தங்கேஸ் கவிதைகள்கவிதை 1

சொற்களின் சிறகுகள்

அடுக்கப்பட்ட சொற்களின் மீது இடறிவிழுகிறேன்
சோழிகள் போல அவை உருண்டோடுகின்றன
‘’ நினைவுகள் போல அவை சிதறி ஓடும் ‘’ என்று
நினைத்திருந்தேன் நான் என்கிறேன்
‘’ அவை வாழ்க்கை போலவே உருண்டுகொண்டேயிருக்கின்றன ‘’
என்கிறாய் நீ
‘பம்பரம் போலவா’ என்று தான் முதலில்
நான் கேட்க நினைத்தேன்
‘’ ஆனால் மேகங்களுக்குள் உருண்டோடும் நட்சத்திரங்களைப்போலவா ‘’ என
அதற்குள் கேள்வியை மாற்றிவிட்டேன்
‘’ நட்சத்திரங்கள் தலையணை உறைக்குள் மாட்டிக்கொண்ட
விதைகள் போன்றவை ‘’ என்கிறாய் நீ
‘’ ஒரு நாள் இல்லாவிட்டாலும் ஒரு நாள்
காற்றில் பறந்து போக வேண்டியவைதானே அவை ‘’ என்கிறேன் நான்
‘’ காற்றில் பறந்து போகாதது எதுவுமில்லை ‘’
‘’ ஆனால் எனக்கு என்னவோ
சிறகுகள் முளைத்த சருகுகள் தான் சொற்கள் ‘ என்கிறாய் நீ
இறுதியாத்திரையில் இருகரம் விரித்து
காற்றில் கிறுகிறு வண்ணம் சுற்றும் சிறகுகளையே
வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டு இருந்தவன்
மெல்ல கரங்களை விரிக்கிறேன்
‘’ ஆனால் ஏற்கனவே நீ பறந்து கொண்டுதானே இருக்கிறாய் ‘’ என்கிறாய் நீகவிதை 2

அந்த நதி இன்னும் ஓடிக்கொண்டே தானிருக்கிறது மனதில்
மனம் பிறழ்ந்த பொழுதொன்று அதன் மீது குப்புற கவிழ்ந்து கிடந்தது
சாரபற்ற நிலவும் கோலமாவைப் போல பொடிப்பொடிப்யாக அதன் மீது |தன்னை தூவிக் கொண்டிருந்தது
நீ ஒரு சொல்லை உதிர்க்கிறாய்
ஓசையின் இனிமையில்
அர்த்தத்தைத் தவற விடுகிறேன்
தவறவிடுவதே நம் இயல்பானதை எண்ணி
நீ ஆழமான புன்னகையை சிந்துகிறாய்
வழியை தவறவிட்டு
தலைக்கு மேல் பறந்து கொண்டிருந்த
கொத்துவெண் நாரைக் கூட்டமொன்று
கூடடையாத அந்த சொல்லை
அலகுகளில் கல்விப் போகிறது

அன்று காணாமல் போன அந்த சொல்லை மட்டும் இன்று
கண்டு பிடிக்க நேர்ந்தால்
நாம் இப்பொழுது அதைப் போல
ஒரு அந்தியை சிருஷ்டிக்க இயலும்
சுவரில் பதுங்கிப் பதுங்கிப் போகும்

சங்குப் பூனையையும் அதன் நிழலையும் சேர்த்தே படைக்க முடியும்
வெண்கொத்து நாரைகளை
சரியான திசையில் திருப்பி விட முடியும்
மனதில் ஒடிக்கொண்டிருக்கும்
அந்த நதியை சுதந்திரமாக விடுவித்து விடலாம்
மீண்டும் நீ ஆழமான புன்னகை சிந்தும் போது நான் சொல்வேன்
” கண்ணே என்னையும் ஒரு சொல்லாக மாற்றி
காலத்தை முன்னும் பின்னுமாக நகர்த்திக் கொண்டேயிரு”

தங்கேஸ்
தமுஎகச
தேனி மாவட்டம்