தங்கேஸ் கவிதைகள்கவிதை 1: கடவுளின் சுவடுகள்

எதிர் வீட்டு வாசல் நிறைய
பன்னீர் மரம் இருந்த இடத்தில்
இப்பொழுது ஒரு பால்வண்ண டொயோட்டோ
காற்றில் கசியும் கஸல் போல
உள்ளத்தைப் பித்தாக்கும்
வெண்பூக்களின்வாசம்
இப்பொழுது எந்த இடத்தில் அலைகிறதோ?
கிளைக்கொரு ஓவியமாக கூடுவனைந்து அடைந்திருந்த பறவைகள்
இப்போது எங்கே
அடைகின்றனவோ?
நம் காலடிக்கும் கீழே
முன்னொரு காலத்தில்
ஓடிய நதிக்கு
சிதறிக்கிடக்கும்
மீன்களின் செதில்களும்
காலத்திற்கு தப்பிய கூழாங்கற்களும்
சாட்சி என்றால்
நம் மூதாதையரோடு
கடவுள் நின்று குசலம் விசாரித்துக்கொண்டிருந்த இவ்விடத்தில்
எங்கே தேடி எங்கே கண்டடைவது
அவர் வந்துபோன சுவடுகளின்
அழியாத் தடயங்களை
கவிதை 2: பொன்னிற அமானுஷ்யங்கள்

முன்னிருளில் வழிதப்பியலையும்
கொள்ளை அழகுப் புறாக்களை
இன்று காணவில்லையென்றாலும்
நுரைத்துப் பொங்கும் இந்த மஞ்சள் பெளர்ணமியை சபிக்கத் தோன்றவில்லை
குழந்தைக்கு சோறூட்டும் விரல்கள் இதை
மசித்து மசித்து ஊட்டட்டும்
நான் தேடுவதெல்லாம் நள்ளிரவுக்குப் பின் இரகசிய உரையாடலுக்கு அழைக்கும்
அந்த குட்டி குட்டி பொன்னிற அமானுஷ்யங்களைத்தான்
ஒரு வேளை
நட்ட நடு நிசி நதியில்
வெள்ளி கெண்டை மீன்களோடு
துள்ளி குதித்து விளையாடிககொண்டிருக்க கூடும்
யார் கண்டது?
காலா காலத்தில்
அது அது
அதனதன் இடத்தில்
இல்லாமல் போவது
நம் மீது வெறுமையை திணிப்பதற்குத்தானே?கவிதை 3:

தூரத்திலிருந்து கசிந்துவரும்
கஞ்சாவாசனைக்கு
உடம்புகள் திருகிக்கொள்கின்றன

இனி தண்ணீர்பாக்கெட்டுகளும்
முறுக்குகளும் உதிரிகளும்
பிளாஸ்டிக் கிளாசுகளும்
இரவு வந்துவிட்டதை
உணர்த்துகின்றன

மூடியகதவுகளின்முகப்புகளிலும்
முச்சந்திகளிலும்
இருள் புழங்கும் இடங்களிலும்
ஆறென ஓடக்கூடும்
தமிழ்நதி இனி

மட்டமான நிகோடின்
புகைகள் முளைக்கின்றன
அங்கங்கே இரவின் சாபமென

இருள்மீறும் வேளையில்
இன்றைய காமம்
தோலுரிக்கிறது ஆடைகளை
போதையுறும் உடல்கள்
கல்பதித்த சாலைகளில் உருளுகின்றன

சுய ஆற்றாமையில்
சன்னலை சாத்துகிறார்கள்
பெண்கள்

தங்கேஸ்
தமுஎகச மாவட்ட செயற்குழு
தேனி