தங்கேஸ் கவிதைகள்கவிதை 1
திசை தொலைத் தலையும் பறவை
மெல்லிருளில் வழி தொலைத்த பறவையை
உற்று நோக்கியவண்ணமிருந்த வெண்ணிலவு
ஒரு வெண் இறகை உதிர்த்தது
அன்பின் கீற்றாய் அதைக் கைகளில் ஏந்திக்கொண்ட நான்
அதனிடம் சொன்னேன்
ஆதியிலிருந்தே
திசைதொலைத் தலையும்
இந்தப்பறவையை மட்டும்
நீ  உற்று நோக்கியிருந்தால்
இந்நேரம்  எத்தனை இறகுகள்
என் கைகளில் உதிர்ந்திருக்கும்

கவிதை 2
காலம் அவ்வப்போது கருப்பு  வெள்ளைப் புகைப்படமாக
உறைந்து விடுகிறது என் வாழ்வில்
அம்மாவின் உயிர்பிரிந்த கணம்
விண்ணை நோக்கியவண்ணம் வெறித்திருந்த
அவளின் வெற்று விழிகளில்
கொஞ்சம்
அப்பாவின் இறுதி நொடிகளில்
கடைக்கண்ணின் வழியாக பீறிட்டு
உருண்டோடி வந்த ஒரே ஒரு சொட்டு
கண்ணீர் துளியில்
கொஞ்சம்
தாத்தாவை பாடை கட்டி தூக்கிப்போகையில்
கல்லில் இடறிய காலில் துளிர்த்த
ஒரே ஒரு குருதித்துளியில்
கொஞ்சம்
நேற்று வாசலில் பார்த்துக்கொண்டிருக்கும் போதே
மரத்திலிருந்து உதிர்ந்த ஒரு மஞ்சள் அரளிப்பூவில்
கொஞ்சம்
காற்று ஏணி வழியே இறங்கி வந்து
கடைசிப் படியை தாண்டியதும்
தரையில் தானாக சுயசமாதி கொண்ட
ஒரு சருகில்
கொஞ்சம்
தங்கேஸ்
தமுஎகச
தேனி மாவட்டம்