தங்கேஸ் கவிதைகள்கவிதை 1: நிறைந்து

இந்த ஏகாந்தம் கொண்டு தரும் எல்லையற்ற மகோன்னதத்தை
ஒரு கயமைப் புன்னகை
அள்ளிப் போக அனுமதிக்கலாமா ?
வா வார்த்தைகளை நாம் வெறுக்கலாம் சகியே!
தேன் துளிகளுக்குள் விழுந்து விட்ட
மெழுகு அடையை விரல்களால் அப்புறப்படுத்து.
க்ரீச் சப்தமெழுப்பும் தேவையற்ற காலணிகளை
வாசலிலேயே உதிர்த்து விடு
இருள் திறக்கும் மகா சந்நிதானத்தில்
காற்றில் மிதக்கும் சருகுபோல
நுழைந்துவிடலாம்
பின்பு பிரார்த்தனை மண்டபத்தில் கொலு வீற்றிருக்கும் பேரமைதி
எங்கிருந்து வருகிறதென்று பார்
பிறகு வா ஒருவருக்குள் ஒருவர்
நிறைந்து வழியலாம் அன்பே!கவிதை 2

இடையில் பிறக்கும்
பிரத்தியேகமான வானம்

சிறகடிப்புகள் ஓயாத மனங்களின்
பறவைகள்
தங்களுக்கான பிரத்தியேக
வானத்தை தாங்களே தேர்ந்தெடுத்துக்கொள்கின்றன
பறத்தல் என்பது இலக்கல்ல
குளிர்ந்த நீரோடைகளை கண்டடையவும்
மழைத்துளிகளை பூமிக்கு
அழைத்து வரவும்
விண்ணகப் பூக்களை பூமியில் பயிரிடுவதற்குமான தொரு
ரகசியப் பயணம்
வெட்டவெளியில்
புன்னகைத்துக் கொண்டிருக்கும்
உருவமற்ற கடவுளை
உச்சி முகர்ந்து உதட்டில் முத்தமிட்டு
ஆரத்தழுவி
ஆலிங்கனம் செய்யும் சாகசம்
வா அன்பே!
இரு கரங்களையும்
சிறகாகவே விரிக்கிறேன்
இடையில் பிறக்கும்
பிரத்தியேகமான வானம்
உனக்கே உனக்கானது.கவிதை 3

ஏமாற்றவில்லை நீ
ஏமாறுவதற்கு தயாராகவே இருந்தவன்தான் நான்

ஏமாற்றியதாய் இன்று நீ கொள்ளும் இச்சிற்றின்பத்தையும்
உனக்கே பரிசளித்துப்போகிறேன்
இன்முகத்தோடு

ஏமாறுவதற்குத்தான் என்ன இருக்கிறது சொல்?
கைகளில் நிரம்பி வழியும்
இந்த நதிநீரை
அருந்தாமல்
கடந்த காலங்களில் வறண்டு கிடப்பதை தவிர

நிகழை தொலைத்துக்கொண்டு
பழைய இருளை காலத்தின் வெளிகளில்
தேடுவதைத்தவிர
ஜெயிப்பதற்கும் தோற்பதற்கும் தான்
என்ன இருக்கிறது சொல்….

ஒரு சிசுவின் முதல் சப்புதலுக்கு
சிலிர்த்திருக்கும் மார்புக்காம்பாக
பரவசம் கொள்ளும்
இந்த வாழ்க்கையில்

ஒரே ஒரு கண்ணீர்த் துளிக்கு
ஏழேழு கடல்களை வற்றிப்போகச் செய்வதற்கும்
ஏழேழு ஜென்மங்களைத் தாண்டிச்செல்வதற்கும்
வல்லமை அளிக்கப்பட்டிருக்கிறது
கண்டுகொள்கவிதை 4

நா வறண்டு கிடக்கும் இந்த கடும்கோடையில்
இந்த மஞ்சள் அரளி இலைகள் அசைவது
ஆற்றாமையில் தானா அல்லது
உயிர்த்திருத்தலின் அடையாளத்திற்கா?

சூரியனின் உமிழ்நீரை குடித்து
சுருண்டு கிடக்கின்றன
பச்சையத்தை சுமந்துகொண்டிருக்கும்
வெம்பிய இலைகள்
உயிரின் இச்சைகளா?
கசியும் மூச்சுக்களா?

இரவில் உமிழும் நட்சத்திரங்கள்
காலையின் இதன் கிளைகளில் வந்து
அமர்ந்திருக்கின்றன
உயிரின் வாசத்தில் கிறங்கிச்சாக

மனிதம் பட்டுப்போன நாட்களில்
உதிரக்காத்திருக்கும் சருகு ஒன்றும்
முன்கூட்டியே தற்கொலை செய்துகொள்கிறது
விடைபெறுதலை வெறுத்து

உயிரணுக்கள் பட்டுப்போய்க் கொண்டேயிருக்கின்றன

கடவுள் செவிமடுக்கமாட்டார்
தெரிந்திருந்தும் கூட
இலைகளோ காற்றோடு அனுப்பி வைக்கின்றன
மரங்களின் தேம்பல்களை

ஆனாலும்
பறிக்கும் மனதை பறிப்பதும்
திருடும் மனதை திருடுவதும்
ஒடிக்கும் கரங்களை மன்னிப்பதும்
சாகாகுணங்களாக இருக்கின்றன
வெயில் உயிர் உரியும் நாட்களிலும்

தங்கேஸ்
தமுஎகச
தேனி மாவட்டம்