தங்கேஸ் கவிதைகள்கவிதை 1
பிரபஞ்சத்தைக் குடிப்பது
காலத்தை சற்றே நிறுத்தி விடுகிறாய் ஒற்றை வார்த்தையில்
சுவாசமின்றி வெறித்துக்கொண்டிருக்கும்
வாஸ்து மீனாகி நிற்கின்றேன்
 நீர்க்குமிழி அளவு இடமே போதுமானது
ஒளிந்து கொள்வதற்கும்
இந்த இரவை சூல் கொண்டு விழுங்கி
முன் ஜென்ம சாபங்கள் தீர்ப்பதற்கும்
அதிகாலை  கொண்டு வந்து தரும்
 என் மூச்சை
பத்தில் ஒரு  பங்காக்கி
வழக்கம் போல
முதல் பாகத்தை உனக்குக் கொடுத்து விட்டு
என் பங்கை உள்ளிழுக்கிறேன்
வாசலில் நேற்று நான்
இமைக்காமல் பார்த்து வைத்திருந்த
செம்பருத்தி மொட்டு ஒன்று
களங்கமற்று பூத்திருந்தது
குருதி வடிவில்
சிறகு முளைத்தது
எனக்கு
கவிதை 2
ஒரு பெருங் கனவு உடைந்து
சிறு சிறு குமிழ்களாகி
வெளியெங்கும் அலைகின்றன
இனி நீர்க்குமிழ்களைப் பார்த்தால்
நின்று விடுங்கள்
யார் யாரின்
உடைந்த கனவுகளையோ
உங்களின் மீது மோதுபவை
கவிதை 3
பாஷோவின் குளத்திற்குள்
 குதிக்கிறது தவளை
க்ளக் …..
போன ஜென்மத்திலிருந்து
 கண் விழிக்கிறேன்
முல்லையாற்றின் மீது
வாசல் தெளித்துக்
 கொண்டிருக்கின்றன
இராத் தூறல்கள்
வண்ண வளையல்கள்
அணிந்த கரங்கள்
ஆற்றுக்குள் மூழ்கி மூழ்கி
எழுகின்றன
உயிர்களைப்  படைக்கும்
கட்டற்ற புனைவு
திசை தோறும்
விரிந்து செல்கிறது இரவாக
இவ்வளவு கூர்மையான நிலவை
இதற்கு முன்பு
 நான் கண்டதேயில்லை
நீர்க்குமிழ் போல்
முளைத்தெழும் மீனொன்று
நதிப் படுகையில்
சற்றே கண்ணசந்திருக்கும்
கடவுளைக்  கடித்து விட்டு
நீரோட்டத்தில் பாய்கிறது
 இப்போது என் குவிந்த
 கரங்களுக்குள் தளும்பிக் கொண்டிருக்கும்
நதிக்குள்ளிருந்து
பளிச் பளிச்சென அயிரை மீனாக
குதித்துக் கொண்டிருக்கின்றது
முற்றுப்பெறாத காலம்.
தங்கேஸ்
தமுஎகச
தேனி மாவட்டம்