கவிதை 1
பெண்ணாகி வந்ததொரு
சமயத்தில் உதவாத புத்திசாலித்தனத்தை காகிதப் பந்தாய்ச் சுருட்டி
குப்பைக் கூடையில் எறிந்து விட்டு
அலமாரியில் அணியாத துணிகளுக்குள்
ஒளிந்திக்கும் கிறுக்குத் தனத்தை எடுத்து
அணிந்து கொள்வேன்
நீ திட்டும் போது புன்னகைப்பேன்
தெரு நாய்களின் பிடரியைக் கொஞ்சம்
தடவி விடுவேன்
உன் மமதைக்குக் கால் பிடித்து சுளுக்கெடுக்கும் போது
விரல் நகங்களுக்குள் கட்டெறும்பை
முத்தமிட அனுப்பி வைப்பேன்
நீ கண்ணயரும் நேரம்
பகலில் நீ துப்பிய வார்த்தைகளைக் கோர்த்து
உனக்கொரு மாலை தொடுப்பேன்
புகைப் படத்தில் சிரிக்கும் காலத்தை எடுத்து
இரகசிய முத்தமிட்டு
பந்தலேறிப் பாயும் அவரைக் கொடி மீது விட்டு விட்டு நழுவிப் போவேன்
கால மற்ற சட்டகத்தில் உன் பிம்பம்
வறண்ட புன்னகை சிந்த
ஓடும் நதியில் நீச்சலறியா கன்றுக்குட்டி போல் பாய்வேன்
பொடி மீன்களின் காதுகளை உரசி
கிச்சு கிச்சு மூட்டுவேன்
பாசம் படர்ந்த பாறையில் வழுக்குவேன்
நீர் பாம்பு தலை தூக்கிக் கீறும்
காலமெல்லாம்
நீ தந்த கற்பாறையை உருட்டி உருட்டி
மழுக்கி
கூழாங்கல்லாய் மாற்றுவேன்
கவிதை 2
மழைக்கவிதைகள்
இன்று என் சொற்களை நிறைக்கிறது மழை
என்னை நீ நிறைக்கிறாய்
கையகல தேக்கு மர இலைகளில்
தளும்பி மிரண்டு நிற்கும்
வெள்ளை நிற முயல் குட்டிகளை
காற்று அப்புறப்படுத்த யாருக்குத்தான்
மனது கேட்கும் சொல்?
பார்ப்பவர்கள்
பார்த்துக்கொண்டுதானிருக்கிறார்கள்
இரண்டாயிரம் வருடங்களாய்
ஒவ்வொரு மழைக்கும்
தவறாமல் வந்து போகிறார்
செம்புலப்பெயல் நீரார்
நான் ஓடிக் கரைந்து கொண்டிருக்கும்
இதே செம்மண்ணில்தான் சற்று நேரத்தில்
நீயும் கரைய இருக்கிறாய்
இன்றைய மழைக்கு
அது போதும் எனக்கு
கவிதை 3
தோல் போர்த்திய எலும்புக்கூடு
ஏந்திய கரமொன்றில்
இரண்டு ரூபாய் நாணயத்தைத் திணித்துவிட்டு
ஏதோ தோன்ற முகம் பார்க்கிறேன்
வருடங்களுக்கு முன்பு
தொலைந்து போன
பெரியம்மாவின் சாயல் தென்பட
அப்படி ஏதும் இருந்து விடக் கூடாதென்று
தன்னிச்சையாக
அவ்விடம் விட்டு நகர்கிறேன்
தம்பி என்றழைக்க நினைத்த வார்த்தையை
அவரசமாக விழுங்கி விட்டு
நான் போகும் திசையை வெறித்தபடி
நாணயத்தோடு
அதுவும் நகர்ந்திருக்க கூடும்
வேறு இடம் தேடி
எண்ணத்தில்
நான் தன்னந்.தனித்துப் போக
அடக் கடவுளே மகத்தான கொடை என்றல்லவா நினைத்திருந்தேன்
இந்த வாழ்க்கையை
யார் யார் விட்டெறிந்த யாசகங்களின்
தொகுப்போ இதுவென்றால்
என் செய்வேன்?
தங்கேஸ்
தமுஎகச
தேனி

