தங்கேஸ் கவிதைகள்கவிதை 1

உரையாடலற்ற ஒரு நகரம்

உரையாடலற்ற ஒரு நகரமாக மாறியிருந்தது அது
புதுவிதமானதொரு தொற்றில்
மனிதர்கள் மொழி மறதி நோய்க்கு ஆளாகியிருந்தார்கள்
ஆதிமனித சைகைகள்
தெருவெங்கும் அரங்கேற ஆரம்பித்தன
உச்சபட்சமாக நான்கு கால்களில்
மனிதர்கள் நடமாட
ஆரம்பித்துவிட்டார்கள்
பொதுக்கூட்டங்களில் சொற்பொழிவார்கள்
ஒலிபெருக்கியின் முன்பு
காற்றை ஊதி ஊதி
சீழ்க்கையடித்தபடி நின்று கொண்டிருக்கிறார்கள்
இது மூதாதையர் தெருவில் உலா வரும் நேரம்
வா ஓடிவிடுவோமென்று
குழுத் தலைவன் நம்மை
அழைக்கிறான்
நிழல்போல் பிரியத்தோடு
நம்மை நோக்கி வரும் ஆதி மனிதனை
ஒருவன் கல்லால் அடிக்கிறான்
குமரிக் கண்டத்து மிச்சமே
கடலில் மூழ்கிப் போ என்று
சபிக்கிறான் இன்னொருவன்
மூதாதையான் மரபைத் தின்று விட்ட
தெருக்களில் தேம்பி அழுதுகொண்டிருக்கிறான்
மறதிக்கு மாத்திரை விற்று வருகிறான் ஒருவன்
இவனை எங்கோ பார்த்த மாதிரி இருக்கிறது என்று
பேசிக்கொள்கிறார்கள்
அவன் உங்களை ஏலத்தில் எடுத்தவன் நான் என்கிறது
நள்ளிரவு நேரம்
தான் யார் என்பதே ஒவ்வொருவருக்கும் மறந்து போகிறது
நீ யாரென்று சொல்
நீயாரென்று சொல்
என ஒவ்வொருவனும் அலறுகிறான்
என் விலா எலும்பை உருவிப்பார்த்து தெரிந்து கொள் என்று
பதிலளிக்கிறான் எதிரில் உள்ளவன்கவிதை 2

மான்விழி மங்கை துணி துவைத்துக்கொண்டிருக்கிறாள்
துவைக்கும் கல்லில் கழுத்தளவே கைக்கு கிடைத்த அவனை
மோதி மோதி
நையப்புடைத்தெடுக்கிறாள்
மூர்க்கமாக சிதறும் திவலைகளில்
உடையும் வல்லிய பால்
உறவின் வன்மம் நீர்க்குமிழியாகி
விடுதலையடைகிறது
உதிர்ந்து கொண்டிருக்கும்
துருப்பிடித்த இரும்பாகியிருந்தது
பின்பு
நூற்றாண்டுகளின் மூச்சை
மொத்தமாக எடுத்துக்கொண்டு
கருங்கற்களுக்குள் சுவாசித்துக்கொண்டிருக்கும்
தேரையாக மாறியது
இந்த வாழ்க்கை
பிறிதொரு கல்லிடம் பிரார்த்திக்க
மனமின்றி மீண்டும் நிராயுதத்திலிருந்து ஆயுதங்களை
தயாரிக்கும் கருவில் சூல் கொள்ளப்பட்டு
பிறப்பெடுக்கிறாள் துணி துவைக்கும்
மான்விழி மங்கைகவிதை 3

நிழல்கள்

இணை பிரியாது என்று நான் நினைத்திருந்த நிழல் தான்
இன்றைய நடைப் பயிற்சியில்
எதிர்ப்பட்ட திருப்பத்தில்
உடன் வராமல் நின்று விட்டது
திகைத்து நான் நிற்க
சாவகாசமாய்ச் சிரித்து விட்டு
இருளோடு மறைந்து போனது
என் நிழலைத் தந்து விடு
நான் போய் விடுகிறேன்
என்று வார்த்தைகள் கேட்டன
சப்தங்களின் நிழல் அல்லவா
நீங்கள் என்றேன்
இருவருமே
மௌனங்களில் குதித்தோம்
நிழல்கள் பேசிக்கொண்டன
ஒரு நாள்
உடம்புகளுக்கான நிழல்களாய்
நாம் எத்தனை நாள் மண்ணில் உருள்வது ஒரு நாள்
அவைகளை நமக்கான நிழல்களாய் மண்ணில் உருள விட்டாலென்ன?
என் நிழல் எங்கே என்று பார்த்தேன்
அதுதான் அங்கே பேசிக் கொண்டிருந்தது
உடலற்ற நாளொன்றில்
நிழல்கள் குதித்து கும்மாளமிட்டுக்கொண்டிருந்தன
சே சே என் நிழலா
அப்படி இருக்காது என
எண்ணி முடிக்கும் முன்பே
என் முன் தோன்றி
உடல்களை உதறுங்கள்
எனதருமை நிழல்களே
என பேய்க் கூச்சலிட்டது அது
ஊர்ந்து தவழ்ந்து பட்டாம் பூச்சிகளாகி
பறந்து செல்கின்றன
குழந்தைகளின் நிழல்கள்
உடன் வந்த என் நிழல்
ஒரு மரத்தடியில் இளைப்பாற
அதன்றி ஒரு எட்டு எடுத்து வைக்கமுடியவில்லை
என்னால்
பிறகு
என்நிழல் என்னைப்பார்த்து
கேட்டது
இப்பொழுது தெரிகிறதா
எவற்றின் நடமாடும் நிழல்கள்
யாவர் என்று?
கவிதை 4

கனிவானதொரு வானம்
சொற்களுக்குள் மழை மேகத்தை
தேக்கி வைத்திருந்தது
நான் ஏற்கனவே கடலின் ஈரத்தை
அவைகளுக்கு அறிமுகப்படுத்தி வைத்திருந்தேன்
அத்தனை மழைத்தூவிகளும்
மேலிருந்து சிறகடித்து வந்த போது
சின்ன சின்ன குருவிக் கூடுகள்
இந்தத் தெருவெங்கும் திறந்து கொண்டன

குருவிக் குஞ்சுக் கொன்று
செம்பருத்தி மொட்டுக் கொன்று
கிறுகிறு வண்ணம் சுற்றும்
முதிர்சருகுக் கொன்று
ஏந்தி நிற்கும் உள்ளங்கைகளுக்கு
ஒன்றிரண்டு
பசித்த வயிறுகளுக்கும் கொஞ்சம்
பாயும் நதிக்கு
செண்டை மேளத்தோடு
காளிங்க நர்த்தனம்கவிதை 4

சுதந்திர தினம்
குடிஅரசு தினம
தியாகிகள் தினம்
அன்னையர் தினம்
தந்தையர் தினம்
குழந்தைகள் தினம்
பெரியவர் தினம்
முதலாளிகள் தினம்
தொழிலாளிகள் தினம்
பிறந்த தினம்
மறைந்த தினம்
வாக்காளர் தினம்
ஏமாற்றுபவர் தினம்
ஏமாறுபவர் தினம்
மண்டபங்களுக்கு வெளியே
குப்பைத்தொட்டிகளுக்குள் எச்சில் இலை துழாவுபவனுக்கு
பட்டினிதான்
தினம் தினம்

தங்கேஸ்
தமுஎகச
தேனி