கவிதை 1: காபி வித் கடவுள்

முற்றிலும் புதியவரான ஒரு வேற்றுக்கிரகவாசியை
எதேச்சையாய் சந்திக்கிறேன்
தான் ஒரு கடவுள் என்று
தன்னை அறிமுகப்படுத்திக்கொள்கிறார்
கொஞ்சம் கூச்சத்துடன் அந்த முதியவர்

உங்கள் கிரகம் எங்கே என்ன பெயரில் இருக்கிறது ?
அருகில் தான்
அருகிலென்றால் ?
அதிராமல் சிரித்தவர் எங்களுடையது
கடவுள்களின் கிரகம் என்றார்
அதாவது முப்பத்து முக்கோடி தேவர்களின் கிரகம்
என்கிறீர்கள் ?

அங்கே பிறப்பவர்கள் அத்தனை பேருமே
கடவுள்கள் தான்
ஆல்பா செஞ்சுரியா?

அத்தனை தூரம் போக வேண்டியதில்லை
என்றால்?
புவிஈர்ப்பு விசைமுடியும் இடத்தில்
தொடங்குகிறது எங்கள் கிரகம்

அப்படியென்றால் ?
எக்ஸ்ஸோ ஸிபயரிலா தெர்மோ ஸிபயரிலா
ஸ்ட்ராட் எக்ஸ்ஸோ ஸிபயரிலா ?
சொல்லுங்கள்

எக்ஸ் கிரகம் என்று வைத்துக்கொள்

எக்ஸ்கிரகத்தில் எத்தனை கடவுள்கள் ?
எத்தனை கோடி மனிதர்கள் உண்டோ
அத்தனை கோடி கடவுள்கள் உண்டு

எதற்கு ?

உங்களை கண்காணிக்க
புரியவில்லையே என்றேன்

ஆயிரம் பேருக்கு ஒரு மருத்துவர் என்றால்
பத்தாயிரம் பேருக்கு ஒரு கடவுள் என்று
வைத்துக்கொள் என்றார்

கண்காணிக்கும் கடவுள்கள் ?

ம்ம்ம் என்றவர்

பிறகு எங்களுக்கு வட்டாரக்கடவுள்கள் உண்டு
அதற்குமேலே மண்டலக்கடவுள்கள் உண்டு
ஏன் எல்லாவற்றிற்கும் மேலே
தேசியக்கடவுளே உண்டு
கோட் சூட் சகிதம் உலகத்தையே சுற்றி வருவார்
கொஞ்சம்
இறுக்கமான புன்னகையோடு
முதலாளி கடவுள்
உங்களின் பாஷையில் பிக்பாஸ்

அதாவது நவீன கடவுள் ?

இப்பொழுதெல்லாம்
கடவுள்கள் எங்களைச் சந்திக்க வருவதென்ன ? என்றேன்

உன்னைக் ஆதியோடு அந்தமாய் கண்காணிக்க
பணிக்கப்பட்டவன் நான்
உன் ஆதார் எனக்குள் பதிவேற்றம்
செய்யப்பட்டருப்பதை பார்
உன் பதட்டம் உன் மனஉளைச்சல்
யாவும் எனக்குள் கண்காணிப்பு காமிரா வழி
சுழல்வதை பார்
ஈஸிஜி போல்தான் தெரிகிறது என்றேன்

வாயைத் திறந்து உலகம் கண்டது அந்தக்காலம்
ஆதாரின் வழி சகலமும் காண்பது
இந்தக்காலம் தெரியுமா ?
உன் அந்தரங்கத்தை மொய்க்கும் லேசர்கண்கள்
எங்களுடையவை தெரியுமா ?
எல்லாம் வல்லவர்கள் நாங்கள்
என்றார் இறுமாப்பாய்

நான் லேசாக சிரிக்க ஆரம்பித்தவன் பின்பு
அதிரச்சிரித்தேன்
ஏனோ என் கடவுள் திகைத்துநிற்க

கடவுள்களே அப்பாவி கடவுள்களே
நாங்கள் உயிர்த்திருப்பதால்தானே
இங்கு நீங்களும் உயிர்த்திருக்கிறீர்கள்

எங்களை கண்காணிப்பதற்குத்தானே
உங்களுக்கு ஊதியமே வழங்கப்படுகிறது
இல்லையென்றால் நீங்கள் வேலையிழந்து
போவீர்கள் தெரியுமா ?

வீதிகள் தோறும் விரக்தியாய் அலைவீர்கள்
ஒளிவட்டம் கூட காணாமல் போய்விடும் என்பதும் தெரியுமா ?
என் கடவுள் குத்தப்பட்ட உண்மையில்
சர்வமும் அடங்கி திகைத்துநிற்க
உங்களை எல்லாம் குத்தகைக்கு எடுத்திருக்கும்
உங்கள் தலைமைக்கடவுளிடம் சொல்லுங்கள்

மனிதர்கள் உங்கள் மீது முற்றிலும் நம்பிக்கை
இழந்து விட்டார்கள் என்று
என்றேன்

கூர்ந்து நோக்கிவிட்டு என் கடவுள் இவ்விதம் பேசினார்

” ச்சே மனிதர்களின் கடவுள்களாய் இருப்பதைகாட்டிலும்
ஒருபறவை உதிர்க்கும் எச்சமாய் இருக்கலாம் ” என்றார்
பிறகும் என்ன நினைத்தாரோ கிளம்பும் முன்
விண்வெளி எங்கும் அலையும்
ஒரு பறவையின் உதிர்ந்த மயிராகக்கூட
ஆம் என்றவர்
விடைபெறுகிறேன் என்றார்

“வாங்க கடவுளே ஒரு கப் காபி சாப்பிட்டுவிட்டு போகலாம்”
என்றேன்



கவிதை 2: நுண்ணோவியன்

சொற்களை தீட்டும் ஓவியன்
மாக்கோலத்திலிருந்து
சிறு அரிசித் துண்டை
உருட்டிச் செல்லும்
சிற்றெறும்புகளின் பேரணியிலிருந்து
நளினத்தை கற்றுக் கொள்கிறான்

முல்லை மொட்டுக்களாய் சிதறி விழும்
உச்சி மேக மழைத்துளிகள்
வீட்டு முற்றத்தில் உள்ளங்கை அளவே
மண் பூமியை நனைக்காமல் போகும் போது
சொற்களுக்கு வண்ணம் தீட்ட கற்றுக்கொள்கிறான்

கனத்த கார்முகில்கள் போன்ற
சிறகுகள் கொண்ட வல்லூறு
சிறகசைப்பை நிறுத்தி விட்டு
அசையா சமாதி கொள்ளும் போது
சொற்களின் சா கலையை
கற்றுக் கொள்கிறான்



கவிதை 3: புதைப்பது

ஒரு இழவு வீட்டில் பார்த்தபோது
ஓடிவந்த சின்னப்பொன்னு அக்கா
இரண்டு கைகளையும் சேர்த்துப்பிடித்துக்கொண்டது
எப்படி சாமி இருக்க ? என்ற கேள்விக்கு
நான் பதில் சொல்லும் முன்பே
என்னை குழந்தையாக்கி
என் கன்னத்தைக கொஞ்சம்
பிச்சுத் தின்றது
கடைசி வரையிலும்
பதில் சொல்லாமலே வந்து விட்டேன்…

நகரப்பேருந்து நிலையத்தில் அடையாளம் கண்டு
அருகில் வந்த தாஸ் மாமா
என்னை யாருன்னு சொல்லுங்க பார்ப்போம்
என்றார் ஐயப்பாடுடன்
தாஸ் மாமா என்றேன்
வாய் கொள்ளாச்சிரிப்போடு சற்று அகமகிழ்ந்தவர்
எங்களையெல்லாம் மறந்துட்டீங்கள்ள ? என்றார்
கனத்த மௌனத்தையே பதிலாக்கிவிட்டு
வந்து விட்டேன் ….

ஊரில் பெரும் சம்சாரியாக இருந்த
முனியாண்டி அண்ணன்
மொட்டைமலைக்கோவில் திருவிழாவில்
பலூன் விற்றுக் கொண்டிருந்ததை பார்த்தும் துனுக்குற்று
பாராதது போல் நடந்து சென்றேன்
அண்ணன் வியாபாரத்தை போட்டு விட்டு
ஓடிவந்து என் கைகளைப்பிடித்துக்கொண்டபோது
இருவருக்குமே எதுவுமே பேசத்தோன்றவில்லை
திரண்ட ஒரு துளி கண்ணீரைத்தவிர

சொந்தமாக இருந்த ஒரு வீட்டையும் விற்று விடுவதற்கு
ஊருக்குச் சென்றிருந்தேன்
ஒரு மொந்தை கள்ளுக்கு
ஒரு கோட்டை தெம்மாங்கில்
ஒரு ஊரையே கூட்டிய
கூடாண்டி தாத்தாவைப்புதைத்த இடத்தைப்பார்க்க
ஆசை வந்தது
காட்டுக்கு சென்று பார்த்த போது
கடைசிவரையிலும் தாத்தாவை புதைத்த இடத்தை
கண்டு பிடிக்கவே முடியவில்லை
நெடுநேரத்திற்குப்பிறகு உடனிருந்த வஸ்தாவி மாமா சொன்னார்
உண்மையிலேயே மனுசங்களைப் புதைக்கிற இடம்
மனசு தான மாப்பிள்ளை …..

தங்கேஸ்
தமுஎகச மாவட்ட செயற்குழு
தேனி மாவட்டம்.



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *