தங்கேஸ் கவிதைகள்கவிதை 1: முள் மீது பூத்திருக்கும் காலம்

அதிகாலை
கோலமாவிற்குள்
மடிந்து கிடக்கும் சொற்கூட்டங்களை
எறும்புகள் கவ்விச் சென்று கொண்டிருக்கின்றன

சிறகுகள் முளைத்த சருகுகள்
காற்றில் கண நேரம் பயணிக்க
வாழ்தல் என்னும் சிறகடிப்போ
ஆயுள் பரியந்தம்

வார்த்தை என்னும் சீட்டுக்கட்டிற்குள்
நுழைந்துவரும் மூச்சுக்காற்று
அதை கலைத்து போடுவதற்கும் முன்பு

உருட்டி விட்ட சோழி கடைசி தலைசுற்றலை நிறுத்தி விடுவதற்கும் முன்பு

பிரியமானதொரு முகத்தில்
படர்ந்திருக்கும் வேதனை
உன்னை ஊழிக்காலத்திற்கு
அழைத்துச் செல்கிறது

சிட்டுக்குருவியின் கீச்சுக்குரல் போல
தொடர்ந்து உன்னோடு
உரையாடிக் கொண்டிருந்த இதயம்.
சட்டென்று கனத்த மௌனத்தில்
மோனச்சமாதி கொள்கிறது

பதிலுக்கு நீ ஒரு
துர்அதிர்ஷ்ட புன்னகை பூக்கிறாய்
உடைந்த அப்பளம் போல நொறுங்கிவிடுகிறது மனது
முள் மீது பூத்திருக்கும் காலம்
நமக்கு சொந்தமாகிறதுகவிதை 2: A  ஆற்றும் சனநாயக கடமைகள்

A இன்று சனநாயக கடமையாற்ற கிளம்பி விட்டார்
கரை வேட்டி கரை சட்டை
துண்டு சகிதம் கறை படிந்த பற்கள்
ஒரு விசில் ஒரு கைதட்டல் இருந்திருந்தார் போல
ஒரு வாழ்க கோஷம்
அய்யா கட்சிக்கும் அம்மா கட்சிக்கும்
சின்ன அய்யாக்களின் பேச்சுக்கும்
சின்ன அம்மாவுக்களின் பேச்சுக்களுக்கும்
ஆறு வித்தியாசங்கள் தான் மொத்தமே
சின்னங்களிலும் பெயர்களிலும் இன்னும் சின்ன சின்ன குழப்பங்கள் உண்டு
அதீத கடமையுணர்ச்சியில்
சாலை யோரம் மரவட்டை போல் சுருண்டு கிடப்பான்
இன்று Aயின் சித்தாந்தம் இது தான்
பிரியாணி பொட்டலத்தில் பெரிய லெக் பீஸ் வேண்டும்
அதோடு இடுப்பிலிருந்து நழுவாத வேட்டிக்குள்
எப்பொழுதும் ஒரு குவார்ட்டர் பாட்டில்
மறக்காமல் நாளை ஒரு கட்சிக் கூட்டத்திற்கு ஆபர் அவ்வளவுதான்
கவிதை 3: படிமங்கள்

இருளில் நீந்தும் படிமம் ஒன்று
சிறகுகளை விரிக்கிறது அநாதையாக
தப்பிப்போன புறாவாக இருக்கலாம்
கூட்டத்தை தவறவிட்ட
இளங்காகமொன்றாகவும்
இருக்கக்கூடும்
இரகசிய சிறகசைவுகளின் வழியே
போன ஜென்மத்து நினைவுளை
மீட்டெடுக்கவோ
கூடு திரும்புதலோ
தன்னைத்தொலைத்தலோ
நட்சத்திரங்களை
வளைந்த கூரிய அலகுகளைக் கொண்டு முத்தமிட்டிருக்கக்கூடும்
வசந்தங்களில் நடந்த நிஜங்கள்
கற்பனையாகிப்போன இரவுகளில்
எத்தனை முறை தூங்காத நிலவினை
சிறகினில் சுமந்து திரிந்ததோ?
தொண்டைக்குள் உருண்டுகொண்டிருக்கும்
துயரங்களை
வெளியேற்றிவிட முடிகிறதா
உதிரும் நட்சத்திரங்களை விட
வேகமாக உதிர்வதற்குத்தானே
அகாலத்தில் சிறகுகளை விரிப்பதும்கவிதை 4: ஒரு கடவுச் சொல்லாக

ஒரு கடவுச்சொல்லாக என்னை மனதில் இருத்திக் கொள் பிரியமே
வேண்டும்போது நான்
உன் அகத்தைத் திறப்பேன்
மயிலிறகினைப் போன்ற
மந்திரக் கோலால் தொட்டு
மாயா ஜாலங்கள் நிகழ்த்துவேன்
வானவில்லும் கருமுகிலும்
இன்று உன் கனவில்
உன்னை அணைத்துக் கொள்ளட்டும்
பிரியமென்னும் நீரைக் குடிக்க
தவி தவித்துச் சாகும் கடைசி பயணியிடம்
யட்சனைப் போல்
கேள்விகள் கேட்டு நிற்கிறது
இந்த வாழ்க்கை
உனக்கான பதில்கள் எனக்குள்
தான் பொதிந்திருக்கின்றன தோண்டிஎடுத்துக் கொள்வாய்
தாகமோ சாவைப் போல ஆளை
குடிக்கக் காத்திருக்கிறது
முதலில் அதை தீர்த்து விடு
இந்த கொடிய பாலையிலும் பிரார்த்தனைக்குச் செவிமடுத்து
சில எளிய மலர்கள்
ஆங்காங்கே பூத்த வண்ணமே இருக்கின்றன
போதும்
ஒரு கடவுச்சொல்லாக என்னை மனதில் இருத்திக் கொள்
உனக்காக நான்
அந்த கடவுளையே அழைத்து வருவேன்

தங்கேஸ்

Image

உலக புத்தக தினத்தையொட்டி பாரதி புத்தகாலயம், புதிய கோணம், இளையோர் இலக்கியம் மற்றும் புக்ஸ் ஃபார் சில்ரன் வெளியிட்டுள்ள அனைத்து நூல்களுக்கு 25% சிறப்புக் கழிவு உண்டு. (23.04.2021 – 05.05.2021 வரை மட்டும்)