தங்கேஸ் கவிதைகள்

தங்கேஸ் கவிதைகள்



கவிதை 1: தேன் சிட்டின் பார்வைகள்
ஒரு தேன் சிட்டுப்போல
உன் மரம் தேடியே வருகிறன்றன
என் பார்வைகள் அம்மு
இரண்டு குரோட்டன்ஸ் இலைகளை இணைத்துக் கட்டிய
மென்பஞ்சுக்கூட்டில்
நான் இட்டு வைத்திருந்த
சுண்டுவிரலளவு மெல்லிய
வெண்முட்டைகளை காணவில்லை
பார்வையால் வருடிப்பார்க்கிறேன்
சிதைந்துகிடக்கும்
என் நேற்றைய கூட்டை
உன் விழிகளை நம்பி  விட்டுப்போனவன் நான்
இமைகளை தாழ்த்தி நீ அடைத்துக்கொள்வதேன்
திறந்திருக்கும் ஒரு வாசலையும் ?
கேள்விகளும் இல்லை
பதில்களும் இல்லை
சின்னஞ்சிறிய
வெண்சங்குகள் போல
என் இதயத்தில் உருண்டு கொண்டிருக்கும் அந்த
மெல்லிய முட்டைகள்
உன் இதயத்திலும்
உருண்டு கொண்டிருக்கின்றனவாவென்று
ஒரே ஒரு முறை மட்டும்
பார்த்துவிடத்துடிக்கிறேன்
அவ்வளவு தான்


கவிதை 2: வண்ணத்துப்பூச்சியின் சுவாசம்
கரங்களை விரித்தேன்
செம்பருத்தி  போல் உட்குவித்து
வண்ணத்துப்பூச்சி ஒன்று
வந்தமர்ந்தது
பாரம் தாங்காமல்
விரல்கள் நடுங்க
சட்டென்று பறந்து போனது
வண்ணத்துப்பூச்சி
பறந்த திசை பார்த்தவண்ணம்
உள்ளங்கையை முகத்துக்கருகில்
வைத்து நோக்கினேன்
ரேகைகளெல்லாம் சிறகுகளின்
மகரந்தங்கள்
பச்சை நெடி
எதிர்பாராத கணம்
சுவாசத்திற்குள் நுழைந்தது
சாட்சாத்  வண்ணத்துப்பூச்சி


கவிதை 3: கசப்பு மாத்திரை,,,,..
இனிப்பிற்கு ஆசைப்படும் நாவிற்கு  சொந்தக்காரனுக்கு
இன்று  வழங்கப்பட்டது
தேன் தடவிய கசப்பு மாத்திரை
இன்று ஒன்று
நாளை ஒன்று
இனி தினம் தினம் ஒன்றொன்று
என  தீர்மானிக்கப்பட்டிருக்கிறது
அது  அவ்விதம்
தீர்மானிக்கப்பட்டெனில
உன் சார்பாக
உன் நன்மைக்கே
முதல் முறை ஒரு முறை
இரு முறை
பிறகு வன்முறை
கொள்ளும் மனது தான்
 ஆனாலும்  கேள்விகளுக்கான பதில்களையே
அவர்கள்
 இனிப்பு  தடவி தானே தருகிறார்கள் எனில்
 வண்ண வண்ண குழல் மாத்திரைகளில் மட்டும்
வேறு எவ்விதம் எதிர்ப்பாய் ?
கண்களில் ஆரம்பித்து
ஐம்புலன்களுக்கும் பரவுகிற
கசப்பில்
காண்பதெல்லாம் கசந்திருக்க
 நீ மட்டுமே கசந்திருப்பதாய் நினைப்போ உனக்கு?
வாசலுக்கு வந்து பார்
கசப்பை புசித்து
கசப்பை ருசித்து
கசப்பை ரசித்து
கசப்பை வாழ்த்தி
வாழப்பழகியிருக்கும் வஸ்துக்களை
கசப்பை கடப்பதெவ்விதம்
 என ஆலோசித்து
கடவுள்களை சந்திக்க சென்றாலோ
அவர்கள் தேன் தடவிய கசப்பில்
உனக்கு அருள்புரிய
ஆசிர்வதிக்கப்பட்டிருக்கிறாய்
நீ அவ்விதம்…..
                 தங்கேஸ்



Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *