா அன்று?
*****************************
நிலைமை 4
எந்த அடையாளமுமற்றுத்தான்
இருக்க முடிகிறதா இங்கே ?
ஒரு சாதியற்று
ஒரு மதமற்று
ஒரு நாதியற்று
ஒரு பீதியற்று
இந்த தேசத்தில் பிறந்த குழந்தையாவது?
கவிதை 2
கண்ணற்ற இருளில் திசை தொலைத்த பறவை
கூடுதேடி அடைய பரிதவித்த படபடப்பு
இந்த நொடி உன்னைப்பார்த்ததும்
அடங்கியிருக்கிறது அம்மு
கூட்டைத்தாண்டி உயிர்ப்பறவை
எங்கே பறக்கும் சொல்
உயிரோடிருக்கும் காலமதில்
தங்கேஸ்
தமுஎகச
தேனி மாவட்டம்

