தங்கேஸ் கவிதைகள்

தங்கேஸ் கவிதைகள்



கவிதை 1
அவனின் முதுகெலும்பை உருவியே
அவனுக்கொரு சிலுவை தயாரித்துக்கொண்டிருக்கிறார்கள்
ஆதிக்குடிகளின் பச்சையத்தை பறித்துக்கொண்டவர்கள்
இன்று ஏர்உழவனின் அடையாளத்தை
அழித்துவிடப் பார்க்கிறார்கள்
வயல் கூட்டங்களில் நரிகளை உலவவிட்டு
நம்புங்கள் அவைகள் உங்கள் நண்பர்கள் என்கிறார்கள்
“ நீ அரிசி கொண்டு வா நான் உமி கொண்டு வருகிறேன்  ”
கை மாற்றிக் கொள்ளலாம்
நீ உமியை ஊதிக்கொண்டே வீடு போய் சேரு என்கிறார்கள்
காலப் போக்கில்
உனக்கொரு குறைந்த விலையை நிர்ணயிக்கிறேன்
என்று உறுதியளிக்கிறான் வாய்ஜாலக்காரன்
சொந்தப் பெயரை எடுத்துவிட்டு
புதிய பெயர் சூட்டுகிறேன் என்கிறான்
அத்தியாவசிய பட்டியலில் உள்ள
பொருட்களை எடுத்துவிட்டு
உனக்காகக ஒரு புதிய பொருளை வைத்துவிடுகிறேன்
என்கிறான் வாய்கொள்ளா புன்னகையோடு
குறைந்தது மனிதத்தையாவது
அந்தப்பட்டியலில் வைத்து விடு என்கிறோம் நாங்கள்


கவிதை 2
படைப்பு
ஒவ்வொரு மதமாக தன் விலாசங்களை மாற்றிக் கொண்டிருந்த கடவுள்
ஒரு நாள் காணாமல் போகிறார்
இடிக்கப்பட்ட கோவில்கள் மசூதிகள் தேவாலயங்களிலெல்லாம்
தேடிய பிறகு
அவரின் இல்லாமை பச்சை குருதியென பெருக்கெடுத்து ஓடுகிறது
வெறுமையின் வெளியில்
குற்ற உணர்ச்சி கொண்ட மனங்கள்
அரற்றுகின்றன ஆற்றாமையில்
இரக்கத்தில் சுயம்புவாக
 ஆண் பாலில் தோன்றுகிறார்
வெள்ளையுடையணிந்த கடவுள்
இனி அவர் தன்னை நிருபிக்க
அற்புதங்கள் புரிந்தாக வேண்டும்
நீரிலும் நிலத்திலும் ஆகாயத்திலும்
மிதக்கும் மனிதர்கள் மேல்
மோதி விடாமல் நடக்கும்
 அகசாய சூரத்தனம்
 தூக்கத்தை
குலைக்கிறது
கடவுள் தன்மையோ
பெரும்பாறையாய் கழுத்தை அழுத்துகிறது
விற்பன்னர்களின் நீதியைச்
சுமந்து செல்லும் போது
நெஞ்சில் முட்கள் முளைக்கின்றன
முட்களோடு சேர்த்து இதயத்தையும்
கழற்றி வைக்கிறார்
மீதியிருக்கும் மனதின்
குற்ற உணர்ச்சிகளின் வழி
சாத்தான் சாமர்த்தியமாக
உள்நுழைகிறார்
சாத்தான் சாத்தான்களையும்
கடவுள் கடவுள்களையும்
படைத்துக் கொண்டேயிருக்கிறார்கள்
ஆனால்
 சின்ன வெங்காயம்
கிலோ என்ன விலை என்று மட்டும்
யாருக்குமே தெரியவில்லை …


கவிதை 3
கதைப்பவன்
உறங்கா விழிகளோடு தினமும் கதைப்பவன்  நான்
தோளும் கூந்தலும் பலபாராட்டி
நலம் சூழ வாழ்ந்த காலத்தை
நீ அறிவாய் தானே என் மௌனத்தோழா !
முன்யாமப் பொழுதில் கசியும் பனியும்
விசும்பும் மேகங்களும்
இந்த வீணையை மீட்டி கொஞ்சம் அதிரவைக்கின்றன
மரவட்டையாக சுருண்டு கிடக்கும் காலம்
பதறி எழுந்து அறையை விட்டு ஊர்ந்து செல்கிறது
சின்னஞ் சிறு மூங்கில் குச்சியால்
அதன் முதுகைக் கீறிக் கீறிக் காயப்படுத்தியது போதும்
என் பிரதிமையே !
நம் பொருட்டு யாதும் எவரும் காயப்படாமலிருக்க
இந்த இரவை எடுத்து நீ விழுங்கி விடு
நான் காத்திருக்கும் சுவர்பல்லியின் முன்பு
சின்னஞ்சிறு பூச்சியாக மாறி நகர்கிறேன்


கவிதை 4
சிறகுகள்  அற்றவன் என்றே நினைத்திருந்தேன்
 பறக்கும் வரை
உன் நினைவுகள் வந்ததே
 எனக்கு  தெரியாது
தங்கேஸ்
தமுஎகச
தேனி மாவட்டம்

 



Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *